மார்ச் 20, 2011

உருளும் உலகம் - விலைவாசி உயர்வு !!

மத்திய கிழக்கு மக்கள் கிளர்ச்சியை அதன் தாக்கங்களை கவனித்துக்கொண்டிருந்த எனக்கும், என்னைப்போன்ற பலருக்கும் அதிக அதிர்ச்சியைக் கொடுத்த விடயம் ஜப்பானின் நிலநடுக்கம், சுனாமி அதன் விளைவாக ஏற்பட்ட அணுமின்நிலைய  விபத்தும் இன்னும் பயமுறுத்திக்கொண்டே இருக்கும் அதன் தாக்கங்களும். 

உலகளாவிய பொருளாதார சுனாமியிலிருந்து இன்னும் முழுதுமாக மீளாத நிலையில் உலக மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்க, மறுபடியும் எரிபொருள், உணவு, உடை என்பவற்றின் விலையேற்றம் தடுக்கமுடியாது என்கிற செய்திகள் மீண்டும் கசப்பாய்! 

உலக வங்கியின் கணக்குப்படி கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஏறக்குறைய நாற்பத்தி நான்கு மில்லியன் மக்கள் வளர்ந்துவரும் நாடுகளில் உணவு விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

துனிசியா, எகிப்தில் பொருளாதார மேம்பாடுகள் இல்லாமல் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு கிளர்ந்தெழுந்ததைப் போல் சீனாவிலும் ஏதாவது கிளர்ச்சிகள் ஏற்படக்கூடும் என்று கருதி உணவின் விலைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திட்டங்களை அந்நாடு யோசிப்பதாக செய்தியில் படித்தபோது அபத்தமாகப் பட்டது எனக்கு. இவ்வளவிற்கும் ஒரு தடவை சீனாவில் மத்தியகிழக்கின் கிளர்ச்சி போல் சமூக கருத்துப் பரிமாற்று ஊடகங்களைப் பயன்படுத்தி சின்னதாய் ஓர் போராட்டம் வெடித்து அது ஒரேநாளில் அடக்கவும் பட்டுவிட்டது. 

எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளினால் எரிபொருள் விலையோடு கூடவே உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது. ஒரு தனிநபர் எவ்வளவு சொத்துக்களையும் சேர்க்கலாம், எந்த நாட்டில் வேண்டுமானாலும் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம், அப்படி பெற்ற லாபத்தை தன் சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்கிற உலகமயமாக்கல் சார்ந்த பொருளாதார கொள்கைகள் என்பவற்றின் விளைவுகளை நிறையவே பார்த்தாயிற்று. குறிப்பிட்ட சில நூறு பேரின் கைகளில் உலகத்தின் பெருவாரியான சொத்தும், அதிகாரமும் சிக்குண்டு கிடப்பதால் பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் என்பவை காலத்துக்கு காலம் ஏற்படத்தான் செய்யும் என்பது முதலாளித்துவப் பொருளாதாரம் தலையெடுக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து பொருளியல் நிபுணர்களின் கணிப்பு. 

பொருளாதார சுனாமிக்குப் பின்னும் கனடாவில் தனியார் நிறுவனங்களில் அதியுயர் நிர்வாகப் பதவியில் இருந்தவர்கள் வாங்கும் மில்லியன் கணக்கான சம்பளத்தில் எந்தவித மாற்றமோ, தாக்கமோ ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதில் இடையே மாட்டிக்கொண்டு முழிப்பது நாங்கள் தான். விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப வருமானம் அதன் போக்கில் அதிகரிப்பதில்லை. பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், விலைவாசி உயர்வு என்று எப்போதுமே பாதிக்கப்படுவது உழைத்துப் பிழைக்கும் வர்க்கம் தான். ஆனாலும், எங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கும் எப்படியோ பழக்கப்படுத்தப்பட்டு மீண்டும், மீண்டும் அதே வட்டத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம், மேலும் சிக்கவைக்கப்படுகிறோம்.

ஆனால், போர், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியை கலைத்து அடிக்கடி தேர்தல் வைப்பது இதுக்கெல்லாம் மட்டும் நிதி தட்டுப்பாடு வருவதில்லை.

கனடாவிலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தோடு இன்னோர் தேர்தல் வருமா இல்லையா என்கிற ஊடகங்களின் அக்கப்போர் ஒருபுறம். அடுத்த விலைவாசி உயர்வுக்கு தயாராகுங்கள் என்பது இன்னொரு புறம். ஆனாலும் இந்தியா, சீனா போன்று கனடாவில் விலைவாசி கடந்தவருடம் கனடாவில் அதிகரிக்கவில்லை என்று புள்ளிவிவர திணைக்களம் சொல்கிறது. இந்த வருடம் கனடாவிலும் விலைவாசி உயர்வு அதன் தாக்கங்கள் இன்னும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவே இவ்வாறு எதிர்பார்த்தால், எதிர்வு கூறினால் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளவர்களின் நிலை!!

பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், விலைவாசி உயர்வு என்பது இதுவே முதலோ கடைசியோ அல்ல. இது இன்னும் தொடரத்தான் போகிறது. அரசுகளிடம் சரியான திட்டமிடலோ, பொருளாதார கொள்கைகளோ இன்றி மேலும், மேலும் தனியார்களை வளர்த்துவிட்டு அதே பொருளாதார நெருக்கடி நிறைந்த வாழ்க்கையின் வட்டத்திற்குள் எங்களை தள்ளத்தான் போகிறார்கள். என்றாவது ஒருநாள் நாங்களும் துனிசியா போன்று வீதிக்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

3 கருத்துகள்:

தவறு சொன்னது…

ரொம்ப நாளாயிடுச்சி ரதி..விலைவாசி கடந்த ஒரு வருடமாகவே இங்கு மிகவும் பயமுறுத்தும் அளவுக்கு போய்விட்டது ரதி.

தனிநபர் வருமானத்தை விட கடன் ஒருபக்கம் அதிகமாயிட்டே வருதுங்க.

Rathi சொன்னது…

இங்கேயும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் விலைவாசி இன்னும் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள். இந்தியா, சீனாவைவிட இங்கே விலைவாசி அதிகரிக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள்.

கடன் அட்டைகளில் பொருட்களை வாங்க மறைமுகமாக ஊக்குவிப்பார்கள்.

ஜோதிஜி சொன்னது…

விலைவாசி உயர்வை ஏற்றுக் கொண்டு பழகியாகி விட்டது. குழம்பு ஊத்தும் போது மனைவியிம் எரிச்சல் படும்போது தான் தெரிகின்றது.