பிப்ரவரி 17, 2011

ஈழத்தமிழர்களின் இனியொரு விதி!!

Dream_for_a_Tamil_Nation[1]


ஈழத்தமிழர்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இப்படி கேட்டு, கேட்டு எனக்கு கொஞ்சம் அலுப்பும், எரிச்சலும் தான் இப்போது மிஞ்சி இருக்கிறது. இதற்கெல்லாம் எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு முன்னுதாரணமாய் காட்டப்படுபவர்கள் யூத இனத்தவர்களே. இப்போது, புதிதாய் காட்டப்படுபவர்கள் எகிப்தியர்கள். எத்தனை உதாரணங்கள், முன்னுதாரணங்கள் வேண்டுமானாலும் காட்டப்படலாம். அதில் தவறேதுமில்லை. ஈழத்தமிழர்களின் நன்மைக்கே  அது சொல்லப்படுகிறது என்பது நன்றாகவே புரிகிறது. நன்மையும்  தீமை பயக்குமிடத்து என்று நினைக்கும் போது தான் இதை எழுதலாமே என்று தோன்றுகிறது. புலிகள் இருந்தவரை ஓர் ஈழத்தமிழாய் என் அரசியல் அபிலாசைகள் குறித்த பிரதிநிதித்துவம் குறித்து அதிக வருத்தம் இருந்ததில்லை எனக்கு.

என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தமிழர்களின் ஒற்றுமை என்பது, ஒன்று புலிகளின் அரசியல், ராணுவ வெற்றி தோல்விகளை கொண்டும்; அல்லது அதன் அடிப்படையிலான புலிகளுக்கு இருந்த ஆதரவு என்கிற மாறுபடுகிற மதிப்புகளை (Variables) கொண்டே மதிப்பிடப்படுகிறது. இவற்றை எடுகோள்களாக கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை மதிப்பிட்டால் மட்டுமே இலங்கை அரசின், சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளை, நிராசைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை அனேகமான உலகநாடுகள் தடை செய்துவிட்டன. இனிமேலும் நீங்கள் அவர்களை ஆதரித்தால், அவர்களின் இலட்சியக்கனவுகளை உங்களதாக்கிக் கொண்டால், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சொன்னது போல் ஒன்றில் நீங்கள் உலகத்தோடு ஒத்திருக்கிறீர்கள். அல்லது, அவர்களோடு (இவர்களால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்ட புலிகள்) இருக்கிறீர்கள். ஆகவே, உங்கள் அரசியல் அபிலாசைகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று முத்திரை குத்தப்படலாம். இப்படி குட்டையை குழப்பி தான் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சட்டபூர்வமானது அல்ல என்று நிரூபிக்கலாம்.

அதாவது, புலிகள் தான் தனித் தமிழீழம் கோரினார்கள். ஈழத்தமிழர்கள் அல்ல. ஆகவே, அது பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட புலிகள் தங்கள்தேவைகளை கருதி முன்வைத்த கோரிக்கை?! அது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை அல்ல. ஆகவே தமிழீழம் என்பது புலிகளின் தேவை. இப்படித்தான் புலி எதிர்ப்பு அரசியலும், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையும் கணக்கில் எடுக்கப்படுகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் ஜனநாயக ரீதியில் உலக வரமுறைகளுக்கேற்ப வழங்கப்பட்டால் தமிழீழம் என்பது புலிகளின் தேவையா அல்லது ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் தேவையா என்பது புரிந்துகொள்ளப்படும். புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தங்கள் அரசியல் அபிலாசை என்னவென்பதை நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஆனால், இதையெல்லாம் புறம்தள்ளி, இலங்கையில் இருப்பது ஒரேயொரு இனம் தான் என்று அதன் ஜனாதிபதியும் உலகம் முழுக்க தம்பட்டம்  அடிக்கலாம், பொய்ப்பிரச்சாரம் செய்யலாம்.  ஆக, இல்லாது ஒழிக்கப்பட்ட புலிகள் இன்றும் கூட அரசியல் சதுரங்கத்தின் ஆட்டக்காய்கள் ஆக நகர்த்தப்படுகிறார்கள். 

அன்றுமுதல் இன்றுவரை புலிகளை தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ எதிர்த்தவர்கள் இன்றும் அவர்கள் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலும் அவர்கள் மீதுள்ள தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகள் தான் அவர்களை யார் என்று அடையாளம் காட்டுகிறது. 2009 ம் ஆண்டுக்குப்பின் புலிகளை வெறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் யாரும் முன்பு குறிப்பிட்டவர்களைப் போல் சுய நலம் கருதி புலிகளை விமர்சிப்பவர்கள் அல்ல என்பதே என் புரிதல்.

ஆக, ஈழத்தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொல்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எங்களிடம் ஒற்றுமை இல்லை, இல்லை என்று சொல்வது கூட எங்கள் மீது தொடுக்கப்படும் ஓர் உளவியல் யுத்தம் தான். அதன் சூத்திரதாரிகள் யார் என்பதும் ஈழப்பிரச்சனையின் அடிப்படை தெரிந்தவர்களுக்கு புரியும். இன்றும் புலம்பெயர் தமிழர்களிடையே தூது போக இலங்கை அரசுக்கு நோர்வேயின் எரிக் சொல்ஹைம் தேவையா என்கிற விவாதங்கள் தொடர்கிறது. புலத்தில்  ஈழத்தமிழனிடம் ஒற்றுமை இல்லையென்றால் இடையில் சொல்ஹைம் எதற்கு! எத்தனை நாளைக்குத்தான் தமிழனிடம் ஒற்றுமை இல்லை என்கிற ஒற்றைப்பல்லவியையே பாடி தமிழனை குழப்புவது.

அடுத்து, யூத இனத்தவர்களின் பிரச்சனை நடந்த காலத்து பனிப்போர் உலக அரசியல் வேறு. இன்றிருக்கும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் வேறு. உலகத்தில் எந்தவொரு நாட்டின் அல்லது இனத்தின் ஆதரவும் இல்லாமல் ஈழத்தமிழர்களால், அவர்களின் முயற்சிகளில் மட்டுமே ஈழப்போராட்டம் கட்டிஎழுப்பட்டது. அது ஓர் ரத்த சரித்திரம். அதன் நியாய, தர்மங்கள் கூட புழுத்துப்போன உள்ளூர், சர்வதேச அரசியல் சாக்கடையில் உழல்பவர்களால் மறுக்கப்படுகிறது. யூத இனத்தை தாங்கி பிடிக்க ஓர் வல்லரசு இருந்தது போல் ஈழத்தமிழர்களையும் யாராவது தாங்கிப்பிடித்தால் எங்களின் ஒற்றுமையும் உலகத்தால் வியக்கப்பட்டிருக்கும். மாறாக, எங்கள் ஒற்றுமை தான் எதிரியின் ஒற்றை இலக்கு என்கிற போது எங்களுக்கான இலவச ஆலோசனைகள், அறிவுரைகளை நாங்கள் காது கொடுத்து கேட்கவும், பரிசீலனை செய்யவும்  பொறுமையோடு அதனை அணுகவும் எங்களை பழக்கப்படுத்திக்கொள்கிறோம்.

எகிப்தியர்களின் ஒற்றுமை உண்மையிலேயே வியக்கப்பட வேண்டியது தான், மறுக்கவில்லை. ஈழப்பிரச்சனையும், எகிப்தின் பிரச்சனையும் ஒன்றா என்றால் என் சிற்றறிவுக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. ஈழத்தமிழர்கள் அரசியல், பொருளாதார, கல்வி கொள்கைகள் மற்றும் சட்டங்களால் இன அடிப்படையில் இலங்கை அரசியலால் திட்டமிடப்பட்டே தசாப்தங்களாக ஒடுக்கப்பட்டவர்கள். எகிப்தின் அரசியல் சர்வாதிகாரம் என்பது பாகுபாடின்றி பொதுவாக எல்லாரையும் தானே பாதித்தது. 

எகிப்தின் குடிமக்கள்  போல் ஏன் ஈழத்தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடவில்லை என்றால் என்னால் சிரிக்க மட்டுமே முடிகிறது. எகிப்தின் ராணுவம் யார் கட்டளைக்கு அடிபணியும் என்பது உலகறிந்தது. அவர்களுக்கு அமெரிக்கா என்கிற ஓர் வல்லரசிடம் பயம் இருக்கவே செய்கிறது. அதுதான் அந்த ராணுவம் எந்தவொரு அத்துமீறலையும் எகிப்தின் கிளர்ச்சியாளர்கள் மீது  பிரயோகிக்காமல் தடுத்தது. இலங்கை ராணுவம் தான் யாரும் விமர்சனம் கூட செய்யமுடியாத அளவுக்கு புனிதர்கள் என்று இலங்கை அரசு சொல்ல அதை உலகமே வேடிக்கை பார்க்கிறதே. ஈழத்தமிழன் வீதியில் இறங்கி போராடினால் இலங்கை ராணுவம் என்ன செய்யும் என்பது தெரியாதா! அதை வெளியே கொண்டுவர எந்த சர்வதேச ஊடகமாவது அங்கே அனுமதிக்கப்படுமா என்பதையெல்லாம் கொஞ்சம் சிந்தியுங்கள்.

எகிப்தின் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றால் மேற்குலகின் "ஜனநாயக" முகமூடி கிழிந்திருக்காதா! திறந்த பொருளாதார சந்தை கொள்கைகளின் தேவையால் கம்யூனிசம், சோஷலிஷம்  கூட  தோற்கடிக்கப்பட்டு விட்டது. வேறு எந்த அடிப்படையில் மக்களை ஒன்றுசேர்ப்பது. இருக்கவே இருக்கிறது "Democracy" என்கிற மந்திரம். ஜனநாயகம் என்கிற வழியில், தேர்தல் என்கிற ஆயுதம் தான் வல்லமை படைத்தவர்களுக்கு ஆதரவானவர்களை தேர்ந்தெடுக்க சிறந்தவழி. எகிப்தியர்களுக்கு சுபீட்சமும் வளமான எதிர்காலமும் கிடைக்கவேண்டும். அதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே. இருந்தும், எகிப்தில் இனி தேர்தல் நடந்தாலும் யாராவது ஓர் சர்வதேசப் புகழ்பெற்ற அமைதியை விரும்பும் குழாமிலிருந்து ஓரிருவரை தேர்ந்தெடுத்து; அவர்களை முன்னிறுத்தி ஊடகங்கள் பிரச்சாரப்பாணியில் ஜனநாயகத்தை விளம்பரப்படுத்துவார்கள். ஜனநாயக விழுமியங்களை உலகிற்கு பறைசாற்றுவதில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமோ! உலகளாவிய பாரிய வியாபார நிறுவனங்களின் வியாபார முயற்சிகளுக்கு குறுக்கே நிற்காதாவரை மக்கள் கிளர்ச்சி, ஜனநாயகமும் கூட தங்குதடையின்றி அனுமதிக்கப்படும். எகிப்தில் யாராவது இன, மத, ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டாலும் கொள்கை அடிப்படையில் போராடியிருந்தால் மேற்குலகம் அதை அங்கீகரித்திருக்குமா!

மொத்தத்தில், மற்றையவர்களின் போராட்டத்தின் வெற்றிகளின் மூலமும் ஈழத்தமிழர்களின் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை ஈழத்தமிழர்கள் உணரத்தான் வேண்டும், மறுப்பதற்கில்லை. அதை வார்த்தைகளில் விளங்கவைக்க முடியுமா என்பதும் எனக்கு  தெரியவில்லை. ஆனால், அதை நிர்ணயிக்கும் காரணிகள், உள்ளூர், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் தமிழர்களுக்கு புரியவைக்கப்பட வேண்டும். அதை விடுத்து தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொல்லிச்சொல்லியே,  அதை மட்டுமே அடக்குமுறையாளர்கள் விரும்புவது போல் வளர்த்தெடுக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.

தமிழர்களின் ஒற்றுமை என்பது வெறும் புலி எதிர்ப்பு அரசியலால் மட்டுமே இன்று தீர்மானிக்கப்படுகிறது என்பது என் புரிதல்.  அதை மாற்றுத் திறனாளிகளையும்    இலங்கையின் இனப்பாகுபாட்டு அரசியலுக்கு துணை போகிறவர்களையும் அடையாளம் காணப்படும் போது தான் மாற்றமுடியும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டுவது.

அதற்கு தனியோர் விதி எங்கள் ஒன்றுபட்ட பலமே!


நன்றி: படம் Google

15 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

உள்ளுணர்வு தாக்கம் எங்கிருந்து உருவாகி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகின்றது. உங்கள் மிகச் சிறந்த ஆக்கங்களில் இது முதன்மையானது. எடுத்து வைத்த விதம் அற்புதம். மாற்றுக் கருத்து இருந்த போதிலும்.

ஜோதிஜி சொன்னது…

இந்த படத்தை இன்னும் சிறிதாக மாற்றியிருக்கலாம். அற்புதமான படத்தின் ஒரு பகுதி தெரியவில்லை. படத்தை பெரிது படுத்தி பார்த்தாலும் எழுத்துக்கள் அடம்பிடிக்கின்றது. இதை தமிழ்ப்படுத்தி தாருங்கள்.

Thekkikattan|தெகா சொன்னது…

மிக நேர்த்தியா அயர்ச்சியே கொடுக்காம கட்டுரை சொல்ல வந்த விசயத்தை உணர்த்தி நிற்கிறது!

எகிப்திய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கும் ஈழத்தில் அதே போன்று மக்கள் தெருவிற்கு வந்து போராடுவதற்கும் உள்ள வித்தியாசங்கள் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்களை போன்றது. என்ன நடந்திருக்குமென்பதனை அன்மையில் எந்த ஊடகமும் உள்ளே வராதபடிக்கு கொலைவெறியாட்டம் ஆடிய நேர்மையைக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

மேலும் காலம் காலமாக இந்த இத்துப் போன உளவியல் பிரச்சாரம் மனிதர்களை பிரித்து காரியத்தை நடத்திக் கொள்வது - இதனை நாம் புரிந்து கொண்டு எதிர் நீச்சல் போட கற்றுக் கொள்வது சிறப்பு!

Thekkikattan|தெகா சொன்னது…

மற்றுமொரு சிறப்பான விசயம், உங்க யூதர்களை பற்றிய குறிப்பும் உண்மையே! அவர்களுக்கிருந்த பேக் அப் ஈழத்திற்கு யார் கொடுத்தார்கள்? நிகழ்வுகளைக் கொண்டு அரசியல் சூதாட்டமல்லவா நடந்திருக்கிறது. ஏன், இதோ இன்றைய தமிழக அரசியலுக்கு கூட தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் விசயமாகிப் போனது. விளித்து கொள்ளும் நேரமிது!

ஜோதிஜி,

//அற்புதமான படத்தின் ஒரு பகுதி தெரியவில்லை.//

அந்த படத்தின் முழு வடிவே அப்படித்தான் போல! என்ன கண்ணாடி போடணும் போல.

தவறு சொன்னது…

"யூத இனத்தை தாங்கி பிடிக்க ஓர் வல்லரசு இருந்தது போல் ஈழத்தமிழர்களையும் யாராவது தாங்கிப்பிடித்தால் எங்களின் ஒற்றுமையும் உலகத்தால் வியக்கப்பட்டிருக்கும்."

இந்தகட்டுரையோட அச்சானி இந்த கருத்துதான் ரதி.
நம் கையே நமக்கு உதவி என்றிருந்தாலும் சரியான வாய்ப்புகள் இல்லாது போவதன் காரணம் நல்ல தலைமை இல்லாமல் இருப்பது ரதி ?

ஆவணங்களாக்கபடும் உங்க எழுத்து.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

புலிகளை தமிழர்களே சரிவர ஏற்றுக்கொள்ளாததால் ஒரு சரித்திரம் தாமதமானது..

யூதர்களுடன் ஒப்பிடுதல் சரி..

எகிப்துக்கும், இலங்கைக்கும் உள்ள வேறுபாடுகளை யாருக்கும் தெரியாதா என்ன?

Rathi சொன்னது…

ஜோதிஜி,

அது படம் என்பதை விட அந்த கவிதை சொல்லும் செய்தியை வெளிக்கொணர வேண்டும் என்று தான் அதன் இயல்பான அளவில் படம் இருக்கிறது. அதை முடிந்தவரை தமிழ்ப்படுத்த முயற்சிக்கிறேன். அதற்கு முதல் அதன் மூலத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

தெகா,

தமிழர்கள் உளவியல் பிரச்சாரத்தை கடந்து எதிர்நீச்சல் போடவேண்டும் என்பது தான் என் கருத்தும். இலங்கை அரசு தமிழர்கள் மீது தொடுக்கும் உளவியல் போருக்கும் மில்லியன் கணக்கில் செலவிடுகிறது.

Rathi சொன்னது…

தவறு,

2009 ம் ஆண்டுக்குப்பிறகு எங்களுக்கான அரசியல் களம் இன்னும் சிறப்பானதாக, வலுவானதாக கட்டிஎழுப்பட வேண்டும் என்பதே என் கருத்து, விருப்பம், இரண்டுமே. எங்கள் இலக்கு புலி எதிர்ப்பு அரசியலில் சிக்க வைக்கப்படுவதும் அதற்கெதிரான அரசியல் செயற்பாடுகளும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.

செந்தில்,

வாங்க. என் தளத்தோடு ஏதோ கோபம் போல அதான் வராம விட்டீங்கன்னு நினைச்சேன்.

யூதர்களின் ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டியது தான். ஆனால், அவர்களுக்கிருந்தது போல் எங்களுக்கும் ஏன் வலுவான பின்புலம் இல்லாதிருக்கிறது!!

இன்று இலங்கை இஸ்ரேலிடமிருந்துதான் பல பாடங்களை கற்றுக்கொண்டு தமிழர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது, எப்படி தமிழ்மண்ணில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது என்பது வரை தெரிந்துகொண்டிருக்கிறது.

ஹேமா சொன்னது…

ரதி...ஆதங்கம் நிறையவே பதிவு சொல்லுது.
உங்களிட்டயிருந்து நிறைய நான் அறிஞ்சுகொள்றேன்.”லங்காஸ்ரீ”ல யூதர்கள் பற்றிய கட்டுரைத் தொடரும் வாசிக்கிறேன்.

எங்களுக்குள் சிலர் செய்த நச்சுவேலைகளால்தானே எங்களிடம் ஒற்றுமையில்லையென்று சொல்கிறார்கள்.ஒத்துக்கொள்ளவும் வேண்டித்தானே இருக்கு ரதி !

Rathi சொன்னது…

ஹேமா,

நான் லங்காஸ்ரீ செய்தித்தளம் அதிகம் படித்ததில்லை. அதனால் அந்த தளம் பரிட்சயம் இல்லை. யூதர்கள் பற்றிய அந்த தொடருக்குரிய இணைப்பை கொடுக்கமுடியுமா.

சந்தனமுல்லை சொன்னது…

அன்பு ரதி,

தங்கள் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. sandanamullai.mugilvannan@gmail.com என்ற எனது முகவரிக்கு அனுப்ப முடியுமா? நன்றி.

வாழ்த்துகளுடன்
முல்லை

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் சொன்னது…

I am reading your articles. It is good . continue

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் சொன்னது…

Your article in vinavu "eleam Ninivugal" come in book form? Your articles good continue

Rathi சொன்னது…

நன்றிங்க கனவுகளின் மெய்க்காப்பாளன். என் வினவு கட்டுரை புத்தகமாக வெளிவந்தால் தெரியப்படுத்துகிறேன். பின்னர் உங்கள் தளத்தில் உங்கள் எழுத்துகளைப் படிக்கவேண்டும்.

Rathi சொன்னது…

அது "கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்" என்று இருக்கவேண்டும். நான் தவறுதலாய் அடித்துவிட்டேன், மன்னிக்கவும்.