பிப்ரவரி 14, 2011

காதல், காதல், காதல்.....!!

காலம் எல்லோருடைய வாழ்விலும் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்திச் செல்கிறது. வெகு சொற்பமான சந்தர்ப்பங்களில் அதிசயங்கள், ஆச்சர்யங்கள், இவற்றைவிட கஷ்டங்கள், துன்பங்கள் என எல்லாமே கடைசியில் தாங்கி நிற்கும் சொல் 'அனுபவம்'. எத்தனயோ பேர் பேசுவதும், எழுதுவதும், புலம்புவது, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதும் கூட அனுபவ நிமித்தமே. எல்லா அனுபவுமுமே மனதில் எப்போதும் நிலைத்து நிற்பதில்லை.

காதலும், கல்யாணமும் என்கிற நினைவுகள், பள்ளிக்கூடநாட்கள், நட்புகளோடு அரட்டையடித்த, சண்டைபோட்ட நாட்கள், குடும்ப விசேஷங்கள் இப்படி எல்லாமே அப்பப்போ நினைவில் ஊஞ்சலாடும். ஒரு குறிப்பிட வயத்துக்குப்பின் மனிதமனம் தன் கடந்த கால சந்தோசங்களில், நினைவுகளில் அதன் அனுபவங்களில் மூழ்கிப்போகும். நினைவுகளால் மட்டுமே நெருங்கமுடியும் சில நாட்களை. மறுபடியும் அந்த அனுபவத்தை வாழமுடியாது.


இன்று ஏனோ என் பாடசாலை நாட்களின் நினைவுகள், அனுபவங்கள் மனதில் நிழலாடுகிறது. அதை எழுதினால் என்ன  என்பது போன்ற ஓர் ஆவல். என் பள்ளிக்கூட காலத்து நெருங்கிய நண்பிகள் சிலர் கொழும்பிலும், சிலர் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். கனடாவில் என் நட்புகள் என்கிற வட்டத்தில் யாரும் கிடையாது. கடந்தவருடம் என் பாடசாலை நாட்களின் நண்பி ஒருத்தி ஆஸ்திரேலியாவில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தார். என் உறவினர்கள் மூலம் என் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து தொடர்புகொண்டார். இருவரும் பலமுறை ஒருவருக்கொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும் பேசும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஒருநாள் அழைக்கும் போது வீட்டில் இருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் பேசியதாலோ என்னவோ முதலில் எதைப்பேசுவது என்று தெரியாமல் ஓர் மெளனம் மட்டுமே பொதுவாய் காற்றலையில் எஞ்சியிருந்தது. அதுக்கு காரணம் வலிகள் நிறைந்த எங்கள் போரியல்வாழ்வும், நாங்கள் இழந்த அந்த சின்னச்சின்ன சந்தோசங்களும்  எங்கள் அடிமனங்களில் உண்டாக்கிய காயங்கள் தான். பிறகு மெல்ல, மெல்ல சுதாகரித்து பழைய பள்ளிக்கூட நாட்களை பற்றி பேசித்தீர்த்துக்கொண்டோம்.  எங்கள் நட்பு பற்றி, எங்கள் பாடசாலை நாட்களின் காதல் ஜோடிகள் பற்றி கூட மறக்காமல் பேசினோம். நான் என் பாடசாலை நாட்களின் நட்பினை தொடராமல் விட்டதற்காக திட்டும் வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

இந்த பள்ளிக்கூட நாட்கள் என்றாலே அதன் இலவச இணைப்பான குழந்தைத்தனமான  காதலும் (Puppy Love) ஞாபகம் வருகிறது. நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத ஓர் வயது. அதற்கேற்றாற்போன்ற சமூக அமைப்பு அதனோடு இயைந்த தனிமனித இயல்புகள். ஓர் பெண் ஆணுடன் பேசினாலே அது காதல் தான் என்கிற அபத்தமான முன்முடிவுகள். காதல் என்றாலே அது குடும்ப, சமூக அங்கமாக அதன் விழுமியங்களை தாங்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள். அது சாதி முதல் பணம், அந்தஸ்து என்கிற வேண்டாததும், வேண்டியதுமான குழப்பமான சங்கதிகள்.   மனித இயல்புகளைத்தவிர. காதல் என்கிற இயற்கையைத்தவிர, இப்போ எல்லாமே ஓரளவுக்கு மாறித்தான் போய்விட்டது,

காதல் என்பதும் என்னைப்பொறுத்தவரையில் ஓர் உணர்வு பூர்வமான அனுபவம் தான். அதில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஏனோ கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாய் கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. காதலன் அல்லது காதலியிடம் மற்றவருக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் அளவுகளிலேயே காதல் கைகூடாத போது அது பற்றிய வெற்றி, தோல்வி என்று சிலர் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்களோ என்று யோசித்திருக்கிறேன். காதலின் பயணத்தில் தெரியாதா இந்தக்காதல் தேறுமா, தேறாதா என்பதெல்லாம். கடைசிவரை இவன் அல்லது இவள் தான் என் துணை என்று துணிந்து திடசங்கற்பத்தோடு காதலில் கரை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்!! காதலர் தினத்தில் தனக்கோர் காதலன் அல்லது காதலி இருந்தே ஆகவேண்டும் என்பது தற்கால தேவை என்றாகிவிட்டது. அடுத்த காதலர் தினம் வரை அது நிலைத்திருக்குமா இல்லையா என்பதெல்லாம் வேறு.

காதல் கொள்வதும், காதலிக்கப்படுவதும் கூட தனிமனித உரிமை தான். என் உரிமையை வென்றெடுக்க வேண்டுமானால் என் கடமையை சரிவரச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு காதலிலும் வாழ்க்கையிலும் வென்றவர்கள் எப்போதும் சந்தோசமாகவே இருக்கிறார்கள். காதல் என்பது எப்போதுமே இயல்பாய் இருப்பதும்; காதலிப்பவரை அவரவர் இயல்புகளோடு ஏற்பதும், அவ்வாறே இருக்க அனுமதிப்பதும்  தான் என்பது என் கருத்து. ஆனால், இதுக்கெல்லாம் ஓர் பக்குவப்பட்ட மனம் வேண்டும். அது எல்லோருக்கும் கைவராத ஒன்று.

தற்காலத்தில் காதல் பற்றிய உணர்வுகளை சொல்லும் ஓர் பாடல். டமுக்கு, டுமுக்கு இசையில்லை, காதல் தேவதைகள்  இல்லை. காஸ்டியூம் மாற்றவில்லை. தனிமை, முழுநிலவு, பார்க்க, கேட்க இனிமையாய் இருக்கிறது.  Enjoy!

காணொளியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக அது நீக்கப்பட்டுவிட்டது. இந்த இணைப்பில் பாடலைப் பார்க்கலாம்.

12 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ரதி...காதல் இல்லாத உயிரினங்களே இல்லை.
காதல்தான் வாழ்வில் ஒரு பிடிப்பையே தருகிறது.
ரசனையோடு ஒரு பாடல் தந்தீர்கள்.
ஐ....லவ்...யூ !

Rathi சொன்னது…

ஹேமா,

எனக்கும் இந்தப்பாடலை முதலில் கேட்டபோது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. Fusion அது, இதுவென்று ஏதேதோவெல்லாம் சொல்லி இசையமைக்கிறார்கள்.

இசையே பிரதானம் என்று ஆகிவட்ட காலத்தில் இது கேட்க இனிமையாய் இருக்கிறதே என்று.

இந்தப்பாட்டை தான் ரெண்டு, மூன்று நாளாய் முணுமுணுத்துக்கொண்டு திரியிறன். என் வீட்டில் என்னை லூசு மாதிரி பார்க்கிறார்கள். :))

Thekkikattan|தெகா சொன்னது…

காதல் என்பதும் என்னைப்பொறுத்தவரையில் ஓர் உணர்வு பூர்வமான அனுபவம் தான்.//

ரொம்ப அனுபவப் பூர்வமான புரிதல். ஆனால், தவற விடக் கூடாத ஒரு வாழ்வனுபவம். அழகா அதனை புரிந்து கொண்டு அந்த நிலையில் இருந்து கடத்திச் சென்றால். அது ஒரு சுகனுபவம்தான்.

//காதல் என்பது எப்போதுமே இயல்பாய் இருப்பதும்; அவ்வாறே இருக்க அனுமதிப்பதும் தான் என்பது என் கருத்து. இதுக்கெல்லாம் ஓர் பக்குவப்பட்ட மனம் வேண்டும். //

இது போன்ற பக்குவப்படுத்தல்கள் சில இழப்புகளின் ஊடாக மிக்க பிரயத்தனங்களுடன் முன்னேறிச் செல்பவர்களுக்கே கைவரப் பெறுகிறது. இல்லையெனில் சிக்கல் சூழலில் மனது உறைந்து போய் resentmentலேயே கிடந்து விட நேரிடும். காதலில் எந்த நிலையை எய்தி இருந்தாலும் அது அழகியலுடன் தொடர்புடையது!! :-)

Thekkikattan|தெகா சொன்னது…

The embedded video link is broken! Not working?! :(

Rathi சொன்னது…

//ரொம்ப அனுபவப் பூர்வமான புரிதல். ஆனால், தவற விடக் கூடாத ஒரு வாழ்வனுபவம்.//

//இது போன்ற பக்குவப்படுத்தல்கள் சில இழப்புகளின் ஊடாக மிக்க பிரயத்தனங்களுடன் முன்னேறிச் செல்பவர்களுக்கே கைவரப் பெறுகிறது.//


தெகா,

வழக்கம் போல் அழகான தெளிவான புரிதல்.

//காதலில் எந்த நிலையை எய்தி இருந்தாலும் அது அழகியலுடன் தொடர்புடையது!! //

மிக, மிகச் சரி

காணொளி ஏதொ ஐங்கரன் உரிமம் பற்றிய பிரச்சனை என்று காட்டுகிறது. Youtube இல் "Kanimozhi songs" என்று தேடிப்பாருங்கள். நிச்சயம் கிடைக்கும். பாடலின் முதல் வரிகள், "முழுமதி, முழுமதி நிலவை கேளடி......" என்று தொடங்கும். அருமையான பாடல், இசை.

DON'T MISS IT!!!


பார்த்த பின் உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

ஜோதிஜி சொன்னது…

இன்று இரவு மற்ற தலைப்புகளை படிக்க வேண்டும். இப்படியொரு பாடல் இருக்கிறது என்பதே இன்று தான் தெரிகின்றது. இது வாழ்வில் நான் கடந்த வந்த உணர்வுகள். இந்த காலை வேளையில் ஏதோவொரு சிறகு உள்ளே தனியாக துடிப்பது போல் உள்ளது. முழுமையாக கேட்க வேண்டும் போல் உள்ளது. ஒரு படத்துக்குப் பிறகு தன் வாயாலோ கெட்டுப் போன இந்த கதாநாயகன் குணாசியங்கள் தான் மனதில் முதலில் வந்து போகின்றது. சமகாலத்தில் காதலை குறித்து நிறைய கேள்விகள் இருந்தாலும் எந்த மனிதனுக்குள் நெஞ்சின் உள்ளே இருக்கும் ஓசைகள் மாறாதது தானே?

தவறு சொன்னது…

காணொளி கண்டேன்.

அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ரதி. தரமற்ற பாடல்கள் அதிகமாகிவிட்டதால் தரமானவையும் தானாய் ஒதுங்கிவிடுங்கின்றன.

பாடல் கேட்க பார்க்க அமைதி.

”காதல் என்கிற இயற்கையைத்தவிர, இப்போ எல்லாமே ஓரளவுக்கு மாறித்தான் போய்விட்டது”

நிறையவே மாறிவிட்டது ரதி. அதுவும் தமிழகத்தின் தரங்கெட்ட படங்களின் வரவால் ரொம்பவும் தூரமாய் உண்மை மறைந்தே இருக்கிறது.

காதல் உணர்வில் புரிதல்கள் அதிகம் தேவை.

வாழ்த்துகள் ரதி.

ஜோதிஜி சொன்னது…

இந்த பாடலை காணொளியில் பார்க்காமல் தனிப்பட்ட முறையில் குறிப்பாக கார் பயணத்தின் போது கேட்பதற்கு மிக்க நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இதைக் கேட்க வேண்டும் எனபதற்காகவே இப்போது வந்து முழுமையாக பார்த்தேன்.

ஒரு இயக்குநரின் வெற்றி அல்லது அவரின் திறமை என்பது இது போன்ற பாடலை படமாக்கும்போது தான் திரைதுறையின் நுட்பங்கள் தெரிந்துவர்களுக்கு புரியும். இயக்குநர் ஏமாற்றினாலும் எழுதியவரும் இசை அமைத்தவரும் சிறப்பாக செய்து உள்ளார்கள்.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

இந்தப்பாடலை நான் இணைக்கும்போது நினைத்தேன், நான் தான் எப்பவும் போல காலம் கடந்து பாடலை கேட்கிறேன் போல என்று. காதலிச்சவங்க, காதலிக்கப் போறவங்க, காதலின் இனிமையான நினைவுகளை சுமக்கிறவங்க எல்லோரும் அனேகமாக விரும்பும் பாடலாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். பாடலை இயற்றியவர் நா.முத்துக்குமார். இசை யாரோ புதியவர் என்று நினைக்கிறேன்.

அப்புறமா ஜோதிஜி, அந்த ஆண் கதாபாத்திரத்தில் நடித்தவர் (ஜெய்) பற்றி அதிகம் எனக்கு தெரியாது. ஒரே ஒரு முறை சனல் மாற்றும் போது ஓர் நிகழ்ச்சியில் பார்த்த ஞாபகம். அப்போ இவர் தொலைபேசியில் அழைத்து பேசியவர்களிடம் அவர்களின் ஆங்கில உச்சரிப்பை திருத்திக்கொண்டிருந்தார். அப்போ தான் நினைத்தேன் இவர் வளர நிறைய காலம் எடுக்கும் இல்லையென்றால் காணாமல் போகப்போகிறார் என்று.

இளையதலைமுறை அல்லவா. அதாவது என் பாசையில் 'Millennial'.:))

Rathi சொன்னது…

தவறு,

உங்கள் கருத்துகளை வழிமொழிகிறேன். காதல் உணர்வுபூர்வமானது தான். அதை அறிவுபூர்வமாகவும் அணுகினால் இன்னும் அழகுபெறும் என்பது என் கருத்து.

ஜோதிஜி சொன்னது…

காணாமல் போகப் போகிறார் அல்ல. காணாமலேயே போய் விட்டார். இசை அமைப்பாளர் தேவாவின் சொந்தம். ஒரு படத்தை தவிர மற்ற படங்களில் நடிப்பதை விட .................... செய்து கொண்டு இருப்பவர். எனக்கு ஒரு வினோத பழக்கம்உண்டு. படமோ செய்தியோ அதன் பின்புலம் ரொம்ப முக்கியம் அதை விட அதன் நம்பகத்தன்மை ரொம்ப ரொம்ப முக்கியம்.

இவரால் பிரச்சனை அதிகமாக இராம நாராயணன் இயக்குநர் கூட்டத்தில் சொன்ன வார்த்தை.

ரொம்ப ஆட்டம் போடாதே? முதல் படத்தில் உன்னை வைத்த இடத்தில் வேறொரு நபரை போட்டு இருந்தாலும் அந்த கதைக்கு ஜெயித்து இருக்கும் என்றார். பலரும் அப்படித்தான் திட்டினார்கள்.

இன்னும் திருந்தவில்லை என்பது கூடுதல் தகவல்.
படமாக்கப்பட்ட விதத்தை பார்த்தாலே புரியும். சப்பை.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

இந்த நடிகர் சினிமாவில் நடிக்காமல் விட்டால் அவரது வாழ்வாதாரமோ அல்லது எதிர்காலமோ வீணாகப் போவதில்லை. தமிழ் சினிமாவும் எதையும் இழக்கப்போவதில்லை. அது சரி, உங்களுக்கும் இவருக்கும் ஏதாவது வாய்க்கால், வரப்பு தகராறோ?