பிப்ரவரி 11, 2011

மாற்றத்திற்கான மாற்றம்! - எகிப்து

ஒரு சில நாட்கள் இணையத்திலிருந்தும், ஒரு நாள் முழுதும் தொலைக்காட்சி தவிர்த்தும் பொழுதுகளை கழித்தாயிற்று. எதையும் இழப்பதாகவோ அல்லது தவறவிட்டதாகவோ உணரவில்லை. நிறையவே அமைதியாயிருந்தது மனம். நான் விரும்பினால் எந்த நொடியும் என் மனதை மாற்றிக்கொண்டு மறுபடியும் இந்த மெய்நிகர் உலகத்தில் என்னை நானே தொலைக்கலாம் அல்லது அதற்குள் மூழ்கிப்போகலாம் என்கிற உத்தரவாதம் நிச்சயம் இருக்கிறது என்பது என் அடிமனதுக்கு தெரியும். அதனால் இவற்றிலிருந்தெல்லாம் விலகியிருப்பது என்பதும் சாத்தியமாயிற்று.

என் உயிருக்கும் உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்கிறது என்கிற என் தனிமனித நம்பிக்கை, சமூக மற்றும் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகின் அனைத்து மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்வுக்கும், உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழக்கப்படவில்லை என்பது அறிவுக்கு தெரியும். அதனால் எழும் கேள்விகள் என்னைத் துளைத்தாலும், அவற்றுக்குரிய தெரிந்ததும், தெரியாததுமான விடைகளுடனேயே நாட்களையும், வாழ்க்கையையும் நகர்த்திக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நாள் வாழ்வின் ஒழுங்கு மாறிப்போனாலே தடுமாறுவதும், தத்தளிப்பதும் மனித இயல்பு. நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்று அன்றாடவாழ்வின் இயல்புகளும், ஒழுங்குகளும் மாறிப்போன வாழ்வை நானும் வாழ்ந்திருக்கிறேன். அதன் வலியை உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே ஈழமும், எகிப்தும் இன்னும் அதுபோன்ற மண்ணும், மக்களும் என்னை நிறையவே பாதிக்கின்றன, பாதிக்கிறார்கள்.  ஈழத்தில் இப்போது இயற்கை தன் பங்கிற்கான அழிவை ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கிறது. எகிப்தில் தொடர்ந்து இன்றோடு பதினெட்டு நாட்களாக தொடர்ந்து அடிப்படைவாழ்வின் மாற்றத்திற்கான வாசல் திறக்கும் என்கிற நம்பிக்கை தளராமல் முனைப்புடன் இன்னும் போராடும் மக்கள் மீது வலிந்து திணிக்கப்படும் அவநம்பிக்கையும், முடிவுகளும்!! அவர்களை வன்முறையின் வழி நோக்கி ஏவச்செய்யும் சர்வாதிகாரத்தின் பேச்சு!

எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை, வலிந்து திணிக்கப்படும் முடிவுகள், அரசியலும் அரசியல்வாதிகளும் வாக்களித்தவர்களின் வாழ்வில் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தமாட்டார்கள் என்பதை மக்கள் உணரும் போது என்னாகும் என்பதற்கு எகிப்து ஓர் முன்னுதாரணம். சர்வாதிகாரத்தையும், சர்வாதிகாரிகளையும் வளர்த்துவிட்டு சாமானியர்களின் வாழ்வில் பரமபதம் ஆடிக்கொண்டிருக்கும் சர்வதேச அரசியல். அமெரிக்காவுக்கு கம்யூனிசம், சோஷலிசம் என்பதை விடவும் சர்வாதிகாரம் எவ்வளவு பிடிக்கும் என்பதை அமெரிக்காவின் ஆதரவில் வளர்த்தெடுக்கப்பட்ட சதாம், பின்லேடன் முதல் எகிப்தின் முபாரக் வரை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி வளர்த்துவிட்ட ஓர் வினை தான் இன்று முபாரக் வடிவில் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசி நிற்கிறது.

உலகத்தின் மேடையின் மேல் நின்று வரலாற்றின் ஓர் மாற்றத்தின் அங்கத்தை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தான் பதவியை துறக்கப்போவதில்லை, ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை என்று தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் முபாரக். அமெரிக்காவுக்கான எகிப்திய தூதுவர், அமெரிக்க உளவுத்துறை என்று எல்லோரும் உறுதிப்படுத்திய செய்தியைத்தானே ஒபாமா, அமெரிக்க அதிபர், அறிவித்தார் என்று Jouranalists, Analysits என்று எல்லோரிடமும் விளக்கம் கேட்டுக்கொண்டிருகிறார்கள் உலகின் முன்னணி செய்தி தளங்கள். இப்போது வரும் செய்திகளின் படி எகிப்திய ராணுவமும் முபாரக்கை தான் ஆதரிக்கிறது போல் தெரிவதாக செய்திகள் சொல்கின்றன.

இவ்வளவுக்குப் பின்னும் எகிப்தின் தற்காலிக அதிகாரத்தை கொண்டிருக்கும் துணை ஜனாதிபதி ஒமார் சுலைமான் கிளர்ச்சியாளர்களுக்கு சொன்னது வீட்டிற்கு போங்கள், தொலைக்காட்சி (குறிப்பாக மேற்குலக தொலைக்காட்சி) பார்க்காதீர்கள் என்பது தான். எப்படி இவர்களால் இப்படி பேசமுடிகிறது! தூங்கமுடிகிறது, சாப்பிடமுடிகிறது!

இவர்கள் எப்படி பேசினாலும், என்ன அடக்குமுறையை கையாண்டாலும் எகிப்து எங்கள் தேசம். அதை ஆள வேண்டியவர்கள் அதன் குடிமக்களாகிய நாங்களே என்று சர்வாதிகாரத்தை தூக்கியெறிய திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள் தங்களுக்குள் எந்த வேறுபாடும் பாராட்டாமல் போராடிய எகிப்தியர்கள்.

எகிப்தின் நிலைமை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது உலகம்.  முப்பது வருடங்களுக்குப் பிறகு அடக்கப்பட்ட  தங்கள் குரலை உலகம் கேட்கிறது என்கிற நம்பிக்கையோடு எகிப்தியர்கள் போராடினார்கள். தற்சமயம், முபாரக் பதவியைத் துறந்து போயே போய்விட்டார் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.


அன்றாடவாழ்வின் அசெளகர்யங்கள் எத்தனையோ  அழுத்தங்களை கொடுத்தாலும், எல்லாவற்றையும் தாங்கி இன்று உலகத்துக்கு அடக்குமுறையின் அதிகாரங்களுக்கு ஓர் உறுதியான செய்தியை சொல்லிகொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து எதேச்சாதிகாரத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் துணைபோகிறவர்கள் ஓர் பாடத்தை கற்றுக்கொவார்களா! தேர்தலில் வாக்களிக்கும் அடிமைகள் அல்ல மக்கள் என்பதை உணர்வார்களா!

நன்றி: படங்கள் அறியது, Google

8 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

:))) சந்தோஷமான செய்திதாங்க கடைசியா வந்து விழுந்திருக்கிறது. காலம் மாறும் காட்சிகளும் மாறும். பொறுமை காப்போம்! நமக்கும் ஒரு விடியல் உண்டு என்று நம்புவோம்.

Thekkikattan|தெகா சொன்னது…

இப்படியாக ட்விட்டில் அந்த நாட்டின் ஒரு குடிமகன், முபாரக்கின் அறிவிப்பிற்கு பிறகு சொல்லியிருந்தார். எத்தனை உண்மையான வார்த்தையது-

ட்விட்டரில் ஒரு ஆர்வமூட்டக் கூடிய ட்விட் பாருங்க :)

SamDaTruth Samer Abdel-Halim
by reBELLYus

Sick of your old good-for-nothing dictator? Call 1-800-EGYPT and get your local dictator brought down in less than 30 days. #Egypt

Rathi சொன்னது…

தெகா,

எங்களுக்கும் காலமும், காட்சியும் மாறக் காத்திருப்போம். இனிமேல் எகிப்தின் அரசியல் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தவறு சொன்னது…

எங்குமே அடக்குமுறை சிலகாலங்கள்தான் ரதி. பொறுத்திருப்போம்....நம்பிக்கைகள் வீண்போகாது.

Rathi சொன்னது…

தவறு,

எங்களிடம் அப்பப்போ நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

சி.கருணாகரசு சொன்னது…

அடக்கு முறை என்பது எப்போதும் வென்றிடாது...

பகிர்வுக்கு வணக்கம்.

Rathi சொன்னது…

சி.கருணாகரசு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜோதிஜி சொன்னது…

எப்படி இவர்களால் இப்படி பேசமுடிகிறது! தூங்கமுடிகிறது, சாப்பிடமுடிகிறது!

ஆச்சரியம்.

இதே கேள்விகள் தான் எப்போதும் இங்கு உள்ள அரசியல்வாதிகளை பார்க்கும் போது மனதில் வந்து வந்து போய்க் கொண்டே இருக்கிறது.