பிப்ரவரி 06, 2011

"நண்பேன்டா.." - நட்பும் இறையாண்மையும்

ஜனநாயகம், இறையாண்மை இந்த இரண்டு சொற்களும் அடிக்கடி அல்லது தேவைக்கேற்ப அரசியல்வாதிகளால் கையாளப்படும் சொற்கள். ஜனநாயகம் என்கிற சொற்பதம், அதன் அர்த்தம் நாட்டுக்கு நாடு அங்கு வாழும் மக்களின் அனுபவங்களைப் பொறுத்து வேறுபடுகிறது. கனடாவில் வாழும் எனது ஜனநாயகம் பற்றிய புரிதலுக்கும் ஓர் மூன்றாம் உலக ஜனநாயகத்தில் வாழும் ஒருவரின் அனுபவத்துக்கும் இடையே எவ்வளவோ இடைவெளிகள், வேறுபாடுகள். ஆனாலும், ஜனநாயகம் என்பதன் முழு பயனையும் எந்த நாட்டவருமே முழுமையாய் அனுபவிப்பதில்லை. ஜனநாயகம், மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி. இறையாண்மை என்பது ஓர் நாடு முளுச்சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் தன் செயற்பாடுகளை தீர்மானித்தல் எனப்பொருள்படும். 

இந்த இரண்டு சொற்களின் அர்த்தங்களும், அதன் பயன்பாடுகளும் யதார்த்த உலகில் எப்படி அதன் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன! எப்படி அதன் அரசியல் அர்த்தங்களைப் பெறுகின்றன! ஜனநாயகம் என்கிற சொற்பதம் இறையாண்மை என்பதை விடவும் அதிகமாக பாவிக்கப்படுகிறது. ஆனால், இங்கேயுள்ள பிரச்சனை என்னவென்றால் இந்த இரண்டு சொற்களுக்குமிடையே நசுக்கப்படும் மனித உரிமைகள் தான். தேர்தல், வாக்குரிமை, ஜனநாயகம் இதனாலெல்லாம் ஈழத்தமிழர்கள் போன்ற ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவான ஓர் தேசிய இனத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்றால், "இல்லை" என்பதே உலக வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்ட பதில். ஒரு உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மனு தாக்கல் செய்யப்போனாலே அதில் ஆயிரம் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. இது தான் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை ஜனநாயகம் வழங்கும் சமவுரிமை. ஜனநாயகம் என்றாலும் நேரடி ஜனநாயகம் (Direct Democracy) எங்குமே கிடையாது. அது, "பிரதிநிதித்துவ ஜனநாயகம்" (Representative Democracy) தான் நடைமுறை சாத்தியமாய் உள்ளது. அதாவது வாக்களிப்பவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவது. இந்த பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதிலிருந்து பிறந்து தான் "குடியுரிமை" (Citizenship) என்கிற கருத்தியல். 

சிங்கள ஆட்சியாளர்களின் இதை பயன்படுத்தித்தான் மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களின்  குடியுரிமையை பறித்து பாராளுமன்றத்தில் அவர்களுக்குரிய  பிரதிநிதித்துவத்தையும் பறித்தார்கள். இது ஒன்றும் புதுக் கதையல்ல. ஆனால், இது தான் இன்றும் ஈழத்தமிழர்களின் பூர்வீக பூமியில் சிங்கள குடியேற்றங்கள் ஆக தொடர்கின்றன. சொந்த மண்ணிலேயே தமிழர்களை நாடற்றவர்களாக்கும் சதி.  அண்மையில் கனடாவின் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் கூட இலங்கை அரசு தமிழர் பூமியில் இவ்வாறான சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதை நிறுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். தமிழர்களின் மொழி, நிலம், வாழ்வு மற்றும் அவற்றுக்குரிய அங்கீகாரம் பறிக்கப்படுவதென்பது எங்கள்  இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதாகாதா!  

மேற்குலக அரசியல் வாதிகளும் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மெளனிகளாய் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபின் இப்போ இலங்கையின் இறையாண்மை பற்றியே அதிகம் அக்கறைப்படுகிறார்கள். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. இலங்கையின் இறையாண்மைக்கு மட்டும் களங்கம் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.  Human Rights Watch, Amnesty International, International Crisis Group போன்ற பாரிய மனித உரிமை அமைப்புகள் கூட நம்பமறுத்த 'படிப்பினைகள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவை ஆதரிப்பது அமெரிக்கா. இந்த ஆணைக்குழு போர்க்குற்றங்களையோ அல்லது மனிதத்திற்கு எதிரான குற்றங்களையோ விச்சாரிக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் மீண்டும், மீண்டும் ஆணித்தரமாக அடித்துச்சொன்னாலும் அமெரிக்க மட்டும் இந்த விசாரணைக்குழுவை நம்புகிறதாம். தமிழர்களின் உரிமைகளை, இறையாண்மையை குழிதோண்டிப் புதைத்து விட்டுத்தான் இலங்கை என்கிற நாட்டின் சிங்களப்பேரினவாதிகளின் இறையாண்மையைப் பாதுக்கப்பதாக மேற்குலகமும் தலையால் நடக்கிறது. இதெல்லாமே அரசியல் தான். அதன் நீட்சி எதுவரை என்பது தான் சற்றே எரிச்சலோடும், கசப்போடும் வியக்க வைக்கிறது. 

அண்மையில் தமிழ்நெட்டில் செய்திகளை மேய்ந்துகொண்டிருந்த போது கண்ணில் பட்டது, ஓர் கனேடிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் இலங்கையின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் G. L. பீரிஸ் ஆகிய இருவரின் நட்பு எந்தளவுக்கு இலங்கையின் போர்க்குற்றங்களை மறைக்க உதவுகிறது என்பதை விளக்கியிருந்தார். Oxford இல் படிக்கும் போது இவர்கள் இருவரும் நண்பர்களாம். "நண்பேன்டா.." என்கிற நட்பின் ஆழம் இதுவோ!!! 

"I observe Hillary Rodham Clinton careening about in response to events in Sri Lanka and now Eypt - bouncing from (realpolitik) wall to (humanitarian) wall to (pragmatism) wall, in a kind of foreign policy funhouse of mirrors," writes Canadian Professor of Law....."  (Tamilnet)அதில் மேலும் சொல்வதாவது, ராஜபக்க்ஷேவின் அரசு G. L. பீரிஸ் என்பவருக்கு ஹிலாரி அம்மையாரிடம் இருக்கும் குடும்ப நட்பை கொண்டு தங்கள் பிரச்னையை சுமுகமாக கையாளுகிறார்கள் என்பது தான். எகிப்தின் தலைவர் ஹோஸ்னி முபாரக் கூட இவர்களின் குடும்ப நட்பாமே!!! இன்று இலங்கை, எகிப்த் போன்ற நாடுகளின் போலியான இறையாண்மை, ஜனநாயகப் பண்புகள் பற்றி பேசுவதில் ஹிலாரி கிளிண்டன் போன்றோரின் போலித்தனம் மட்டுமே பல்லிளிக்கிறது என்பதை எப்போது புரிந்துகொள்வார்கள். இவர்களின் குடும்ப நட்பின் ஆழம் கடந்தும் ஈழத்தமிழர்களுக்கும் இறையாண்மை உண்டு என்பதை எப்போது ஏற்றுக்கொள்வார்கள். ஹிலாரி அம்மையார்  ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது தவறு என்று அரசியலில் காலடி வைக்கு முன் சுட்டிக்காடியத்தை ஈழத்தமிழர்கள் இன்னமும் மறக்கவில்லை.  இதுபோன்ற உயர்ந்தோர் குழாம் (Elites) நட்பு என்பது ஒன்றும் புதிதில்லை. ஆனாலும், ஒடுக்கப்படுபவனுக்கு மட்டுமே எப்போதும் ஜனநாயக வழிமுறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்களின் நட்பு வட்டத்திற்கும் (ஒடுக்குபவர்கள்) இந்த ஜனநாயகம், இறையாண்மை பற்றி சொல்லிக்கொடுக்கலாமே. 

எகிப்தியர்களுக்கு நாடு என்று ஒன்றிருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் மண்ணில் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து போராடுகிறார்கள். எங்களுக்கு எங்கள் சொந்த மண்ணே சொந்தம் இல்லையென்று ஆனதால் எந்த நாட்டில் இலங்கை தூதரகம் இருக்கிறதோ, அதன் முன் நின்று கோஷம்போட்டு எங்கள் எதிர்ப்பை பதிவு மட்டுமே செய்யமுடிகிறது. அவ்வப்போது உங்கள் வாசஸ்தலமான வெள்ளைமாளிகை வாசல் வந்தும் உரிமைப்பிச்சை கேட்கவைத்தீர்கள் ஹிலாரி அம்மையாரே!!காரணம், கிழக்கு திமோருக்கும், தென் சூடானுக்கும்  திறந்த ஜனநாயக வாசல் ஈழத்தமிழனுக்கு திறக்கப்படாதா என்கிற நப்பாசை தான். உலக்குக்கு ஜனநாயகம் பற்றி போதனை செய்பவர்களிடம் ஈழத்தமிழனுக்கும், எகிப்த்தியனுக்கும் என்ன பதில் இருக்கிறது!!
Feb 04, 2011 protest in Toronto

நன்றி: படங்கள் Google, Tamilnet6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

கடைசிப் பந்தி எங்கள் நிலைமையை நினைத்துக் கண்கலங்க வைத்துவிட்டது ரதி.கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
யாருக்குமே இரக்கமில்லை இயற்கைக்குக்கூட !

தவறு சொன்னது…

ரதி உங்கள நினைக்யிலே பெருமையா இருக்கு..தாய் மண்ணை பற்றிய உருக்கம் . எனக்கு தெரிந்தவரையில் நிறையபேர் அங்குபோய் தங்கிவிட்டாலே நாம அந்த மண்ணில் பொறந்து வளர்ந்தவர்கள் ஆகிவடுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீங்க ......

DrPKandaswamyPhD சொன்னது…

ஈழத் தமிழர்களின் நிலை கண்ணில் நீர் வரவழைக்கிறது.

விந்தைமனிதன் சொன்னது…

தீச்சுடர் தாங்கிநிற்கும் எழுத்துக்கள்! விரல்களை ஒத்திக்கொள்ளத் தோன்றுகின்றது

Thekkikattan|தெகா சொன்னது…

விந்தைமனிதனின் மனநிலையே எனக்கும்!

வலியோருக்கு கொடி பிடிக்கும் மானுடமாகிவிட்டது, ஆளும் வர்க்கம்!

ஜோதிஜி சொன்னது…

இந்த விமர்சனம் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம்(?)

சிங்கள ஆட்சியாளர்களின் இதை பயன்படுத்தித்தான் மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களின் குடியுரிமையை பறித்து பாராளுமன்றத்தில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தையும் பறித்தார்கள்

என்ன ரதி விளையாடுறீங்களா? இயக்குநர் மட்டுமே தான் சேனநாயகா. கதை திரைக்கதை வசனமெல்லாம் யார்?

தமிழர்களின் உரிமைகளை, இறையாண்மையை குழிதோண்டிப் புதைத்து விட்டுத்தான் இலங்கை என்கிற நாட்டின் சிங்களப்பேரினவாதிகளின் இறையாண்மையைப் பாதுக்கப்பதாக மேற்குலகமும் தலையால் நடக்கிறது. இதெல்லாமே அரசியல் தான். அதன் நீட்சி எதுவரை ?

ஈழத்தில் வாழும் தமிழர்களும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் என்று தங்களை தமிழர்கள் என்று நினைக்கிறார்களோ அல்லது சிங்கள தலைவர்களுக்கு உதவக்கூடாது என்று முடிவுக்கு வருகிறார்களோ அதுவரை.

காரணம் நடந்து கொண்டிருக்கும் அத்தனை விசயங்களும் உங்களுக்கு தெரிந்தது தானே?

எங்களுக்கு எங்கள் சொந்த மண்ணே சொந்தம் இல்லையென்று ஆனதால் எந்த நாட்டில் இலங்கை தூதரகம் இருக்கிறதோ, அதன் முன் நின்று கோஷம்போட்டு எங்கள் எதிர்ப்பை பதிவு மட்டுமே செய்யமுடிகிறது.

இதைவிட எந்த வார்த்தையாலும் ஈழ அவலத்தை சிறப்பாக எழுதி விட முடியாது. அற்புதம்.

உலக்குக்கு ஜனநாயகம் பற்றி போதனை செய்பவர்களிடம் ஈழத்தமிழனுக்கும், எகிப்த்தியனுக்கும் என்ன பதில் இருக்கிறது!!

ஈழத்தமிழர்களிடம் ஒரேஅணியில் உள்ள ஒற்றுமை என்பதை இந்த எகிப்து மக்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தெருவில் வந்து இறங்கிய போராட்ட மக்கள், சாதாரண மக்கள் போல் என்றாவது ஈழ மக்கள் ஒன்று சேர்வார்களா என்று ஒரு சாதாரண தமிழனின் ஆவலை இங்கு எழுதி வைத்து விட்டு நகர்கின்றேன்.