பிப்ரவரி 02, 2011

பொருளியல் வாழ்வும் மக்கள் கிளர்ச்சியும் - எகிப்த் ஓர் கண்ணோட்டம்

எகிப்து என்றவுடன் எப்போதும் முதலில் நினைவில் வருவது நைல் நதியும், கிளியோபாட்ராவும் தான். அந்த உருவக எல்லையைத்தாண்டி எனக்கு எகிப்து பற்றிய அறிமுகம் கிடைத்தது Morgan Spurlock - Where in the world is Osama Bin Laden? என்கிற புத்தகத்தின் மூலம் தான். முஸ்லிம்/அரபு நாடுகளுக்கும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் சென்று ஓர் நேரடி அனுபவமாக 9/11 க்குப்பின்னான ஓர் அறிமுகமாக அவரின் எழுத்து விரிந்து செல்கிறது. அரபு நாடுகளின், அந்த மக்களின் அன்றாட வாழ்வின் ஊடே வாசிப்பவரை அழைத்துச்சென்று அதில் ஒன்றிபோகவைக்கும் எழுத்து ஓர் சிறப்பம்சம். ஆரம்பத்திலேயே இவர் ஓர் அமெரிக்கர் என்கிற என் முன் முடிவு என் வாசிப்பில் ஓர் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்; அவர் சொல்லும் பல உண்மையுள்ள யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் சில விடயங்களை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமலும் தடுத்தது. பெரும்பாலான அமெரிக்கர்கள் போல இவரும் ஈழப்போராட்டம் பற்றிய புரிதல் இன்றி புலிகள் பற்றி தன் பங்கிற்கு எழுதியிருக்கிறார்.  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை தாங்கி நிற்கும் ஓர் தேசம் இது. இன்று மக்கள் கிளர்ச்சிக்குப்பின் எகிப்தை அதன் அரசியல், பொருளாதார வாழ்க்கையை தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் அரபு நாடுகளாக (அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப) எகிப்தும், ஜோர்டானும் இருக்கின்றன. எகிப்தில் முப்பது வருடங்களாக ஹோஸ்னி முபாரக்கின் எதேச்சாதிகாரமும், அதிகம் சமயக்கோட்பாடுகள் சாராத ஆட்சியும் நிறைந்ததாக இருந்து வந்தது. எத்தேச்சாதிகாரம் நிறைந்த முபாரக்கின் ஆட்சியில் மக்கள் அனுபவித்ததெல்லாம் வறுமைக்கோட்டு வாழ்வும், வேலையில்லாத்திண்டாட்டமும், காவற்துறையின் கெடுபிடிகளும் தான். விளைவு வறுமையும், லஞ்ச ஊழலும் மட்டுமே செழித்து வளர்ந்து மக்களின் குரல்வளையை நெரிக்கத்தொடங்கின. ஐ. நா. எகிப்தை "வருமானம் குறைந்த உணவுப்பற்றாக்குறை" (low-income food-deficit country) உள்ள ஓர் நாடாக பட்டியலிட்டுள்ளது.  எகிப்த்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் கிளர்ச்சி மதம் சார்ந்ததல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

எகிப்தியர்களின் சராசரி வயது 24. மொத்த சனத்தொகையில் பெரும்பாலோனோர் 30 வயதுக்குட்பட்டோர் என்று புள்ளிவிபரங்கள் சொல்கிறது. ஆக, இது ஓர் துடிப்பான இளைய தலைமுறையை கொண்ட (இந்தியா போல) ஓர் நாடு. அந்த மனித வளமும், வலுவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தேவைக்கேற்ப பயன்படும் வகையில் அதற்குண்டான திட்டங்களோ, வேலைவாய்ப்புகளோ அரசினால் உருவாக்கப்படவில்லை. விளைவு இங்கொன்றும், அங்கொன்றுமாய் அப்பப்போ எதிர்ப்பு போராட்டங்கள் எழுந்தன. அவை முபாரக்கின் ஆட்சியில் காவற்துறையின் பலம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டன. முப்பது வருடங்களாய் பொறுத்துப்பார்த்து வெறுத்துப் போனவர்கள் (புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்!!!) இன்று கிளர்ந்தெழுந்து கேட்பது எதேச்சாதிகார ஆட்சியாளரை பதிவியிலிருந்து விலகச்சொல்லியும், ஜனநாயக ரீதியான தேர்தலும், ஊழல் ஒழிப்பும், வேலை வாய்ப்புகளும் அதற்கேற்ற ஊதியமும் தான். முபாரக்கும் தான் அடுத்த தேர்தலில் பங்குபற்ற மாட்டேன், போட்டியிட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் எகிப்த்-ஹெய்ரோவில் நிலைமைகள் இன்னும் மோசமாகி வன்முறைக்கு வித்திட்டுக்கொண்டிருக்கிறது. முபாரக்கிற்கு ஆதாரவானவர்களுக்கும்(!!) முபாரக்கின்  ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கும் இடையே வன்முறை வெடிக்கும் அபாயம் தென்படுகிறது.

முபாரக்கின் வயது 82. முப்பது வருடங்கள் எகிப்தை அடக்கி ஆண்டாகிவிட்டது. பதவியையும், அரசியலையும் விட்டுப்போக மனமில்லாமல் தனக்குப்பின் தன் மகன் (Gamal) எகிப்தை ஆள வேண்டுமென்ற பேராசை வேறு. இவர்கள் திருந்தவே மாட்டார்களா என்று மனதிற்குள் திட்டத்தான் தோன்றுகிறது. இவர்களின் அரசியல் பேராசைகளுக்கு அப்பாவி நாட்டு மக்களின் அபிலாசைகள் பலியாக்கப்படுவது எப்படி நியாயம் என்று கேள்வியெல்லாம் மனதிற்குள் தோன்றினாலும் யாரிடம் பதிலை எதிர்பார்ப்பது!  விஞ்ஞான தகவல் தொழில்நுட்பம் அதன் உபயோகங்கள் மட்டும் ஓர் நாட்டின் குடிமக்களுக்கு விடிவைத் தராது என்பதற்கு எகிப்த் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிய குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையை கொடுத்து விளையாட்டு காட்டுவது போன்றது தான் இது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின்னும் அதே கிலுகிலுப்பை அவர்களுக்குரிய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்யுமா!!!
பெ. மணியரசன் அவர்களின் வார்த்தைகளில், "கையில் ஒரு கைபேசி, பையில் ஓர் கைபேசி, குடிசைக்குள் ஒரு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி - இவைதான் வளர்ச்சியின் அடையாளமா? அந்தக் குடிசைக்குள் கழிவறை கிடையாது. சமையலறை கிடையாது. படுக்கையறை கிடையாது........... வளர்ச்சி என்பது சமூகத்தில் சில செல்வந்தர்களின் செங்குத்தான வளர்ச்சி அன்று. சமூகம் முழுமையும் வளர்கின்ற கிடைநிலை வளர்ச்சியாகும். இயற்கை சமன்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும், சக மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் உணவு, உடை, உறையுள், சமூக உறவு ஆகியவற்றில் தன்னிறைவு காண்பதே மெய்யான வளர்ச்சியாகும்" (நன்றி: 'பெ.மணியரசன்' பகுப்புக்கான தொகுப்பு. தமிழ்நாட்டைத் துண்டாடுவது தற்கொலை முயற்சி)

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த போது இந்த கிளர்ச்சி எகிப்த்-ஹெய்ரோவில் ஆரம்பித்த காலங்களிலேயே இங்குள்ள ஊடகங்கள் அல்ஜசீரா தொலைக்காட்சி ஊடகத்தை இலக்குவைக்கத் தொடங்கிவிட்டார்கள். அரபு நாடுகளில் நடக்கும் இந்த தொடர் கிளர்ச்சிகளுக்கு பொதுவான ஓர் தொடர்பு இருக்கிறதென்றும்; அது 'கட்டார்' (Qatar)  ஐ தளமாக கொண்டு செயற்படும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் காட்டமான செய்திகளின் ஒளிபரப்புத்தான் என்று பகுத்து ஆராய்ந்திருந்தார்கள்!? இறுதியில் அல்ஜசீராவை எகிப்தில் தடை செய்தே விட்டார்கள். அமெரிக்க ஊடகங்களைப் பற்றி Noam Chomsky, அருந்தரி ராய் போன்றோரின் விமர்சனங்களைப்  படிப்பவர்களுக்குப் புரியும் அமெரிக்க காட்சி ஊடகங்களின் லட்சணம்.

எதுவாக இருந்தாலும் இப்போ எல்லோரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பது எகிப்தில் ஓர் ஆட்சி மாற்றம் வந்தால் யார் அதை கைப்பற்றுவார்கள் என்பது தான். யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறார்களோ என்பதில் "Muslim Brotherhood" (இந்த அமைப்பு பற்றி Where in the world is Osama Bin Laden? புத்தகத்தில் வாசித்து தெரிந்துகொண்ட போது சற்றே வியப்பாக கூட இருந்தது) என்கிற அடிப்படைவாத கொள்கைகளைக்கொண்ட அமைப்பு முதல் நோபல் பரிசு பெற்ற ஓர் எகிப்தியர் (Elbaradei) வரை பேசப்படுகிறார்கள். Hezbollah, ஹமாஸ் தொடங்கி அல்ஹய்டா வரை தோன்றுவதற்கு ஊற்றுக்கண்ணாயிருந்த 1928(!!) ம் ஆண்டே எகிப்தில் உருப்பெற்று பின்னர் முபாரக் அரசினால் தடைசெய்யப்பட்ட Muslim Brotherhood என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றினால் (Theocratic Govt. - தெய்வ/தெய்வீக ஆட்சி!!) என்னாகும் என்று மேற்குலகம் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறதோ அல்லது அதை தடுக்க இப்பவே முன்னேற்பாடாக ஏதாவது முயற்சி செய்கிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம். இவர்களின் கையில் ஆட்சி மாறினால் இஸ்ரேல் என்ன விதமான விளைவுகளை எதிர்நோக்கும்?  எகிப்த்திய ராணுவம் (அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்) முபாரக்கின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பார்களா என்கிற கேள்வியை செய்திகளில் விட்டுவைக்கிறார்கள். அமெரிக்காவின் ஒபாமா வழக்கம்போல் எகிப்தின் மாற்றம் "Peaceful Transition" ஆக இருக்கவேண்டும்; அதை எகிப்திய மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.


 நன்றி: படங்கள் Google.


30 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

தேவையான பதிவு! இந்த காலச் சூழ்நிலைக்கு. நிறைய பேச வேண்டியிருக்கிறது. எகிப்திற்கும் இன்றைய இந்திய அரசியல் சூழலிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

// இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் எகிப்த்-ஹெய்ரோவில் நிலைமைகள் இன்னும் மோசமாகி வன்முறைக்கு வித்திட்டுக்கொண்டிருக்கிறது//

ஆமாம்! இப்பொழுது கூட்டத்தினை நோக்கி சுட்டிருக்கிறார்கள். இது நல்ல மூவ்வாக தெரியவில்லை. இந்தாளு நாட்டை விட்டு தொலைய வேண்டியதுதானே?? திரும்பவும் வருகிறேன். போன பதிவில் விடியோ பார்த்தேன். Hats off to that lady Subha Sundaralingam! Bravo!!

ராஜ நடராஜன் சொன்னது…

//எகிப்து என்றவுடன் எப்போதும் முதலில் நினைவில் வருவது நைல் நதியும், கிளியோபாட்ராவும் தான்.//

பிரமிடுகளை விட்டு விட்டீர்களே?
நிலம் சார்ந்த இடுகையென்பதால் கூர்ந்து கவனித்துப் படித்தேன்.பதிவுக்கான வாசகங்களை பின்னூட்டங்களாகத் தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

//மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் அரபு நாடுகளாக (அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப) எகிப்தும், ஜோர்டானும் இருக்கின்றன.//

இரண்டுமே அமெரிக்காவின் அல்லக்கைகள் என்பேன்.அதிலும் எகிப்துக்கு வருடத்திற்கு இம்புட்டு டாலர் கப்பம் கட்டுகிறேன்.இஸ்ரேல் விசயத்தில் தலையிடாதே என்று பத்திரமெழுதிக் கையெழுத்துப்போட்டு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இஸ்ரேலின் அரபியர்களுடனான 6 நாள் யுத்தத்திலும் அதற்குப் பின்னும் எகிப்து பத்திர உடன்படிக்கை செய்து திசை மாறாமல் இருந்திருந்தால் வளைகுடா,எகிப்தின் சரித்திரம் வேறு விதமாக திரும்பியிருப்பதற்கு சாத்தியங்கள் இருந்திருக்கும்.

வெறுமனே ஹைப்போதெட்டிக்கலாக நிகழ்ந்தவைகளைக் கூறாமல் தற்போதைய எகிப்திய மக்கள் எழுச்சியையும் எனது கருத்தையும் அடுத்த பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

அமெரிக்க மக்களும்,மனித உரிமைகளும் எவ்வளவு மேம்பட்டிருக்கிறதோ அதற்கு எதிர் மாறாகவே அமெரிக்காவின் அரசியல் களம் துவக்கம் முதலே இரட்டை நிலை கொள்வதை நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன்.

வளைகுடா நாடுகளில் மக்களாட்சி நிகழாமைக்கும்,ஒற்றை மனித அரசியல் சூழலுக்கும் முக்கிய காரணம் அமெரிக்காவின் சூழ்ச்சி அரசியல் என்பேன்.

பழையவைகளை புரட்டினால் ரீகனின் காலத்தில் கொஞ்சம் வாய் திறந்த ஹடாபி ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டு அவரது மாளிகையில் படுக்கை அறை மீது நச்ன்னு ஒரு குண்டு போட்டு வாயை மூடி வைத்து விட்டார்கள்.ஹடாபி,சதாம்,முபாரக்,ஜோர்டான் மன்னர்,துனிசியா பென் அலி இன்னும் பிற வளைகுடா ஷேக்குகள் அமெரிக்காவின் தயவிலேயே சர்வாதிகாரிகளாகத் திகழ்ந்தார்கள்...திகழ்கிறார்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரீகன் காலத்து ஈரான் அடிப்படை வாத ஆட்சி,சதாமுக்கு கொம்பு சீவி விட்டதற்கு பின் நம்ம பேட்டை உஸ்தாது ஜார்ஜ் புஷ் அண்ணாத்தே காலத்தில் வளைகுடாவில் ஜனநாயகம் தளைக்க ஈராக்கில் போர் என்ற போர்வையில் ஈராக் சின்னாபின்னமாக்கப்பட்டது நம் கண்முன் நிகழ்ந்த ஒன்று.

இதோ ஒரு மக்கள் புரட்சி எப்படி இயற்கையாக வெடிக்க வேண்டுமென்பதை துனிசியாவைப்பார்த்து 30 ஆண்டுகால ஹோஸ்னி முபாரக்கின் அடக்கு முறைகளுக்கு எதிராக மக்கள் நிரூபித்துள்ளார்கள்.எகிப்திய மக்களுக்கு வேண்டியதெல்லாம் தார்மீக ஆதரவு மட்டுமே.மற்றவற்றை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

ஒபாமாவும்,அமெரிக்காவும் வளைகுடா மாற்றங்களில் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தால் கிளர்ச்சியான இந்த ஒரு வார காலத்தில் தங்கள் ஆதரவை மக்கள் புரட்சிக்கு தருவதோடு ஹோஸ்னிக்கும் போதும் உன் ஆட்சியென்ற அடையாளக்கோட்டை வெளிப்படையாக சொல்லியிருக்க முடியும்.ஆனால் மதில் மேல் பூனையாக இஸ்ரேல் லாப நஷ்ட கணக்குகளை மனதில் கொண்டு இன்னும் இரட்டை வேட அறிக்கைகளை வெள்ளை மாளிகை முன் வைக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

முஸ்லிம் சகோதரத்துவக்கட்சி,எல்பராடி இருவருமே மக்கள் அபிலாசையை நிறைவேற்ற மாட்டார்கள். முதலாவது எகிப்தை அடிப்படை வாதத்திற்கு கொண்டு செல்லும்.எல்பராடியின் தலைமை அமெரிக்காவிற்கு இன்னொரு அடியாளை புதுமுகமாக அறிமுகப்படுத்தும்.இன்னொரு அணு ஆயுத நாட்டிறகான வித்தாக கூட அமையலாம் எல்பராடி.எனவே மக்களுக்குள்,மக்களுக்காக போராடும் மனிதர்களை அடையாளம் காண்பது அவசியம்.மக்கள் அடக்கு முறைகளுடன் கூட முபாரக் அடிப்படை வாதத்தையும் அடக்கி ஆண்ட ஒரு காரணத்துக்காக வேண்டி முபாரக்கின் ஆட்சிக்கு சில மார்க்குகளை தரலாம்.ஆனாலும் மொத்த மார்க்கில் தோல்வியே எனலாம்.

ராஜ நடராஜன் சொன்னது…

அமெரிக்காவும் அல்ஜசிராவை தடை செய்தது.முபாரக்கும் தடை செய்துள்ளார்.ஆனால் வளைகுடா தேசத்து மக்களை அரசியல்,சமூக,விளையாட்டு ரீதியாக உலக நிகழ்வுகளை முன் வைத்ததிலும் மக்கள் விழிப்புணர்விலும் கத்தாரிலிருந்து இயங்கும் அல்ஜசிரா நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

ராஜ நடராஜன் சொன்னது…

கலாச்சார,பண்பாட்டு ரீதியாகவும்,கல்வி,நீர்,நிலவளத்துடனும், மேம்பட்ட தேசமென்பதால் எகிப்து தன்னைத்தானே மக்களாட்சியில் புதுப்பித்துக்கொள்ளும் என நிச்சயமாக நம்பலாம்.அதற்கு வளைகுடாவின் பொருளாதார உதவியும் கிட்டுமென்பதால் மக்களாட்சிக்கான வளைகுடாப் புரட்சியை வரவேற்போம்.இதில் இஸ்ரேல் பயப்படுவதற்கு அவசியமில்லாமல் கூட்டு வாழ்க்கை முறைக்கு மக்களாட்சி வித்திடும் எனவும் நம்புகிறேன் இருபக்க இடைத்தரகர்கள் குட்டையை குழப்பாமல் இருந்தால்.

Thekkikattan|தெகா சொன்னது…

ஒபாமாவும்,அமெரிக்காவும் வளைகுடா மாற்றங்களில் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தால் கிளர்ச்சியான இந்த ஒரு வார காலத்தில் தங்கள் ஆதரவை மக்கள் புரட்சிக்கு தருவதோடு //

ராஜ நட, அதேதான் என்னுடைய எண்ணமும். ஈராக்கில் ஜனநாயகத்தை நிலை நாட்டுகிறேன் பார் என்று அடாவடியாக உள்ளே சென்று லட்சக்கணக்கில் கொன்று குவித்து விட்டு, எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில், உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவுவது ஒன்றுதான் என் கடமை ;) என்றால் ஏன் மக்களாகவே கிளர்ச்சியுற்று எழுந்து நிற்கும் பொழுது நேரடியாக இரத்தமின்றி யுத்தமின்று அமைத்துக் கொடுக்கக் கூடாது.

முப்பது வருடங்களாக இந்த லட்சனத்தில் 32பில்லியன் டாலர் நிதி உதவி வேறு. இப்போது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் அந்த பணம் எதற்காக முபராக் கம்பெனியிடம் வழங்கப்பட்டிருக்கிறதென :))

என்னமோ அரசியல் பண்றாய்ங்க, வெங்காய புண்ணாக்குங்க! நிறைய விசயம் பேசியிருக்கீங்க. வாரேன் திரும்ப!

ராஜ நடராஜன் சொன்னது…

//பெ. மணியரசன் அவர்களின் வார்த்தைகளில், "கையில் ஒரு கைபேசி, பையில் ஓர் கைபேசி, குடிசைக்குள் ஒரு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி - இவைதான் வளர்ச்சியின் அடையாளமா? அந்தக் குடிசைக்குள் கழிவறை கிடையாது. சமையலறை கிடையாது. படுக்கையறை கிடையாது........... வளர்ச்சி என்பது சமூகத்தில் சில செல்வந்தர்களின் செங்குத்தான வளர்ச்சி அன்று. சமூகம் முழுமையும் வளர்கின்ற கிடைநிலை வளர்ச்சியாகும். இயற்கை சமன்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும், சக மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் உணவு, உடை, உறையுள், சமூக உறவு ஆகியவற்றில் தன்னிறைவு காண்பதே மெய்யான வளர்ச்சியாகும்"//

அழகான வார்த்தைகள் என்பதோடு மணியரசன் கூறுகின்ற ஒரு கிராமத்துக்கு பயணம் செய்து வந்தேன்.மக்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமென்கிற போது சிலுவை சுமக்க வருவான் என்ற அரசியல் களத்தவர்கள் சிலுவையை சுமக்காததோடு மட்டுமல்லாது சிலுவையை சுமக்க வைத்து அதன் மேல் சவாரியும் செய்கிறார்கள் என்கிற போது இன்னும் சில தலைமுறைகள் சிலுவையையும் சிலுவை சவாரிக்காரர்களையும் சுமந்தே நகர வேண்டிய கால கட்டத்துக்குள் மக்கள் சுழற்கிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

//ராஜ நட, அதேதான் என்னுடைய எண்ணமும். ஈராக்கில் ஜனநாயகத்தை நிலை நாட்டுகிறேன் பார் என்று அடாவடியாக உள்ளே சென்று லட்சக்கணக்கில் கொன்று குவித்து விட்டு, எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில், உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவுவது ஒன்றுதான் என் கடமை ;) என்றால் ஏன் மக்களாகவே கிளர்ச்சியுற்று எழுந்து நிற்கும் பொழுது நேரடியாக இரத்தமின்றி யுத்தமின்று அமைத்துக் கொடுக்கக் கூடாது.//

தெகா!ஒபாமா என்ற தனிமனிதனின் நல்ல குணங்களுக்கும் அப்பால் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையும்,முக்கியமாக இஸ்ரேல் நலன் சார்ந்த வளைகுடா கொள்கையும் அமெரிக்காவின் இரட்டை வேடத்தை நன்றாகவே பறை சாற்றுகிறது.இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் நம்பிக்கை கொண்ட மக்களை விட எளிமையான இஸ்லாமியக்கொள்கைகளில்,செக்கூலர் என்றும் கூட சொல்லக்கூடிய நம்பிக்கை கொண்ட மக்கள் எகிப்தில் அதிகம்.மக்களாட்சிக்கு துணை போவது அமெரிக்காவிற்கும் வளைகுடா மாற்றங்களுக்கும் நல்லது.சொல்லப்போனால் மக்களாட்சி ஏற்படுவதன் மூலம் இன்னும் அமெரிக்கா சார்ந்த பார்வையே மக்களுக்கு ஏற்படுமென்பதால் அமெரிக்காவுக்கு இதில் நன்மையே.

ராஜ நடராஜன் சொன்னது…

indli யை இணையுங்கள்.இன்னும் சில பேரை கருத்துக்கள் போய் சேரும்.

ராஜ நடராஜன் சொன்னது…

//எகிப்திற்கும் இன்றைய இந்திய அரசியல் சூழலிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.//

தெகா!ஒரு விதத்தில் பார்த்தால் இப்பொழுது சீனாவுக்கும்,இந்தியாவுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள் கிட்டுவதில் சீனா இந்தியாவை முந்திக்கொண்டு நிற்பது போல்,கல்வி சார்ந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கும்,எகிப்துக்கும் சமமான வாய்ப்புக்கள் இருந்தன.முபாரக்கின் சாதனையில் ஒன்றாக ஆங்கிலம் உச்சரிக்க இயலாத ஒரு தலைமுறையை உருவாக்கி எகிப்தை பின் தள்ளியதில் அவரது சர்வாதிகாரத்துக்கு முக்கிய பங்குண்டு.

மற்றபடி நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் பற்றுதலில் கருணாநிதியும்,முபாரக்கும் ஒரே மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் எகிப்திற்கும் தமிழக அரசியல் சூழலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பது பொருத்தமாக இருக்கும்.
இங்கே சேது சமுத்திரம் தோல்வி,அங்கே சூயஸ் கால்வாய் வெற்றி,பழம் பெரும் நாகரீகத் தொட்டில்கள்,ஊழல்,காவல்துறையின் அடக்கு முறைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

Thekkikattan|தெகா சொன்னது…

முக்கியமாக இஸ்ரேல் நலன் சார்ந்த வளைகுடா கொள்கையும் அமெரிக்காவின் இரட்டை வேடத்தை நன்றாகவே பறை சாற்றுகிறது.//

இதன் அடிப்படையிலேயே இத்தனை நாட்கள் மக்கள் கிளர்ச்சியுற்று தெருவில் வாரக் கணக்கில் சோறு, தண்ணியற்று நிற்கும் பொழுதும் ஒரு திடமான முடிவெடுத்து அமெரிக்கா அண்ணாச்சியும் தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோணச் செய்கிறது. ஆனால், நாட்களை நகர்த்தி நகர்த்தி ஏதாவது உயிரிழப்புகள் அதிகமானல் மண்டை உருளப்போவதில் அண்ணாச்சிக்கு முதலிடம்.

ஏனெனில் அண்ணாச்சி அவர்களே ஜனநாயகம் வேண்டி எங்கெல்லாம் மக்கள் புரட்சி செய்கிறார்களே அங்கே பக்கபலமாக நிப்போமென்ற போர்வையை தூக்கிக் கொண்டு திரிவதால். மேலும் முபாரக்கின் முப்பது வருட ஆட்சியில் 32 பில்லியனை கொடுத்து வளர்த்திருக்கிறார். இதில் என்ன ஒரு நரண்முகை என்றால் அத்தனை காலமும் மக்கள் சொல்கிறார்கள் இது ஒரு கொடுங்கோல் ஆட்சியென்று, அமெரிக்கா பணம் கொடுத்தது ஒரு நல்லாட்சியென்று. அப்படியெனில் யார் நலனுக்கென ஆட்சி நடத்தப்பட்டது, எகிப்தில் ;))...

ஹையோ, ஹையோ உண்மையே வெல்லும் என்பதற்கு இது போன்ற தன்னெழுச்சிகள் ஒரு முன் உதாரணம்...

விந்தைமனிதன் சொன்னது…

மூன்றாம் உலக நாடுகளின் மக்களிடையே எப்போதும் பொங்கிவிடும் நிலையில் இருக்கும் எரிமலை துனீசியாவிலும் எகிப்திலும் வெடித்திருக்கின்றது. மற்ற நாடுகளிலும் இதுபரவும் காலம் வெகுதொலைவில் இல்லை.

ராஜ.நடராசன் சொன்னதுபோல இண்ட்லியில் இணைக்கலாமே அக்கா?

Rathi சொன்னது…

நன்றி தெகா, ராஜ நடராஜன். ஆழமான, தேவையான விமரசனங்கள். உங்கள் இருவருக்கும் மீண்டும் நன்றி.

வீட்டிலிருந்தே விமரசனத்தை தொடர முடியாமல் கணணி தகராறு பண்ணியது. அதனால் இப்போ வேலைத்தளத்திலிருந்து முடிந்தவரை தொடர்கிறேன்.

அமெரிக்க ஏன் இப்படி உச்சக்கட்ட வேளையிலும் இரட்டை வேடம் போடவேண்டும் என்று எரிச்சல் தான் வருகிறது.

பின்பு தொடர்கிறேன்.

Rathi சொன்னது…

நன்றி ராஜாராமன்/விந்தைமனிதன். மீண்டும் தொடர்கிறேன், நேரம் கிடைக்கும் போது.

தவறு சொன்னது…

உயிர் போக போவது தெரிஞ்சா முடிஞ்ச மட்டும் எதிர்ப்ப காட்டி தான் இருக்குற இடத்துல நல்லபடியாக வாழ களம் அமைச்சுக்கிற போராட்டம் ரதி இது. மக்களிடையே கூடுமானவரையிலும் ஒருமித்த கருத்து இருந்தததினால் இது சாத்தியம் ஆசு்சு.

அப்பிடியும் அதிகாரத்தோட கைதான் ஓங்கியிருக்கு.ரகசியமா அமெரிக்காவின் செயல்பாடுகள் இதில் எத்தனையோ?

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிளவுகள் அதிகம் இருப்பதால் சுலபமாக பிளவுப்படுத்தப்படுகிறார்கள் ரதி.

மற்றப்படி ஆழமாய் சென்ற ராஜ.நட , தெகா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

துணிவே துணையில் வருகிற கோபம் தன் இனமக்களுக்கான வயிற்யெரிச்சல் ரதி! காலம் பதில் சொல்லும்..

Rathi சொன்னது…

தவறு,

மக்கள் ஒருமித்த கருத்தோடு தான் முபாரக்கை எதிர்க்கிறார்கள் என்று நானும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், திடீரென்று "Pro Mubaarak" குழு, Anti Mubaarak குழு என்று குழப்பம் உண்டுபன்னியே விட்டார்கள்.

இறுதியில் யார் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றப்போகிறார்கள் என்பதைத்தான் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம். யார் வந்தாலும் பெரும்பாலும் (Muslim Brotherhood தவிர. தடைசெய்யப்பட்டதால் சுயேட்சை ஆகவே தேர்தல் நடந்தால் போட்டியிடுவார்கள்) அமேரிக்கா சார்ந்த ஓர் அரசு தான் மீண்டும் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பார்க்கலாம்.

Rathi சொன்னது…

ராஜ நடராஜன்,

நான் எப்படி எகிப்தின் பிரமிட்களை, மம்மிகளை மறந்தேன் என்று தெரியவில்லை. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. :)

Rathi சொன்னது…

//ஹையோ, ஹையோ உண்மையே வெல்லும் என்பதற்கு இது போன்ற தன்னெழுச்சிகள் ஒரு முன் உதாரணம்...//

தெகா,

இதை நான் வடிவேல் பாணியில் தான் வாசித்தேன்.

ஆனாலும், நிலைமைகள் மேசமாகிக்கொண்டு போகிறது. கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒன்றிரண்டாய் கூடிச்செல்கிறது.

ஜீவன்சிவம் சொன்னது…

பதிவும் அதன் தொடர்ச்சியான பின்னூட்டமும் மிகுந்த முதிர்ச்சியை காட்டுகிறது. நன்றி ஒரு நல்ல பதிவிற்கு.
http://nanbansuresh.blogspot.com/2011/02/blog-post_02.html
இந்த link யையும் படியுங்கள், இது என் வேண்டுகோள்

Thekkikattan|தெகா சொன்னது…

ஆனாலும், நிலைமைகள் மேசமாகிக்கொண்டு போகிறது. கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒன்றிரண்டாய் கூடிச்செல்கிறது.//

நான் அது போன்ற டோனில் சொல்லும் பொழுது, ரதி, அந்த போராட்டத்தில் இருந்த ஸ்பிரிட்! ஆனால் நாட்களை நீட்டித்து மக்களின் சுதந்திர தாகத்தை உடைத்து, அதிலும் அரசியல் செய்து நீர்த்து போகச் செய்விட்டார்களே என்று கடுப்பாக வருகிறது.

இதுவும் தன்னெழுச்சியாக கிளர்ந்த போராட்டத்திற்கு/இனிமேல் செய்ய வேண்டுமென்ற ஒரு சமூகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் அடி. அராஜகம் மட்டுமே எங்கெங்கும் செல்லுபடியாகிறது. இந்த புரட்சியை ஆதரிக்க வேண்டிய நாடுகளே வேடிக்கை பார்த்து உயிரழப்புகளை கண்ணூற்றவர்கள் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இனிமேல் உலகளாவிய ‘democracy'யை பற்றி பேசுவார்கள்...

மென்மேலும் எதிர்ப்புச் சூழலையே வளர்த்தெடுப்பதாக உள்ளது. இந்த கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டாலும் இதற்கு பின்னான கிளர்ச்சியாளர்களின் மனநிலை எதுவாக இருக்கும் அமெரிக்கா பொருட்டும்/இஸ்ரேல் பொருட்டும்?

Rathi சொன்னது…

ஜீவன்சிவம்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட பதிவைப் படித்தேன். நீங்கள் சொல்வது போல் எகிப்த் போன்றதோர் ஆட்சியில் மீட்சியின்றி முடக்கப்படுபவர்களுக்கு இந்த எகிப்த்-ஹய்ரோவின் தன்னெழுச்சியான மக்கள் கிளர்ச்சி சிறந்த ஓர் உதாரணம் தான். எகிப்தின் மக்கள் போல் எத்தனை பேர் அப்படி ஜனநாயக வழியிலேனும் போராட தயாராயுள்ளனர். சினிமாவும், சின்னத்திரையும் தானே எங்கள் சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

Rathi சொன்னது…

தெகா,

இந்த தன்னெழுச்சியான விடுதலை உணர்வை Muslim Brotherhood, Elbaradei போன்றோர் தான் மக்களை இப்போ தூண்டிவிடுகிறார்கள் என்று அவர்களுடன் பேசப் போகிறார்களாம். இதில் இனி புதிதாய் என்ன பூதம் கிளம்பப் போகிறதோ தெரியவில்லை.

இவர்கள் பேசினாலும் வீதியில் போராடுபவர்கள் நிலை....??

//இந்த கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டாலும் இதற்கு பின்னான கிளர்ச்சியாளர்களின் மனநிலை எதுவாக இருக்கும் அமெரிக்கா பொருட்டும்/இஸ்ரேல் பொருட்டும்?//

அமெரிக்காவும், இஸ்ரேலும் இதுபற்றியெல்லாம் அக்கறைப்படுபவர்களாக தெரியவில்லை.

இப்போ, மீடியாவை சேர்ந்தவர்களும் தாக்கப்படுவதாக சொல்கிறார்கள். அவர்களும் வெளியேறிவிட்டால் ஏறக்குறைய "வன்னி" நிலைமைதான்.

என்ன சொன்னாலும் இந்தப் போராட்டம் நீடிக்காமல், நீர்த்துப்போகாமல் வெற்றி கிடைக்க வேண்டும் என்று சொல்ல, விரும்ப மட்டுமே இப்போ முடிகிறது.

ஹேமா சொன்னது…

ரதி...பதிவோடு பின்னூடங்களும் சேர்ந்து நிறைவான அலசல்!

Rathi சொன்னது…

ஹேமா,

தொடர்ந்து நிலைமைகளை கவனியுங்கோ. உங்கள் பாணியில் ஓர் கவிதை மூலமும் படிப்பவர்களிடம் இதை எடுத்துச்செல்லுங்கள்.

சு.செந்தில் குமரன் சொன்னது…

மிகச் சிறந்த பதிவு இது .
உங்கள் வருகைக்கும் என் வலைப்பூவில் பதிந்த உணர்வுக்கும் நெகிழ்வும் நன்றியும் !

Rathi சொன்னது…

செந்தில் குமரன்,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஜோதிஜி சொன்னது…

தெளிவான ஆக்கத்திற்கு உருப்படியான விவாதங்கள்.

ராசா ரதியை கோபப்படுத்தாவிட்டால் எனக்கு தூக்கம் வராது?

இன்ட்லி என்பது துளசி கோபால் சொன்னது போல் வேகாத இட்லி.