பிப்ரவரி 17, 2011

ஈழத்தமிழர்களின் இனியொரு விதி!!

Dream_for_a_Tamil_Nation[1]


ஈழத்தமிழர்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இப்படி கேட்டு, கேட்டு எனக்கு கொஞ்சம் அலுப்பும், எரிச்சலும் தான் இப்போது மிஞ்சி இருக்கிறது. இதற்கெல்லாம் எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு முன்னுதாரணமாய் காட்டப்படுபவர்கள் யூத இனத்தவர்களே. இப்போது, புதிதாய் காட்டப்படுபவர்கள் எகிப்தியர்கள். எத்தனை உதாரணங்கள், முன்னுதாரணங்கள் வேண்டுமானாலும் காட்டப்படலாம். அதில் தவறேதுமில்லை. ஈழத்தமிழர்களின் நன்மைக்கே  அது சொல்லப்படுகிறது என்பது நன்றாகவே புரிகிறது. நன்மையும்  தீமை பயக்குமிடத்து என்று நினைக்கும் போது தான் இதை எழுதலாமே என்று தோன்றுகிறது. புலிகள் இருந்தவரை ஓர் ஈழத்தமிழாய் என் அரசியல் அபிலாசைகள் குறித்த பிரதிநிதித்துவம் குறித்து அதிக வருத்தம் இருந்ததில்லை எனக்கு.

என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தமிழர்களின் ஒற்றுமை என்பது, ஒன்று புலிகளின் அரசியல், ராணுவ வெற்றி தோல்விகளை கொண்டும்; அல்லது அதன் அடிப்படையிலான புலிகளுக்கு இருந்த ஆதரவு என்கிற மாறுபடுகிற மதிப்புகளை (Variables) கொண்டே மதிப்பிடப்படுகிறது. இவற்றை எடுகோள்களாக கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை மதிப்பிட்டால் மட்டுமே இலங்கை அரசின், சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளை, நிராசைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை அனேகமான உலகநாடுகள் தடை செய்துவிட்டன. இனிமேலும் நீங்கள் அவர்களை ஆதரித்தால், அவர்களின் இலட்சியக்கனவுகளை உங்களதாக்கிக் கொண்டால், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சொன்னது போல் ஒன்றில் நீங்கள் உலகத்தோடு ஒத்திருக்கிறீர்கள். அல்லது, அவர்களோடு (இவர்களால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்ட புலிகள்) இருக்கிறீர்கள். ஆகவே, உங்கள் அரசியல் அபிலாசைகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று முத்திரை குத்தப்படலாம். இப்படி குட்டையை குழப்பி தான் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சட்டபூர்வமானது அல்ல என்று நிரூபிக்கலாம்.

அதாவது, புலிகள் தான் தனித் தமிழீழம் கோரினார்கள். ஈழத்தமிழர்கள் அல்ல. ஆகவே, அது பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட புலிகள் தங்கள்தேவைகளை கருதி முன்வைத்த கோரிக்கை?! அது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை அல்ல. ஆகவே தமிழீழம் என்பது புலிகளின் தேவை. இப்படித்தான் புலி எதிர்ப்பு அரசியலும், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையும் கணக்கில் எடுக்கப்படுகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் ஜனநாயக ரீதியில் உலக வரமுறைகளுக்கேற்ப வழங்கப்பட்டால் தமிழீழம் என்பது புலிகளின் தேவையா அல்லது ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் தேவையா என்பது புரிந்துகொள்ளப்படும். புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தங்கள் அரசியல் அபிலாசை என்னவென்பதை நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஆனால், இதையெல்லாம் புறம்தள்ளி, இலங்கையில் இருப்பது ஒரேயொரு இனம் தான் என்று அதன் ஜனாதிபதியும் உலகம் முழுக்க தம்பட்டம்  அடிக்கலாம், பொய்ப்பிரச்சாரம் செய்யலாம்.  ஆக, இல்லாது ஒழிக்கப்பட்ட புலிகள் இன்றும் கூட அரசியல் சதுரங்கத்தின் ஆட்டக்காய்கள் ஆக நகர்த்தப்படுகிறார்கள். 

அன்றுமுதல் இன்றுவரை புலிகளை தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ எதிர்த்தவர்கள் இன்றும் அவர்கள் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலும் அவர்கள் மீதுள்ள தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகள் தான் அவர்களை யார் என்று அடையாளம் காட்டுகிறது. 2009 ம் ஆண்டுக்குப்பின் புலிகளை வெறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் யாரும் முன்பு குறிப்பிட்டவர்களைப் போல் சுய நலம் கருதி புலிகளை விமர்சிப்பவர்கள் அல்ல என்பதே என் புரிதல்.

ஆக, ஈழத்தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொல்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எங்களிடம் ஒற்றுமை இல்லை, இல்லை என்று சொல்வது கூட எங்கள் மீது தொடுக்கப்படும் ஓர் உளவியல் யுத்தம் தான். அதன் சூத்திரதாரிகள் யார் என்பதும் ஈழப்பிரச்சனையின் அடிப்படை தெரிந்தவர்களுக்கு புரியும். இன்றும் புலம்பெயர் தமிழர்களிடையே தூது போக இலங்கை அரசுக்கு நோர்வேயின் எரிக் சொல்ஹைம் தேவையா என்கிற விவாதங்கள் தொடர்கிறது. புலத்தில்  ஈழத்தமிழனிடம் ஒற்றுமை இல்லையென்றால் இடையில் சொல்ஹைம் எதற்கு! எத்தனை நாளைக்குத்தான் தமிழனிடம் ஒற்றுமை இல்லை என்கிற ஒற்றைப்பல்லவியையே பாடி தமிழனை குழப்புவது.

அடுத்து, யூத இனத்தவர்களின் பிரச்சனை நடந்த காலத்து பனிப்போர் உலக அரசியல் வேறு. இன்றிருக்கும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் வேறு. உலகத்தில் எந்தவொரு நாட்டின் அல்லது இனத்தின் ஆதரவும் இல்லாமல் ஈழத்தமிழர்களால், அவர்களின் முயற்சிகளில் மட்டுமே ஈழப்போராட்டம் கட்டிஎழுப்பட்டது. அது ஓர் ரத்த சரித்திரம். அதன் நியாய, தர்மங்கள் கூட புழுத்துப்போன உள்ளூர், சர்வதேச அரசியல் சாக்கடையில் உழல்பவர்களால் மறுக்கப்படுகிறது. யூத இனத்தை தாங்கி பிடிக்க ஓர் வல்லரசு இருந்தது போல் ஈழத்தமிழர்களையும் யாராவது தாங்கிப்பிடித்தால் எங்களின் ஒற்றுமையும் உலகத்தால் வியக்கப்பட்டிருக்கும். மாறாக, எங்கள் ஒற்றுமை தான் எதிரியின் ஒற்றை இலக்கு என்கிற போது எங்களுக்கான இலவச ஆலோசனைகள், அறிவுரைகளை நாங்கள் காது கொடுத்து கேட்கவும், பரிசீலனை செய்யவும்  பொறுமையோடு அதனை அணுகவும் எங்களை பழக்கப்படுத்திக்கொள்கிறோம்.

எகிப்தியர்களின் ஒற்றுமை உண்மையிலேயே வியக்கப்பட வேண்டியது தான், மறுக்கவில்லை. ஈழப்பிரச்சனையும், எகிப்தின் பிரச்சனையும் ஒன்றா என்றால் என் சிற்றறிவுக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. ஈழத்தமிழர்கள் அரசியல், பொருளாதார, கல்வி கொள்கைகள் மற்றும் சட்டங்களால் இன அடிப்படையில் இலங்கை அரசியலால் திட்டமிடப்பட்டே தசாப்தங்களாக ஒடுக்கப்பட்டவர்கள். எகிப்தின் அரசியல் சர்வாதிகாரம் என்பது பாகுபாடின்றி பொதுவாக எல்லாரையும் தானே பாதித்தது. 

எகிப்தின் குடிமக்கள்  போல் ஏன் ஈழத்தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடவில்லை என்றால் என்னால் சிரிக்க மட்டுமே முடிகிறது. எகிப்தின் ராணுவம் யார் கட்டளைக்கு அடிபணியும் என்பது உலகறிந்தது. அவர்களுக்கு அமெரிக்கா என்கிற ஓர் வல்லரசிடம் பயம் இருக்கவே செய்கிறது. அதுதான் அந்த ராணுவம் எந்தவொரு அத்துமீறலையும் எகிப்தின் கிளர்ச்சியாளர்கள் மீது  பிரயோகிக்காமல் தடுத்தது. இலங்கை ராணுவம் தான் யாரும் விமர்சனம் கூட செய்யமுடியாத அளவுக்கு புனிதர்கள் என்று இலங்கை அரசு சொல்ல அதை உலகமே வேடிக்கை பார்க்கிறதே. ஈழத்தமிழன் வீதியில் இறங்கி போராடினால் இலங்கை ராணுவம் என்ன செய்யும் என்பது தெரியாதா! அதை வெளியே கொண்டுவர எந்த சர்வதேச ஊடகமாவது அங்கே அனுமதிக்கப்படுமா என்பதையெல்லாம் கொஞ்சம் சிந்தியுங்கள்.

எகிப்தின் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றால் மேற்குலகின் "ஜனநாயக" முகமூடி கிழிந்திருக்காதா! திறந்த பொருளாதார சந்தை கொள்கைகளின் தேவையால் கம்யூனிசம், சோஷலிஷம்  கூட  தோற்கடிக்கப்பட்டு விட்டது. வேறு எந்த அடிப்படையில் மக்களை ஒன்றுசேர்ப்பது. இருக்கவே இருக்கிறது "Democracy" என்கிற மந்திரம். ஜனநாயகம் என்கிற வழியில், தேர்தல் என்கிற ஆயுதம் தான் வல்லமை படைத்தவர்களுக்கு ஆதரவானவர்களை தேர்ந்தெடுக்க சிறந்தவழி. எகிப்தியர்களுக்கு சுபீட்சமும் வளமான எதிர்காலமும் கிடைக்கவேண்டும். அதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே. இருந்தும், எகிப்தில் இனி தேர்தல் நடந்தாலும் யாராவது ஓர் சர்வதேசப் புகழ்பெற்ற அமைதியை விரும்பும் குழாமிலிருந்து ஓரிருவரை தேர்ந்தெடுத்து; அவர்களை முன்னிறுத்தி ஊடகங்கள் பிரச்சாரப்பாணியில் ஜனநாயகத்தை விளம்பரப்படுத்துவார்கள். ஜனநாயக விழுமியங்களை உலகிற்கு பறைசாற்றுவதில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமோ! உலகளாவிய பாரிய வியாபார நிறுவனங்களின் வியாபார முயற்சிகளுக்கு குறுக்கே நிற்காதாவரை மக்கள் கிளர்ச்சி, ஜனநாயகமும் கூட தங்குதடையின்றி அனுமதிக்கப்படும். எகிப்தில் யாராவது இன, மத, ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டாலும் கொள்கை அடிப்படையில் போராடியிருந்தால் மேற்குலகம் அதை அங்கீகரித்திருக்குமா!

மொத்தத்தில், மற்றையவர்களின் போராட்டத்தின் வெற்றிகளின் மூலமும் ஈழத்தமிழர்களின் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை ஈழத்தமிழர்கள் உணரத்தான் வேண்டும், மறுப்பதற்கில்லை. அதை வார்த்தைகளில் விளங்கவைக்க முடியுமா என்பதும் எனக்கு  தெரியவில்லை. ஆனால், அதை நிர்ணயிக்கும் காரணிகள், உள்ளூர், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் தமிழர்களுக்கு புரியவைக்கப்பட வேண்டும். அதை விடுத்து தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொல்லிச்சொல்லியே,  அதை மட்டுமே அடக்குமுறையாளர்கள் விரும்புவது போல் வளர்த்தெடுக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.

தமிழர்களின் ஒற்றுமை என்பது வெறும் புலி எதிர்ப்பு அரசியலால் மட்டுமே இன்று தீர்மானிக்கப்படுகிறது என்பது என் புரிதல்.  அதை மாற்றுத் திறனாளிகளையும்    இலங்கையின் இனப்பாகுபாட்டு அரசியலுக்கு துணை போகிறவர்களையும் அடையாளம் காணப்படும் போது தான் மாற்றமுடியும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டுவது.

அதற்கு தனியோர் விதி எங்கள் ஒன்றுபட்ட பலமே!


நன்றி: படம் Google

பிப்ரவரி 11, 2011

மாற்றத்திற்கான மாற்றம்! - எகிப்து

ஒரு சில நாட்கள் இணையத்திலிருந்தும், ஒரு நாள் முழுதும் தொலைக்காட்சி தவிர்த்தும் பொழுதுகளை கழித்தாயிற்று. எதையும் இழப்பதாகவோ அல்லது தவறவிட்டதாகவோ உணரவில்லை. நிறையவே அமைதியாயிருந்தது மனம். நான் விரும்பினால் எந்த நொடியும் என் மனதை மாற்றிக்கொண்டு மறுபடியும் இந்த மெய்நிகர் உலகத்தில் என்னை நானே தொலைக்கலாம் அல்லது அதற்குள் மூழ்கிப்போகலாம் என்கிற உத்தரவாதம் நிச்சயம் இருக்கிறது என்பது என் அடிமனதுக்கு தெரியும். அதனால் இவற்றிலிருந்தெல்லாம் விலகியிருப்பது என்பதும் சாத்தியமாயிற்று.

என் உயிருக்கும் உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்கிறது என்கிற என் தனிமனித நம்பிக்கை, சமூக மற்றும் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகின் அனைத்து மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்வுக்கும், உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழக்கப்படவில்லை என்பது அறிவுக்கு தெரியும். அதனால் எழும் கேள்விகள் என்னைத் துளைத்தாலும், அவற்றுக்குரிய தெரிந்ததும், தெரியாததுமான விடைகளுடனேயே நாட்களையும், வாழ்க்கையையும் நகர்த்திக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நாள் வாழ்வின் ஒழுங்கு மாறிப்போனாலே தடுமாறுவதும், தத்தளிப்பதும் மனித இயல்பு. நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்று அன்றாடவாழ்வின் இயல்புகளும், ஒழுங்குகளும் மாறிப்போன வாழ்வை நானும் வாழ்ந்திருக்கிறேன். அதன் வலியை உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே ஈழமும், எகிப்தும் இன்னும் அதுபோன்ற மண்ணும், மக்களும் என்னை நிறையவே பாதிக்கின்றன, பாதிக்கிறார்கள்.  ஈழத்தில் இப்போது இயற்கை தன் பங்கிற்கான அழிவை ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கிறது. எகிப்தில் தொடர்ந்து இன்றோடு பதினெட்டு நாட்களாக தொடர்ந்து அடிப்படைவாழ்வின் மாற்றத்திற்கான வாசல் திறக்கும் என்கிற நம்பிக்கை தளராமல் முனைப்புடன் இன்னும் போராடும் மக்கள் மீது வலிந்து திணிக்கப்படும் அவநம்பிக்கையும், முடிவுகளும்!! அவர்களை வன்முறையின் வழி நோக்கி ஏவச்செய்யும் சர்வாதிகாரத்தின் பேச்சு!

எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை, வலிந்து திணிக்கப்படும் முடிவுகள், அரசியலும் அரசியல்வாதிகளும் வாக்களித்தவர்களின் வாழ்வில் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தமாட்டார்கள் என்பதை மக்கள் உணரும் போது என்னாகும் என்பதற்கு எகிப்து ஓர் முன்னுதாரணம். சர்வாதிகாரத்தையும், சர்வாதிகாரிகளையும் வளர்த்துவிட்டு சாமானியர்களின் வாழ்வில் பரமபதம் ஆடிக்கொண்டிருக்கும் சர்வதேச அரசியல். அமெரிக்காவுக்கு கம்யூனிசம், சோஷலிசம் என்பதை விடவும் சர்வாதிகாரம் எவ்வளவு பிடிக்கும் என்பதை அமெரிக்காவின் ஆதரவில் வளர்த்தெடுக்கப்பட்ட சதாம், பின்லேடன் முதல் எகிப்தின் முபாரக் வரை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி வளர்த்துவிட்ட ஓர் வினை தான் இன்று முபாரக் வடிவில் அமெரிக்காவின் முகத்தில் கரி பூசி நிற்கிறது.

உலகத்தின் மேடையின் மேல் நின்று வரலாற்றின் ஓர் மாற்றத்தின் அங்கத்தை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தான் பதவியை துறக்கப்போவதில்லை, ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை என்று தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் முபாரக். அமெரிக்காவுக்கான எகிப்திய தூதுவர், அமெரிக்க உளவுத்துறை என்று எல்லோரும் உறுதிப்படுத்திய செய்தியைத்தானே ஒபாமா, அமெரிக்க அதிபர், அறிவித்தார் என்று Jouranalists, Analysits என்று எல்லோரிடமும் விளக்கம் கேட்டுக்கொண்டிருகிறார்கள் உலகின் முன்னணி செய்தி தளங்கள். இப்போது வரும் செய்திகளின் படி எகிப்திய ராணுவமும் முபாரக்கை தான் ஆதரிக்கிறது போல் தெரிவதாக செய்திகள் சொல்கின்றன.

இவ்வளவுக்குப் பின்னும் எகிப்தின் தற்காலிக அதிகாரத்தை கொண்டிருக்கும் துணை ஜனாதிபதி ஒமார் சுலைமான் கிளர்ச்சியாளர்களுக்கு சொன்னது வீட்டிற்கு போங்கள், தொலைக்காட்சி (குறிப்பாக மேற்குலக தொலைக்காட்சி) பார்க்காதீர்கள் என்பது தான். எப்படி இவர்களால் இப்படி பேசமுடிகிறது! தூங்கமுடிகிறது, சாப்பிடமுடிகிறது!

இவர்கள் எப்படி பேசினாலும், என்ன அடக்குமுறையை கையாண்டாலும் எகிப்து எங்கள் தேசம். அதை ஆள வேண்டியவர்கள் அதன் குடிமக்களாகிய நாங்களே என்று சர்வாதிகாரத்தை தூக்கியெறிய திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள் தங்களுக்குள் எந்த வேறுபாடும் பாராட்டாமல் போராடிய எகிப்தியர்கள்.

எகிப்தின் நிலைமை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது உலகம்.  முப்பது வருடங்களுக்குப் பிறகு அடக்கப்பட்ட  தங்கள் குரலை உலகம் கேட்கிறது என்கிற நம்பிக்கையோடு எகிப்தியர்கள் போராடினார்கள். தற்சமயம், முபாரக் பதவியைத் துறந்து போயே போய்விட்டார் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.


அன்றாடவாழ்வின் அசெளகர்யங்கள் எத்தனையோ  அழுத்தங்களை கொடுத்தாலும், எல்லாவற்றையும் தாங்கி இன்று உலகத்துக்கு அடக்குமுறையின் அதிகாரங்களுக்கு ஓர் உறுதியான செய்தியை சொல்லிகொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து எதேச்சாதிகாரத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் துணைபோகிறவர்கள் ஓர் பாடத்தை கற்றுக்கொவார்களா! தேர்தலில் வாக்களிக்கும் அடிமைகள் அல்ல மக்கள் என்பதை உணர்வார்களா!

நன்றி: படங்கள் அறியது, Google

பிப்ரவரி 02, 2011

பொருளியல் வாழ்வும் மக்கள் கிளர்ச்சியும் - எகிப்த் ஓர் கண்ணோட்டம்

எகிப்து என்றவுடன் எப்போதும் முதலில் நினைவில் வருவது நைல் நதியும், கிளியோபாட்ராவும் தான். அந்த உருவக எல்லையைத்தாண்டி எனக்கு எகிப்து பற்றிய அறிமுகம் கிடைத்தது Morgan Spurlock - Where in the world is Osama Bin Laden? என்கிற புத்தகத்தின் மூலம் தான். முஸ்லிம்/அரபு நாடுகளுக்கும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் சென்று ஓர் நேரடி அனுபவமாக 9/11 க்குப்பின்னான ஓர் அறிமுகமாக அவரின் எழுத்து விரிந்து செல்கிறது. அரபு நாடுகளின், அந்த மக்களின் அன்றாட வாழ்வின் ஊடே வாசிப்பவரை அழைத்துச்சென்று அதில் ஒன்றிபோகவைக்கும் எழுத்து ஓர் சிறப்பம்சம். ஆரம்பத்திலேயே இவர் ஓர் அமெரிக்கர் என்கிற என் முன் முடிவு என் வாசிப்பில் ஓர் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்; அவர் சொல்லும் பல உண்மையுள்ள யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் சில விடயங்களை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமலும் தடுத்தது. பெரும்பாலான அமெரிக்கர்கள் போல இவரும் ஈழப்போராட்டம் பற்றிய புரிதல் இன்றி புலிகள் பற்றி தன் பங்கிற்கு எழுதியிருக்கிறார்.  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை தாங்கி நிற்கும் ஓர் தேசம் இது. இன்று மக்கள் கிளர்ச்சிக்குப்பின் எகிப்தை அதன் அரசியல், பொருளாதார வாழ்க்கையை தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் அரபு நாடுகளாக (அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப) எகிப்தும், ஜோர்டானும் இருக்கின்றன. எகிப்தில் முப்பது வருடங்களாக ஹோஸ்னி முபாரக்கின் எதேச்சாதிகாரமும், அதிகம் சமயக்கோட்பாடுகள் சாராத ஆட்சியும் நிறைந்ததாக இருந்து வந்தது. எத்தேச்சாதிகாரம் நிறைந்த முபாரக்கின் ஆட்சியில் மக்கள் அனுபவித்ததெல்லாம் வறுமைக்கோட்டு வாழ்வும், வேலையில்லாத்திண்டாட்டமும், காவற்துறையின் கெடுபிடிகளும் தான். விளைவு வறுமையும், லஞ்ச ஊழலும் மட்டுமே செழித்து வளர்ந்து மக்களின் குரல்வளையை நெரிக்கத்தொடங்கின. ஐ. நா. எகிப்தை "வருமானம் குறைந்த உணவுப்பற்றாக்குறை" (low-income food-deficit country) உள்ள ஓர் நாடாக பட்டியலிட்டுள்ளது.  எகிப்த்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் கிளர்ச்சி மதம் சார்ந்ததல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

எகிப்தியர்களின் சராசரி வயது 24. மொத்த சனத்தொகையில் பெரும்பாலோனோர் 30 வயதுக்குட்பட்டோர் என்று புள்ளிவிபரங்கள் சொல்கிறது. ஆக, இது ஓர் துடிப்பான இளைய தலைமுறையை கொண்ட (இந்தியா போல) ஓர் நாடு. அந்த மனித வளமும், வலுவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தேவைக்கேற்ப பயன்படும் வகையில் அதற்குண்டான திட்டங்களோ, வேலைவாய்ப்புகளோ அரசினால் உருவாக்கப்படவில்லை. விளைவு இங்கொன்றும், அங்கொன்றுமாய் அப்பப்போ எதிர்ப்பு போராட்டங்கள் எழுந்தன. அவை முபாரக்கின் ஆட்சியில் காவற்துறையின் பலம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டன. முப்பது வருடங்களாய் பொறுத்துப்பார்த்து வெறுத்துப் போனவர்கள் (புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்!!!) இன்று கிளர்ந்தெழுந்து கேட்பது எதேச்சாதிகார ஆட்சியாளரை பதிவியிலிருந்து விலகச்சொல்லியும், ஜனநாயக ரீதியான தேர்தலும், ஊழல் ஒழிப்பும், வேலை வாய்ப்புகளும் அதற்கேற்ற ஊதியமும் தான். முபாரக்கும் தான் அடுத்த தேர்தலில் பங்குபற்ற மாட்டேன், போட்டியிட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் எகிப்த்-ஹெய்ரோவில் நிலைமைகள் இன்னும் மோசமாகி வன்முறைக்கு வித்திட்டுக்கொண்டிருக்கிறது. முபாரக்கிற்கு ஆதாரவானவர்களுக்கும்(!!) முபாரக்கின்  ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கும் இடையே வன்முறை வெடிக்கும் அபாயம் தென்படுகிறது.

முபாரக்கின் வயது 82. முப்பது வருடங்கள் எகிப்தை அடக்கி ஆண்டாகிவிட்டது. பதவியையும், அரசியலையும் விட்டுப்போக மனமில்லாமல் தனக்குப்பின் தன் மகன் (Gamal) எகிப்தை ஆள வேண்டுமென்ற பேராசை வேறு. இவர்கள் திருந்தவே மாட்டார்களா என்று மனதிற்குள் திட்டத்தான் தோன்றுகிறது. இவர்களின் அரசியல் பேராசைகளுக்கு அப்பாவி நாட்டு மக்களின் அபிலாசைகள் பலியாக்கப்படுவது எப்படி நியாயம் என்று கேள்வியெல்லாம் மனதிற்குள் தோன்றினாலும் யாரிடம் பதிலை எதிர்பார்ப்பது!  விஞ்ஞான தகவல் தொழில்நுட்பம் அதன் உபயோகங்கள் மட்டும் ஓர் நாட்டின் குடிமக்களுக்கு விடிவைத் தராது என்பதற்கு எகிப்த் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிய குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையை கொடுத்து விளையாட்டு காட்டுவது போன்றது தான் இது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின்னும் அதே கிலுகிலுப்பை அவர்களுக்குரிய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்யுமா!!!
பெ. மணியரசன் அவர்களின் வார்த்தைகளில், "கையில் ஒரு கைபேசி, பையில் ஓர் கைபேசி, குடிசைக்குள் ஒரு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி - இவைதான் வளர்ச்சியின் அடையாளமா? அந்தக் குடிசைக்குள் கழிவறை கிடையாது. சமையலறை கிடையாது. படுக்கையறை கிடையாது........... வளர்ச்சி என்பது சமூகத்தில் சில செல்வந்தர்களின் செங்குத்தான வளர்ச்சி அன்று. சமூகம் முழுமையும் வளர்கின்ற கிடைநிலை வளர்ச்சியாகும். இயற்கை சமன்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும், சக மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் உணவு, உடை, உறையுள், சமூக உறவு ஆகியவற்றில் தன்னிறைவு காண்பதே மெய்யான வளர்ச்சியாகும்" (நன்றி: 'பெ.மணியரசன்' பகுப்புக்கான தொகுப்பு. தமிழ்நாட்டைத் துண்டாடுவது தற்கொலை முயற்சி)

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த போது இந்த கிளர்ச்சி எகிப்த்-ஹெய்ரோவில் ஆரம்பித்த காலங்களிலேயே இங்குள்ள ஊடகங்கள் அல்ஜசீரா தொலைக்காட்சி ஊடகத்தை இலக்குவைக்கத் தொடங்கிவிட்டார்கள். அரபு நாடுகளில் நடக்கும் இந்த தொடர் கிளர்ச்சிகளுக்கு பொதுவான ஓர் தொடர்பு இருக்கிறதென்றும்; அது 'கட்டார்' (Qatar)  ஐ தளமாக கொண்டு செயற்படும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் காட்டமான செய்திகளின் ஒளிபரப்புத்தான் என்று பகுத்து ஆராய்ந்திருந்தார்கள்!? இறுதியில் அல்ஜசீராவை எகிப்தில் தடை செய்தே விட்டார்கள். அமெரிக்க ஊடகங்களைப் பற்றி Noam Chomsky, அருந்தரி ராய் போன்றோரின் விமர்சனங்களைப்  படிப்பவர்களுக்குப் புரியும் அமெரிக்க காட்சி ஊடகங்களின் லட்சணம்.

எதுவாக இருந்தாலும் இப்போ எல்லோரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பது எகிப்தில் ஓர் ஆட்சி மாற்றம் வந்தால் யார் அதை கைப்பற்றுவார்கள் என்பது தான். யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறார்களோ என்பதில் "Muslim Brotherhood" (இந்த அமைப்பு பற்றி Where in the world is Osama Bin Laden? புத்தகத்தில் வாசித்து தெரிந்துகொண்ட போது சற்றே வியப்பாக கூட இருந்தது) என்கிற அடிப்படைவாத கொள்கைகளைக்கொண்ட அமைப்பு முதல் நோபல் பரிசு பெற்ற ஓர் எகிப்தியர் (Elbaradei) வரை பேசப்படுகிறார்கள். Hezbollah, ஹமாஸ் தொடங்கி அல்ஹய்டா வரை தோன்றுவதற்கு ஊற்றுக்கண்ணாயிருந்த 1928(!!) ம் ஆண்டே எகிப்தில் உருப்பெற்று பின்னர் முபாரக் அரசினால் தடைசெய்யப்பட்ட Muslim Brotherhood என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை கைப்பற்றினால் (Theocratic Govt. - தெய்வ/தெய்வீக ஆட்சி!!) என்னாகும் என்று மேற்குலகம் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறதோ அல்லது அதை தடுக்க இப்பவே முன்னேற்பாடாக ஏதாவது முயற்சி செய்கிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம். இவர்களின் கையில் ஆட்சி மாறினால் இஸ்ரேல் என்ன விதமான விளைவுகளை எதிர்நோக்கும்?  எகிப்த்திய ராணுவம் (அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்) முபாரக்கின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பார்களா என்கிற கேள்வியை செய்திகளில் விட்டுவைக்கிறார்கள். அமெரிக்காவின் ஒபாமா வழக்கம்போல் எகிப்தின் மாற்றம் "Peaceful Transition" ஆக இருக்கவேண்டும்; அதை எகிப்திய மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.


 நன்றி: படங்கள் Google.