ஜனவரி 19, 2011

பொருளியல்வாழ்வும் பொழுதுபோக்கும் - Work and Leisure - இறுதிப்பாகம்


சந்தோசங்களுக்கான தேடல் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நகர்த்தவும் அர்த்தப்படுத்தவும் செய்கிறது. துன்பத்தின் முடிவில் ஏதோவொரு சந்தோசம், நிறைவு எப்போதும் காத்திருக்கும் என்று நம்பித்தான் கல்லில் நார் உரிக்கும் முயற்சிகளை கூட சில சமயங்களில் சர்வ சாதாரணமாக செய்துமுடிக்கிறோம். அப்படியிருக்க, எப்போதுமே எங்களுக்கு மகிழ்வைத் தரக்கூடிய பொழுதுபோக்கு என்கிற அம்சம் எப்படி எங்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது என யோசித்தால் கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது. பொழுதுபோக்கு, இதுக்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் வெவ்வேறு காரியங்களை, செயல்களை பொருளாதார, தொழில்நுட்ப, கலாச்சார மாற்றங்களுக்கேற்ப  செய்வதாக சொல்லிக்கொள்வோம். 
தொழில் புரட்சிக்குப் பின்னான இன்றைய காலத்தில் ஒருசில பொழுதுபோக்குகள் உலகமயமாக்கப்பட்டாலும், அது நாட்டுக்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் பல சமயங்களில் வேறுபடவும் செய்கிறது. இந்தப் பொழுதுபோக்கு என்பது எப்படி மனித சமூகத்தில் அறிமுகப்படுப்பட்டது என்பதை தேடிப்படிப்படித்தபோது கண்ணில் பட்டது தான், "Leisure Revolution" என்கிற வார்த்தை. 1800 களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக உருவானதுதான் இந்த பொழுதுபோக்கு புரட்சி. வேலைநேரத்துக்கான வரையறைகள் உருவாக்கப்பட்டதோடு இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உழைக்கும் மனிதர்கள் வாழ்வில் இடம்பெறத்தொடங்கியதாக சொல்லப்படுகிறது.


முதலில் இந்த "Leisure" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். ஓய்ந்த அல்லது ஒழிந்த நேரத்தில் ஓர் பொழுதுபோக்கு அல்லது அலுவல் ஈடுபாடற்ற நேரம் என்றும் கொள்ளலாம். இந்த பொழுதுபோக்கு என்பது ஐம்புலன்களுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை சந்தோசத்தை தரக்கூடியதாய் இருக்கும், இருக்கவேண்டும். இது ஒவ்வொரு வயதுக்கும் வாழ்வின் படிநிலைக்கும் ஏற்றாற்போல் வேறுபடும். இதன் மூலம் மனிதனின் உடல்தேவை, உளத்தேவை இரண்டும் சமப்படுத்தப்பட வேண்டும்.குழந்தைப்பருவத்தின் ஆரம்ப வருடங்களில் (Early Childhood) மிக அதிகமான நேரம் இவ்வாறான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலேயே கழிந்துவிடுகிறது. அதன்பின்னர் பதின்பருவம், திருமணம் குழந்தைகள் என்கிற வாழ்க்கை (Parenthood), இறுதியில் பேரன், பேத்தியை கொஞ்சும் வயசு இதுக்கேற்றாற்போல் பொழுதுபோக்குகளும் வேறுபடும். பதின்பருவம் என்றாலே உடலில் நிறையவே வலுவிருக்கும். ஈழத்தில் போரியல்வாழ்வின் மத்தியிலும் அதற்கேற்றாற்போல் ஓடி, மரங்கள், கட்டடங்கள் என்று ஒன்றுவிடாமல் ஏறி, விழுந்து, எதையாவது உடைத்து அல்லது முறித்து, வீட்டில் திட்டுவாங்கி எத்தனை குழப்படிகள் செய்தோம். இப்போதெல்லாம் கட்டட காடுகளில் வாழவே பழக்கபடுத்தப்பட்டு, முகம் காணாமலே அடுத்தவர்களுடன் தொலைத்தொடர்பு சாதனங்களில் எங்களுக்கு பொழுதுபோகாத நேரங்களில் அவர்களை இம்சைப்படுத்தி வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். எல்லாத்தையும் விட ஓரளவிற்கு வயது வேறுபாடின்றி Facebook தான் இப்போ சீனா, இந்தியாவின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியான மக்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது!! இதுவும் தொழில்நுட்ப பொழுதுபோக்கு புரட்சி!

இந்த நினைவுகளிலிருந்து மீண்டு தற்கால யதார்த்த வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால் எங்கள் வேலையையும் பொழுதுபோக்கையும் சமப்படுத்தி எங்களால் வாழமுடிகிறதா என்கிற கேள்வி மனதில் எழுகிறது. அநேகமான சந்தர்ப்பங்களில் வேலையிலிருந்து வீட்டுக்கும் அது தொடர்பான பணிகளை மட்டுமல்ல மன உளைச்சலையும் சேர்த்தே கட்டிக்கொண்டுவருவோம்.  எங்கள் மன உளைச்சலுக்கு வீட்டில் யாரையாவது பலியாக்க கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவ்வப்போது மூளைக்குள் மணியடிக்கும். இன்றைய வாழ்வின் அசுரவேகம், வேலைத்தளத்தில் உருவாகும் அதிக எதிர்பார்ப்புகள் (High Expectations) என்பவற்றுக்கிடையில் மன உளைச்சல் சாதாரணம் தான். ஆனால் அது என்னை தவிர யாரையும் பாதிக்க கூடாது என்று எல்லோரும் நினைவில் கொள்ளவேண்டும். வேலையையும் வாழ்க்கையையும் சமப்படுத்த பழகிக்கொள் என்கிற  அறிவுரைகள் எரிச்சலைத்தவிர வேறெதையும் கொடுப்பதில்லை. ஆனாலும், என்னை நானே சமாதானப்படுத்தவும் பழகிக்கொண்டிருக்கிறேன். அப்படி எனக்குள் நானே சொல்லிக்கொள்வது, "இது ஒன்றும் உலகின் கடைசி நாளல்ல" என்பது தான். It just is. 

தவிர, வீட்டிலும் வேலை சம்பந்தமான வேலைகளையே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தால் ஒருவருக்கு குடும்பம், கணவன், மனைவி குழந்தைகளோடு செலவிட நேரம் ஏது! பெரும்பாலும் வியாபாரம் மற்றும் கணணித்துறையில் பணிபுரிபவர்களைப் பார்த்தால் வீட்டிலும் ஓர் மடிக்கணணியை வைத்து உலகமே மூழ்கப் போகிறதென்றாலும்  உணராதவர்களாய் தலையை உடைத்துக்கொண்டிருப்பார்கள்!!!! அது ஒருபுறமிருக்க "Job Security" இல்லாத காரணத்தாலோ என்னவோ சிலர் ஒரு வேலைக்குப் பதில் இரண்டு வேலைகள் அல்லது துறைகள் என்று கால்பதித்து Workaholic ஆகியும் போகிறார்கள். இதில் விடுமுறைக்காலம் (Vacation) என்று ஒரு இரண்டு மூன்று வாரங்கள் ஓர் மாற்றத்திற்க்காகவேனும் எங்காவது ஓட வேண்டும். ஆனால், குடும்பத்துடன் போய்வர அதுக்கு தனியாய் சேமிக்கவேண்டும். 

வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் நேரம் செலவிடும் போதும் பொழுதுபோக்குகள் என்று அதன் அம்சங்களைப் பார்த்தாலும் இன்று விளையாட்டுகள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இவற்றை ஒரேநேரத்தில் ஒட்டுமொத்த உலகமுமே தொலைக்காட்சியில் பார்த்து பரவசப்படுவது தான்  அதியுச்ச பொழுதுபோக்கு என்றாகிப்போகிறது மத்தியதர உழைக்கும் மக்களுக்கு. பிறகு அந்த நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்கள், சர்ச்சைகள் இவற்றையும் ஊடகங்களே கிளப்பிவிட்டு பிறகு அவர்களே பதிலும் கொடுப்பார்கள். நாங்களும் வாயைப்பிளந்து இருக்கையின் நுனிவரை வந்து அதை பார்த்துக்கொண்டிருப்போம். பிறகு நாங்கள் அதுபற்றி பேசி, பதிவெழுதிவிட்டு பலசமயங்களில் அடுத்த பதிவுக்கு என்ன தலைப்பு என்று யோசிக்கத்தொடங்கிவிடுவோம். அதை தவறென்றும் கூறமுடியாது. காரணம், எங்கள் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து வேறெப்படித்தான் எங்களை விடுவித்துக்கொள்வது. இவ்வாறான கவனச்சிதறல்கள் தேவைபடுகின்றன!!

தொழிற்புரட்சிக்குப் பின்னான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக வேலைப்பழு குறைந்து போகும்,பொழுபோக்கு மற்றும் குடும்பத்துக்கான நேரம் அதிகமாகும் என்று கற்பனை எல்லாம் செய்துகொண்டோம். ஆனால் இன்றைய யாதார்த்தம் அப்படி இல்லாமல் போனது தான் கசப்பான உண்மை. பணிபுரியும் நிறுவனத்துக்காக உழைத்து ஓடாய் தேய்ந்து போவது மட்டுமல்ல; காலமாற்றத்துக்கேற்ப துறைசார் தகவல் தொழில்நுட்ப அறிவு, சாமர்த்தியம், செயற்திறன் போன்றவற்றையும் கூடவே வளர்த்துக்கொள்ளவே வேண்டியிருக்கிறது. ஆனாலும், வேலை உத்தரவாதம் என்பதெல்லாம் சந்தேகம் தான். பெரும்பாலும் கணணி முதற்கொண்டு அத்தனை இயந்திரங்களும் மனிதர்களின் வேலைகளை பறித்துக் கொள்ளுமோ  என்கிற பயம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. 

இறுதியாக நான் என் முதல் பதிவில் குறிப்பிட்ட Abraham Maslow சொன்ன மனித தேவைகளை மறுபடியும் நினைத்துப்பார்க்கிறேன். 

கால ஓட்டத்தில் மனித தேவைகளும் அதிகரித்து வாழ்க்கைமுறைகளும் கூட மாற்றமடைந்து, இன்று கற்பனைக்கும் எட்டாத அற்புத வாழ்வில் மனம் திளைத்து வாழ்ந்து தேய்ந்துகொண்டிருக்கிறோம். மனித தேவைகளை Abraham Maslow ஐந்தாக வரிசைப்படுத்தியுள்ளார். Physiological, Safety and Security, Love & Belonging, Self-Esteem, Self-Actualization என்பதே அவை. உடற்கூற்றின் தேவைகள் நீர், உணவு முதற்கொண்டு sex என்பது வரையும் (Physiological), உயிர்வாழ்தலுக்குரிய பாதுகாப்பும் காவலும் (Safety & Security), எங்கள் மீது அன்பு காட்டவும் சொந்தம் கொண்டாடவுமான உறவு (Love & Belonging), சுயமதிப்பீடு (Self-Esteem), மேற்சொன்ன நான்கும் ஒருங்கே அமையப்பெற்று அதில் தன்னிறைவு கண்டால் இறுதியாக ஒருவர் தன் அறிவு, திறமைகளின் அடிப்படியில் தன்னைத்தனே இனங்கண்டு சுயவிருத்தியை அடைதல் (Self Actualization) என்பனவாகும். இந்த ஐந்தில் எங்கோ ஓரிடத்தில் நிறைவு காணப்படாவிட்டாலும் மனித மனம் சிதைந்து போகும். 
   
எங்களை நாங்களே சமப்படுத்தி, வாழ்க்கையை பொருளாதார, தொழில்நுட்ப, சமூக மாற்றங்களுக்கேற்ப வசப்படுத்தி புரிந்துகொண்டு வாழ்வின் அடிப்படை தேவைகளையும், சந்தோசங்களையும் "Leisure Revolution" என்கிற கனவையும் எப்படி தக்கவைத்துக் கொள்ளப்போகிறோம்!!!  ஆனாலும், ஓடும்வரை ஓடு, நிறுத்தாதே. ஓடுவதை நிறுத்திவிட்டால் எனது வாழ்க்கை, கனவுகள், வெற்றிகள் எதுவும் எனக்கு சொந்தமில்லை என்பதுதான் என் கருத்து.


தொடர்புடைய முந்தைய பதிவுகள்

  

17 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

ஆம் முடிந்த வரை ஓடத்தான் வேண்டும். இந்த வாழ்க்கைக்கு மனம் பழகாவிட்டால், வாழவே தகுதி இல்லாதவன் என்று கூட சொல்லப்படுவோம். மூச்சு நிற்கும் வரை ஓடத்தான் வேண்டும்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice

விந்தைமனிதன் சொன்னது…

நல்ல அலசல்! பொழுதுபோக்கு அல்லது Re-Creation என்பதன் அவசியத்தைத் தெளிவாக நிறுவி இருக்கின்றீர்கள். தொழில்நுட்பப்புரட்சியின் அனுகூலங்களை(குறைந்த உழைப்புநேரம்&வேலைப்பளு), மறு உற்பத்தி-Recreation, இனிமையான வாழ்வு போன்றவை) சராசரி மனிதன் அனுபவிக்கத் தடையாக இருப்பது எது என்றும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்களேன்!

ஹேமா சொன்னது…

எந்த நாட்டில் இருந்தாலும் கொஞ்சம் வேகமாய் ஓடவேண்டித்தான் இருக்கிறது ரதி.
இல்லாவிட்டால் எதிர்காலம் தள்ளாடிவிடலாம். பொருளாதாரச் சிக்கல் பெரும் சுமையாகிறதே !

Thekkikattan|தெகா சொன்னது…

அமைதியா உட்கார்ந்து படிச்சிட்டு பின்னூட்டம் விடுறேன். :)

Thekkikattan|தெகா சொன்னது…

எப்படிங்க ஒரு சாதாரண ஆனா தேவையான யாருக்குமே உட்கார்ந்து சிந்திக்கவே நேரமில்லாத விடயத்தை எடுத்துப் போட்டு பகுதி, பகுதியா பிரிச்சு மேஞ்சு போடுறீங்க. அழகான, ஆழமான கட்டுரை!

இன்றைய தினத்தில் நாம் பொழுது போக்கிற்கென பயன்படுத்தும் இந்த முகநூல் போன்ற சமூக தளங்கள் என்னய பொருத்த மட்டில் உண்மையிலேயே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு மாய அட்டைபலகை மட்டுமே! அதனின் மூலமாக ஒத்த எண்ணங்களை கொண்டவர்களை அடையாளப்படுத்தி பிரிதொரு சமயம் முறையானபடி அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பொழுது அந்த மனிதர்களை சந்திக்க பயன்படுத்திக் கொண்டால், அதுவே நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சன்மானம் எனக் கொள்ளலாமா?

.....தொடர்கிறேன்... 2

Thekkikattan|தெகா சொன்னது…

//பணிபுரியும் நிறுவனத்துக்காக உழைத்து ஓடாய் தேய்ந்து போவது மட்டுமல்ல//

மேலும், ஓடாய் தேய்ந்து மிச்சமிருக்கும் தேகத்தின் வழியாக உட்கார்ந்து யோசித்தால் நம் பொன்னான எல்லா காலமுமே கழிந்து போய் இருப்பதனையே உணர்கிறோம்தானே...

அதாவது எப்படின்னா இந்த தேகம் எடுத்ததே அந்த நிறுவனத்திற்கு தன்னை எழுதிக் கொடுக்கவேங்கிற அளவிற்கு...

என்னுடைய உண்மையான பொழுது போக்காக நான் எண்ணித் சுவடுகள் with photos... திளைப்பது பயணங்கள். அதுவும் திக்கு தெரியாதபடிக்கு அலைந்து பயணிப்பது. ஆனால், வயதாக, ஆக பொறுப்புகள் என்ற பெயரில் அந்த அடிப்படை இயல்பையே மறந்து என்னை நானே ஒரிடத்தில் அமர்த்தி கால்களுக்கு விலங்கிட்டுக் கொண்டேன். இந்த ‘தேக்கத்தினூடாக’ இறுதியில் எனக்கு என்ன கிட்டப் போகிறது...?

//கால ஓட்டத்தில் மனித தேவைகளும் அதிகரித்து வாழ்க்கைமுறைகளும் கூட மாற்றமடைந்து, இன்று கற்பனைக்கும் எட்டாத அற்புத வாழ்வில் மனம் திளைத்து வாழ்ந்து தேய்ந்துகொண்டிருக்கிறோம்.//

அற்புத-வா இல்லை அற்ப வாழ்வா :)...

இந்த தேவைகள் எதன் பொருட்டு அமைகின்றன? நீங்க வரிசையிட்ட ஆப்ராகம் மாஸ்லோவினுடைய மனித உள்முக சுயவிருத்தியையடைய பயன்படுத்திக் கொள்கிறோமா? என்பது கேள்விக்குறியே!! புறத் தேவைகள் அதிகமாகும் பொழுது நம்மிடம் மிஞ்சி இருப்பது, ஓய்வற்ற மண்டை ஓட்டமே (frustration and restlesness). அதனையொட்டி மன அயர்ச்சியும் இறுதியில் தோண்டிப் பார்க்கும் பொழுது அங்கே ஒரு பெரிய வெற்றீடமிருக்கும்... விடயம் அப்படியாக இருக்கும் பொழுது எங்கே அந்த கோட்பாடுகள் சார்ந்து உட்கார்ந்து யோசித்து சமப்படுத்திக் கொள்ள.

எல்லாமே வெளிப்புற அங்கீகாரங்களக்காக தன்னையே தொலைத்துவிட்டு, ஏதோ சாக்கு போக்குகள் சொல்லி உள்ளே வெம்பி காலனிடம் நம்மை ஒப்படைத்து விடுவதுதான் எதார்த்த வாழ்வியல் :).

தவறு சொன்னது…

வேலை...வேலை...ஆமாம் ரதி. ஓடி கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எப்பதான் இதெல்லாம் முடிச்சிட்டு நம்மள நாமவே உடைச்சிக்கிறதுன்னு ஆவல் அதிகமாயிட்டே இருக்கு.

ஆனாலும் அதேபக்கம் தவிர்க்கமுடியாதப்படி நமக்கு நாமே கைவிலங்கிட்டு கொண்டிருக்கும் விசயங்கள் அதிகமாயிட்டு போயிட்டே இருக்கு..

என்ன செய்யறதுன்னுட்டு ஓடிக்கிட்டே இருக்கவேண்டியதுதான் ரதி...

Rathi சொன்னது…

நன்றி, தமிழ் உதயம், ராம்ஜி யாகூ, விந்தைமனிதன், ஹேமா.

தெகா,

ரெண்டு நாளா உங்கள் விமர்சனம் மட்டுமே சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்க சொன்ன "முகநூல்" - Facebook பற்றிய கருத்து யதார்த்தம். அது பற்றி பலரிடம் அவர்கள் அனுபவம் பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்

Rathi சொன்னது…

தெகா,

உங்கள் "சுவடுகள்" நேரமிருக்கும் போது ஆறுதலாக இருந்து படித்துப் பார்க்கவேண்டும்.

"அற்புத வாழ்வா, அற்ப வாழ்வா" என்பது வயதுக்கும், கலாச்சாரம், சூழ்நிலை, அனுபவங்களுக்கும் ஏற்ப மாறும். இப்போ இருக்கிற "Millennial Generation" வாழ்க்கை அற்புதம் என்றுதானே பெரும்பாலும் சொல்கிறார்கள். எங்களைப்போன்ற Generation X or Millennials இது ரெண்டுக்குமிடையில் (Borderline)அல்லாடுபவர்கள் தான் சுவாரசியமானவர்கள்.

ஆனாலும், வாழ்க்கையின் வட்டத்துக்குள், அதன் படிநிலைக்குள் அகப்படும்போது எங்களைப்போலவே வாழ்வின் அழுத்தங்கள், பிரச்சனைகள் அவர்களுக்கும் இருக்கும். எங்களைப்போலவே வாழ்க்கை பற்றிய எண்ண ஓட்டங்களும் இருக்கும். ஆனாலும் அதை அணுகும் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் விதம் வேண்டுமானால் வேறுபடும். அவர்களுக்கு இருக்கும் resource களும் எங்களுக்கு இருந்ததில்லையே.

"வெளிப்புற அங்கீகாரம்" என்பது சரிதான். பெரும்பாலோனோர் அதுக்குத்தானே ஆசைப்படுகிறோம். அது இயற்கைதானே. ஆனால், எங்கள் விருப்பம், தேவைகள், அபிலாஷைகள் என்பன மற்றவர்களால் புரிந்துக்கொள்ளப்படாதவிடத்து ஏதொ ஒரு விதத்தில் எங்கள் மனித இயல்பு அதை வெளிப்படுத்தியே தீரும். அதனால் தான் எங்களை நாங்களே ஏதோவொரு புள்ளியில் சமப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். :))

Rathi சொன்னது…

தவறு,

என் பதிவு உண்டாக்கிய சிந்தனைகள் உங்கள் தளத்தில் படித்தேன். சுருக்கமாக, அழகாக வாழ்வின் ஓட்டத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்வில் துரத்துவத்திற்கும் அடைவதற்கும் ஏதோவொன்றை லட்சியமாய் வரித்துக்கொள்ளாவிட்டாலும் வாழ்வு சுவையிழந்து போகும்.

Thekkikattan|தெகா சொன்னது…

ரதி, நீண்ட பின் கருத்திற்கு நன்றி! கிடைக்கும் நேரத்தில் இப்படி எண்ணங்களை சிந்தாமல், சிதறாமல் இங்கு ஒருமித்து கொண்டு வந்து கொடுக்கிறீங்களே அதுவே பெரிய விடயம்தான்.

என்னுடைய ’சுவடுகளில்’ ஆருதலுக்காக படிக்கிற மாதிரி இல்ல அது. கொஞ்சம் காத்திரமா எங்கள மாதிரி மேலோட்டமா சோத்துக்கு மேலே இருக்கிற கூட்டில நொல்லை சொல்லும் மக்களுக்கானது. உங்களை போன்ற மக்களுக்கான பயணமும், தேடலும், அதனையொட்டி கண்டறியும் விடையானது நீரு பூத்த நெருப்பை போன்றது. தனலாக கொதித்துக் கொண்டிருக்கிறது! உங்களுடன் எங்களை ஒப்பீடு செய்வதனை ஒத்துக் கொள்ள மாட்டேன். காலம் கொடுத்திருக்கும் உங்களுக்கான விடையறியும் வாழ்வு வினாத்தாள்கள் வேறு? உங்களை போன்றவர்களின் வாழ்வுச் சாலைக்கும், மெயின்லாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குமான வித்தியாசங்களை பொருட்டு அழுத்தமான ஒரு கட்டுரை வடிக்க வேண்டுமென மிக நீண்ட நெடிய நாட்களாக ஆசை... கொடுகக்ணும் அதற்கான மனநிலைக்கு என்னை தயார் செய்து கொள்ளும் போது. வர்ரேன்! ம்ம் :)

Rathi சொன்னது…

தெகா,

உங்கள், "மிக நீண்ட நெடிய நாள் ஆசை" யை முயன்று விரைவில் எழுத்தாக்குங்கள். படிக்க காத்திருக்கிறேன். அப்படியே என் தளத்திற்கும் வந்து உங்கள் எண்ணங்களை எப்போதும் போல் பகிர்ந்துகொள்ளுங்கள். :)

ஜோதிஜி சொன்னது…

படித்து முடித்ததும் பங்காளி தெகா சொன்னது தான் நினைத்ததும் நினைவுக்கு வருகின்றது. ஒரு சாதாரண விடயத்தை பத்தி பத்தியாக பிரித்து....... ம்ம்.......

ஆனால் உங்களைப் போல ஒரு பொருளாதார சமூக உளவியல் பேராசிரியைப் போல என்னால் சிந்திக்க முடியவில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களையும் அவர்களுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையை என் வாழ்க்கையுடன் அடிக்கடி ஒப்பிட்டுக் கொள்ளும் போது பல விசயங்கள் கண்களுக்குத் தெரிகின்றது. அதுவும் இதை படித்து முடிக்கும் இன்னும் பலவற்றை யோசித்துப் பார்க்க உதவுகின்றது.

ஜோதிஜி சொன்னது…

இங்கு என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு 90 சதவிகித படித்த மக்களுக்குக்கூட இப்படி ஒரு இணைய உலகம் இருப்பதோ, இத்தனை விசயங்கள், நிகழ்வுகள் உலகம் முழுக்க நடந்து கொண்டுருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் எவருமே இல்லை. புத்தக வாசிப்பாளர்கள் குறைவு. படித்து சிந்திக்க வேண்டும் என்று யோசிப்பவர்கள் மிக மிகக் குறைவு. தங்கள் வாழ்க்கை என்பதை தாங்கள் சாம்பாரிக்கும் பொருள் மூலம் உண்டாகும் வசதி வாய்ப்புகளை வைத்து கிடைக்கும் சமூக அந்தஸ்து மூலம் தான் தங்களை வெளிப்படுத்த தயாராக உள்ளனர். இந்த சிந்தனை தான் உணர்வு என்ற சொல் அழிந்து உணர்ச்சியின் தாக்கம் என்றொரு கேவல சிந்தனைகள் பிறக்கவும் உதவுகின்றது. அன்றாடம் உழைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டுருப்பவர்களுக்கு தொலைக் காட்சியே தங்களுக்கான அருமருந்து. ஆனால் மற்றவர்களை வைத்து உழைத்து உயர்ந்தவர்களுக்கு மருந்து என்பது இரவு நேர மயக்கமும் அந்த மயக்கத்தின் ஊடே தங்கள் உடல் சூட்டை தணித்துக் கொள்ள பிழைப்பு தேடி வந்தவர்களை ஒரு ஜடமாக கருதிக் கொண்டு மன ரீதியாக உடல் ரீதியாக ஊனமாக ஆக்குவது.

ஜோதிஜி சொன்னது…

எனக்கே இந்த பேஸ்புக் என்பதன் முழுவீச்சு இன்னமும் தெரியாது. நேற்று வந்த ஒரு இறக்குமதியாளர் கூட இந்த பேஸ்புக் குறித்து சிலாகித்து கூறிய போது உங்கள் வார்த்தைகள் தான் மனதில் வந்து போகின்றது.

நமக்கான ஆறுதல்கள் சில சமயம் அரசமரத்து பிள்ளையார் தந்து விடுகின்றார். பல சமயம் என் மனைவியார் சொல்லுவது போல இந்த மடிக்கணினி தந்து விடுகின்றது.

சூழல் பொறுத்து தனது சிந்தனை பொறுத்து ஒவ்வொருக்கும் உண்டான நடைபாதை அமைந்து போய் விடுகின்றது. தமிழ் உதயம் சொன்னது போல பயப்படத் தேவையில்லை. ஆனால் பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டுருப்பவர்களையும் சமாளிக்க நமக்கும் இது குறித்து அடிப்படை அறிவு இருந்தாலே போதுமானது என்கிற ரீதியில் என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையும் சொல்லுப்டியாகத் தான் இளைப்பாற வைத்துக் கொண்டுருக்கிறது.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

நீங்களும் தெகாவும் என்னை இன்னோர் பதிவெழுத தூண்டிவிட்டீர்கள். வேற வழியில்லை. நீங்கள் இருவரும் என் பதிவை படிக்கும் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். :))