ஜனவரி 27, 2011

இனமும், மொழியும், இலக்கியமும்....!!!

இலங்கை காலியில் ஓர் இலக்கிய நிகழ்வு, Galle Literary Festival, இடம்பெற இருக்கிறது. அதற்கு சர்வதேசத்திலிருந்தும் பல பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று இலங்கை எதிர்பார்க்கிறது. இதற்கிடையே பாரிஸ் நகரை தளமாக கொண்டு இயங்கும் 'எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்' அமைப்பு இந்த விழாவை பகிஷ்கரிக்குமாறு உலக பிரபல எழுத்தாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் Noam Chomsky, அருந்ததி ராய் போன்ற இன்னும் சில சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கறையுள்ள எழுத்தாளர்களால் இணையத்தில் ஓர் கையெழுத்து மனு தயாரிக்கப்பட்டு பலர் அதில் கையெழுத்திட்டு இந்த இலக்கிய விழாவை பகிஷ்கரிக்க தங்கள் ஆதரவை தெரிவித்திருப்பதாக AFP செய்தி தளம் தெரிவிக்கிறது. 

எழுத்தாளர்களுக்கேயுரிய சமூகப்பொறுப்பு என்ன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இவர்களால் ஓர் தனிமனிதனின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வரலாறாக்கவும் முடியும். சமூகத்தின் அவலங்களை அதன் இயல்புகளோடும், நியாயங்களோடும் உலகிற்கு எடுத்துச் சொல்லவும் முடியும். அதற்குரிய தைரியமும், கடப்பாடும் இவர்களுக்கு உண்டு. மேற்சொன்னதைப்போன்று எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். உலக அங்கீகார விருதுகளுக்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் இலக்கியம் என்கிற ஊடகத்தின் மூலம் ஓர் மொழிக்குரிய அங்கீகாரம் கிடைக்கிறது.  

ஈழத்தில் இருக்கும் ஒருவரால் நிச்சயமாய் அங்கே அவருக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லமுடியாத, எழுதமுடியாத ஓர் சூழல் தான் நிலவுகிறது. மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், காணாமற்போதல், கொடுமையான கைதுகள், தாங்கமுடியாத சித்திரவதைகள், கேட்டுக்கேள்வியற்ற தடுத்துவைப்புகள் என தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்  இலங்கை அரசால் காலங்காலமாய் மறுக்கப்படும் உண்மைகள். அங்கே இவைபோன்ற மனிதத்திற்கு எதிரான குற்றங்களை இழைப்பவர்களுக்கும் அவர்களின் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதமும் சேர்த்தே வழங்கப்படுகிறது. அதனாலேயே வேலியே பயிரை மேய்வது என்கிற நிலையும் தசாப்தங்களாய் இருந்துவருகிறது. வெலிக்கடை முதல் அனுராதபுர சிறை வரை இனப்படுகொலைகளும் தொடர்கிறது. 

இதெல்லாம் தமிழன், அவன் தமிழ்மொழியைப் பேசுகிறான் என்பதால் தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழினம் என்பது எந்த கலப்பும் இல்லாத ஓர் தனியினம். இலங்கையில் அது ஓர் தேசிய இனமும் கூட. அதற்குரிய நிலம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், அதையொட்டிய வாழ்க்கைமுறை இவற்றை காலங்காலமாய் வெளிப்படுத்தும் இலக்கியம் என்கிற உலக வரையறைகளுக்குட்பட்ட எல்லா அம்சங்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் அந்த மொழிக்காகவும், இனத்துக்காகவும் தங்களை போராளிகளாய் அர்ப்பணித்த ஓர் வீர வரலாறும் உண்டு. அத்தோடு இலங்கையில் தமிழ்மொழியைப் பேசுவதாலேயே தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள் முஸ்லீம்கள். ஆக, மொழி என்பது ஓர் மனிதனுக்கு ஓர் தனி அடையாளம் மற்றும் அங்கீகாரம்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு மொழி தான் ஓர் அடிப்படைக்காரணம் என்பது எழுதி, எழுதி தேய்ந்து, நொந்துபோன ஓர் விடயம். ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் இருண்ட எதிர்காலத்திலிருந்து விடுதலைக்கான கலங்கரை விளக்கம் கல்விதான். அது தமிழர்கள் என்கிற காரணத்தால் இலங்கையில் மொழி மூலம் பறிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்மொழிக்குரிய அங்கீகாரம் காலங்காலமாய் இழுபறி நிலையிலேயே இருந்துவருகிறது. 1956 ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தில் தொடங்கி, 1978 (Chapter IV) ம் ஆண்டின் அரசியல் நிர்ணயச்சட்டம் தான் தமிழ்மொழிக்குரிய வரைவுச்சட்டமாக கருத்தப்படுகிறது. பிறகு அது அரசியல் காரணங்களுக்காக 13, 16 வது திருத்தச்சட்டம் என்று திருத்தப்பட்டு, 1991 ம் ஆண்டு Official Language Commission Act (Minority Rights Group International Report) என்பவற்றின் மூலம் தமிழ் மொழிக்கு சட்டத்தில் மட்டும் உலக ஒப்புக்கு ஓர் அங்கீகாரம் உண்டு. இன்றும் கூட அரச சுற்றறிக்கையில் இருந்து திருமணத்தை பதிவு செய்வது வரை எல்லாமே சிங்களத்தில் தான் பெரும்பாலும் நடைபெறுகிறது. 
இன்றைய அரசியல் சூழ்நிலைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் ஈழத்தமிழன் ஒருவன் தன் எழுத்துக்குரிய அங்கீகாரத்தை பெற அதை தமிழ்நாடுவரை எடுத்துக்கொண்டு ஓடவேண்டியிருக்கிறது. அதில் எங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை என்றாலும், எங்களுக்கு நாங்கள் வாழும் மண்ணில் எம் மொழி சார்ந்த இலக்கியத்துக்கு கிடைக்கும் ஓர் அங்கீகாரம் என்பது ஓர் தனிப்பட்ட சன்மானம், திருப்தி. புலத்தில் உருவாக்கப்படும் இலக்கியப்படைப்புகளுக்கும் தமிழ்நாட்டிலேயே அதற்குரிய அங்கீகாரத்திற்கான களங்களை தேடவேண்டியுள்ளது. எங்கள் மண்ணில் எங்கள் அவலங்களை எம் சொந்தமொழியில் சொல்லும் நாள் எந்நாளோ!!!! 

ஓர் தேசிய இனத்தை ஒடுக்க மொழியை ஓர் ஆயுதமாக எடுத்தாண்டு கொடுங்கோல் ஆட்சி செய்யும் மண்ணில், மேலே சொன்னது போல் இலங்கை காலியில், நடைபெறும் இலக்கிய விழா ஓர் தேசிய அவமானம். ஓர் இனத்துக்கு பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், இது எல்லாவற்றையும் விட உயிர்வாழும் உரிமையை கூட மறுத்துவிட்டு, இலக்கிய விழாவில் தமிழனுக்கும் இலங்கையில் சமவுரிமை கொடுக்கிறோம் என்று பகுத்தறிவுக்கொவ்வாத அலங்கார வார்த்தை ஜாலங்களில் பொய்களை ஒப்பேற்றுவார்கள். ஓர் சினிமாத்துறை சார்ந்த iifa விழாவுக்கான எதிர்ப்பை விடவும் இதற்கு உலகறிந்த Noam Chomsky, அருந்ததி ராய் போன்ற சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு சர்வதேசத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்னையை இன்னோர் கோணத்தில் பார்க்க உதவலாம். 

நன்றி: படங்கள் Google, அறியது 

5 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

ஒரு வகையில் என் முதல்விமர்சனத்திற்கு நன்றி. விமர்சிப்பதை விட பொருள் அடக்கம், வடிவமைப்பு, படங்கள், நோக்கம் என்று எல்லாவகையிலும் நூற்றுக்கு நூறு. செந்திலின் கவிதையை படித்து சிலிர்த்த உணர்வு இந்த கடைசி படம் தந்தது.

நிச்சயமாகச் சொல்கின்றேன். நீங்க ஆங்கில தினசரி பத்திரிக்கைகளில் எழுத வேண்டியவர்.

தவறு சொன்னது…

மொழிக்கும் இலக்கியத்திற்கும் உட்பட்டவர்கள் தான் எழுத்தாளர்கள். நாடு என்பதைவிடவும் உலகம் தழுவிய அவர்களது சமூக பார்வைதான் அவர்களை எழுத தூண்டுகிறது. மனிதம் எங்கே மிதிக்கப்படுகிறதோ தன்னாலான மட்டும் எதிர்க்கவும் வலிவுண்டு ரதி.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

என் நோக்கத்தை புரிந்துகொண்டதற்கு நன்றி.

பதிவர் முகிலன் கூட இந்தப்பதிவை அவருடைய இந்தவார 'வலைச்சரம்' தெரிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப்படம் தவறு அவர்களின் தளத்தில் நீண்டநாட்களாக என் ஈழம் பற்றிய நினைவுகளில் அறைந்துகொண்டே இருந்தது. அதான், இப்பவாச்சும் அதை பயன்படுத்திக்கொண்டேன்.

தவறு,

உங்களுக்கு கிடைத்தால், 'The Book of Negroes" - Lawrence Hill (Commonwealth Writer's Prize) எழுதியது படித்துப்பாருங்கள். மிக எளிமையாக, தேவையற்ற வார்த்தை அலங்காரங்கள் இன்றி ஓர் இனத்தின் வரலாற்றை ஓர் சிறுமியின் பார்வையில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதைப்படித்த பின் தான் புரிந்துகொண்டேன் சமூக அக்கறையுள்ள இலக்கியப்படைப்பு என்றால் என்னவென்று. ஈழத்தமிழர்களின் அவலங்களை யாராவது அப்படி எழுதமாட்டார்களா என்று ஏங்க வைக்கும் ஓர் படைப்பு.

ஹேமா சொன்னது…

ரதி...உங்கள் சிந்தனை அளவுக்கு நான் இல்லை.நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன்.விபரிக்கத் தெரியவில்லை.

எழுத்தைப்போல் கடுமையான ஆயுதம் வேறொன்றுமில்லை.ஆனால் அதையும்தானே அடக்கி ஒடுக்கிப் புதைக்கிறார்கள் !

ஜோதிஜி சொன்னது…

அதைப்படித்த பின் தான் புரிந்துகொண்டேன் சமூக அக்கறையுள்ள இலக்கியப்படைப்பு என்றால் என்னவென்று. ஈழத்தமிழர்களின் அவலங்களை யாராவது அப்படி எழுதமாட்டார்களா என்று ஏங்க வைக்கும் ஓர் படைப்பு.

இது தான் என் நீண்ட நாள் ஆசை. ஆனால் வெறுப்பு விருப்பு வியாபார தந்திரம் இந்த மூன்று விசயத்தை அடக்கி தான் வந்த ஒவ்வொரு ஈழம் சார்ந்த புத்தகங்களும்இருக்கிறது.

சுடுகாட்டில் நின்று கொண்டு பணம் வசூலிக்கும் கலையை நம் தமிழர்கள் தான் உலகிற்கு கத்துக் கொடுத்தவர்களாக இருப்பார்கள் போல.

உங்களைப் போன்றவர்கள் தமிழ் வலை உலகத்திற்கு உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை விட நடந்து கொண்டிருக்கும் விசயங்களை மேலைநாட்டினருக்கு ஆங்கில வலைப்பூ மூலம் நல்ல புரிந்துணர்வை உருவாக்கலாம். இது என் தனிப்பட்ட கருத்து.