ஜனவரி 23, 2011

நீதிக்கு தட்டுப்பாடு.....!!



கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்தொலைக்காட்சியில் செய்திகளின் ஆய்வு ஒன்றில் திடீரென்று தமிழ்நாட்டில் தியாகி முத்துக்குமாரின் உடலையும் ஆர்ப்பாட்டத்தையும் காட்டினார்கள். நானும் நிமிர்ந்து உட்கார்ந்து அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்று கவனித்தேன். காட்சியும் மாறியது, துனிசியாவில் இன்னோர் இறந்த உடல், மக்கள் ஆர்ப்பாட்டம்!!! சர்வாதிகாரத்தை எதிர்த்து நிகழ்ந்த தன்னெழுச்சியான மக்களின் கிளர்ச்சி. அது பாட்டாளி வர்க்கப்புரட்சியோ அல்லது சோசலிஷப் புரட்சியோ அல்ல, தன்னியல்பானது. இப்படி காட்சியும் செய்தியின் பின்னணியும் விரிந்தது. ஒரு கணம் இரண்டு செய்திகளின் காட்சிமாற்றங்களுக்கிடையே சொல்லப்பட்டதும், சொல்லப்படாததுமான செய்தி முள்ளாய் உறுத்தியது. 




சில நாட்களுக்கு முன் தெற்கு சூடான் தனியே பிரிந்துபோவதையடுத்து நாடுகடந்த தமிழீழ அரசினை உத்தியோகபூர்வமாக அதன் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அழைப்பு என்கிற செய்தி. தெற்கு சூடான் பிரிந்துபோக எத்தனையோ உலகநாடுகளின் கண்காணிப்பில் ஏன் வாக்கெடுப்பு நடந்தது என்கிற அரசியல் பின்னணிகளை (எண்ணெய் வளம்!!) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அந்த மக்களைப்பார்த்து சந்தோசமா அல்லது பொறாமையா என்கிற விவரிக்க முடியாத ஏதோவோர் உணர்வு எனக்கு. இப்படி எங்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் என்று சிறுபிள்ளைதனமாய் யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டு தசாப்தங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூடானின் அரபு ஆதிக்க ஆட்சிக்கும் தெற்கு சூடானைச்சேர்ந்த மக்கள் விடுதலை அமைப்பிற்கும் இடையே 2005 ம் ஆண்டு ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து வந்த வெற்றி இது. 
அடுத்து, இப்போ தமிழ் செய்திகளில் அடிக்கடி அடிபடுவது இலங்கை ஜனாதிபதி அமெரிக்காவுக்கு தனிப்பட்ட ஓர் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது தான். ஏற்கனவே பிரித்தானியாவிற்கு ஓர் தனிப்பட்ட விஜயம் சென்று காரியசித்தி கிட்டாமல் திரும்பி வந்தார். இப்போ அமெரிக்கா!! இவர் மீது அமெரிக்காவிலுள்ள TAG - Tamils Against Genocide என்கிற இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு. இவர்களால் பதிவுசெய்யப்படும் வழக்கு குற்றவியல் வழக்காக அன்றி தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட மூன்று பேர்கள் சார்பில் பதிவுசெய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் அடங்குபவை கடந்த 2009 ம் ஆண்டு முல்லைத்தீவில் கொல்லப்பட்ட 40 000 கொல்லப்பட்டது, 2006 இல் திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டது, ACF - Action Contre La Faim ஐச்சேர்ந்த  17 பேர் கொல்லப்பட்டது என்பனவாகும். இது தவிர, தமிழர்கள் புலம் பெயர்ந்துவாழும் நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் ஆர்ப்ப்பாட ஒன்றுகூடலையும், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் அமெரிக்க அரசுக்கு ராஜபக்க்ஷேவை அமெரிக்காவில் மேற்சொன்ன குற்றங்களுக்காக கைதுசெய்யும்படி கோரிக்கைகளை அனுப்பும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அமெரிக்காவின் போர்குற்ற விசாரணைப்பிரிவு  - 101 (202) 514-2000
மின்னஞ்சல் முகவரி - askdoj@usdoj.gov

உங்களால் முடிந்ததை செய்வீர்கள் என்கிற எதிர்பார்ப்புடன்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் Patricia Butenis இன் விக்கிலீஸ் ஆதாரம் இலங்கை அதிபருக்கும் போர்க்குற்றங்களில் பங்கிருப்பதாக சொல்கிறது. ஆனாலும், அமெரிக்கா ராஜபக்க்ஷேவை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கிறது. 

இன்று வழக்கம் போல் ஜோதியின் தேவியர் இல்லம் தளத்திற்கு சென்றால், அங்கே ம. தி.மு. க. பொதுசெயலாளர் வை. கோ. அவர்களின் ஈழம்பற்றிய ஆவணப்படம் மற்றும் விவாதங்கள். வை. கோ. அவர்கள் அரசியல்வாதி தான். ஆனால், இந்த ஆவணப்படங்கள் அரசியல் கடந்த ஈழத்தின் அவலம்! 

மனிதத்திற்கெதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு போர் மற்றும் போர்குற்றங்கள் இவற்றுக்கெதிராக இலங்கை அதிபர் அமெரிக்காவில் கைது செய்யப்படுவாரா? அல்லது வழக்கம்போல் மேற்குலகின் அரசியல் சித்துவிளையாட்டு அரங்கேறுமா? துனிசியா போன்ற தன்னெழுச்சியா அல்லது சூடான் போன்ற ஜனநாயக வழியா எதில் எங்களுக்குரிய நீதியும் நியாயமும்  கிடைக்கும் என்று யோசித்தாலும் இடையே எதுவோ ஒன்று இடறுகிறது!! என்ன சொல்ல! 


நன்றி: படங்கள் CBC, கூகிள் 

5 கருத்துகள்:

தவறு சொன்னது…

நீதிக்கு தட்டுபாடு....! ரதி

வேறு என்ன சொல்ல ?

ஹேமா சொன்னது…

ரதி....!

Rathi சொன்னது…

உங்கள் ஆதங்கம் நிறைந்த கருத்துக்கு நன்றி, தவறு.

ஹேமா, இதென்ன விமர்சனம், புரியவில்லை?

விந்தைமனிதன் சொன்னது…

இன்று கவிஞர் காசி ஆனந்தனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வார்த்தை சொன்னார் "எனக்கு அறத்தின்மீது நம்பிக்கை இருக்கின்றது. அறம் நிச்சயம் வென்றே தீரும் - தாமதமானாலும்கூட" என்று! அதே நம்பிக்கையை நெஞ்சில் சுமந்து மனதில் எரியும் நெருப்பைப் பொத்திப்பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம்!

ஜோதிஜி சொன்னது…

உங்களின் எழுத்து படித்து முடிக்க வயிறு பிசைவது போல் உண்ர்கின்றேன்.