ஜனவரி 13, 2011

அவலவாழ்வின் அனுபவங்கள்.....!!


வாழ்க்கை என்றால் என்ன? மனிதனைத்தவிர வேறந்த உயிரினமும் இந்த கேள்வியை கேட்குமா தெரியவில்லை. வாழ்க்கையை எந்த தத்துவ விசாரணை மூலமோ அல்லது கருத்தாக்கங்கள் மூலமோ எளிதில் விளங்கிக்கொள்ள முடிவதுமில்லை. அதை விளக்கவும் முடியுமா தெரியவில்லை. அப்படியானால் வாழ்க்கை என்றால் என்னதான் அர்த்தம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம், வாழ்வு வாழ்க்கை என்று அகராதி விளக்கம் தருகிறது.

அப்படியானால் அனுபவம் தான் வாழ்க்கையா! அனுபவங்கள் மட்டுமே வாழ்க்கையை நகர்த்துகிறதா!ஒருவரின் அனுபவங்களுக் கேற்றாற்போல் அவரவர் வாழும் இடத்துக்கும், சூழலுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இசைவாக்கம் (Adaptation) அடைவதா வாழ்க்கை! வாழும் சூழலுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இசைவாக்கம் என்பது இயல்பாய் இருக்கவேண்டுமா அல்லது அது கைவர பகீரத பிரயத்தனம் செய்யவேண்டுமா! சிலருக்கு இது வெகு சுலபமாக கைகூடும் என்றாலும் இந்த இசைவாக்கம்  என்பது எல்லா நேரத்திலும் ஓர் சந்தோசமான மனோநிலையை/மன உளைச்சலை  (Eustress) கொடுக்கும் என்று சொல்ல முடியாது. Eustress என்பது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுப்பது. பெரும்பாலும் காதல் தான் இந்த "Eustress" வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. விரும்பாத மாற்றங்களுக்குள் எங்களை நாங்களே திணித்துக்கொள்ளும் போது உண்டாவது "Distress" ஆரோக்கியமற்ற மனஉளைச்சல்.

சந்தோசமான பொழுதுகளில் வாழ்க்கை என்கிற கருத்தியலுக்கு, மனித இருப்புக்கு ஓர் விளக்கமும்; கஷ்டங்கள், கவலைகள் சூழ்ந்து பிடிக்கும் போது அதற்கு வேறோர் விளக்கமும் கொடுப்பவர்களே எம்மில் பலர் இருக்கிறோம். நம்பிக்கைக்கும் ஏமாற்றத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் தான் ஒவ்வொருவரும் எங்களை நாங்களே தரிசித்தும் கொள்கிறோம், சுயதரிசனம். அந்த புரியாத இடைவெளிகளில் எங்கள் அனுபவங்களை இட்டு நிரப்பி ஒன்றில் கரைசேருவோம் அல்லது மீள முடியாதபடி மூழ்கிப்போவோம். ஆங்கிலத்தில் அடிக்கடி சொல்வார்கள், "Swim or sink" என்று.


மனிதனும் இயற்கையின் ஓர் அங்கம் தான் . மனிதனைச் சூழவுள்ள கவனமாற்றங்கள், கவனச்சிதறல்கள் இதை அடிக்கடி அல்லது அவ்வப்போ மறந்து போக செய்கிறது. இயற்கை, அது தனிமனித அங்கம் முதல் அண்டசராசரம் வரை, தன்னை எப்போதுமே சமநிலையில் வைத்துக்கொள்ளவே முயல்கிறது. அந்த சமநிலைக்கு பங்கம் வரும்போது ஒன்று இயல்பாகவே இயற்கை தன்னை சமப்படுத்திக்கொள்கிறது. அல்லது சீற்றம் கொள்கிறது. அழிவு நேரிடுகிறது. இன்று சுற்றுச்சூழல் இயற்கையால் உண்டாகும் அனர்த்தங்களை விடவும் மனிதனால் சகமனிதனுக்கு உண்டுபண்ணப்படும் அழிவே மிதமிஞ்சி இருக்கிறது.

ஆதிகாலத்தில் இயற்கைக்குப்பயந்த மனிதன் அதனை வழிபடத்தொடங்கினான். அதுவே பின்னர் அவனை எப்போதும் ஏதோ ஒன்றுக்கு  பயப்படவும்; அதன்நிமித்தம் உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளை கற்றும் கொடுத்தது. இங்கே நெறிகளின் வழிகாட்டலின்  படி வாழ்ந்து மாமனிதர்கள் ஆனவர் எத்தனைபேர்! பல சமயங்களில் கண்டதே காட்சி. கொண்டதே கோலம் என்று ஆகிப்போகிறது வாழ்வு. இதில் சகமனிதர்களை நீ உன்னைப்போலவே நேசிக்க கற்றுக்கொள் என்று யாராவது சொன்னால் தான் சிந்திப்போம்; "நான் என்னை எவ்வளவு நேசிக்கிறேன்" என்று.

தன்னைத்தானே நேசிக்கத்தெரியாதவன் தான் சகமனிதனை துன்புறுத்துவான், கொடுமைகள் செய்யத் தயங்க மாட்டான். வாழ்க்கையே பள்ளிக்கூடம். அனுபவங்களே ஆசான் என்பார்கள். பெரும்பாலும் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை சந்தித்தவர்கள் அதையே தங்களைச் சார்ந்தவர்களுக்கும் உண்டாக்குவார்கள் என்று சொல்வார்கள். தங்களைத் தாங்களே அல்லது தங்கள் பிரச்சனைகளை அடையாளம் காணத் தெரியாதவர்கள் சமூகத்தில் எப்போதுமே பிரச்சனைக்குரியவர்கள் தான்.

இவர்களின் இயற்கையை மீறிய அதற்குப் புறம்பான மனித இயல்புகள் வெளிப்படும்போது தான் நோய்க் கூறுகள் கொண்ட மனோ நிலைக்கு ஓர் சமூகம் தள்ளப்படுகிறது. இன்று இலங்கையில் இதுதான் நடக்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது. ஓர் நோய்க்கூறு கொண்ட சமூகம் நலிந்தோரை மேலும், மேலும் முடமாக்க முனைவதேன்? அதற்கு அரசுகளும் சட்டங்களும் கூட உடந்தையாவதேன்.

இலங்கையில் ஏற்கனவே சிங்களத்துக்கும் சிங்களர்க்கும் தான் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார கூறுகளில் எல்லாத்திலுமே முதலிடம். அது போருக்குப்பின்னான தமிழர் வாழ்வில் இன்னும் காயம்பட்டுப்போயிருக்கிறது (Vulnerable). அது புறநிலைக்காரணிகள், அகநிலைக்காரணிகள் என்று இரண்டுபடுகிறது. இங்கே புறநிலைக்காரணிகள் எப்போதும் சூழ்ந்திருக்கும் ராணுவமும் ஆயுதக்குழுக்களும் கூடவே திட்டமிடப்பட்டு தமிழர் நிலங்களில் குடியேற்றப்படும் சிங்களர்களும். இதையெல்லாம் எதிர்க்கவோ அல்லது அது பற்றிப் பேசவோ கூட அச்சப்படும் சூழலில் ஓர் பாதுகாப்பற்ற தன்மையும், எதிர்காலம் பற்றிய நிச்சயம் இல்லாத்தன்மையுமே தமிழர் வாழ்வில் மிச்சம் சொச்சமாய் இருப்பது. பிறகு அவர்கள் வாழ்வில் எது தான் மிஞ்சியிருக்கும். பிறகு வாழ்வின் அர்த்தம் தான் என்ன!!

இன்று எனக்கிருக்கும் வாழ்க்கை பற்றிய அற்ப கேள்விகள் தான் ஓர் யாழ்ப்பாணத்  தமிழனுக்கும் இருக்குமா? சிங்கள அடக்குமுறைக்கு அடிபணிந்தே அவர்கள் வாழ்க்கை பற்றிய அர்த்தமும் மனப்போக்கும் மாறிப்போயிருக்கிறது. இதுதான் அவர்களின் வாழ்க்கை பற்றிய இசைவாக்கம். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் இந்த புற மற்றும் அகநிலைக்காரணிகள் பற்றிய அழுத்தம் அதிகரிக்கும் போது எப்படிப்பட்ட மனோநிலைக்குள் தள்ளப்படுவார்கள். பாரிய மன உளைச்சலுக்கு (Distress) ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

கணக்கில்லா இடப்பெயர்வுகள், சொத்துகளின் இழப்பு, பொருளாதார தடை, ராணுவ அட்டூழியங்கள், உயிர்ப்பலிகள்  இவைதான் ஆண்டாண்டு காலமாய் இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார அழிவுகள். அது போருக்குப்பின்னும் வேறுவடிவங்களில் தொடர்கிறது. பெரியவர்கள், சிறியவர்கள் என்கிற வயது பேதமின்றி தமிழர்கள் எல்லோரையுமே இது பாதிக்கிறது. ஆனால், குழந்தைகள் மனோநிலை எப்படி இதை சமபடுத்த முயற்சிசெய்யும்.  அனுபவமே வாழ்க்கை என்றால் அந்த அனுபவம் குழந்தைகளுக்கு கிடையாதா! அவரவர்க்கு என்ன திறமைகள் இருக்கிறதோ அந்த வழிவகைகளில் அந்த அனுபவப்பகிர்வுகள் சரித்திரத்திலும் இடம்பிடிக்கும். அது எழுத்து, ஓவியம், இசை, நடனம், கவிதை என்று எல்லாவழிகளிலுமே.

அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் நாட்குறிப்புகள் உலக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவை ஜெர்மனியில் பிறந்த யூத இனத்தைச்சேர்ந்த Anne Frank (June 12, 1929- early March 1945) மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த Nina Lugovskaya (I want to live)  ஆகிய  இரண்டு பதின்மவயதுப்  பெண்களின் நாட்குறிப்புகள். இதில் Anne Frank இன் நாட்குறிப்பு சில உலகத்தலைவர்களால் மேற்கோள் காட்டப்படுகிறது.

"John F. Kennedy discussed Anne Frank in a 1961 speech, and said, "Of all multitudes who throughout history have spoken for human dignity in times of great suffering and loss, no voice is more compelling than that of Anne Frank.


Nelson Mandela addressed a crowd in Johannesberg, saying he had read Anne Frank's diary while in prison and "derived much encouragement from it". He linked her struggle against Nazism to his struggle against apartheid, drawing a parallel between the two philosophies.


சோவியத் ஒன்றியத்தின் நீனாவுக்கு கிடைத்த தண்டனை...Their sentence was harsh; Five years of hard labour in the Siberian gulag, followed by seven years of internal exile. 


Courtesy: Tamil Canadian 

எங்கள் குழந்தைகள் ஈழத்தில் நாட்குறிப்பு எழுதித்தான் தங்களுக்கு நடக்கும் அநியாயங்களை சொல்லவேண்டும் என்பதில்லை. அப்படியே எழுதினாலும் அவர்களின் நிலை என்னாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. சோவியத் ஒன்றியத்தில் நீனாவுக்கு நடந்தது தான் ஈழத்தின் குழந்தைகளுக்கும் நடக்கும் என்று சொனால் அது மிகையில்லை. எத்தனையோ சர்வதேச அமைப்புகள்,  UNICEF போன்றவற்றுக்கு இதுதான் ஈழத்தில் நடக்கிறது என்று தெரியும். ஆனாலும் அதை தடுக்க ஏதும் வழிவகைகள் செய்வதாய் தெரியவில்லை. தலைவர்களும், அரசியல்வாதிகளும் எப்போதும்  போல் மேலேயுள்ளது போன்ற மேற்கோள் காட்டி (அது மக்களுக்கு புரிகிறதோ இல்லையோ!) மேடையில் முழங்கிவிட்டு போய்விடுவார்கள். பாதிக்கப்படுபவர்கள் வாழ்வு மட்டும் என்றைக்குமே அவலத்தில் தான்.

இது வன்னியில் இருந்து  இடம்பெயர்ந்த ஓர் ஈழத்தமிழ் குழந்தையின் கவிதை. இது உலகத்தின் எந்த தலைவரையாவது எட்டுமா!!! இந்த கவிதை சொல்லும் ஈழத்தில் மானிட வாழ்வின் மாண்புகளை, இழப்புகளை, அதன் வலிகளை, அனுபவங்களை உலகம் எப்போது புரிந்துகொள்ளும்!!!

Tham Thimithimithom Thaiyathom

Tham Thimithimithom
Living we were- on Vanni soil
Living we were
Educating ourselves we were - Joyfully
Educating ourselves we were
Running around we were - with friends
Running around we were
Came the airplanes- on us
Throwing bombs
Died relations- our
Relations fell
Race destroyed- Tamil
Race disappeared
Life destroyed- our
Life scattered
Suffering saw- we
Sadness imposed
Caged by war- we were
Trapped in suffering
Enough the sorrow- we
Escape to survive -
Song/Poem by Vanni IDP school student
நன்றி: War without Witness நன்றி: Google


12 கருத்துகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

சக மனிதன் மேல் இன்னோரு இனத்தின் மேல் எழும் போட்டியும் அரசியலும் ..எந்த கொடூரத்தையும் செய்ய தயங்குவதில்லை..

கவிதை யும் வரைபடமும் சொல்வதை புரிந்துகொள்ளும் தலைவர்கள் வெளிப்படட்டும்.

தவறு சொன்னது…

அவலவாழ்வின் அனுபவங்களில் துயர் சூழ முழ்கிக்போனேன் ரதி..

Thekkikattan|தெகா சொன்னது…

இந்த படைப்பின் ‘டோன்’னேயே சற்று உற்றுக் கவனித்தால் இதற்குப் பின்னான அனுப பொதிகள் உங்களை எப்படியாக கூர் தீட்டி இந்த வாழ்க்கை பற்றியான ஆழ அறிவை உள்ளே பரப்பி வைத்திருக்கிறது என்று உள்வாங்கிக் கொள்ள முடியும்.

எல்லா ஞானிகளும் சொல்லுறாங்க, இவ்வுலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் ‘மகிழ்ச்சியாக’ வாழ வேண்டுமெனவே தலைப்பட்டு அதனை நோக்கிய முயற்சியில் ஈடுபடுகிறது என. ஆனால், அது பூகோள, அரசியல், சமூக எல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக மனித இனத்திற்கு அமைந்து பட்டிருக்கிறது. எந்த ஜீவன் எந்த எல்லைக்குள் விழுந்ததோ அது வதைபட்டோ அல்லது சுபிட்சித்தோ இருக்கும் வலிமையை பொருத்து அமைகிறதெனவே படுகிறது. இது இயற்கைக்கு புறம்பானதுமாகும்; இயல்பிலிருந்து வழுவி.

...to be contd..

Thekkikattan|தெகா சொன்னது…

//நம்பிக்கைக்கும் ஏமாற்றத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில் தான் ஒவ்வொருவரும் எங்களை நாங்களே தரிசித்தும் கொள்கிறோம், சுயதரிசனம்.//

இப்படியாக பட்டறிவு அமைந்து விடுகிறது...

//இன்று எனக்கிருக்கும் வாழ்க்கை பற்றிய அற்ப கேள்விகள் தான் ஓர் யாழ்ப்பாணத் தமிழனுக்கும் இருக்குமா?//

இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையென்றே நினைக்கிறேன். மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலுக்கு தகுந்த மாதிரியான சிந்தனை வியாபித்தே நிற்கும். அதனை நீங்களே விளக்கி இருக்கீங்க.

//அவரவர்க்கு என்ன திறமைகள் இருக்கிறதோ அந்த வழிவகைகளில் அந்த அனுபவப்பகிர்வுகள் சரித்திரத்திலும் இடம்பிடிக்கும். //

கண்டிப்பாக... கடுகிற்கும் - மலைக்குமான வித்தியாசங்களை கொண்டது. காலம் தோரும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒன்றும் வேண்டாம், இது போன்ற ஒரு சிந்தனையை மெயின்லாண்டில் வசிக்கும் எங்களால் கொடுக்க முடியுமா? இன்று மெயின்லாண்டிலிருந்து வெளிப்படும் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் எதனை பொருத்தாக அமைந்திருக்கிறது, என்பதனை நீங்களே ஒப்பீட்டு பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.

ம்ம்ம்ம்... கட்டுரையை உள்வாங்கி படித்தேன்!

ஜோதிஜி சொன்னது…

இதை அப்படியே தம் கட்டி இழுத்துப்போய் பகுதி 1 2 3 என்று கொண்டு போக முடியும். தெளிவா யோசிக்க வச்சுருக்கீங்க(?)

Rathi சொன்னது…

முத்துலெட்சுமி,

எதிர்காலத்தில் எப்படிப்பட்ட தலைவர்கள் உருவாக்கப்படப் போகிறார்கள் என்பதை இப்போதுள்ள தலைவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

வாங்க "தவறு",

அந்த துயர் சூழும் உணர்வுகளை ஒரு படத்தில் கொண்டுவர உங்கள் தளத்தில் படம் தேடினேன். எனக்கு பிடித்தமாதிரி இந்த முறை எதுவும் கிட்டவில்லை. அப்பப்போ ஏன் நீங்கள் ஓர் "Theme" வைத்து அதன் கீழ் படங்களை தொகுக்க கூடாது!! உதாரணமாக, "போரின் விளைவுகள்" (இது எனக்கு தெரிந்த உதாரணம் மட்டுமே), தவிர காதல், சோகம், சந்தோசம்.... இப்படி. ரொம்ப அறிவுரை சொல்றேனோ??

Rathi சொன்னது…

தெகா,

நான் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். உங்கள் விமர்சனத்தை என் பதிவுகளில் பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் உதறல் எடுக்கும். என் எழுத்துக்கு "தெகா" வாசகாரா என்று மனம் பெருமை கொள்ளும்.

என்னை தற்சமயம் மறைமுகமாய் பட்டை தீட்டிக்கொண்டிருப்பவர்கள் இரண்டு பேர், ஜோதிஜி, விந்தைமனிதன். இப்போதுதான் புரிகிறது உங்களைப்போன்றவர்களின் விமர்சனமும் என்னை ஊக்கப்படுத்துகிறது என்று.

அப்புறமா, இதப்பதிவை எழுதும் போது எனக்கு ஜோதிஜி பக்கத்தில் இருந்து "சரியா எழுதணும்" என்று அப்பப்போ தலையில் குட்டியது (கொட்டுவது) போன்ற உணர்வோடு தலையை தடவிக்கொண்டே எழுதினேன்.

ஜோதிஜி, சரியா நான் சொல்றது. :))

ஹேமா சொன்னது…

இப்பிடியே யோசிச்சு யோசிச்சு மண்டை கழண்டுபோறதுதான் மிச்சம் எங்களுக்கு.நடக்கிறது என்ன?இயற்கைகூட எங்களுக்கு எதிராகத்தானே கனகாலமா தமிழரை அடிச்சுப்போடுது.நாலு சுவருக்குள்ள கத்தி அழுவதைத் தவிர வேறென்ன செய்யலாம் இங்க.போர்,சுனாமி,இப்ப மழைவெள்ளம்....கையேந்தினபடியே
எங்கட மக்கள்.

இதுக்குள்ள சிங்களவன் புகுந்து விளையாடுறான்.யாழ்ப்பாணம் கொலை கொள்ளையெண்டும் கலாச்சாரச் சீரளிவு என்றும் மாறிக்கொண்டிருக்கு.முடியேல்ல ரதி !

தவறு சொன்னது…

உங்களுக்கு அமைஞ்ச குரு மாதிரி இருந்தா எனக்கு நல்லாதான் இருக்கும். இல்லையே என்ன செய்ய..அதுக்கு ஒரு நல்ல சீடனா இருந்தா குரு தானா வந்துருவாரு. அதனால நல்ல சீடனா இருக்க முயற்சிக்கிறேன்.

அறிவுரையா நீங்க சொல்றீங்க ரதி ?

விந்தைமனிதன் சொன்னது…

தத்துவம் என்பதன் பொருளாக நீங்கள் எதனை விளங்கிக் கொள்கிறீர்கள்? தத்துவம் என்பது மனிதனின் அன்றாடப் பிரச்சினைகளை பல்வேறு பரிணாமங்களில் அலசி, அதை சமூகத்தின் இயக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தீர்வுகாண முயன்று பின் கொஞ்சம் கொஞ்சமாக தனிமனிதனில் இருந்து உலகம், பிரபஞ்சம் என் விரிந்து அனைத்தின் காரணகாரியத் தொடர்புகளையும் அலசி அறிந்து கொள்ள முயல்கின்றது என்றே நான் கருதுகிறேன். தத்துவங்கள் சமூகத்தின், பிரபஞ்சத்தின் இயக்கத்தை, ஒத்திசைவை பல்வேறு பார்வைகளில் விளக்க முயன்று பல்வேறு பிரிவுகளாகப் பல்கிப் பெருகுகின்றன.

ஒரு மனிதனின் சிந்தனை அகவயப்பட்டதாக இன்றி புறவயப்பட்டதாகவே இருக்க முடியும். 1)Data collection- தன்னுடைய, பிறருடைய அனுபவங்களில் இருந்து இதுகாறும் பெறப்பட்ட அறிவு அல்லது தகவல்கள் 2) Comparison- சேகரித்தவற்றை ஏனைய தகவல்களுடன் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்ப்பது 3) Analyse - தனது தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு ஏற்கனவே பெறப்பட்டுள்ள, சீர்தூக்கிப் பார்க்கப்பட்ட தகவல்களை அலசி அவற்றின் நன்மை, தீமை, சரிதவறு ஆகியற்றை ஆராய்தல் 4) Decision making - ஆராய்ந்தவற்றின் அடிப்படையில் செய்யவேண்டியதை முடிவெடுத்தல்...

இந்த அடிப்படையிலேயே மனிதனது சிந்தனாமுறை இயங்குகின்றது என்பது என் கருத்து. எனவே வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பே!

Rathi சொன்னது…

ஹேமா,

முடியவில்லை தான். அதனால் தான் இப்படி எதையாவது கிறுக்க நேரிடுகிறது.

தவறு,

என்ன இப்பிடி feel பண்றீங்க. மூன்று தளங்களிலும் ஜமாய்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள். அறியது தளத்தில் படங்களை கொஞ்சம் இன்னும் சிறப்பாய் தொகுக்கலாம் என்று சொன்னேன்.

விந்தைமனிதன் (ராஜாராமன்)

வாழ்க்கை என்பது பேசாமலே புரிந்துகொள்ளப்பட்ட ரகசியம். யாரும் கற்றுக்கொடுக்காமலே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். வயது, வாழும் சூழல், புறநிலைக்காரணிகள் இவைகளுக்கேற்றவாறு அனுபவங்கள் வேறுபடும். நம்பிக்கை, ஏமாற்றம், தெகா சொன்னது போல் பட்டறிவு இவைதான் வாழ்க்கையை சமப்படுத்துகிறது.

இதெல்லாம் யார்யாருக்கு எப்படி வசப்படுகிறதோ அதற்கேற்றாற்போல் வாழ்க்கையை வசப்படுத்தி தங்களை தாங்களே சமப்படுத்திக்கொண்டால் நல்லது.

ஜோதிஜி சொன்னது…

ரதி

பிழைகளில் இருந்து வாழ்க்கையை கற்றுக் கொள்கின்றோம். நண்பர் தவறு கூட இப்படித்தான் சொல்கின்றார். இதில் நான் எங்கே வருகின்றேன். நானும் கற்றுக் கொண்டு இருப்பதால்.

உங்களுக்கும், குழந்தைக்கும், உங்கள் நலம் விரும்பிகளுக்கும் எங்கள் குடும்பத்தின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

14.1.2011