ஜனவரி 05, 2011

அவரவர் இயல்புகளோடும், கடமைகளோடும்....!!


திரைப்படத்துறை என்பது மிகவும் பலம் வாய்ந்த ஓர் ஊடகம். அதை சிறந்த முறையில் பயன்படுத்தி உலகில் மனித வரலாற்றை, கருத்துகளை இன்றுவரை சர்வதேசத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கடந்தகால வரலாறுகள் இந்த சினிமாக்கள் மூலம் கூட சில சமயங்களில் ஆவணப்படுத்தப்படுகிறது. இன்றுவரை யூத இனத்தவர்கள் Hollywood இல் தங்கள் இனவழிப்பு பற்றிய வரலாற்றை திரைப்படங்கள் மூலம் சொல்லிகொண்டிருக்கிறார்கள். அப்படி நான் சமீப காலங்களில் பார்த்தது "Inglorious Bastards" (Comedy & Violent ) மற்றும் "The Boy in the Striped Pajamas".

இது தவிர என்னை எப்போதுமே கவர்ந்த "Amistad" என்கிற திரைப்படம். ஆபிரிக்கர்கள் அமெரிக்காவில் அடிமைகளாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு எப்படி கொலைசெய்யப்படுகிறார்கள் என்பதை விளக்கும் முழுநீள ஆவணப்படம். கறுப்பினத்தவர்களின் வரலாற்றை இந்த திரைப்படம் மூலம் ஆவணப்படுத்தியவர் யூத இனத்தைச் சேர்ந்த Steven Spielberg. இந்த திரைப்படத்தை நான் பார்த்தபோது மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்; இப்படி ஓர் நிலை ஈழத்தமிழனுக்கு வரக்கூடாது என்று. ஆனால், இன்றோ அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல், இன்னும் சொல்லப்போனால் அதைவிட மோசமான நிலை ஈழத்தமிழனுக்கு.எனக்குத்தெரிந்து தமிழக தமிழ்த்திரையுலகம் அப்படி ஏதும் தமிழர் வரலாற்றை சிறப்பாக ஆவணப்படுத்தியதாய் தெரியவில்லை. ஆனால், புலத்தில் சில ஈழத்தமிழர்கள் ஈழத்தின் அவலத்தை குறுந்திரைப்படங்களாக அதை சொல்லும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழனின் இனவழிப்பை ஏன் தமிழக சினிமாவால் ஆவணப்படுத்த முடியவில்லை என்று வருத்தம் இருந்தாலும், அதற்குரிய அரசியல் காரணிகள் யாருக்கும் தெரியாததோ, புரியாததோ அல்ல. இருப்பினும், சில திரைப்படங்களிலும் சரி, நேரடியாகவும் சரி ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ஆளுமையை பயன்படுத்தி சில கருத்துருவாக்கங்கள் செய்வதும், இலங்கை அரசிற்கு  Ambassador (எனக்குத்தெரிந்த தமிழில் "இலங்கை அரசின் பிரச்சார பீரங்கி") வேலை செய்வதும் உடன்பாடல்ல.

Indian film actress Asin

எங்கள் மத்தியில் எல்லோரையும் ஒரே பட்டியலில் சேர்த்துவிடமுடியாது. ஈழத்தில் கோவில் திருவிழா என்று இங்கிருந்து புடவை, நகைகள் வரை (அங்கே ஈழத்தில் இவ்வளவு தரமானதாய் கிடைக்காதாம்) அள்ளிக்கட்டிகொண்டு போகிறவர்கள், யாராவது ஓர் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரத்தை அழைத்து விழா நடத்தி பிறவிக்கடலை தொபுக்கடீர் என்று குதித்து நீந்தி கடப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், மாத்துக்கருத்து மாணிக்கங்கள்  என்று எத்தனையோ வகையறாக்கள் இருக்கிறார்கள். அதே போல ஒருசில சினிமாப் பைத்தியங்களும் இருக்கிறார்கள். அவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்கள் எல்லோருமே அப்படித்தான் என்ற முடிவுக்கும் வரமுடியாது. இவர்களுக்கும் சேர்த்து தான் ஓர் தலைவன் தன் இரு தலைமுறையை, ஆயிரக்கணக்கான போராளிகளும் தங்கள் உயிர்களை அழித்துகொண்டார்கள் என்று யாராவது விளக்க முற்பட்டால் அவ்வளவுதான். பிறகு, என் போன்றவர்களுக்கு கிடைக்கும் பெயரே வேறு.


பொதுவாக தமிழர்களில் திருந்தாதவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் வரையில் தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்யவேண்டிய கடமைகளை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அண்மையில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற "இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்" மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளாய் கலந்துகொண்ட நாமல் ராஜபக்க்ஷே, எஸ். பி. திசாநாயக்க போன்றோர் அங்கே உரையாற்ற கூட விடாமல் இவர்கள் முகத்திரையை கிழித்திருக்கிறார்கள். இது தமிழ்நெட்டில் நான் படித்த கொஞ்சம் பழைய செய்திதான். இலங்கை அரசியலில் இது ஓர் வழமை. இலங்கை ஜனாதிபதியாகட்டும், அவர் ஐ. நா. வில் பேசப்போனாலும், Oxford Union இல் உரையாற்றப்போனாலும் கூட்டமாய்த்தான் போவார்கள். எனக்கு நடிகர் ரஜனிகாந்த் ஏதோ ஓர் திரைப்படத்தில் சொன்ன வரிகள் இப்போ அநியாயத்துக்கு ஞாபகம் வருகிறது. வழக்கம் போல் இலங்கையிலிருந்து பரிவாரங்களாய் தென்னாபிரிக்காவுக்கு கிளம்பிப்போய், அங்கே தமிழ்நாட்டை சேர்ந்தவர்களிடம் கொஞ்சம் மூக்குடைப்பட்டுத்தான் போனார்கள். இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்லமாட்டேன். இது தமிழக தமிழர்களின் கடமை.

பிந்திய இணைப்பு: TamilNet : மாநாடு பற்றிய ஒலிவடிவம் 

சரி, அப்படியே இன்னுமோர் விடயத்தையும் சொல்லிவிட்டுப்போகிறேன். இப்போ, நடிகை அசின் நடித்து வெளிவரப்போகும் "காவலன்" திரைப்படத்தை புறக்கணிக்கச்சொல்லி புலத்து தமிழர்களுக்கு ஒரு சாராரால் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இது செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதே என் கருத்து. புலத்தில் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பையே கொட்டிகொடுத்து சினிமா நட்சத்திரங்களுக்கு விழா எடுத்து நஷ்டப்பட்டாலே புத்திவராது எங்களுக்கு. அசினை புறக்கணி என்றால் மட்டும் புறக்கணிப்போமா!


இப்போ என்னுடைய தனிப்பட்ட கருத்து, இனமான உணர்வுள்ளவர்கள் "காவலன்" திரைப்படத்தை புறக்கணிப்பார்கள். ஈழத்தமிழர்கள் சர்வதேச அரசியல் புரிந்தவர்கள். வலிகளிலிருந்தும் எண்ணில்லா இழப்புகளிலிருந்தும் தங்களை தங்கள் வாழ்க்கையை புதுப்பித்துக்கொண்டவர்கள். வியாபார நோக்கினை மட்டுமே கொண்ட தமிழ் சினிமாக்களில் வரும் எந்தவொரு உலக நாயகனும் எங்களுக்கு எங்கள் மண், மக்கள், போராட்டம் பற்றி பாடமெடுக்கிற அளவுக்கு நாங்கள் நடப்போமேயானால் அது எங்களுக்கே இழுக்கு. உலகில் எந்தவொரு புலம்பெயர்ந்த சமூகத்திற்கும் குறைவில்லாத  பலம் எங்களிடம் இருக்கிறது. அந்தப் பலத்தின் மூலம் சர்வதேசத்தில் எவ்வளவோ சாதித்திருக்கிறோம், இன்னும் சாதிப்போம்.
7 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ரதி கிட்டத்தட்ட என் மனநிலையிலேயே இருக்கிறீர்கள்.என்ன செய்யலாம்.பணமும் பகட்டுவாழ்க்கையும் நிரந்தரமென்று நினைக்கிறார்கள் எம் மக்கள்.அதுவே நிரந்தரமா எம் எதிர்காலச் சந்ததியின் எதிர்காகாலம் என்ன என்பதைப்பற்றியே நினைவில் இல்லை.பணத்தை வறுகி வறுகி சேமிக்கிறார்கள்.
உதவுவதுமில்லை.இன்றும் பெண்கள் உடைகள் நகைகள் என்றும்,ஆண்கள் வாகனம்போன்ற வீண் செலவுகள்....சொல்லிக்கொண்டே போகலாம்.திருந்த இடமில்லை.கஸ்டம் !

எங்கள் கையில் பேனா.எழுதியே இரத்தக் கொதிப்பை அடக்கிக்கொள்வோம்.
இல்லையென்றல் எங்கள் நிலைதான் கவலைக்கிடம் !

தவறு சொன்னது…

"உலகில் எந்தவொரு புலம்பெயர்ந்த சமூகத்திற்கும் குறைவில்லாத பலம் எங்களிடம் இருக்கிறது. அந்தப் பலத்தின் மூலம் சர்வதேசத்தில் எவ்வளவோ சாதித்திருக்கிறோம், இன்னும் சாதிப்போம்."

இந்த நம்பிக்கை தாங்க எல்லாருக்கும் தேவை ரதி.

அர. பார்த்தசாரதி சொன்னது…

இந்த மூன்று திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன் , இன்னுமொரு படம் உள்ளது ,
Schindler's List ,
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்த போது என்னையும் என் வயதையும் மறந்து அழுதேன்

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

"புலத்தில் சில ஈழத்தமிழர்கள் ஈழத்தின் அவலத்தை குறுந்திரைப்படங்களாக அதை சொல்லும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்"

அந்த குறும்படங்களை பற்றிய விபரங்களை மற்றும அதை பெரும் முகவரியை தெரியப்படுத்தவும் .
முடிந்தால்., அதனை எதிர்வரும் சரியான சூழலில் பின்னிணைப்பு செய்யவும்.
"இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்லமாட்டேன். இது தமிழக தமிழர்களின் கடமை".

உண்மை ...

Rathi சொன்னது…

ஹேமா,

நீங்கள் சொல்வது போல் எதையாவது எழுதி எங்களை நாங்களே தேற்றிக்கொள்ளவேண்டியது தான். ஆனாலும், இன்று புலம் பெயர் சமூகத்திலுள்ளவர்களுக்கு ஈழம் தொடர்பாக எதிர்காலத்தில் எங்களுக்கு என்ன தேவைகள் என்பதை பகுத்தறியும் ஓர் அடிப்படை தெளிவு வேண்டும் என்று நினைக்கிறேன்.

தவறு,

நம்பிக்கையை தொலைக்ககூடாது இப்படித்தான் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம்.

அர. பார்த்தசாரதி,

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்ன திரைப்படம் கண்டிப்பாக பார்க்கவேண்டும். நான் "Amistad" பார்த்து தான் அழுதேன்.

இராமநாதன் சாமித்துரை,

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

பெருமளவில் பேசப்பட்ட குறுந்திரைப்படம், வன்னி எலி - " Vanni Mouse" தான். "Can I have a dream!" என்று ஓர் குறும்படம் பார்த்திருக்கிறேன். வன்னி எலி தயாரித்த அதே சுபாஸ் தான் இதையும் எடுத்திருந்தார்.

அடுத்து கனடாவில் தயாரிக்கப்பட்ட "1999" என்கிற Gang Violence பற்றிய திரைப்படம் இங்கே நடந்த "Vancouver International Film Festival" இல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டவைகளில் ஒன்று.

எதிர்காலத்தில் நிச்சயம் அவற்றுக்குரிய இணைப்புகளை உங்களுக்கு அறியத்தருகிறேன். முடிந்தால் பதிவாகவும் எழுதுகிறேன்.

நன்றி.

ஜோதிஜி சொன்னது…

மகிழ்ச்சி. வடிவமைப்பு கொஞ்சம் கைகூடியுள்ளது.

Thekkikattan|தெகா சொன்னது…

வியாபார நோக்கினை மட்டுமே கொண்ட தமிழ் சினிமாக்களில் வரும் எந்தவொரு உலக நாயகனும் எங்களுக்கு எங்கள் மண், மக்கள், போராட்டம் பற்றி பாடமெடுக்கிற அளவுக்கு நாங்கள் நடப்போமேயானால் அது எங்களுக்கே இழுக்கு. //

ம்ம்ம்... மிக்க உண்மை ரதி! புரிந்து கொள்வோம் என்று நம்புவோம்.

என்னுடைய மன் மதன் அம்பு திரைபடத்தை பற்றிய சில அரசியல் முன் நிறுத்தல்கள் தொடர்பான பதிவினை படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கொஞ்சம் வித்தியாசமா திரும்ப உலக நாயகனுகிட்டேயே கொடுக்க முயற்சி பண்ணியிருப்பேன் இந்த ஈழ சம்பந்தமான காட்சியை வைச்சு...

நீங்க நேரடியாவே போட்டுத் தாக்கிட்டீங்க. நீங்க சொல்லாம வேற யாரு சொல்ல முடியும்?