ஜனவரி 04, 2011

குழந்தைகளும் இருண்டுபோன கர்ப்பக்கிரகங்களும்...!!


என்னைச்சுற்றி நடக்கும், என்னை பாதிக்கும் விடயங்களை பற்றி யோசிக்கும் போது, அது சிந்தனையில் தொடர்ந்து, நீண்டு கொண்டே சென்று கடைசியில் இதுக்கு என்னதான் முடிவு என்று சலிப்பு தோன்றும். சில விடயங்களை கேட்பேன், பார்ப்பேன், பிறகு அது மனதிலிருந்து மறந்தோ அல்லது நினைவிலிருந்து மறைந்தோ போய்விடும். சில விடயங்களை ஒரேயொருதடவை கேட்டாலே போதும் மனதில் அப்படியே படம் போல் பதிந்துவிடும். அதுவும் இல்லையா, ஒரு விடயத்தைப் பார்க்கும் போது அது நினைவுகளை வேறெங்கோ இட்டுச்செல்லும். சரி விஷயத்துக்கு வருகிறேன். 
நேற்று வழக்கம் போல் கவனம் புத்தகத்தில் பாதி, தொலைக்காட்சியில் மீதி என்று குத்தவைச்சு உட்கார்ந்திருந்தேன். தமிழ்தொலைக்காட்சியில் தமிழ்நாட்டிலிருந்து வந்த நான்கு சிறுவர்கள், இசைப்போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்தவர்களாம், பேட்டி காணப்பட்டு, திருவாளர் "Viewers" க்கும் தொலைபேசி மூலம் பேசும், கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தமிழன் தமிழ்நாட்டில் இருந்தாலும் சரி, புலத்திலும் சரி, இப்படி யாராவது கொஞ்சம் பிரபலமானவர்களுடன் பேச இணைப்பு கிடைத்தால் இவர்கள் பேசுவது எனக்கு "உலக மகா நகைச்சுவையாக" இருக்கும். பிறகென்ன பிறவிப் பெருங்கடலை ஒரு தொலைபேசி அழைப்பில் நீந்தி கடந்து முடிப்பர் எம்மவர். இடையே அழைப்புகளை கையாள்பவர் சுனாமியாய் இவர்கள் இணைப்பை துண்டித்தால் முயற்சியை கைவிடாமல் மீண்டும் வந்து பிறவிக்கடலை நீந்தாமல் விடவேமாட்டார்கள். 

அந்த குழந்தைகள், ஒருவர் நிறையவே வளர்ந்த குழந்தையாய் தெரிந்தார் (MA, MBA படிப்பதாய் சொன்னார்) இங்கே தங்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்துக்கு நன்றி கூறி, "நீங்க கண்டிப்பா எங்க Program க்கு வரணும்" என்று அன்புக்கட்டளை போட்டார்கள். இதுபோன்ற வசதியான வீட்டுக்குழந்தைகளை ஊக்குவிப்பதோடு நில்லாமல், திறமையிருந்தும் சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்கும் குழந்தைகளையும் ஊக்குவித்தால் இன்னும் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். 


ஆச்சு, அதிலிருந்து விலகி செய்திகளை கவனித்தால் ஈழத்தில் கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் ஓர் பஸ்ஸில் முப்பது சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களால் கடத்தி செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதிலிருந்து மடிக் கணனியிலிருந்த படத்தோடு அந்த சிறுவர்களின் முகங்கள் ஒப்பிடப்பட்டு இருபத்தெட்டுப் பேர் மீண்டும் திருப்பி அனுப்பபட்டிருக்கிறார்கள். அப்போ மீதி இருவர் கதி? குழந்தைகளோடு கூடவா இந்த தீராப்பகை?

அதே செய்தியில் இலங்கையில் மேலும் SOS கிராமங்கள் குழந்தைகளுக்காக அமைக்கப்படப்போவதாக சொன்னார்கள். இந்த SOS கிராமங்கள் பற்றி தெரியாதவர்களுக்கு, தாய் தந்தையிடமிருந்து பிரிந்தவர்கள், போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், AIDS இனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் ஓர் லாப நோக்கற்ற அமைப்பு என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அமைக்கும் இந்த கிராமங்களை விட சிறப்பாய் தானே இருந்தது "செந்தளிர் சிறார் இல்லம்". குழந்தைகளை பராமரிப்பதில் இருக்கும் அக்கறையை போரை தடுப்பதிலும், பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும் காட்டினால் இதுபோன்ற கிராமங்களின் தேவைகளே இருக்காதே!! அதுக்காக இந்த அமைப்புகள் பரிந்துரை (Advocate) செய்யலாமே  என்றும் யோசிக்க வைக்கிறது. ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகள் அனாதைகள் ஆக உள்நாட்டு அரசுகள், அவர் தம் கொள்கைகள் மட்டும் தான் காரணமா? 

இலங்கை, இந்தியா இன்னும் சில வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் (?), இங்கேயுள்ள பாதிக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தை தொழிலார்களாகவோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுபவர்களாகவோ தான் இருக்கிறார்கள் என்பது UNICEF இன் கூற்று. அண்மையில் செய்திகளில் கேட்டது, இலங்கையில் ஒன்பதாயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக!!  UNICEF இன் ஒவ்வொரு நாட்டு அறிக்கையையும் படித்தால் எனக்கு தலைசுற்றும். இந்தியாவில் எட்டு மில்லியன் குழந்தைகள் கல்விகற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்களாமே!!


என் மண்ணில் குழந்தைகள் உணவு, உடை, உறைவிடம், கல்வி என்கிற மிகவும் அடிப்படையான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் போது, என்னால் ஏனோ இந்த "Reality Show" என்கிற சில அபத்தங்களை அதிகம் ரசிக்கமுடிவதில்லை.  ஏன் இந்தக்குழந்தைகளை ஒன்றுசேர்த்து உலகில் பாதிக்கப்படும் மற்றக்குழந்தைகளுக்காக குரல்கொடுக்க செய்ய முடியாதா!! என்ன அப்படி ஓர் முயற்சிக்கு எந்தவொரு "Sponsorship" உம் கிடைக்காது, அவ்வளவுதான். அழகாய் உடை உடுத்தி, திறமைகளை வளர்த்து அதை வெளியுலகத்துக்கு காட்டி ஓர் குழந்தை புகழ் பெறும்போது எந்தப் பெற்றோருக்குத்தான் சந்தோசம் இல்லாது போகும்! ஆனால், அதேநேரம் உலகின் இன்னோர் மூலையில் தன் குழந்தை எப்போது ஆயுதக்கும்பலால் கடத்தப்படும், எப்போது குண்டு உயிர்குடிக்கும் என்கிற பெற்றோரின் சவக்களை பொருத்திய முகங்களும், கதறலும் கண்முன்னே நிழலாடுகிறது. 

ஒவ்வொரு நாடும் சர்வதேச உடன்படிக்கைகளில் மனித உரிமைகளையும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதாகத் தான் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தம் வேறுவிதமாகவும், எதிர்மறையாகவும் தான் இருக்கிறது.  Slaveryயை ஒழித்தாயிற்று. இந்த நவீன தொழில்நுட்ப உலகில் இன்னும் குழந்தைகளை அடிமைப்படுத்துவதை, அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை  ஒழிக்கமுடியவில்லை என்றால் அதுக்காக வெட்கப்பட மட்டுமே முடிகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று ஒப்பிடுவார்கள். ஆனால், தெய்வத்தை கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்து, குழந்தையை வீதியில் விபச்சாரம் செய்ய வைக்க தயங்காத சிலர் இன்னும் உலவும் பூமி இது. 

மனட்சாட்சியின் கதவுகளை இறுக மூடிவிட்டு, இருண்டுபோன கர்ப்பக்கிரகத்தில் ஒளியேற்றி இறைவனைத்தேடுகிறோம் என்று "கல்கி" அவர்கள் எழுதிய வரிகளே ஞாபகத்திற்கு வருகிறது. நன்றி: படங்கள் அறியது 

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

என் மண்ணில் குழந்தைகள் உணவு, உடை, உறைவிடம், கல்வி என்கிற மிகவும் அடிப்படையான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் போது, என்னால் ஏனோ இந்த "Reality Show" என்கிற சில அபத்தங்களை அதிகம் ரசிக்கமுடிவதில்லை.//


மிக உண்மை தான். நாம் இந்த வேதனையில் இருக்கிறோம். ஆனால் அந்த மண்ணிலேயே, சில கிலோமீட்டர் தொலைவுகளுக்குள்ளாகவே இம்மாதிரியான கேளிக்கைகளை ரசித்து கொண்டிருக்கும் மனங்களை என்னவென்று சொல்வது.

தவறு சொன்னது…

மற்றவர்கள் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர்களே தனக்கு பின்னால் வரும் படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு செய்யமனது வரவில்லை.

தான் தன் முயற்சியில் ஜெயித்ததாக நினைத்து கொள்கிறார்கள். ஒரு காரியத்தின் வெற்றி என்பது ஒரு நிகழ்வை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. ஓராயிரம் நிகழ்வுகளின் ஒத்துழைப்பு தான் ஓர் காரிய வெற்றி ரதி.

எங்கேயோ ஒரு பாதிப்பு நிகழ்ந்தால் மட்டுமே பிறர் துன்பத்தை தன் துன்பமாக பாவிக்க முடியும் ரதி.

Rathi சொன்னது…

தமிழ் உதயம், தவறு, உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.