ஜனவரி 19, 2011

பொருளியல்வாழ்வும் பொழுதுபோக்கும் - Work and Leisure - இறுதிப்பாகம்


சந்தோசங்களுக்கான தேடல் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நகர்த்தவும் அர்த்தப்படுத்தவும் செய்கிறது. துன்பத்தின் முடிவில் ஏதோவொரு சந்தோசம், நிறைவு எப்போதும் காத்திருக்கும் என்று நம்பித்தான் கல்லில் நார் உரிக்கும் முயற்சிகளை கூட சில சமயங்களில் சர்வ சாதாரணமாக செய்துமுடிக்கிறோம். அப்படியிருக்க, எப்போதுமே எங்களுக்கு மகிழ்வைத் தரக்கூடிய பொழுதுபோக்கு என்கிற அம்சம் எப்படி எங்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது என யோசித்தால் கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது. பொழுதுபோக்கு, இதுக்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் வெவ்வேறு காரியங்களை, செயல்களை பொருளாதார, தொழில்நுட்ப, கலாச்சார மாற்றங்களுக்கேற்ப  செய்வதாக சொல்லிக்கொள்வோம். 
தொழில் புரட்சிக்குப் பின்னான இன்றைய காலத்தில் ஒருசில பொழுதுபோக்குகள் உலகமயமாக்கப்பட்டாலும், அது நாட்டுக்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் பல சமயங்களில் வேறுபடவும் செய்கிறது. இந்தப் பொழுதுபோக்கு என்பது எப்படி மனித சமூகத்தில் அறிமுகப்படுப்பட்டது என்பதை தேடிப்படிப்படித்தபோது கண்ணில் பட்டது தான், "Leisure Revolution" என்கிற வார்த்தை. 1800 களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக உருவானதுதான் இந்த பொழுதுபோக்கு புரட்சி. வேலைநேரத்துக்கான வரையறைகள் உருவாக்கப்பட்டதோடு இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உழைக்கும் மனிதர்கள் வாழ்வில் இடம்பெறத்தொடங்கியதாக சொல்லப்படுகிறது.


முதலில் இந்த "Leisure" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். ஓய்ந்த அல்லது ஒழிந்த நேரத்தில் ஓர் பொழுதுபோக்கு அல்லது அலுவல் ஈடுபாடற்ற நேரம் என்றும் கொள்ளலாம். இந்த பொழுதுபோக்கு என்பது ஐம்புலன்களுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை சந்தோசத்தை தரக்கூடியதாய் இருக்கும், இருக்கவேண்டும். இது ஒவ்வொரு வயதுக்கும் வாழ்வின் படிநிலைக்கும் ஏற்றாற்போல் வேறுபடும். இதன் மூலம் மனிதனின் உடல்தேவை, உளத்தேவை இரண்டும் சமப்படுத்தப்பட வேண்டும்.குழந்தைப்பருவத்தின் ஆரம்ப வருடங்களில் (Early Childhood) மிக அதிகமான நேரம் இவ்வாறான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலேயே கழிந்துவிடுகிறது. அதன்பின்னர் பதின்பருவம், திருமணம் குழந்தைகள் என்கிற வாழ்க்கை (Parenthood), இறுதியில் பேரன், பேத்தியை கொஞ்சும் வயசு இதுக்கேற்றாற்போல் பொழுதுபோக்குகளும் வேறுபடும். பதின்பருவம் என்றாலே உடலில் நிறையவே வலுவிருக்கும். ஈழத்தில் போரியல்வாழ்வின் மத்தியிலும் அதற்கேற்றாற்போல் ஓடி, மரங்கள், கட்டடங்கள் என்று ஒன்றுவிடாமல் ஏறி, விழுந்து, எதையாவது உடைத்து அல்லது முறித்து, வீட்டில் திட்டுவாங்கி எத்தனை குழப்படிகள் செய்தோம். இப்போதெல்லாம் கட்டட காடுகளில் வாழவே பழக்கபடுத்தப்பட்டு, முகம் காணாமலே அடுத்தவர்களுடன் தொலைத்தொடர்பு சாதனங்களில் எங்களுக்கு பொழுதுபோகாத நேரங்களில் அவர்களை இம்சைப்படுத்தி வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். எல்லாத்தையும் விட ஓரளவிற்கு வயது வேறுபாடின்றி Facebook தான் இப்போ சீனா, இந்தியாவின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியான மக்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது!! இதுவும் தொழில்நுட்ப பொழுதுபோக்கு புரட்சி!

இந்த நினைவுகளிலிருந்து மீண்டு தற்கால யதார்த்த வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால் எங்கள் வேலையையும் பொழுதுபோக்கையும் சமப்படுத்தி எங்களால் வாழமுடிகிறதா என்கிற கேள்வி மனதில் எழுகிறது. அநேகமான சந்தர்ப்பங்களில் வேலையிலிருந்து வீட்டுக்கும் அது தொடர்பான பணிகளை மட்டுமல்ல மன உளைச்சலையும் சேர்த்தே கட்டிக்கொண்டுவருவோம்.  எங்கள் மன உளைச்சலுக்கு வீட்டில் யாரையாவது பலியாக்க கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவ்வப்போது மூளைக்குள் மணியடிக்கும். இன்றைய வாழ்வின் அசுரவேகம், வேலைத்தளத்தில் உருவாகும் அதிக எதிர்பார்ப்புகள் (High Expectations) என்பவற்றுக்கிடையில் மன உளைச்சல் சாதாரணம் தான். ஆனால் அது என்னை தவிர யாரையும் பாதிக்க கூடாது என்று எல்லோரும் நினைவில் கொள்ளவேண்டும். வேலையையும் வாழ்க்கையையும் சமப்படுத்த பழகிக்கொள் என்கிற  அறிவுரைகள் எரிச்சலைத்தவிர வேறெதையும் கொடுப்பதில்லை. ஆனாலும், என்னை நானே சமாதானப்படுத்தவும் பழகிக்கொண்டிருக்கிறேன். அப்படி எனக்குள் நானே சொல்லிக்கொள்வது, "இது ஒன்றும் உலகின் கடைசி நாளல்ல" என்பது தான். It just is. 

தவிர, வீட்டிலும் வேலை சம்பந்தமான வேலைகளையே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தால் ஒருவருக்கு குடும்பம், கணவன், மனைவி குழந்தைகளோடு செலவிட நேரம் ஏது! பெரும்பாலும் வியாபாரம் மற்றும் கணணித்துறையில் பணிபுரிபவர்களைப் பார்த்தால் வீட்டிலும் ஓர் மடிக்கணணியை வைத்து உலகமே மூழ்கப் போகிறதென்றாலும்  உணராதவர்களாய் தலையை உடைத்துக்கொண்டிருப்பார்கள்!!!! அது ஒருபுறமிருக்க "Job Security" இல்லாத காரணத்தாலோ என்னவோ சிலர் ஒரு வேலைக்குப் பதில் இரண்டு வேலைகள் அல்லது துறைகள் என்று கால்பதித்து Workaholic ஆகியும் போகிறார்கள். இதில் விடுமுறைக்காலம் (Vacation) என்று ஒரு இரண்டு மூன்று வாரங்கள் ஓர் மாற்றத்திற்க்காகவேனும் எங்காவது ஓட வேண்டும். ஆனால், குடும்பத்துடன் போய்வர அதுக்கு தனியாய் சேமிக்கவேண்டும். 

வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் நேரம் செலவிடும் போதும் பொழுதுபோக்குகள் என்று அதன் அம்சங்களைப் பார்த்தாலும் இன்று விளையாட்டுகள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இவற்றை ஒரேநேரத்தில் ஒட்டுமொத்த உலகமுமே தொலைக்காட்சியில் பார்த்து பரவசப்படுவது தான்  அதியுச்ச பொழுதுபோக்கு என்றாகிப்போகிறது மத்தியதர உழைக்கும் மக்களுக்கு. பிறகு அந்த நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்கள், சர்ச்சைகள் இவற்றையும் ஊடகங்களே கிளப்பிவிட்டு பிறகு அவர்களே பதிலும் கொடுப்பார்கள். நாங்களும் வாயைப்பிளந்து இருக்கையின் நுனிவரை வந்து அதை பார்த்துக்கொண்டிருப்போம். பிறகு நாங்கள் அதுபற்றி பேசி, பதிவெழுதிவிட்டு பலசமயங்களில் அடுத்த பதிவுக்கு என்ன தலைப்பு என்று யோசிக்கத்தொடங்கிவிடுவோம். அதை தவறென்றும் கூறமுடியாது. காரணம், எங்கள் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து வேறெப்படித்தான் எங்களை விடுவித்துக்கொள்வது. இவ்வாறான கவனச்சிதறல்கள் தேவைபடுகின்றன!!

தொழிற்புரட்சிக்குப் பின்னான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக வேலைப்பழு குறைந்து போகும்,பொழுபோக்கு மற்றும் குடும்பத்துக்கான நேரம் அதிகமாகும் என்று கற்பனை எல்லாம் செய்துகொண்டோம். ஆனால் இன்றைய யாதார்த்தம் அப்படி இல்லாமல் போனது தான் கசப்பான உண்மை. பணிபுரியும் நிறுவனத்துக்காக உழைத்து ஓடாய் தேய்ந்து போவது மட்டுமல்ல; காலமாற்றத்துக்கேற்ப துறைசார் தகவல் தொழில்நுட்ப அறிவு, சாமர்த்தியம், செயற்திறன் போன்றவற்றையும் கூடவே வளர்த்துக்கொள்ளவே வேண்டியிருக்கிறது. ஆனாலும், வேலை உத்தரவாதம் என்பதெல்லாம் சந்தேகம் தான். பெரும்பாலும் கணணி முதற்கொண்டு அத்தனை இயந்திரங்களும் மனிதர்களின் வேலைகளை பறித்துக் கொள்ளுமோ  என்கிற பயம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. 

இறுதியாக நான் என் முதல் பதிவில் குறிப்பிட்ட Abraham Maslow சொன்ன மனித தேவைகளை மறுபடியும் நினைத்துப்பார்க்கிறேன். 

கால ஓட்டத்தில் மனித தேவைகளும் அதிகரித்து வாழ்க்கைமுறைகளும் கூட மாற்றமடைந்து, இன்று கற்பனைக்கும் எட்டாத அற்புத வாழ்வில் மனம் திளைத்து வாழ்ந்து தேய்ந்துகொண்டிருக்கிறோம். மனித தேவைகளை Abraham Maslow ஐந்தாக வரிசைப்படுத்தியுள்ளார். Physiological, Safety and Security, Love & Belonging, Self-Esteem, Self-Actualization என்பதே அவை. உடற்கூற்றின் தேவைகள் நீர், உணவு முதற்கொண்டு sex என்பது வரையும் (Physiological), உயிர்வாழ்தலுக்குரிய பாதுகாப்பும் காவலும் (Safety & Security), எங்கள் மீது அன்பு காட்டவும் சொந்தம் கொண்டாடவுமான உறவு (Love & Belonging), சுயமதிப்பீடு (Self-Esteem), மேற்சொன்ன நான்கும் ஒருங்கே அமையப்பெற்று அதில் தன்னிறைவு கண்டால் இறுதியாக ஒருவர் தன் அறிவு, திறமைகளின் அடிப்படியில் தன்னைத்தனே இனங்கண்டு சுயவிருத்தியை அடைதல் (Self Actualization) என்பனவாகும். இந்த ஐந்தில் எங்கோ ஓரிடத்தில் நிறைவு காணப்படாவிட்டாலும் மனித மனம் சிதைந்து போகும். 
   
எங்களை நாங்களே சமப்படுத்தி, வாழ்க்கையை பொருளாதார, தொழில்நுட்ப, சமூக மாற்றங்களுக்கேற்ப வசப்படுத்தி புரிந்துகொண்டு வாழ்வின் அடிப்படை தேவைகளையும், சந்தோசங்களையும் "Leisure Revolution" என்கிற கனவையும் எப்படி தக்கவைத்துக் கொள்ளப்போகிறோம்!!!  ஆனாலும், ஓடும்வரை ஓடு, நிறுத்தாதே. ஓடுவதை நிறுத்திவிட்டால் எனது வாழ்க்கை, கனவுகள், வெற்றிகள் எதுவும் எனக்கு சொந்தமில்லை என்பதுதான் என் கருத்து.


தொடர்புடைய முந்தைய பதிவுகள்

  

ஜனவரி 16, 2011

கவிதைகள் இரண்டுவிதம்!கொடிய வறுமை !
ஒளவையார் பாடிய
இளமையில் வறுமை
என் வாழ்விலும்
அடித்துப் பிடித்து
வறுமைக்கோட்டை அழித்துவிட்டு
திரும்பிப்பார்த்தேன்...
வயதோடு
வாழ்க்கையையும் கோட்டைவிட்டிருந்தேன்

*********************************************************
அலைந்து பெற்ற அனுபவம்
செல்வத்தை தந்தது
வறுமைக்கோட்டை
தாண்டிவிட்டோம் என்று
திரும்பிப் பார்த்தேன்
நான்
இழந்த இளமை
என்னைப்பார்த்து சிரித்ததுதிருட்டும்...! லஞ்சமும்....!!
சின்னச் சின்ன திருட்டில் தான்
ஆரம்பித்தது
முதலில் பார்வை
சிரிப்பு, உன் அசைவுகள்
யாருமில்லா நேரத்தில் நீ செய்யும்
அசட்டுத்தனங்கள்
புரியாத உலகை
விழிகள் விரியப் பார்க்கும்
உன் குழந்தை தனம்....
பிறகு உத்தேசமாய் யோசித்தேன்
காதலின் பெயரால் உன்னை
உன் இதயத்தை
மொத்தமாய் திருட....
ம்ஹீம்... வேண்டாம்
பல நாள் திருடன்/திருடி
ஒரு நாள் அகப்படும்போது பார்த்துகொள்வோம்
காதலை லஞ்சமாய் கொடுத்து
உன்னிடம் ஆயுள் கைதி ஆகிறேன்.

**********************************************************

சிரிப்பு, உன் அசைவுகள்
யாருமில்ல நேரத்தில் நீ செய்த
அசட்டுத்தனங்கள்
அத்தனையும் எனக்கு
காதலை அறிமுகப்படுத்தியது
திருடிய நீ வெளியேயிருக்க
நான் மட்டும் உன் காதலை ஏற்று
ஆயுள் கைதி ஆகிப்போனேன்.ஜனவரி 07, 2011

இது சும்மா.....பலதும் பத்தும்!!


எதைப்பற்றி எழுதுவது என்ன எழுதுவதென்று ஒன்றுமே தோன்றவில்லை. எதையாவது எழுத்தொடங்கினாலும் அது எங்கே ஈழத்தில் போய் முட்டிமோதி நிற்குமோ என்று பயம் வருகிறது. அது பற்றி யோசிக்கதொடங்கினால் முடிவின்றி நீளும் நினைவுகள். வெளியே போகலாமென்றால் குளிருக்குப் பயம். கண்ணாடிக்கு வெளியே பனியை வேடிக்கைபார்ப்பதும்; செய்தித்தளம், தமிழ்மணம் என்றும் பொழுது கழிந்தது. செய்தியில் ஈழத்தில் வடக்கில் ராணுவமும், தமிழ்நாட்டில் அ. தி. மு. க. காரர்களும் கைகளில் மரக்கறி வகைகளோடு காட்சியளித்தார்கள். ஈழத்தில் இப்போ சிங்களராணுவம் விவசாயிகளிடமிருந்து மரக்கறிவகைகளை வாங்கி, பிறகு அதை பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு விற்கிறார்களாம். ம்ம்ம்ம்.... நாங்கள் நம்பிட்டம்!! தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வைக்குறித்து மாநில, மத்திய அரசை கைகளில் மரக்கறிவகைகளை ஏந்தியபடி எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும், உள்துறை அமைச்சரும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டாராம். 


பாத்தீங்களா....!!! இலங்கை அரசுக்கு, சிங்கள ராணுவத்துக்கு தமிழர்கள் மீதுள்ள அக்கறை இந்தியாவில் ஓர் மத்திய உள்துறை அமைச்சருக்கு இருக்கா அப்படீன்னு யாரும் குண்டக்க, மண்டக்கவா கேள்வியெல்லாம் கேட்ககூடாது. அமெரிக்காவில் இரண்டு சகோதரிகள் $11 டொலர்களை திருடியதற்காக பதினாறு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்களாம். பிறகு ஓர் சகோதரி மற்றவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் தன் இரண்டில் ஓர் சிறுநீரகத்தை மற்றவருக்கு தானமாய் கொடுக்கிறாராம். இப்போ இரண்டு பெறும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்களாம். 

என்னப்பா இது....! 17, 60, 00, 00, 00, 000/ 1.76 லட்சம் கோடி ரூபாய் அடிச்சவங்களையே ஆற, அமரத்தான் இந்தியாவில் விசாரிக்கிறார்கள். அப்பிடியே விசாரிச்சாலும் தண்டனை கிடைக்குமா என்றெல்லாம் நாங்க ஆவலோட காத்திருக்கிறோம். இவங்க வெறும் பதினோரு டொலருக்கு பதினாறு வருட தண்டனையாம். இந்த அமெரிக்கா காரங்க எப்பவுமே இப்பிடித்தான் Living Together தொடக்கம் விக்கிலீக்ஸ் வரைக்கும் எல்லா விஷயத்திலேயும் மற்ற நாட்டுக்காரர்களை பொறாமைப்பட வைக்கிறது. பிறகு அதை சரியா அமெரிக்கர்கள் மாதிரியே follow பண்ணத்தெரியாமல் சொதப்புவது. 

அப்புறமா, இங்கே கனடாவில் விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி இரண்டுமே ஓடிட்டிருக்கு, Promotion போல!! எப்போ சனல் மாத்தினாலும் மைக் ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு யாராவது இரண்டு, மூன்று பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நேரெதிரே இன்னொருவரும் மைக் ஒன்றை பிடித்தபடி!!! இவர்களுக்கு கையும், வாயும் வலிக்காதா என்று எனக்கு கஷ்டமா கிடக்கு. எல்லா நிகழ்ச்சிகளுமே பெரும்பாலும் சினிமா சம்பந்தப்பட்டவர்களை அல்லது அது சம்பந்தமான நிகழ்ச்சிகளாகவே இருக்கு என்பது நான் கவனித்தது, கவலைப்பட்டது. 

தன்னை அதிகம் வெளிக்காட்டாமல் எப்போதுமே தன்னடக்கத்தோடு மூன்று தளங்களை வைத்து ஜமாய்க்கும் "தவறு" அவர்களின் தளத்தில் என்னை கவர்ந்த படங்கள் இரண்டு. அப்படியே படத்தோட சேர்த்து ஒரு தத்துவமும் சொல்லியிருக்கிறேன் :))

இது கொஞ்சம் தனியாய்... எல்லாத்திலிருந்தும் விட்டுவிலகி...!!!


இது தான் ஊரோடு ஒத்துவாழ்வதோ...!!இறுதியா, விக்கிலீக்ஸ் பற்றி இங்கே தமிழ் தொலைக்காட்சியில் ஓர் கலந்துரையாடல். அதில் ஓர் ஆய்வாளர் சொன்னார் இப்போவெல்லாம் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் எல்லோருடைய அந்தரங்கமும் எட்டிப்பார்க்கப்படுகிறது, தெரிந்ததுதானே.

ஒவ்வொரு நாட்டின் பொதுமக்களுக்கும் தெரிய வேண்டிய (Right to Information) குறிப்பிட்ட செய்திகள் கூட மறைக்கப்பட்டோ அல்லது திரிக்கப்பட்டோ தானே குத்துயிரும், கொலையுயிருமாய் வெளியிடப்படுகின்றன. இப்போ எத்தனையோ நாடுகள் பற்றிய உண்மைகள் விக்கிலீக்ஸ் மூலம் உலகின் கண்களின் முன்னே. ஆனால், இதையெல்லாம் நாங்கள் வெறும் பார்வையாளராய் (Spectator) பார்த்துக்கொண்டிருக்கப்போகிறோமா அல்லது எங்களை எல்லாவிதத்திலும் பாதிக்கும் இந்த விடயங்களை ஏதாவது நடைமுறைச் சாத்தியங்களோடு கூடிய செயற்திறனோடு எதிர்த்து செயற்படப் போகிறோமா!! 


ஜனவரி 04, 2011

மன்மதன் அம்பு - ஈழத்தமிழர்கள் - அறிவுமதி.

மன்மதன் அம்பு திரைப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை. நடிகர் கமல்ஹாசன் அத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்கள் பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்ன கருத்துக்களை சொல்லியியிருக்கிறார் என்பது தெரியாது. இது யாழ் தளத்தில் நான் கண்ட கவிதை, கவிஞர் அறிவுமதி எழுதியது.   


நடிகர் கமல்ஹாசன் ஈழப்போராட்டம் பற்றி குயுக்தியாய் தன் சில திரைப்படங்களில்  கடந்தகாலங்களில் விமர்சித்தவர் என்பது ஈழத்தமிழர்கள் அறிந்ததே. ஆனால், இதையெல்லாம் மனதில் நிறுத்தி ஈழத்தை இதுபோல் விமர்சிப்பவர்களின் திரைப்படங்களை புறக்கணிப்பவர்களும் அல்ல புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள். 


30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..

கமல் படம்.

மன்மதன் அம்பு.

மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு

வந்து விட்@டா@மா

என்கிற அளவிற்கு

ஒரே கமலஹாஸன் களும்!

கமல ஹாஸிகளும்!அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்

பதுங்கிக் கொண்டு

நூல்தனம் காட்டும் அவரை

பரமக்குடி பையன் என்றும்

பெரியாரின் பிள்ளை என்றும்

பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த

அம்பு...

இராம பக்தர்களின் கைகளிலிருந்து

இராவண திசை நோக்கி

குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று

என்பதை

உணர்ந்து திருந்துதல் நல்லது.கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்

பெரும்பகுதித் தமிழர்களுக்கு

அறிமுகமானவர்,

நவராத்திரித் தமிழனை

தசாவதாரத்தால்

முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.இந்த மன்மத அம்புவின்

வாயிலாக...

தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,

தாய்த் தமிழை

இழிவு செய்வதில்

உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை

புகழ் சுஜாதா ஆகியோரைத்

தாண்ட முயற்சி

செய்திருக்கிறார்."தமிழ் சாகுமாம்...

தமிழ் தெருப் பொறுக்குமாம்.'வீடிழந்து, நாடிழந்து,

அக்காள் தங்கைகளின்

வாழ்விழந்து...

ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...

கொத்துக் கொத்தாய்

தம்

சொந்தங்களை

மொத்தமாய்ப் பலியெடுத்த

கொடுமைகளுக்கு

இன்னும் அழுதே முடிக்காத

அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்

இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை

மாடு

மிதித்ததைப் @பால...

வாடகை வண்டி ஓட்டுகிறவராக

ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..

பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..

கதா பாத்திரமாக்கி..

ஒரு செருப்பாக அன்று..

இரு செருப்பாகவும்

என்று

கெஞ்ச வைத்து..இறுதியில்

அந்த எங்கள்

ஈழத் தமிழரை

செருப்பால் அடிக்கவும்

ஆசைப்பட்டு ஏதோவோர்

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள

முயன்றிருக்கிறீர்களே

கமல்!

அது என்ன ஆத்திரம்!போர்க்குற்றவாளியாகிய அந்தக்

கயவனின் தானோடு ஆடுகிற

சதைதானா உங்களுடையதும்! ஆம்..

சதைதானே உங்களுடையதும்!அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்

கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய

தங்க நகைகளாய்த் தொங்க விட்டு

உங்களவர்களை அர்ச்சகர்களாக

அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!தங்கள் பிள்ளைகளுக்கான

பரதநாட்டிய பயிற்சிக்காவும்,

அரங்கேற்றத்திற்காகவும்

இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்

கொடுத்து அழைத்து, வரவேற்று,

சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன

இடங்களில் கூட... நீங்கள்

பெரிய்ய நடிகர் என்பதற்காக

உங்களுக்காக

தங்கள் நேரத்தை வீணாக்கி

தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,

எவ்வளவோ உதவியிருப்பார்களே!அத்தகைய பண்பாடு மிக்க

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு

நீங்கள் காட்டுகிற

நன்றி இதுதானா கமல்!

செருப்புதானா கமல்!ஈழத் தமிழ் என்றால்

எங்களுக் கெல்லாம்

கண்ணீர்த்

தமிழ்!

குருதித்

தமிழ்!இசைப்பிரியா என்கிற

ஊடகத் தமிழ்த்தங்கை

உச்சரித்த

வலிசுமந்த

தமிழ்!ஆனால்.. உங்களுக்கு மட்டும்

எப்படி கமல்...

அது

எப்போதும்

நகைச் சுவைத்

தமிழாக மட்டுமே

மாறிவிடுகிறது!பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.

தாங்கள் நடித்த

படத்திற்குக் கோடிகோடியாய்...

குவிக்க.. தமிழனின் பணம்

வேண்டும்.ஆனால்

"அவன் தமிழ்

சாக வேவண்டும்

அவன் தமிழ்

தெருப் பொறுக்க

வேண்டும்.''தெருப் பொறுக்குதல்

கேவலமன்று.. கமல்.

அது

தெருவைத் தூய்மை

செய்தல்!தோட்டி என்பவர்

தூய்மையின் தாய்..

தெருவை மட்டும் தூய்மை

செய்தவர்கள் இல்லை..

நாங்கள்

உலகையே

தூய்மை செய்தவர்கள்.."யாதும் ஊரே யாவரும்

கேளிர்' என்று

உலகையே பெருக்கியவர்கள்

நாங்கள்.

எங்களைப் பார்த்து

செருப்பைத் தூக்கிக்

காட்டிய

கமல் அவர்களே..

உங்களை

தமிழ்தான்

காப்பாற்றியது.

பசி நீக்கியது. நீங்கள்

வாழ்கிற வீடு, நீங்கள் போகிற

மகிழ்வுந்து,

நீங்கள் உடுத்துகிற உடை

அனைத்திலும்..

உங்கள்

பிள்ளைகள் படிக்கிற

படிப்பில்.. புன்னகையில்

எல்லாம்

எல்லாம்...!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட

எங்கள்

ஈழத் தமிழ் உறவுகளின்

சதைப் பிசிறுகள்...

இரத்தக் கவுச்சிகள்

அப்பிக் கிடக்கின்றன.

அப்பிக் கிடக்கின்றன.மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை

மோந்து பாருங்கள்

மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்

படத்தில் வருகிற கைபேசியின் மேல்

வருகிற

மூத்திர வாடைதானே உங்களுக்கு

அதிகமாய் வரும்.கமல்..

நகைச் சுவை என்பது

கேட்கும் போது

சிரிக்க வைப்பது!

நினைக்கும் போது

அழ வைப்பது!

ஆனால் உங்கள்

நகைச்சுவை

செருப்பால் அடித்து

எங்களைச்

சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறு... வீரம்..

அகிம்சைக்கான

வியாக்யானங்கள்!அன்பான கமல்..

கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்

கையெழுத்து மரபிற்கு

அய்யாவும் அண்ணலும்

கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்

சூழ்ச்சி செருப்புகளை

அரியணையில் வைத்து ஆளவிட்டு

அழகு பார்க்க மாட்டோம்.சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'

பாட மாட்டோம்.

சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட

வன்மம் அள்ளித்தான்

"உயிரே போகுதே'

பாடுவோம்.

ஆம்.. கமல்

தாங்கள் சொல்லியபடி..

எம்

தமிழ்

தெரு பொறுக்கும்!

எவன்

தெருவில்

எவன் வந்து

வாழ்வது

என்று

தெரு பொறுக்கும்!அப்புறம்

எவன் நாட்டை

எவன்

ஆள்வது

என்ற

விழிப்பில்

நாடும்

பொறுக்கும்.அதற்கு

வருவான்

வருவான்

வருவான்

"தலைவன்

வருவான்!'

இந்தத் தலைப்பையாவது

கொச்சை செய்யாமல்

விட்டுவிடுவது நல்லது கமல்.நீங்கள் பிறந்த இனத்திற்கு

நீங்கள்

உண்மையாக

இருக்கிறீர்கள் கமல்!நாங்கள்

பிறந்த

இனத்திற்கு

நாங்கள்

உண்மையாக இருக்க வேவண்டாமா?


அன்புடன்

அறிவுமதிநன்றி: கவிதை - யாழ் தளம், படம் - sathis-sathis.blogspot.com 

குழந்தைகளும் இருண்டுபோன கர்ப்பக்கிரகங்களும்...!!


என்னைச்சுற்றி நடக்கும், என்னை பாதிக்கும் விடயங்களை பற்றி யோசிக்கும் போது, அது சிந்தனையில் தொடர்ந்து, நீண்டு கொண்டே சென்று கடைசியில் இதுக்கு என்னதான் முடிவு என்று சலிப்பு தோன்றும். சில விடயங்களை கேட்பேன், பார்ப்பேன், பிறகு அது மனதிலிருந்து மறந்தோ அல்லது நினைவிலிருந்து மறைந்தோ போய்விடும். சில விடயங்களை ஒரேயொருதடவை கேட்டாலே போதும் மனதில் அப்படியே படம் போல் பதிந்துவிடும். அதுவும் இல்லையா, ஒரு விடயத்தைப் பார்க்கும் போது அது நினைவுகளை வேறெங்கோ இட்டுச்செல்லும். சரி விஷயத்துக்கு வருகிறேன். 
நேற்று வழக்கம் போல் கவனம் புத்தகத்தில் பாதி, தொலைக்காட்சியில் மீதி என்று குத்தவைச்சு உட்கார்ந்திருந்தேன். தமிழ்தொலைக்காட்சியில் தமிழ்நாட்டிலிருந்து வந்த நான்கு சிறுவர்கள், இசைப்போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்தவர்களாம், பேட்டி காணப்பட்டு, திருவாளர் "Viewers" க்கும் தொலைபேசி மூலம் பேசும், கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தமிழன் தமிழ்நாட்டில் இருந்தாலும் சரி, புலத்திலும் சரி, இப்படி யாராவது கொஞ்சம் பிரபலமானவர்களுடன் பேச இணைப்பு கிடைத்தால் இவர்கள் பேசுவது எனக்கு "உலக மகா நகைச்சுவையாக" இருக்கும். பிறகென்ன பிறவிப் பெருங்கடலை ஒரு தொலைபேசி அழைப்பில் நீந்தி கடந்து முடிப்பர் எம்மவர். இடையே அழைப்புகளை கையாள்பவர் சுனாமியாய் இவர்கள் இணைப்பை துண்டித்தால் முயற்சியை கைவிடாமல் மீண்டும் வந்து பிறவிக்கடலை நீந்தாமல் விடவேமாட்டார்கள். 

அந்த குழந்தைகள், ஒருவர் நிறையவே வளர்ந்த குழந்தையாய் தெரிந்தார் (MA, MBA படிப்பதாய் சொன்னார்) இங்கே தங்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்துக்கு நன்றி கூறி, "நீங்க கண்டிப்பா எங்க Program க்கு வரணும்" என்று அன்புக்கட்டளை போட்டார்கள். இதுபோன்ற வசதியான வீட்டுக்குழந்தைகளை ஊக்குவிப்பதோடு நில்லாமல், திறமையிருந்தும் சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்கும் குழந்தைகளையும் ஊக்குவித்தால் இன்னும் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். 


ஆச்சு, அதிலிருந்து விலகி செய்திகளை கவனித்தால் ஈழத்தில் கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் ஓர் பஸ்ஸில் முப்பது சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களால் கடத்தி செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதிலிருந்து மடிக் கணனியிலிருந்த படத்தோடு அந்த சிறுவர்களின் முகங்கள் ஒப்பிடப்பட்டு இருபத்தெட்டுப் பேர் மீண்டும் திருப்பி அனுப்பபட்டிருக்கிறார்கள். அப்போ மீதி இருவர் கதி? குழந்தைகளோடு கூடவா இந்த தீராப்பகை?

அதே செய்தியில் இலங்கையில் மேலும் SOS கிராமங்கள் குழந்தைகளுக்காக அமைக்கப்படப்போவதாக சொன்னார்கள். இந்த SOS கிராமங்கள் பற்றி தெரியாதவர்களுக்கு, தாய் தந்தையிடமிருந்து பிரிந்தவர்கள், போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், AIDS இனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் ஓர் லாப நோக்கற்ற அமைப்பு என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அமைக்கும் இந்த கிராமங்களை விட சிறப்பாய் தானே இருந்தது "செந்தளிர் சிறார் இல்லம்". குழந்தைகளை பராமரிப்பதில் இருக்கும் அக்கறையை போரை தடுப்பதிலும், பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும் காட்டினால் இதுபோன்ற கிராமங்களின் தேவைகளே இருக்காதே!! அதுக்காக இந்த அமைப்புகள் பரிந்துரை (Advocate) செய்யலாமே  என்றும் யோசிக்க வைக்கிறது. ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகள் அனாதைகள் ஆக உள்நாட்டு அரசுகள், அவர் தம் கொள்கைகள் மட்டும் தான் காரணமா? 

இலங்கை, இந்தியா இன்னும் சில வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் (?), இங்கேயுள்ள பாதிக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தை தொழிலார்களாகவோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுபவர்களாகவோ தான் இருக்கிறார்கள் என்பது UNICEF இன் கூற்று. அண்மையில் செய்திகளில் கேட்டது, இலங்கையில் ஒன்பதாயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக!!  UNICEF இன் ஒவ்வொரு நாட்டு அறிக்கையையும் படித்தால் எனக்கு தலைசுற்றும். இந்தியாவில் எட்டு மில்லியன் குழந்தைகள் கல்விகற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கிறார்களாமே!!


என் மண்ணில் குழந்தைகள் உணவு, உடை, உறைவிடம், கல்வி என்கிற மிகவும் அடிப்படையான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் போது, என்னால் ஏனோ இந்த "Reality Show" என்கிற சில அபத்தங்களை அதிகம் ரசிக்கமுடிவதில்லை.  ஏன் இந்தக்குழந்தைகளை ஒன்றுசேர்த்து உலகில் பாதிக்கப்படும் மற்றக்குழந்தைகளுக்காக குரல்கொடுக்க செய்ய முடியாதா!! என்ன அப்படி ஓர் முயற்சிக்கு எந்தவொரு "Sponsorship" உம் கிடைக்காது, அவ்வளவுதான். அழகாய் உடை உடுத்தி, திறமைகளை வளர்த்து அதை வெளியுலகத்துக்கு காட்டி ஓர் குழந்தை புகழ் பெறும்போது எந்தப் பெற்றோருக்குத்தான் சந்தோசம் இல்லாது போகும்! ஆனால், அதேநேரம் உலகின் இன்னோர் மூலையில் தன் குழந்தை எப்போது ஆயுதக்கும்பலால் கடத்தப்படும், எப்போது குண்டு உயிர்குடிக்கும் என்கிற பெற்றோரின் சவக்களை பொருத்திய முகங்களும், கதறலும் கண்முன்னே நிழலாடுகிறது. 

ஒவ்வொரு நாடும் சர்வதேச உடன்படிக்கைகளில் மனித உரிமைகளையும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதாகத் தான் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தம் வேறுவிதமாகவும், எதிர்மறையாகவும் தான் இருக்கிறது.  Slaveryயை ஒழித்தாயிற்று. இந்த நவீன தொழில்நுட்ப உலகில் இன்னும் குழந்தைகளை அடிமைப்படுத்துவதை, அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை  ஒழிக்கமுடியவில்லை என்றால் அதுக்காக வெட்கப்பட மட்டுமே முடிகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று ஒப்பிடுவார்கள். ஆனால், தெய்வத்தை கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்து, குழந்தையை வீதியில் விபச்சாரம் செய்ய வைக்க தயங்காத சிலர் இன்னும் உலவும் பூமி இது. 

மனட்சாட்சியின் கதவுகளை இறுக மூடிவிட்டு, இருண்டுபோன கர்ப்பக்கிரகத்தில் ஒளியேற்றி இறைவனைத்தேடுகிறோம் என்று "கல்கி" அவர்கள் எழுதிய வரிகளே ஞாபகத்திற்கு வருகிறது. நன்றி: படங்கள் அறியது