டிசம்பர் 29, 2011

தமிழன் என்ற ”தேசிய” இனமும் சுய நிர்ணயமும்.


தமிழன் யார் அல்லது யாரெல்லாம் தமிழர்கள் என்று அப்பப்போ கருத்துக்களங்களில், விவாதப்பொதுவெளிகளில் கேள்விகளும் கிண்டல்களும் வெளிப்படுகின்றன இப்போதெல்லாம். தமிழன் யாரென்ற கேள்விக்கு விஞ்ஞான, சமூக அரசியல் அடிப்படையில் பதில் சொல்ல வேண்டிய காலமும் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாயிற்று.

மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் எல்லா மக்களையும் போல் மனிதகுரங்கிலிருந்து வந்தவன் தான் தமிழனும். சமூக அரசியல் களங்களில் தமிழன் குறித்த கேள்விகளுக்கும், கிண்டல்களுக்கும் பதில், தமிழர் என்பது ஒரு தேசிய இனம். ஒரு தேசம். இதை ஏற்பதும் மறுப்பதும் உலகமயமாக்கலில் அவரவர் அரசியல் சார்பு நிலை ஏற்பாடுகளைப் பொறுத்தது. ஆனால், தமிழன் ஓர் தேசிய இனம். இது தான் சத்தியமான, நிச்சயமான உண்மை.

அப்படியே இதிலிருந்து அடுத்த கேள்வி வரும் சிலருக்கு. அப்படியென்றால், தேசிய இனம் என்றால் என்ன என்று! தேசிய இனம் என்பது ஒரு இனக்குழு மூலத்திலிருந்து தேசியம் என்பதன் மூலக்கூறுகளான ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி, பொதுமொழி,  பொதுப்பண்பாடு இவற்றின் அடிப்படையில் நிலையாய் வாழும் ஒர் சமூகம். தமிழ் நாட்டின் தமிழ் தேசக் குடியரசு விவாதத்தில் பெ.மணியரசன் இனம் என்பது மரபு இனம் (Race), தேசிய இனம் (Nationality) என்று விளக்குகிறார்.

மரபு இனம் என்பது பல்வேறு தேசிய இனங்களில் கலக்கும் வாய்ப்பும் உண்டு. அதற்கு உதாரணம், ஆரியர் என்கிற மரபினம் ஐரோப்பிய, இந்திய தேசிய இனங்களில் கலத்துள்ளமை என்கிறார். அதே போல் இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்துள்ளது. (தமிழ்த்தேச குடியரசு-ஒரு விவாதம், பெ. மணியரசன்).

பெ. மணியரசன் ஆரியர்கள் பற்றி கருத்து சொன்னார் என்றால் அது தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாதோரால் மறுத்துரைக்கப்படலாம். இதையே தமிழ் தேசியத்துக்கும் பெ. மணியரசனுக்கும் எந்த சம்பந்தமுமில்லாத பிரான்ஸ்சிஸ் புக்குயாமா தன் The Origins of Political Order என்கிற புத்தகத்தில் இந்தோ-ஆரியர் வருகையோடு இந்திய அரசியல் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். 

அதில் அவர் குறிப்பி்டுவது இந்தோ-ஆரியர்கள் ரஷ்யாவின் தெற்குப்பகுதியிலுள்ள கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு (Black and Caspian Seas) இடைப்பட்ட ஒரு பகுதியிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பது தான். அந்தப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டவர்கள் மற்றும் சிலர் தான் ரோமானியர்கள், ஜேர்மனியர்கள், மற்றும் ஐரோப்பாவிலுள்ள சிலரது முன்னோடிகள் ஆக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். அவ்வாறு புறப்பட்டவர்கள் ஒரு பகுதியினர் தான் இந்தியாவுக்குள்ளும் வந்தார்கள் என்கிறார்.

தமிழர் என்பது ஒர் மரபினம். அது தமிழ்த் தேசிய இனமும் ஆகும். அது ஈழத்தமிழர்கள் என்றாலும், தமிழக தமிழர்கள் என்றாலும் பொருந்தும்.

“..தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்...” (2002 கார்த்திகை 27, மாவீரர் நாள் உரை-தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன்).

தேசம், தேசியம் என்கிற வரையறைகள் ரஷயப்புரட்சிக்கு தலமை தாங்கிய ஜே.வி. ஸ்டாலினின் கூற்றுக்கு இணங்கவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவரது தேசம், தேசியம் குறித்த வரையறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

The most accurate definition of a "nation", comes from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:

"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."

-Diaspora referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Seniwiratne-

இது லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த விளக்கங்கள்.

இது இப்படி இருக்க தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்பது ஈழப்போராட்டம் நடத்தியவர்கள் கற்றுக்கொடுத்தது என்கிற அபத்தத்தையும் சிலர் சளைக்காமல் சொல்லித்திரிவது அதன் உச்சம். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் கண்டுபிடித்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி தான் தமிழ் நாட்டிலும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள் என்பது அறியாமை என்றே சொல்லத்தோன்றுகிறது.

தமிழீழ தமிழ் தேசியம் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. அது ஒன்றாகவும் முடியாது.

திராவிட கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசப்பட்ட காலங்களின் பின்னர் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியம் குறித்து பேசத்துவங்கினார்கள். அதற்கு வடிவமும் கொடுத்தார்கள். ஈழத்தின் தமிழ் தேசியமும் கூட தந்தை செல்வா காலத்தில் மக்கள் ஆணையாய் வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தானம்  தான் அதன் அடிப்படை என்பதும் வரலாறு.

விடுதலைக்குரிய முயற்சி என்பது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டே இருக்கும் ஒரு சுழற்சி முறைப் போராட்டம், விடுதலை கிடைக்கும் வரை! அறவழிப்போராட்டம், ஆயுதப்போராட்டம், சமாதானம் பேச்சுவார்த்தை என்று பல கால படி நிலை வளர்ச்சிக்குப் பிறகு இன்று அது ஈழத்தில் மறுபடியும் மக்கள் போராட்ட வடிவமாய் மக்களிடமே விடப்பட்டிருக்கிறது. ஐ. நா. வின் சாசனங்கள், பிரகடனங்களுக்கு அமைவாகவே தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் விடுதலைக்கான சுய நிர்ணய உரிமைப்போராட்டமும் ஈழத்தில் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழலில் அமெரிக்க-இந்திய கூட்டு சதியால் சுய நிர்ணய உரிமைக்கான ஈழப்போராட்டம் பயங்கரவாதம் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. ஐ. நா. விதிகளின் படி ஒரு தேசிய இனம் தன் சுய நிர்ணய உரிமை கோருவது தவறில்லை் என்னும் போது, ஏகாதிபத்தியங்களும், அதற்கு அடிவருடுபவர்களும் இயங்கும் கிளப் (Club) என்று ஐ. நா. மாறிப்போன அவமானம் அதுக்கே கிடையாது. இதில் ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை குறித்து சரியாய் நடக்க ஏது அதுக்கு சுதந்திரம்.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஒன்றுமில்லாதாக்கும் ஒர் முயற்சியை இந்தியா மிக லாவகமாக 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் “சிறுபான்மையினர்” என்கிற ஒரு குயுக்தியான கருத்துப்பரம்பல் செய்யப்படுகிறது இந்திய மேலாதிக்க அரசியல்வாதிகளால். அதற்கு அண்மையில் ஈழத்தில் சில கல்விமான்கள் மற்றும் குடிமக்கள் சார்ந்த(சிவில்) சிலரால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஈழத்தமிழர்களை ‘சிறுபான்மையினர்’ என்று சொல்வோருக்கும் ஒரு நல்லதோர் பதில் வழங்கவும் பட்டிருக்கிறது.

முதலில், ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினர் அல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம். சிறுபான்மையினர் என்னும் போது பெரும்பான்மை சமூகத்துக்கு இணையான மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சலுகைகள் தான் தமிழர்கள் கேட்கிறார்கள் என்று ஆகிப்போகும். இதன் வழி சுய நிர்ணய உரிமை/சுயாட்சி தந்திரமாக மறுக்கப்படும்.

ஈழத்தமிழர்கள் சலுகைகள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது தங்களைத்தாங்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி. சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law)  நல்லாட்சியும் (Good Governance) மதிக்கப்படும் ஆட்சியிலேயே அதெல்லாம் சாத்தியம். இலங்கையில் அது சாத்தியமில்லை என்று புரிய வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதனூடாக தீர்க்க முடியாதவை என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள் ( தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம், 13 டிசம்பர், 2011). ஆனாலும், வழக்கம் போல ஈழத்தமிழர் சிறுபான்மையினர் என்று இந்தியா தன் உழுத்துப்போன பல்லவியையே பாடும்.

வரலாற்று ரீதியாகவும் இன்று இலங்கை என்று அழைக்கப்படும் நாடு மூன்று ராச்சியங்களை கொண்டிருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க காலத்தில் தங்கள் நிர்வாக செளகர்யங்களுக்காக அது குறித்து ஆராய ஒரு ரோயல் கமிஷனை  (Colebrooke-Camerom Commision) 1829 ம் ஆண்டு அனுப்பியது. அந்த கமிஷன் (Colebrooke-Camerom Commision) அறிவுரையின் படி 1833 ம் ஆண்டு அந்த தமிழ், கண்டி, மற்றும் கோட்டை ராச்சியங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டது. மூன்று ராச்சியங்களும் கலைக்கப்பட்டு அதன் ஆட்சி அதிகாரமும் கொழும்பில் குவிக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றினார்கள். அதை கலைத்துப்போடுங்கள். எங்கள் ஆட்சியை திருப்பி தாருங்கள். எங்கள் உரிமைகளை ஊர்ஜிதம் செய்யும் சுய நிர்ணய உரிமையை மறுக்காதீர்கள் என்றால் நாங்கள் சிறுபான்மையினர் என்று இந்தியாவும் சேர்ந்து பித்தலாட்டம் செய்கிறது.

இப்படியாக எங்கள்  நிலம், மொழி, பண்பாட்டு பொருளாதார வரலாறும் அதன்வழி நாங்கள் கேட்கும் தமிழ் தேசியம், சுய நிர்ணயம் என்பன அதற்குரிய அங்கீகாரம் தான் மிச்சம் என்கிற ஒரு நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் குறித்து பேசும் போது தான் புரிகிறது அது இன்னும் பல குழப்ப நிலைகளை கொண்டதாகவே இருக்கிறது என்பது.

முதலில் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் தமிழர்கள் என்றால் யாரென்பது பெரும் குழப்பமாய் தெரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியை பேசும் வேற்று மாநிலத்தோரும் வாழ்கிறார்கள். இவர்கள் மொழிவாரி சிறுபான்மையினர் (கன்னடர்கள், மலையாளிகள்) என்று தமிழ் தேசியம் பேசும் மார்கிசியர் தியாகு குறிப்பிடுகிறார். இது ஒன்றும் புதிய உலக வழக்கு இல்லை என்பதையும் தெளிவாக்குகிறார்.

அதைப்போலவே பிராமணியத்தை கடைப்பிடிப்பவர்களும் தமிழர் பண்பாட்டில் தமிழர் என்று கொள்ளப்படுவார்களா என்றால், அதற்குரிய தியாகுவின் பதில், தமிழ் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கும் இடமில்ல; மானுட சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும் இடமில்லை என்பது தான்.  நன்றாக கவனியுங்கள் அவர் தமிழ் பண்பாடு குறித்து தான் பேசுகிறார். (தமிழ் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல் மே 2003).

பெ. மணியரசனும் (த. தே.பொ. க) பார்ப்பனர்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் சம்ஸ்கிருத மொழி உயர்ந்தது என்றும், ஆரியத்தின் பெருமையில் மார் தட்டுபவர்கள் என்பதாயும் குறிப்பிடுகிறார்.

என்னுடைய புரிதல் என்னவென்றால் இங்கே கடவுளின் பெயரால் வர்ணாச்சிரமம், ஜாதி என்று உலகின் வேறெந்த மதத்திலும் இல்லாத ஏற்றத்தாழ்வுகளை பிராமணியம் கடைப்பிடிப்பவர்கள் பேசிக்கொண்டிருந்தால் தமிழ் தேசியத்தில் அது போன்ற மனப்போக்குடையவர்கள் உள்வாங்கப்படுவார்களா என்பதே!

ஆனாலும், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரையும் விலக்கி வைத்தோ அல்லது உள்வாங்க மறுத்தோ தமிழ் தேசியத்தை பேசவோ, கட்டியமைக்கவோ இல்லை என்பதும் தெளிவாய் தெரிகிறது. தம்மை தமிழராய், தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காய் குரல் கொடுப்பவர்களை விலக்கி வைத்தால் அது சரியான தேசியத்திற்கான பாதையாயும் இருக்காது. எந்த மொழி பேசுவாராகிலும், பார்ப்பனிய வர்ணாச்சிரம பேதங்களை புறக்கணித்து தமிழ் உணர்வோடு செயற்படுபவர்கள் அனைவரும் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்பதும் புரிகிறது.

தமிழர்கள் யாரென்று அல்லது தமிழ் தேசியம் என்பதற்குள் உள்வாங்கப்படுவர்கள் குறித்து முடிவுக்கு வந்தாலும், பிறகு தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஒரு சிலர் குழப்பமாகவே இருக்கிறார்கள். உருவான தமிழ் தேசியமும் உருவாகாத இந்திய தேசியமும் என்று பேசிக்கொண்டே இந்திய இறையாண்மை குறித்து அக்கறைப்படுபவர்களும் உண்டு. இந்திய தேசியம், தமிழ் தேசியம் இரண்டும் குறித்து எப்படி ஒரே நேரத்தில் அக்கறைப்பட முடியும் என்று என் பொதுப்புத்திக்கு ஓர் கேள்வி தோன்றுகிறது. தமிழ் தேசியம் குறித்து எத்தனை பேர் பேசினாலும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையோடு செயற்படவில்லை என்பதும் தெரிகிறது.

இது எல்லாத்தையும் விட தமிழர்கள் தேசிய இனமாய் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டவர்களா! இந்திய மைய அரசியலில் தமிழ் தேசிய மொழி இல்லை. தமிழருக்குரிய அங்கீகாரமும் இல்லை. அவர்கள் தம் மொழிக்கும் அங்கீகாரம் இல்லை. இப்படி இருந்தாலும் தமிழ் தேசியம் தன்னால் வலுப்பெறுமோ!

தமிழ் தேசியம் பேசினாலோ அல்லது அதுக்காய் போராடினால் ஈழம் போல் அழிவை சந்திக்க வேண்டும் என்கிற கருத்தையும் படித்திருக்கிறேன். அது ஈழப்போராட்டம் போல் தான் இருக்க வேண்டுமா! ஏன் கனடா போன்ற நாட்டில்  நடந்தது போல் ஒரு வாக்கெடுப்பு (Referendum) இந்தியா என்கிற ஜன நாயக தேசத்தில் சாத்தியம் வராதா! ஈழப்பிரச்சனையின் அடிப்படையும், அதன் போராட்ட களங்களும் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தின் களங்கள் வேறு. அதற்கு ஏற்றாற்போல் வழிமுறைகள் சாத்தியமில்லையா! இதுவரை எந்தவொரு தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்களும் அதை அடையும் வழியாய் ஆயுதப்போராட்டத்தையோ அல்லது நாடாளுமன்ற அரசியல் வழிமுறையையோ பேசி நான் படித்ததில்லை.

தமிழ் தேசிய புரட்சி மக்கள் எழுச்சியாகவே நடக்கும் என்று தான் படித்திருக்கிறேன். ஒரு முல்லை-பெரியாறு போதும் தமிழ் தேசியம் பிறக்குமா, பிறக்காதா என்பதை நாடிபிடித்துப்பார்க்க!

ஈழத்தின் தமிழ் தேசியத்திற்கு முரணான கொள்கைகளுடன் இஸ்லாம் என்கிற அடையாளத்துடன் இலங்கை முஸ்லிம்களும்; தமிழ் நாட்டில் பிராமணியம் கடைப்பிடிக்கும் பிராமணர்களும்/பார்பனியர்கள் தமிழ் தேசியத்துடன் முரண்படுகிறார்கள். இது குறித்து விரிவாய் இன்னோர் கட்டுரையே எழுதலாம். இலங்கை முஸ்லிம்கள் பற்றிய என் பதிவு இது.

ஒரு தேசிய இனத்தின் உரிமைகளும், அரசியல் அபிலாஷைகளும் காலவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சிறுபான்மையாய் எம்மத்தியில் வாழ்பவர்கள் வழி நீர்த்துப்போகவேண்டுமா! எம் நிலம், மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்வு என்று அத்தனையும் பறிகொடுத்து இனவழிப்புக்கு ஆளான ஒரு இனம் பிரிந்து போய் தனியே சுயாட்சி மூலம் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகவிதிகளின் படியே தவறே இல்லை என்னும் போது, அது குறித்து பேசவே நாம் ஏன் தயங்க வேண்டும். எந்தவொரு மக்கள் சமூகத்தின் உரிமைகளை மறுப்பதோ, அல்லது பாசிசமோ அல்ல தமிழ் தேசியம் என்பது. தமிழ் தேசியத்தின் வழி நாம் கேட்பதும், உறுதிபடுத்துவதும் எம் சுய நிர்ணய உரிமையே என்பது என் தெளிவான புரிதல்.

Image Courtesy: Google

டிசம்பர் 19, 2011

மன்மதன் அம்பும் அறிவு மயக்கமும்!!

மன்மதன் அம்பு திரைப்படம் நேற்றுத்தான் பார்த்தேன் முதல் தடவையாக!

வழக்கமாகவே  தற்காலத்தில் பாலாவின் படம் என்றால் ஆண் அதிக வன்முறை காட்டுவான்; கமல், மணிரத்னம் படம் என்றாலே சர்ச்சை தான் என்பது தமிழ்த்திரைப்படத்துறை மற்றும் ரசிகர்களின் கலாச்சாரம். அது போன்ற படங்களின் கருவையும், காட்சிகளையும் அதன் அரசியல் தாண்டி யோசிக்கும் சமயோசிதம் எனக்கும் இருக்கா என்று அப்பப்போ இப்படி ஏதாவது படம் பார்க்கும் போது தான் புலப்படும்.

சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகள் குறித்த கலைகளின் வெளிப்பாட்டில் தெளிவுகள் புலப்படுத்தப்படுவதில்லை என்று சொல்வார்கள். அது காண்பவரின் புரிதலுக்கும், முடிவுக்கும் விடப்படும் விசயம். அதே சமயம் திரைப்படத்தில் கருவாக அல்லது கிளைக்கதையாய் சொல்லப்படும் பிரச்சனை குறித்த ஒரு புரிதலையும், தெளிதலையும் பார்வையாளனிடம் அல்லது ரசிகசிகாமணியிடம் உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கமும் அந்த படைப்பாளியிடம் இருக்கா என்று மன்மதன் அம்பு போன்ற திரைப்படங்களை உருவாக்குபவர்கள் என் போன்றவர்களை யோசிக்க வைக்கிறார்கள்.

காணும் காட்சிகள் இயல்பாய் இன்றி செயற்கையாய் கட்டமைக்கபப்பட்டு கருத்துகள் திணிக்கப்படும் போது கொஞ்சம் விழிப்போடில்லாதிருந்தால் அந்த கருத்துக்களின் வழி நானும் வனையப்படுவேனோ என்கிற பயமும் தொற்றிக்கொள்கிறது. கருத்துகளின் கட்டமைப்புகளில் என் சிந்தனைகள் சிக்க வைக்கப்படும்போது என் சுயம் தொலைந்து போக நேரலாம்.

மன்மதன் அம்பு என்கிற ஒரு பொழுது போக்கு அம்சத்திற்கு இவ்வளவு வியாக்கியானம் தேவையா என்றும் தோன்றலாம். எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது. ஒரு திரைப்படத்தின் கருவோ, கதையோ வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்றால் அது குறித்து எனக்கு சிந்திக்கவோ, விமர்சிக்கவோ வேண்டிய தேவை இருந்திருக்காது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமகாலத்தில் நான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அல்லது என்னைப்பாதிக்கிற பிரச்சனையின் பிம்பம் ஒன்று உருவகிக்கப்படும்போது, அது குறித்து என் பிரதிபலிப்புகளை எழுதாமல் இருக்கமுடியவில்லை. பானைச்சோறு, பதம் என்கிற பழமொழி போன்ற ஒரு தனிப்பட்ட படைப்பாளியின் Stereo Type சிந்தனைகள் வழி எம்மைப்பற்றிய கற்பிதங்களை பொதுக்கருத்தாய் முன்வைக்கப்படுகிறதா என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

M.I.A. என்கிற ஈழத்துப்பெண்ணான மாயா அருட்பிரகாசம் மூன்றாம் உலக ஜன நாயகம் பற்றியோ, அமெரிக்கா அரசியல் கொள்கைகள் பற்றியோ கருத்துகளை இசை என்கிற ஊடகத்தின் வழி சொல்லும் போது மறுக்க முடிவதில்லை. காரணம், அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதன் பாதிப்புகளை எல்லோரும் ஏதோவொரு வகையில் உணர்ந்திருக்கிறோம். மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் என்கிற ஒரு படைப்பாளி ஈழத்தமிழனை, அவருக்கு தெரிந்த உலகவரலாற்றின் அடிப்படையில், அவரது பாசையில் தீவிரவாதம் பற்றி பாடம் எடுப்பதை கொஞ்சம் தெளிவாய் சொன்னால் தான் என்ன என்று யோசித்தேன். எதையுமே பூடகமாய் சொல்லி, பொழுது போக்குபவர்கள் பொழுதை போக்குங்கள், மற்றவர்கள் பதிவெழுதி அடித்துக்கொள்ளுங்கள் என்று திரைக்கதை, வசனம் எழுதிய கமல் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்னவோ.

சரி, மன்மதன் அம்பு திரைப்படத்தில் ஈழத்தமிழன் குறித்த இரண்டு காட்சிகளை பற்றி நான் பார்த்ததை சொல்கிறேன். ஒரு காட்சியில் ஈழத்தமிழர்களின் பிம்பமாய் உருவகிக்கப்பட்டவர் தமிழ்த்திரை நடிகையை பார்த்து சொல்லுவார், நான் உங்கள் கால் செருப்பாயும் நடிக்க தயார் என்று. உடனே நடிகையின் தோழி கேப்பாராம் எது வலது கால் செருப்பா அல்லது இடது கால் செருப்பா என்று. திரைப்படத்தின் உச்சக்காட்சியில் அதே நடிகை ஈழத்தமிழனை தன் கால் செருப்பை கழற்றி காட்டி அதாலேயே அடிப்பேன் என்று சொல்லுகிறார்.

ஈழத்தமிழன் சிங்கள ராணுவத்திடம், பேரினவாதிகளிடம் அவன் சொந்த மண்ணிலேயே படாத இன்னலை, அவமானத்தினை விட இது பெரிசா தெரியவில்லை. சிங்கள ராணுவத்தையும் ஒரு தமிழ் சினிமா நடிகையை அல்லது திரைப்படத்துறையை அதற்கு ஒப்பிடவும் நான் முனையவில்லை. என்னை யோசிக்க வைத்தது இது தான். கமல் என்கிற அந்த படைப்பாளி ஈழத்தமிழர்களின், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள், சினிமா மோகம் பற்றி கிண்டலடிக்கிறாரா அல்லது தமிழ் சினிமா உலகம் உங்களை இவ்வளவு தான் மதித்து வைத்திருக்கிறது என்று சொல்கிறாரா!!!

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர் பெரியதோர் பலம் என்று வழமையான பல்லவியை நான் பாடப்போவதில்லை. புலம்பெயர் தமிழன் தமிழ் சினிமாவை உலகம் முழுக்க பரப்பியவன் என்கிற உண்மை மறுக்க முடியாதது. அந்த யானைப்பலம் ஈழத்தமிழனே புரிந்தும், புரியாதது போல இருக்கிறான்.

தமிழ் தெரு பொறுக்குகிறது என்று மன்மதன் அம்பு படைப்பாளி கமல் ஒரு வசனம் சொல்லுவார் அந்த படத்தில். தமிழ் தெருப்பொறுக்குதோ இல்லையோ, இந்த தமிழ் சினிமாக்காரர்கள் வெளி நாடுகளில் வீதிகளில் நாயகனும் நாயகியும் குரூப் டான்ஸ் ஆட இந்த நாட்டு மக்கள் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பதும் என் போன்றவர்களுக்கும் தர்ம சங்கடமாய்த்தான் இருக்கு. இதையெல்லாம் நாங்க என்ன புலம்பிக்கொண்டா இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு என் நண்பரிடம் பேசும் போது அவர் சொன்னார். கமல் என்கிற படைப்பாளி ஈழத்தமிழர்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை ஏன் தமிழ் சினிமாக்காரர்களிடம் கொட்டுகிறீர்கள் என்று மறைமுகமாக சொல்கிறாராம். சரி, அந்த படைப்பாளியின் உயரிய நோக்கம் ஈழத்தமிழன் குறித்த அக்கறை என்றால் அதை நேரடியாகவே சொல்லலாமே. ஏன் தலையை சுத்தி மூக்கை தொடவேண்டும்.

ஒரு நல்ல படைப்பாளியாய், வசனகர்த்தாவாய் மாதவன், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிளிர்பவர், ஈழத்தமிழன் குறித்த காட்சிகளின் அமைப்புகளில், வசனங்களில் தடம் புரள்வது ஏனோ!!! மன்மதன் அம்பில் ஈழத்தமிழன் வரும் காட்சியில் ஒரு தடவைக்கு மேல் அவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காலணியோடு கற்பிதங்கள் கொடுக்கப்படுவதை ஓர் ஈழத்தமிழன் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்!!! சரி, நேரடியாய் சொல்லப்படாத அந்த அர்த்தபுஷ்டியான காட்சிகளுக்கு என் நண்பருக்கும், படைப்பாளி கமலுக்கும் மட்டுமே பதில் தெரியும். நான் சாதாரண பெண். எனக்கு இந்த பூடகமாக சொல்லப்படும் கலை நுணுக்க கருத்து திரிபு நயங்களும் திணிப்புகளும் புரியவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன்.

காலத்தின் தேய்வு நிலை கோட்பாட்டின் படி, உண்மை எப்பொழுதும் உறங்கியே போய் விடுவதில்லை. அப்படியாக, அதி அரசியல் உள் நோக்கங்களை கொண்ட பிரச்சார விநியோகிப்புகளும் அந்த நேரத்தில் பரபரப்பாக விற்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டிருந்தாலும், காலம் இறுதியில் உண்மையை விளக்கி அந்த மனிதர்களின் உண்மையான முகத்தை வெளிப்படையாய் காண்பித்துவிடுகிறது. அதேபோலவே, கமல் இரட்டை நாக்கு கொண்டவராக உள் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார் என்றால் அவரின் முகமூடியும் உதிரும் காலம் வரலாம். ரசிகசிகாமணிகள் உண்மையறியலாம்.

எப்படியோ, மொத்தப் படமும் முடியும் போது மனதில் நிறைந்திருப்பவர்கள் அவமானத்தை தாங்கமாட்டான் என்று சொல்லும் ஈழத்தமிழனும், மூன்றாம் உலகநாடுகளின் பொய்த்துப்போன எல்லோருக்கும் பொதுவான Universal Healthcare அல்லது தனியார் மருத்துவ மனைகளில் கணவனின் உயிரைக்காக்க கண்ணீர் மட்டுமே விடத்தெரிந்த, முடிந்த ஊர்வசியின் கதாபாத்திரங்களும் மட்டுமே. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழன் தன் பலம் குறித்து புரிந்து கொள்ளும்வரை, தமிழ் சினிமா விம்பங்களை பூஜிக்கும் மனோபாவம் மாறும்வரை இப்படித்தான் இரண்டுங்கெட்டானாய் விமர்சிக்கப்படுவான்.

Image Courtesy: Google

டிசம்பர் 08, 2011

பண்டிகை, விழாக்கால வெள்ளை யானைகள்!!


எழுதியெழுதி எண்ணமும் எழுத்தும் தீர்ந்து போகுமோ என்றுொரு தீராக் கேள்வி அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எழுத்தின் நெம்புகோலில் இந்த உலகையே புரட்டிப் போட்ட மாதிரி ஒரு நினைப்பு! நானெல்லாம் எழுதாமல் விட்டால் தமிழ் கூறும் நல்லுலகத்தின் காலக்கடிகாரம் அப்பிடியே ஸ்தம்பித்து நின்றுவிடும் என்கிற அளவுக்கு ஒரே எழுத்தும், கிறுக்குமாய் ஆகிப்போச்சு :) அரசியலை மேய்ந்து, ஆங்காங்கே மல்லுக்கட்டி யாராவது வந்து நாட்டாமை செய்து அதே ஆடுகளம். சில நேரங்களில் சுவாரஸ்யமாய், ஆரோக்கியமாய் நகரும். சில பொழுதுகளில் போலி அறிஞர்குழாமினாலும் திசை திருப்பப்படும். அது அவரவர் புரிதல், கொள்கைசார் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றாற்போல் மாறுபடும், வேறுபடும்.

இதில் குரங்கு அப்பம் பிரித்துக்கொடுத்த கதையாகவும், கதியாகவும் ஆகிப்போகும் விவாத விலக்குகள், வில்லங்கங்கள். இதிலெல்லாமிருந்து கொஞ்சம் விலகி யதார்த்த வாழ்க்கை பற்றிய காட்சிகளின் தரிசனம் பண்டிகை காலம் தொடங்குவதால் கண்ணில் ஏராளம் தென்படுகிறது நான் வாழும் நாட்டில். ஆம், இது வருட இறுதி நத்தார் பண்டிகை தெருமுனையில் இருப்பது போல் அண்மித்து கொண்டே இருக்கிறது.

கனடா வந்த புதிதில் வாழும் நிலை குறித்த தேடலும், தெளிதலும் கலாச்சார, பண்பாட்டு அதிர்ச்சியில் அமுங்கிப்போனது. இந்த கலாச்சார, பண்பாட்டு அதிர்ச்சி என்றால் அது உணவு, உடை, வாழ்க்கைமுறை, மொழி முதல் எல்லாம் அடக்கம்.  ஈழத்திலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி வந்து, இங்கே மனித வாழ்வு ஒளியின் வேகத்தில் நகர்வது போலவும் நான் மட்டும் நத்தையாய் ஊர்வதாயும் ஆரம்பகாலங்களில் ஓர் மனப்பிரம்மை.

அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாய் மீண்டு, மேலெழுந்து புலத்து வாழ்க்கை புரிபடத் தொடங்க ஆரம்பித்தது ஓட்டம். Road Runner போல வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடி ஒரு திடீர் தடை ஏற்படுத்தி அப்பப்போ கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பியும் பார்க்க கற்றுக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வலிகள், சோதனை, சாதனை, எனக்கேயுரிய சந்தோசங்கள், கோமாளித்தனங்கள் அனைத்திலிருந்தும் பாடம் கற்று, ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும், மீண்டும் என் உயிர்ப்புக்கு உயிர் கொடுக்கிறேன். வெற்றியும் தோல்வியும் இயற்கையாய் அவை தம் இயல்புகளோடு இருக்க நான் மட்டும் அதற்கு சிரிப்பு, சந்தோசம், அழுகை, கோபம், குழப்பம், தெளிவு என்று வடிவங்கள் கொடுக்கிறேன். அத்தனையும் புறவாழ்வின் மீது எனக்கிருக்கும் மோகத்தின் வெளிப்பாடு.

நான் அதிகம் மனிதர்களை தேடுவதில்லை. தேடினாலும் அபூர்வமாய் தான் கிடைக்கிறது போலியில்லா முகமும், புன்னகையும். அந்த அபூர்வம் அதுவாய் இயல்பாய் அமையட்டும் என்று விட்டு விடுவேன். அதே போல் கடவுளையும் தேடுவதில்லை. இருப்பதை தேடலாம். இல்லாததை எங்கு போய் தேட! தொல் உயிர் எச்சங்களில் மனிதனின் மூலம் மில்லியன்கள் வருட முன்னோடிகளாய் இருப்பது Ape!! மனித குரங்கிற்கும் தற்கால மனிதனுக்குமிடையே கடவுள் எப்போது கடைவிரித்தார் என்கிற விசாரணையின் தேடல்களும் இல்லை என்னிடம். அதுக்கு என் நேரப்பற்றாக்குறையும் காரணம். தேடி விடைகாண நான் விஞ்ஞானியும் அல்ல. ஒரு வேளை மரணம் என்னை ஆட்கொள்ளும் போது, அடுத்த வாழ்வில் எனக்கு என்ன நடக்கும் என்று இல்லாத கடவுளிடம் கேட்க வேண்டுமோ :)

இந்த கேள்விகள் குறித்த தொடரில் ஒன்று மட்டும் எஞ்சியிருப்பது புரிகிறது. கடவுளை கண்டுபிடித்தவர்களும், கார்பரேட் நிறுவனப்படிமங்களில் வியாபாரம் பெருக்குபவர்களும் கடவுளுக்கும், மனிதனுக்குமிடையே ஓர் தொடர்பை பண்டிகை, விழாக்கால கோலங்களில் உருவாக்க முனைந்து இருக்கிறார்கள். அதில் பெருமளவு வெற்றியும் கண்டுவிட்டார்கள். அதை எங்களிடம் அதிகம் கடத்தி வந்து கொடுத்தது சினிமா, தொலைக்காட்சி என்கிற ஊடகங்கள். இவை இல்லை என்றால் உலகளாவிய ரீதியில் இந்துக்கள் எப்படி தீபாவளியும், இஸ்லாமியர்கள் ரமழானும், வட அமெரிக்காவில் எப்படி நத்தார் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு புரியாமலே போயிருக்கலாம். என் தகவல் அறியும் உரிமை இதுக்குள்ளேயே முடக்கப்படும்.

பண்டிகைகளும், விழாக்களும் கடவுளோடு தொடர்புபட்டதால், அது குறித்த கொண்டாட்டங்களும் ஊடகங்கள் வழி வியாபார நிறுவனங்கள் அமைத்துகொடுத்த நியமங்களுக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. என் வாழ்வியல் முறை, பண்பாட்டு விழுமியங்கள் என் பரம்பரையில் கடத்தப்பட்டு வந்த முறைக்கும், இன்று அது வியாபார நிறுவனங்களால் வேறு நியமங்கள் கற்பிக்கப்பட்டதும் காலத்தின் வழுவோ!

பண்டிகை, விழாக்காலம் என்றால் நான் எதை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நான் சமூகத்தை எதிர்த்து செயற்படுவதாய் தோன்றும். வேலத்தளத்தில் ஒவ்வொரு வருடமும் கேட்பார்கள் பண்டிகை கால பரிசுப்பொருள் கொள்வனவு செய்தாகிவிட்டதா என்று. நானும் சிரித்துக்கொண்டே கேட்பேன், அதை செய்தே ஆக வேண்டுமா என்று. பொருளுலகில் பரிசுப்பொருட்களில் தான் அன்பும், பாசமும், காதலும் பரிமாறப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையா, கட்டாயமா என்பது சில நேரங்களில் புரியாமலே போகிறது.

பண்டிகை, விழாக்கால கொள்வனவில் வாங்கி குவிக்கப்படும் வெள்ளையானைகள் குறித்து ஏனோ யோசிக்க தோன்றுகிறது. அது குறித்து ஒரு விளக்கம் உண்டு. வெள்ளையானை விலையை விட அதை பராமரிக்கும் செலவினம் தான் அதிகம் என்பது ஐதீகம். வெள்ளையானை இருக்கா என்கிற அறிவு பூர்வமான கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை :) ஆனால், வெள்ளையானை என்பது குறித்து நிற்பது அநாவசிய செலவினம் என்பதே ஆகும்.

பொருளாதார வீழ்ச்சியும், பணவீக்கமும் பொருளாதார அடிமைகள், நுகர்வோர், அல்லது பொதுமக்கள் கொள்வனவில் எவ்வளவு பணம் செலவு செய்கிறார்களோ அதன் வழி மீள கட்டியெழுப்பப்படுமாம் செய்திகளில் சொல்கிறார்கள். பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இன்று விடுமுறைக்கால கொள்வனவிற்காய் மக்கள் கூட்டம் அலைமோதியது என்று ஊடகங்கள் கல்லா கட்டுகிறது யாருக்காக என்று புரியாமலும் இல்லை. அரசியல், பொருளாதார அடிமையான எனது கூட்டு சிந்தனை, கூட்டு மனட்சாட்சி, கூட்டு பழக்கம் இவற்றை ஊக்குவிக்க ஊடகங்கள் கதை, வசனம் எழுதி வாசித்தால் அதற்குப் பெயர் செய்தி! அதை கேட்டால், பார்த்தால் பல சமயங்களில் சலிப்பே மிஞ்சுகிறது.

செய்தியிலிருந்து விடுதலையா என்றால், மறுபடியும் விளம்பரம். இவர்கள் தான் செய்திக்கு அனுசரணை என்று ஒரு பாரிய வியாபார நிறுவன விளம்பரம். இவர்களது விடுமுறை, விழாக்கால, பண்டிகைக்கால வியாபாரம் பெருக்கும் உத்திகள் விளம்பரங்கள் வழி பார்ப்பவர் மனங்களை கொள்ளையடிக்கும். போய் இதை வாங்கிக்கொள், இதை உனதாக்கிக்கொள் என்று மறைமுகமாய் தூண்டுவார்கள். ஒர் சிறப்பு விற்பனை நாளில் அது தள்ளுபடியில் விற்கப்படுகிறது, சேமித்துக்கொள் என்று உபகாரம் போல் காட்சிப்படுத்தப்படும். அந்த தள்ளுபடி விற்பனை ஒரேயொரு நாள் மட்டுமே என்கிற முத்தாய்ப்பு வேறு.

எனக்கு இவர்கள் விளம்பரப்படுத்தும் பொருள் தேவையா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. அந்த வெள்ளையானையை நான் எனதாக்கிக் கொள்ள வேண்டும். பணம் இல்லையா! இருக்கவே இருக்கிறது கடன் அட்டை. வாழ்வது ஒரு முறை. அதை கடன் அட்டை வழியேனும் சுகித்து, உன்னதமாய் வாழ்ந்துவிட வேண்டும். அதை சில திருவாளர் நுகர்வோர்களே ஒத்துக்கொள்வார்கள் பகிரங்கமாக தொலைக்காட்சியில்.

வருடத்தில் ஒரேயொருமுறை வரும் கொண்டாட்டங்களை வேறு எப்படித்தான் கொண்டாடுவது என்று எனக்கு சொல்ல தெரியாது. அது என் நோக்கமும் அல்ல. இவை பொருளாதார, அரசியல் சதுரங்கத்தில் கடை நிலையில் இருக்கும் என்போன்றோரது தேவைகளும், சிந்தனைகளும் புதிதாய் எப்படி அர்த்தப்படுகிறது என்கிற எனது பிரதிபலிப்பே ஆகும். பண்டிகை, விழாக்கள், சம்பிரதாயங்கள், விழுமியங்களுக்கு பொருளுலகில் கொடுக்கப்படும் அல்லது கற்பிக்கப்படும்  புதிய அர்த்தங்களே அதிகம் அது குறித்து யோசிக்க வைக்கிறது.

காதலர் தினத்தில் பூவும், பண்டிகை காலத்தில் பரிசும் கொடுப்பது உறவுகளின், நட்பின் அளவை, எல்லையை நிர்ணயிக்கும், அதிகரிக்கும் என்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நேர்கோட்டில் நிகழ்வதும் இல்லை. பரிசுப்பொருட்கள் கொடுத்தும், வாங்கியும் யாரையும் கடனாளியாக்கவும், நான் கடனாளி ஆகவும் எனக்கு உடன்பாடு இல்லை, அவ்வளவே!

எனக்கு பிடித்தது, பண்டிகை, விழா என்றால் விடுமுறை. அது குடும்பங்கள், நட்பு இப்படி சந்தோசமாய் ஒன்று கூடி பேசி சிரித்தாலே மனசு சுகமாய் நிறைந்து போகும்!! கூடவே, சாப்பாடு! அதை மறக்க கூடாது, மறக்கவும் முடியாது :)

Image Courtesy: Google

டிசம்பர் 02, 2011

நெற்றிக்கண் நடுநிலைவியாதிகள்!!எங்கள் ஈழத்து கவிஞர் ஒருவர் சொன்னது, உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடு நிலைமை என்பது கிடையாது என்று. சமகாலத்தில் அரசியல், சமூக, பொருளாதார, இன, மத, கலாச்சார முரண்பாடுகள் குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் என்றவுடன் எப்போதும் அரசுக்கு ஆதரவான, எதிரான, அல்லது நடு நிலைமை பேணுகிறோம் என்கிற ரீதியிலான கருத்துகள் உருவாக்கம் பெறுகின்றன. அல்லது உருவாக்கப்படுகின்றன.  அவ்வாறான கருத்துருவாக்கங்கள் சாதாரணமாக உருவாக்கப்படுவதில்லை. திட்டமிடப்பட்டு குயுக்தியான முறையில் பரவலாக உருவாக்கப்பட்டு பரப்படுகின்றன என்பது ஈழவிடயத்தில் ஏற்கனவே தெளிவாய் தெரிந்து போனது.

உணர்ச்சி வசப்படாத, நடு நிலையான பகுப்பாய்வு செய்பவர்களுக்கு தான் ஈழம் பற்றி தெளிவாய் எல்லாம் புரியும் என்பது போன்ற அற்ப அபத்தங்களும் இல்லாமலில்லை. பாதிக்கப்பட்டவனுக்கு நடு நிலைமை குறித்தா கவலை கவரும். அதெல்லாம் நெற்றிக்கண்ணை திறக்கும் பார்வையாளர்களின் பகுப்பாய்வுக்கு தான் லாயக்கு. இந்த நடு நிலையாளர்களின் முகமூடியை கிழித்துப்போடும் ஒர் பகுப்பாய்வு தத்துவம் அண்மையில் கண்ணில் பட்டது.

நடு நிலைமை சரியா, தவறா என்பதல்ல என் வாதம். அது எப்படி அரச இயந்திரத்தால், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களால் (NGOs), சர்வதேச அமைப்புகளால் புதிய தாராள ஜனநாயகம், உலகமயமாக்கல் என்கிற மேற்கத்திய அரசியல், பொருளாதார தேவைகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது என்பதே என் வாதமும், தேடலும்!

அந்த தேடலில் கண்ணில் பட்டது கலாநிதி ராதா டி‘ஸோஸா அவர்களின் Sandwich Theory. இவரது இந்த பகுப்பாய்வு தத்துவமானது இந்திய சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரபல்யம் என்று சொல்லப்படுகிறது. படித்த போது மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஒரு அரசுக்கும், ஏதோவொரு பொதுப்பிரச்சனை, உரிமை பிரச்சனை குறித்து போராடுபவர்களுக்கும் இடையே பொதுசனம் எப்படி நடு நிலையாளர்களாக தந்திரமாக அரசால் வனையப்படுகிறார்கள் என்பதே இவர் கூறுவதிலிருந்து நான் புரிந்து கொண்டது.

பிரச்சனையின் உண்மை நிலைகளிலிருந்து உருவான இடப்பெயர்ச்சி, சுரண்டல், சமூக, பொருளாதார, அரசியல் கையறு நிலையில் இருந்து திசை திருப்பும் வகையில் வன்முறை, வன்முறையற்ற என்கிற மாதிரியான இரண்டாந்தர விடயங்களில் மக்களின் கவனம் அரசுக்கும்/அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்படுபவர்களுக்கும்/போராடுபவர்களுக்குமிடையே சமதூரத்தில் வைத்து பார்க்கும் தன்மை உருவாக்கப்படுகிறது என்கிறார் என்பதே என் புரிதல். அதற்கு எடுத்துக்காட்டாக இந்திய அரசு-மாவோயிஸ்ட்,  இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சனைகளை குறிப்பிடுகிறார்.

அதே போல் அரசிடமிருந்தும், மக்கள் போராட்டங்களிலிருந்தும் தங்களை விலக்கிவைத்திருப்பவர்கள், ஈற்றில் அரசின் மக்கள் மீது தொடுக்கப்படும் போருக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பது போலாகும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் குறித்த கேளிவிகளுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது; நடு நிலை வகிப்பவர்கள் என்கிற பெயரில் சில சர்வதேச அமைப்புகள், எடுத்துக்காட்டாக Observer Research Foundation, தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக ஆக்கினார்கள் என்பது, பாலஸ்தீனம், சூடான் விடயத்தில் கூட பாவிக்கப்பட்டது என்கிறார். மறுபிரதி எடுத்து சொலவது போல் இவர்கள் இதையே தான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நடு நிலை வகிக்கும் அமைப்புகள், Think-tanks/Experts எனப்படுபவர்கள் கருத்துகளே அடக்குமுறை அரசின் சார்பாக முன்வைக்கப்படுகிறது என்பதும்; இவர்கள் அடிப்படையில் ஜனநாயக பண்புகளை கொண்டிராத சர்வதேச அமைப்புகளின் அங்கமென்று சொல்கிறார் என்பது புரிகிறது.

நடு நிலை நியாயம் பேசும் உள்ளூர், சர்வதேச வேடதாரிகளின் (NGOs) வார்த்தை ஜாலங்கள், Good Governance (சிறந்த ஆட்சி முறை) Civil Society (குடியியல் சமூகம்) எல்லாம் உலகவங்கி திட்டங்கள், சர்வதேச அமைப்புகள் போன்ற நாணய நிதியோடு சம்பந்தப்படுத்துவது என்கிறார். புதிய தாராள மயக்கொள்கை, உலகமயமாக்கல் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்டவர்களிடம் அதிகாரத்தை வழங்குதல் என்றும் விளக்குகிறார்.

இவர்களுக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். நோர்வே முதல் International Crisis Group வரை என்னென்னவோ அறிக்கை விட்டும், ஆராய்ச்சி செய்தும் இறுதியில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் பிடித்ததையே ஈழத்தமிழன் ஏற்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வார்கள். அதாவது ஈழத்தமிழன் சுய நிர்ணய உரிமையை கைவிட வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். அதற்கு எங்கள் எட்டப்பன்களே உதவியும் செய்து கொடுப்பார்கள் இவர்களுக்கு என்பது கள யதார்த்தம். ஏதோவொரு விதத்தில் போரும் அமைதியும் மாறி, மாறி வந்தால் தான் அவர்களின் அரசியல், பொருளாதார இலக்குகள் அடையப்படும் என்றும் விளக்குகிறார்.


இவையெல்லாம் என் புரிதல்கள் மட்டுமே. ஆர்வமும், தேவையும் இருப்பவர்கள் இதன் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.


கீழே இருப்பது இந்தியாவின் ஆதிவாசிகளின் போராட்டத்திற்கு எதிரான க்ரீன் ஹண்ட் - மாவோயிஸ்ட் போராட்டம் பற்றிய கட்டுரை.


சமூக தொடர்பாடல் தளங்களில் சில நடு நிலைவாதிகளின் ஈழம் குறித்த அரைகுறை மேதாவித்தனங்களின் விளைவே இதை எழுத தூண்டியது. ஈழத்தின் களயதார்த்தம் தெரியாமல், அதன் போக்கும் புரியாமல், ஈழத்தமிழனுக்கு இலங்கை சோசலிச குடியரசு யாப்பில் மறுக்கப்படும் உரிமைகள் பற்றியும் தெரியாமல் அபத்தமாய் பேசுவதை என்ன சொல்ல!

Image Courtesy: Google

நவம்பர் 24, 2011

மாவீரர் யாரோ என்றால்....!!!சாவுக்கே சவால் விடும் தைரியமும், கொண்ட கொள்கையில் கட்டுக்குலையாத உறுதியும் தான் இவர்களின் அடையாளம். அற்ப வாழ்வுக்கும், புகழுக்கும் அலையும் உலகில் தற்கொடையும்; போலி மனிதாபிமானம், உதட்டளவில் சமாதானம் பேசுபவர்கள் சூட்டிக்கொடுத்த அவப்பெயரும் தான் இவர்கள் பெயரின் பின்னால் எஞ்சியிருப்பவை. இருந்தும் நிலைத்திருக்கிறார்கள், என்றென்றும்  நிலைத்திருப்பார்கள் இவர்களின் உன்னத இலட்சியத்தையும், ஈழத்தின் உண்மை நிலையையும் அறிந்த நல்லவர்களின் மனச்சாட்சிகளில்.

பரந்து விரிந்த உலக வரை படத்தில் எங்களுக்குரிய மண்ணையும், எங்களின் மாண்புகளையும், மறுக்கப்படும் உரிமைகளையும் அறியத்தந்தவர்கள். இவர்கள் எப்படி உருவானார்கள்! அல்லது யாரால் உருவாக்கப்பட்டார்கள்! இலங்கை என்கிற நாடு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து ஆட்சி கைமாறி சிங்கள பெரும்பான்மையினரிடம் சிக்கிக்கொண்டதிலிருந்து ஈழத்தமிழர் பூமியின் தலைவிதியும் புரட்டிப்போடப்பட்டது. அரசியல் பேசி, ரகசியமாய் செல்லுபடியாகாத ஒப்பந்தங்கள் போட்டு களைத்துப்போனார்கள் சாத்வீக வழியில் போராடியவர்கள்.

1960 களில் சீனாவில் கூட கமியுனிச இயக்கத்தை ஆட்டங்காண வைத்தபின்,  1970 களில் மார்க்சியம் என்கிற சித்தாந்த அடிப்படையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லா திண்ட்டாட்டத்திற்கும் தீர்வு காண முற்பட்டது ஜே.வி.பி. என்கிற ஒரு சிங்கள அமைப்பு. தெற்கில் பல வன்முறைகளை தூண்டிவிட்டு அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றது. இவர்களுக்கு சூட்டிய பெயரையே சிறுபான்மையினத் தமிழர்களின் இலங்கை அரசியல் யாப்பில் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் போராடிய போராளிகளுக்கும் சூட்டி விடுதலைக்கான முயற்சிகளையும் அழிக்க திட்டமிட்டது இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களின் நரிப்புத்தி!

இலங்கை சோஷலிச குடியரசு யாப்பில் தமிழுக்கு மறுக்கப்பட்ட மொழி உரிமையும், கல்விக்கு தரப்படுதலும், பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்பட்டதும் அதிபர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் தான் உச்ச பட்சமாய் அன்று இடம்பெற்றது. சோஷலிச குடியரசு யாப்பிலும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக கேள்வியெழுப்பாமல், நாற்கலியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வழக்கமான வயசான தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சில் இனி எதுவும் நடக்கப்போவதில்லை என்பதை பட்டவர்த்தனமாய் தெரிந்து கொண்ட தமிழ் இளைஞர்களுக்கு இறுதியாய் இருந்த ஒரே வழி ஆயுதப்போராட்டம்! அரசியல் வன்முறை!

தமிழர்களின் உரிமைப்போர் இலங்கையை விட்டு வெளியே தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று பலவிதமான வழிகளில் முயன்றார்கள். இதன் ஓர் முன்னோடியாக 1983 இல் புதுடெல்லியில் அணிசேரா நாடுகளின் ஏழாவது உச்சிமாநாட்டில் தேசிய விடுதலைக்கான தமிழரின் போராட்டம் என்கிற அறிக்கை வரையப்பட்டு மகஜராக சமர்ப்பிக்கப்பட்டது. அணிசேரா நாடுகள் அன்று முதல் இன்று வரை இலங்கையின் போர்க்குற்றங்கள் என்கிற வரையிலும் தமிழர்களுக்காக எதையாவது செய்ததா என்பது கேள்விக்குறியே!! அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பை காட்ட ஈழத்தமிழன் இனப்படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை அணிசேரா நாடுகளின் நிலைப்பாடு!

ஈழப்போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வேண்டியோ, வேண்டாமலோ இந்தியா தலையிடும் ஒரு நிர்ப்பந்தமும் உருவானது. அது இந்திரா காந்தியின் காலத்தில் தான் முக்கியமாய் ஆயுதப்போராட்டத்திற்கு உதவி என்கிற பேரில் ஈழப்போராளிகளை ஒரு பிராந்திய ரவுடிகளாய் உருவாக்குவதையே நோக்கமாய் கொண்டு செயற்பட்டது. இந்திரா காந்திக்கும் கூட ஈழத்தமிழர்களுக்கு ஒரு தனியரசை உருவாக்கி கொடுக்கும் நோக்கம் இல்லையென்பதை தெளிவாக புரிந்து கொண்டே ஈழவிடுதலையை முன்னெடுத்தவர்கள் விடுதலைப்புலிகள். இந்த காரணத்துக்காகவே இந்தியாவால் ஆரம்பத்திலிருந்தே ஓரங்கட்டப்பட்டவர்கள்.

இவ்வாறாக ஈழத்தமிழர்களின் உரிமைகள் குறித்த போராட்ட வரலாற்றில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை நினைவு கூறும் நாள் தான் மாவீரர் நாள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுதலைக்காய் ஆயுமேந்திய போரில் களப்பலியானவர்கள். இன்றும், இலங்கை அரசின் வதை முகாமில் முகவரி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

தமிழீழவிடுதலைப்புலிகளின் அமைப்பில் சங்கர் என்கிற சத்தியநாதன் வீரமரணமடைந்த நாளே மாவீரர் நாளாய், தமிழீழ தேசிய எழுச்சி நாளாய் கொண்டாடப்படுகிறது. 1982, நவம்பர் 20 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஓர் ராணுவச்சுற்றிவளைப்பில் சுடப்பட்டு நவம்பர் 27 ம் திகதி வீரமரணமடைந்தவர்.

இவ்வாறு ஈழவிடுதலைக்காய் போராடியவர்களில் மிக முன்னோடியாக கணிக்கப்படுபவர்களில் ஒருவர் சாள்ஸ் அன்ரனி என்கிற சீலன். இவர்களின் போராட்ட குணம் என்பது எங்கிருந்து வேர்விட்டது என்கிற கேள்விக்கு பதில் அதிகம் தேடவேண்டியதில்லை. இலங்கை அரசின் இனப்பாகுபாட்டு கொள்கைகளே வித்திட்டது என்றால் அது மிகையில்லை. அதற்கு உதாரணமாக சீலனையே சொல்லலாம்.

1979 ம் ஆண்டு சிறிலங்கா அரசின் சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின்படி பதவியேற்கவிருந்த இலங்கை முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிற்கும், அரசியல் யாப்பிற்குமான தனது தனிப்பட்ட எதிர்ப்பை காட்ட திருகோணமலை இந்துக்கல்லூரியில் பாஸ்பரஸ் கொண்டு சிங்கள தேசிய கொடியை ஏற்றும் போது எரித்ததற்காக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானவர். தன்னால் தனியே சிங்கள இனவெறிக்கு எதிராக போராட முடியாது என்பதை உணர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டவர்.

இவ்வாறு தங்கள் தனிப்பட்ட செயற்பாடுகளால் இலங்கை அரசின் இனப்பாகுப்பாட்டு, இனவழிப்புக்கு எதிராக செயற்பட முடியாதென நினைத்து தங்களை அமைப்புகளோடு இணைத்து கொண்டார்கள் போராளிகள். இன்று அவர்களை நினைவு கூறவே எங்களுக்கிடையே அடித்துகொண்டு நாங்கள் குழுவாய் பிரிந்து நிற்க வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலையும் இல்லாமல் இல்லை!

ஈழத்தின் விடிவிற்காய், விடுதலைக்காய் ஊன் இன்றி, உறக்கமின்றி, தாங்கொணா சித்திரவதை அனுபவித்தும், அனுபவித்துக்கொண்டும் இருக்கும் மாவீரர்கள்.ஒரு நாள், ஒருபொழுது எங்கள் செளகர்யங்களுக்கு பங்கம் வந்தால், ஒரு நாள் இயல்புவாழ்க்கை தடம்மாறினால் கூட எப்படியெல்லாம் புலம்பித்தீர்க்கிறோம். வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய் எப்படியெல்லாம் சிங்கள ராணுவமுகாமின் முன்னே செவிப்பறையை அதிரவைக்கும் குண்டுச்சத்தங்களின் நடுவே எமக்காய் காவல் இருந்தவர்கள். எங்கள் விடுதலைக்காய் தங்கள் இளமையை, சந்தோசங்களை மறந்து, துறந்து விடுதலைக்கனவை மட்டுமெ நெஞ்சில் சுமந்தவர்கள். மரணத்தையே வென்றவர்கள் இவர்கள்.

இந்த நாலு வரிக்களுக்குள் அடங்கவோ, அடக்கப்படவோ முடியாதது இவர்களின் உயர்ந்த லட்சியமும், தியாகங்களும்.

எனக்கு தெரிந்தது அவர்களின் இலட்சிய வேட்கைக்கும், தியாகத்திற்கும் அதற்குரிய மரியாதையை கொடுப்பதுதான்!Image: Google

நவம்பர் 13, 2011

ஈழம்- இரட்டை நாக்கு பிழைப்புவாதம்!!!இயற்கையின் நியமங்களுக்கும், காலத்தின் வரையறைகளுக்கும் அப்பாற்பட்டு  உலகில் எதுவும் நடந்துவிடுவதில்லை. தனிமனித வாழ்வு முதல் சமூக, பொருளாதார, அரசியல் களம் வரை அதற்கு விதிவிலக்கு இல்லை. பரிணாம வளர்ச்சி கண்டு, விஞ்ஞான முன்னேற்றத்தின் வழி பல அற்புதங்களை மனித குலம் நிகழ்த்தியிருந்தாலும் காட்டுமிராண்டித்தனம் இன்னும் அவனிடமிருந்து மறையவில்லை என்பதை உலகின் எத்தனையோ மனிதகுல அழிவுகள் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.

மனித குலம் நாடோடிகளாய் திரிந்து மிருகங்களை வேட்டையாடி புசித்து, மிருகங்கள் போல் புணர்ந்து இன்று பல்கிப்பெருகி அதன் பன்முக வளர்ச்சி விண்ணையும் தொட்டு நிற்கிறது. இதையெல்லாம் மறந்து இன்று நீ பெரிசு, நான் பெரிசு என்கிற அடிதடிகளும் இல்லாமல் இல்லை. அன்று உயிர்தப்பித்தல், உய்வு என்கிற அளவோடு இருந்தது இன்று பொருளுக்கும், அரசுரிமைக்கும், அடக்கியாளவும் ஆலாய்ப் பறக்கிறது.

மனிதகுலம் பழங்குடி வாழ்விலிருந்து கொஞ்சம், கொஞ்சமாய் முன்னேறி அரசமைத்தல், அரசின் கடமைகள், சட்ட ஒழுங்கு என்று அரசியல் ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவையனைத்தின் தோற்றுவாய் மதம் சார்ந்த அடிப்படைகளே என்பது சமூக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவு. அதன் அடிப்படைகளை இன்றும் மிலினியத்தில் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.

எப்படியோ ஆயிரமாயிரம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் எல்லாமே அரசியல் என்றான பின் காலத்துக்கு காலம் அதன் வடிவங்களும் கூட மாறிக்கொண்டே இருக்கிறது. மன்னர் ஆட்சியிலிருந்து, பரம்பரை ஆட்சி, காலனியாதிக்கம், அங்கிருந்து விடுதலை பெற நினைத்தவர்களுக்கு/ நாடுகளுக்கு சுய நிர்ணயம் இப்பிடித்தான் தேசங்களும் தேசியங்களும் சிறிது, சிறிதாய் கட்டியெழுப்பப்பட்டு கொண்டிருக்கப்படுகின்றன இன்றுவரை. காரணம், மக்கள் தங்கள் தனித்தன்மைகள், அவர்களுக்கே உரிய சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அது சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும் என்கிற அரசியல் அபிலாசை தான்.

சுய நிர்ணயம் என்பதற்கு ஐ. நா. வின் அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலை நாட்டுவது பற்றிய சர்வதேச சட்ட விதிகள், அதன் வழி சுய நிர்ணயமும் சம உரிமை விதிகளும் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது மக்கள் அரசியல் அபிலாசைகள். சுய நிர்ணயத்தில் கூறப்படும் வரையறைகளும் கூட அரசியல். பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்தே சுட்டி நிற்கிறது.

ஜோசெஃப் ஸ்டாலினும் கூட தேசியம் என்பதற்கு அதற்குரிய வரையறைகளை கூறியிருக்கிறார். அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றும் கூட. தேசம், தேசியம் பற்றிய அவரது வரைவிலக்கணம் கூட தாயகமண், பொது மொழி, பொது பொருளியல், பொது பண்பாட்டில் உருவான நாம், நம்மவர் என்கிற உணர்வு என்பது தான்.

ஆக, இந்த பண்புகள் அனைத்தும் ஈழத்தின் சுய நிர்ணய உரிமை குறித்த விடயத்தில் சாதகமாகவும், சட்டபூர்வமானதாகவும் உள்ளது. இருந்தும் சர்வதேச சட்டங்களில் வழியிருந்தும் இன்னமும் ஈழத்தமிழர்களின் தமிழ்தேசியம்/சுய நிர்ணயம் குறித்த உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளின் இனவழிப்பு மாதிரி என்பதும் ஒரு மக்களின் (Peoples) தேசிய அடையாளங்கள், உரிமைகள், அடையாளங்கள் இவற்றை அழிப்பதையே அடிப்படையாய் கொண்டிருப்பது வரலாறு.

என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தைப்பொறுத்தவரை சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சுய நிர்ணயமும் தமிழ்த்தேசியமும் என்கிறவரையிலேயே முன்னெடுக்கப்படுகிறது எங்களின் உரிமைப்பிரச்சனை. தமிழ்தேசியம் சிங்கள தேசியத்தின் குயுக்தியையும், கொடூரத்தையும் புரிந்து கொண்டு கட்டியமைக்கப்பட்டது. அது தமிழ்த்தேசியம் பேசி இனத்துவேசம் வளர்ப்பதல்ல. பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட எம் தேசம், தேசியம் என்பவற்றை மீளப்பெறுவதற்கான தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கருத்தியல் வடிவம்.

தந்தை செல்வா காலத்தில் தமிழர்களுக்கான தமிழ் தனி அரசு கட்டியமைக்கப்படவேண்டிய தேவையின் அவசியம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியால்  1977 இல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டு வெற்றியும் ஈட்டியது வரலாறு.

சரி, இனி தலைப்புக்கு வருகிறேன். ஏன் இன்று இது பற்றி மீண்டும், மீண்டும் பேச வேண்டியிருக்கிறது! எனக்கு ஈழம் பற்றி பதிவு எழுதியோ அல்லது புத்தகம் போட்டோ புகழ், பணம் தேடும் நோக்கமோ, தேவையோ கிடையாது. சிங்கள பேரினவாதத்திற்கு துணை போகும் சில, பல கருத்துகள் வலிந்து திணிக்கப்படுகிறது தமிழர்கள் மனங்களில் என்கிற ஆதங்கமே இதை எழுத வைக்கிறது.

மக்கள் ஆணை வழங்கப்பட்ட தமிழ்த்தேசியத்துக்கு வடிவம் கொடுத்த போராளிகளின் போராட்ட வடிவங்கள், அரசியல் நகர்வுகள் குறித்த விறுவிறுப்பான எழுத்துகள் அதன் சத்தியத்தன்மையை சோதனைக்கு உள்ளாக்கும் போல் தோன்றுகிறது. அது வருத்தமும் அளிக்கிறது. எனக்கு ஈழம் குறித்த எந்தவொரு வெளிவராத உண்மைகள், மர்மங்கள் எதுவும் தெரியவும் தெரியாது. அதேபோல், அந்தப் பாணியிலான எழுத்துகளில் தொலைந்து போகவேண்டிய தேவை எனக்கும், என் போன்றவர்க்ளுக்கும் கிடையாது. கிராஃபிக்ஸ் படம் போட்டு எதையும் நான் நிரூபணம் செய்யவேண்டியதும் இல்லை. எனக்கு எங்கள் போராட்டத்தின் நியாயக்கூறுகளும், அரசியல் அபிலாஷைகளின் அடிப்படைத்தன்மையும் புரிகிறது.

ஈழத்திற்காய் போராடியவர்கள் இறுதிப்போரில் போர்க்குற்றம் இழைத்தால் அதை சட்டப்படி விசாரிக்க வேண்டியது தானே நியாயம். அதை தானே தமிழர்களும் சொல்கிறார்கள். ஆனால், அது பற்றி குயுக்தியாய் எழுத வேண்டிய தேவை இல்லை எமக்கு. நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டியது எம் சுய நிர்ணய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சர்வதேச அரசியல் சாதக, பாதக நிலைமகளை அலசி ஆராய்ந்து செயற்படுவதே என்பது என் புரிதல்.

ஐ. நாவின் மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஈழத்தின் இறுதிப்போரில் மீறப்பட்ட போர்விதிகள் (to assess the nature and scope of alleged violations - Brian Senewiratne) பற்றி மட்டுமே பேசுகிறது. இதற்கே இலங்கை அரசு தைய, தக்கா என்று குதிக்கிறது. இலங்கை அரசின் போலிமுகம் சர்வதேசத்தில் கிழித்து தொங்கவிடப்படுகிறது இப்போது. இதில் எமக்காய் போராடியவர்கள் குறித்த தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க நேரமும், தேவையும் ஏது என்று ஒதுங்கவும் முடியவில்லை. போராடியவர்கள் குறித்த தேவையற்ற விமர்சனங்கள் வழி எங்கள் சுய நிர்ணய உரிமையின் குரலும் ஒடுக்கப்படும். சுய நிர்ணய உரிமை மறைமுகமாக நசுக்கப்பட்டால் நாடு கடந்த தமிழீழ அரசு அர்த்தமற்றதாக்கப்படும். வெறும் போர்க்குற்றங்களில் முடிக்கப்படும் எங்கள் உரிமைப்போராட்டம்.

இவர்கள் என்னதான் அரசியல் சித்தாந்தம் வேதாந்தம் சொன்னாலும் ஈழத்தமிழன் ஒருபோதும் உயிர்ப்பயம் இன்றியோ அல்லது தன்னுடைய சொந்த மண்ணில் சுதந்திரமாவோ வாழமுடியாத அளவு பெளத்த சிங்கள தேசிய, ராணுவ அடக்குமுறை குறித்த உளவியல் பாதிப்பு, பயம், வேதனை எல்லாமே வார்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதற்குப்பிறகு எந்த அடிப்படையில் ஒரே இலங்கைக்குள் தீர்வு என்று சொல்ல முடிகிறது. தமிழ்தேசிய கூறுகள் இல்லாதொழிக்கப்பட்டு, தமிழினம் அழிக்கப்பட்டு, ஒடுக்கப்படுவதற்குரிய வரலாற்று சான்றுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒட்டு மொத்த உலகமும் எங்களை ஏமாற்றப்பார்க்க அதுக்கு ஏற்றாற்போல்  நாமும் பதிவு எழுதுவது நல்லதில்லை!! என்னால் முடியவில்லை!!

அரச பயங்கரவாதத்தால் ஈழத்தமிழனுக்கு உயிர்ப்பயம் காட்டி, உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி அவனை பெளத்த சிங்களத்தை நேசிக்கும் தமிழனாய், தனி ஈழம் கோராதவனாய் உருவாக்க சர்வதேசம் முயல்கிறது. அதேபோல், அங்குள்ள அரசியல்வாதிகள் பற்றியும் நம்பிக்கை தரும் வகையில் செய்திகள் கிடையாது. அவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய, மற்றும் இந்திய விருப்பு வெறுப்புக்கே தம் நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களும் ஆங்காங்கே கொஞ்சம் கருத்தளவில் மாறுபாடு கொண்டவர்களாகவே இருப்பதாக லக்ஸ்மி வரதராஜாவும், R. சேரனும் தங்கள் அண்மைய புலம்பெயர் தமிழர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (Empowering Diaspora, The Dynamics of Post-war Transnational Tamil Politics)  ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, ஈழத்தின் மனிதாபிமான உதவிகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து இலங்கை அரசுடன் ஓர் உடன்படிக்கை காணவேண்டும் என்று சொல்பவர்கள், இறுதியாக தாயகம், தேசியம், தன்னாட்சி என்று சொல்லும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமப்பிலிருந்து பிரிந்து வந்தவர்களின் அணி) என்று பிரிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், சுய நிர்ணய உரிமை என்பதிலிருந்து புலம்பெயர் தமிழன் எள்ளளவும் விலகவில்லை என்பதற்குரிய சாட்சி நாடு கடந்த தமிழீழ அரசு!!!

இந்த அளவிற்கு ஒரு இலங்கை அரசாங்கத்தை விட்டு தமிழர்களுக்கு எதிராக வன்முறை அரசியல், பயங்காரவாதம் பரப்பி விட்டதுமில்லாமல் சில்லுண்டித் தனமாக அதுக்கு இந்தியா மாதிரி நாட்டையும் துணைக்கு வைத்துக்கொண்டு அடிக்கிற அரசியல் கூத்துக்கு நாங்கள் ஏன் இடமளிக்க வேண்டும். எங்களுடைய இன்றைய அரசியல் தேவையை உணர்ந்து ஒரு இனமாக முன்னேறுவது நல்லது என்பது என் கருத்து. அதை விடுத்து இன்னும் துலங்காத மர்மம் என்கிற வகையில் கட்டுரை எழுதி, மக்களை குழப்பியடித்து, போராடியவர்கள் பக்கமுள்ள நியாயத்தையும் மழுங்கடிக்கும் தேவை தான் என்ன? ஈழப்போராட்டம் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல் ஈழத்தமிழர்களால் இவ்வளவு தூரம் கட்டியெழுப்பப்பட்டு இன்று சர்வதேச கவனத்திலிருந்து ஐ. நா. வரை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

வெண்ணெய் திரண்டு வரும் தருணத்தில் தாளியை உடைக்காமல் இருப்பதே மேல்.

படம்: Google

அக்டோபர் 19, 2011

ஈழத்தமிழர்களை மரணயாத்திரை போகச்செய்தவர்கள்!!


எப்போதும் போல் ஈழம் குறித்து செய்திகள் படித்தால், நம்பிக்கையும், அவ நம்பிக்கையும் ஒருசேர ஆட்கொள்ளும். ஆனா, இப்போதெல்லாம் சர்வதேசம் சொல்லிவைத்தாற் போல் போர்க்குற்றம், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்று பொளந்து கட்டுகிறார்கள். உண்மையில் ஈழம் குறித்த தெளிவான நிலை தெரிந்தும், எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து அறிந்தும் சுற்றி வளைத்து அது குறித்துப் பேசாமல் மற்றதெல்லாம் பேசுகிறார்கள் இன்னும் பேசுவார்கள்.

வாழவழிதெரியாதவன் வழி கேட்டால் சுடுகாட்டுக்கு வழி காட்டுவாங்களாம். அது போல் தான் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக எங்களுக்கு சுய நிர்ணய உரிமை கொடு என்று கேட்டால் இந்தியாவும் அமெரிக்காவும்  ஈழத்தமிழனுக்கு வழி காட்டினார்கள், மரணயாத்திரை போ என்று. ஒன்றா, இரண்டா... ஒரு ஊர் மிச்சமில்லை, சுடுகாடு மிச்சமில்லை. கடைசியில் காடுவரை கூட ஓட, ஓட  தலைக்குமேல் குண்டு போட்டே விரட்டினார்கள் மரணத்தின் வாசல்வரை. சிங்களராணுவத்தின் கைகளில் சரணடையுங்கள் உங்களுக்கு சொர்க்கம் என்றார்கள். ஆனால், கிடைத்ததென்னவோ மரணமோட்சம். தமிழர்கள் மனிதர்களாய் கூட மதிக்கப்படாத கேவலமும், சித்திரவதையும்.

ஈழப்பிரச்சனையின் ஆணிவேர் மொழி, கல்வி, பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தமிழர்களின் மண்ணில் மக்கட்தொகை கட்டமைப்பு மாற்றப்பட்டு எங்கள் அரசியல் பிரதி நிதித்துவம் பறிக்கப்படுவது. ஆக அடிப்படையில் பிரச்சனை வேறாய் இருக்க இந்தியா, அமெரிக்கா, சீனா அரசியல் ஆதிக்கப் போட்டியில் இடையே நசுங்கிச் செத்தது ஈழத்தமிழன் தான். அமெரிக்காவின் பயங்கரவாததிற்கு எதிரான சித்தாந்தத்தில் நேரடியாக இஸ்லாம் நாடுகள் பாதிக்கப்பட்டால் மறைமுகமாக கொன்றொழிக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். எத்தனையோ விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சமூக ஊடகங்கள் முதல் விக்கிலீக்ஸ் வரை அமெரிக்காவின் முகமூடி கிழிக்கப்பட்டாலும் இன்னும் அசராமல் பேசுவார் அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலர் ரோபர்ட் ஓ பிளேக், ஈழவிடயத்தில். இவர் இலங்கைக்கு விடும் எச்சரிக்கைகளுக்கு ஒரு அளவே இல்லை!! ஆனா, அதெல்லாம் சும்மா பிளேக் தமாஷ் காட்டுகிறார் என்று வேடிக்கை பார்க்கும் எங்களுக்கும் தெரியும்.

ஈழத்தமிழர்களும் ஐ, நா. வின் மனித உரிமைகள் சபைமுதற்கொண்டு தனி நபர்களாய் இலங்கையின் போர்க்குற்றவாளிகள் என்று கருத்தப்படுபவர்கள் மீது வழக்கு தொடுத்தும், தொடுக்கவும் தம்மாலான முயற்சியை செய்துகொண்டெ இருக்கிறார்கள். இந்த முயற்சியால் குறைந்தபட்சம் இலங்கையின் முகமூடியை கிழிக்கலாம். இவர்களின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா என்று தொடங்கி இப்போ அவுஸ்திரேலியா வரை தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களுக்கும், தூதுவர்களுக்கும் எதிராக வழக்கு தொடர கொஞ்சூண்டு தர்மசங்கடம் இலங்கைக்கு. எப்படியும் அடித்துப் புரண்டு இந்தியா காப்பாற்றும் என்கிற நம்பிக்காயாய் கூட இருக்கலாம், வழக்கம்போல்.

இலங்கை ஜனாதிபதி பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள அவுஸ்திரேலியா செல்லப்போவதாக இருக்கிறார். போர்க்குற்றவாளிக்கு பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு ராஜபக்‌ஷேவுக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து இந்தியா போல் அவுஸ்திரேலியாவும் வரவேற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எற்கனவே பிரித்தானியா சென்று பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருந்தவர் ஈழத்தமிழர்களின் முயற்சியால் திருப்பி விரட்டியடிக்கப்பட்டவர். இரட்டை குரியுரிமையில் அவுஸ்திரேலிய குரியுரிமை பெற்றிருக்கும் முன்னாள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பாலித கோகனவுக்கும், மற்றும் முன்னாள் கடற்படைத்தளபதியும் இன்னாள் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவருமான திசர சமரசிங்கே மீதும் இப்போ வழக்கு போடவும் முயற்சிகள் ஈழத்தமிழர்களால் செய்யப்படுகிறது.

போர்க்குற்றங்களை புரிந்துவிட்டு தூதுவர் விலக்களிப்பு சிறப்பு அதிகாரங்கள் (அது வேறொன்றுமில்லை Diplomatic Immunity ) மூலம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் நரித்தனம். அப்படி தப்பித்தும், விடாமல் வழக்கு போட்டு ஜேர்மனியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி இலங்கை சென்றவர் முன்னாள் ராணுவ அதிகாரியும் பின்னாளில் ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வாத்திகானுக்கான இலங்கைக்கான உதவி தூதுவருமான ஜகத் டயஸ். இன்னும் ஐ. நா. வுக்கான உதவி நிரந்தரப் பிரதிநிதியாய வலம் வருபவர் முன்னாள் ராணுவ கட்டளைத்தளபதியான ஷவேந்திரா சில்வா என்பவர். இவர் New York Post - Sunday Edition ஒன்றில் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு மாறாக போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டியவர் ஐ. நா. வின் உதவி பிரதி நிதியாய நியமிக்கப்பட்டவர் என்று குறிப்பிடுகிறது.


அமெரிக்காவும், இந்தியாவும் மட்டுமல்ல இந்த ராணுவ அதிகாரிகளும் தான் ஈழத்தமிழர்களை மரணயாத்திரை போகவைத்தவர்கள். இப்போ இவர்களை சட்டப்படி போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

அக்டோபர் 10, 2011

எதுவரை ஈழத்தமிழர்கள் காத்திருக்க வேண்டும்!!


ஈழம்...! பேசினாலும் முடியாத கதையாய், அழுதாலும் தீராத வலியாய் ஈழத்தமிழர்களுக்கு இருக்க, சர்வதேசத்தில் எல்லோருடைய நிகழ்ச்சி நிரலிலும் அவர்களின் தேவைக்கேற்றாற்போல் இடம்பிடித்திருக்கிறது. பல நேரங்களில் புரிந்தும், சில நேரங்களில் புரியாமலும் இருக்கிறது ஈழத்தமிழர்களுக்கான சர்வதேசத்தின் முதலைக்கண்ணீர். தமிழர்களும் இதிலெல்லாம் ஒருநாள் மாற்றம் வரும், அந்த மாற்றத்தின் மாற்றம் நாங்கள் அசைக்கும் ஒவ்வொரு துரும்பிலும் இருக்கிறது என்று இடைவிடாத முயற்சிகள் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். வாய் கசந்ததோ, இனிப்பு கசந்ததோ என்கிற நிலையாய் இவர்கள் குறித்தும் சில குழப்பங்கள். நாங்கள் தான் தமிழர்கள் ஆயிற்றே!!! இதைவிளக்க பழமொழி தேவையில்லை. தமிழர்கள் என்கிற அடைமொழியே போதும . .

தனி ஈழம் என்கிற கருத்துருவம் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு சிங்கள அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் பலியாக்கொண்டிருந்த, இன்னமும் பலியாகும் தமிழர்களின் அறிவுக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்ட நாள் முதல் அது விமர்சனப் பொருளாகவே பரிமளிக்கிறது. கூடவே பரிமாண வளர்ச்சியும் கண்டிருக்கிறது, மறுப்பதற்கில்லை. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது கம்யுனிஸ்ட் கட்சியாலும் (1944), இலங்கை தமிழரசு கட்சி (1951- Federal Party), வட்டுக்கோட்டை தீர்மானம் (1976), திம்பு பேச்சுவார்த்தை (1985), பிறகு 2002 இல் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. யார், யாரோ போராடினார்கள் எங்கள் பறிக்கப்பட்ட மண்ணுக்கும், உரிமைகளுக்குமாய். சிலபேருக்கு அது பிழைப்புவாதம். இறுதிவரை போராடியவர்கள் நாங்கள் கடைசிவரை கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர்கள் என்கிற அழியாப்புகழுடன் இறுமாப்புடன் வரலாற்றில் வாழ்கிறார்கள், என்றென்றும் வாழ்வார்கள்!

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டினானாம். புலிகளின் கொள்கைகளை விமர்சிக்க திராணியற்றவர்கள் அவர்களையே விமர்சித்து தங்கள் கையாலாகத்தனத்தை இன்றுவரை  வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  புலிகளை விமர்சிப்பதை தவிர ஈழத்தமிழர்களுக்காய் ஏதாவது செய்திருப்பார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது போலத்தான் விமர்சிக்கப்பட்டது தமிழீழ விடுதலிப்புலிகள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு கொடுக்க நினைத்த வடிவமும். ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணயம், தனியாட்சி என்பதெல்லாம் புலிகள் காட்சிக்குள் வருமுன்பே உருவான கருத்துருவங்கள். புலிகள் அதை நியமாக்கப் போராடினார்கள். எப்போதுமே தங்கள் கொள்கையிலும், அடைய நினைத்த அரசியல் இலக்கிலும் இருந்து விலாகமல் பல தடைகளை, அவதூறுகளை கடந்து வந்தவர்கள் புலிகள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முட்டை போட்டார்கள். அந்த முட்டையில் முடி இருக்கிறதா, இல்லையா என்பது சிலரது வாதம். சிலருக்கு அதில் முடி இருக்கிறது. அது போர்க்குற்றம் என்கிற முடி என்பது பெரும் களிப்பு. என்னமோ உலகத்தில எல்லாரும் யோக்கியர்கள். புலிகள் இவர்களுக்கெல்லாம் கீழானவர்கள் என்கிற சிந்தனையை தமிழர்களிடமே வளர்த்தெடுக்க நினைக்கிறார்கள் போலும். இன்னமும் அது குறித்து குவியவில்லை வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது குறித்த தேடலின் முடிவில் ஒருவேளை திரும்பிப் பார்த்தால் ஈழத்தமிழினம் முற்றாய் துடைத்தழிக்கப்பட்டிருக்கலாம். அது பற்றி நாங்கள் பிறகு யோசிப்போம். இப்போதைக்கு புலிகளின் மேல் எல்லாப் பழியையும் சுமத்தி விட்டு நடையை கட்டுவோம். அல்லது, புலிகளை விமர்சித்தே பிழைப்பை நடத்துவோம் என்பது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் உறுதுணையாய் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் கொள்கைப்பிடிப்பாய் இருக்கலாம்.

இலங்கையின் உச்சநீதிமன்றம், அரசியல் யாப்பு முதல் உள்ளூராட்சியின் துணைவிதிகள் வரை தமிழர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்று சர்வதேச நெருக்கடிகளை தீர்க்கும் அறிஞர் குழாம் பக்கம், பக்கமாய் அறிக்கை எழுதுவார்களாம். அட கருமாந்திரமே!!! அதுக்குத்தானே, அவற்றிலெல்லாம் மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்காகத்தானே புலிகள் போராடினார்கள் என்றால்; இல்லையாம், அவர்கள் பயங்கரவாதிகளாம். அமேரிக்கா பொய்யை உண்மை மாதிரி சொன்னா அதை இவர்கள் (சர்வதேச நெருக்கடிகள் குழு) மட்டும் என்ன மறுக்கவா போகிறார்கள். இவர்களின் தர்ம நியாயப்படி ஐ. நாவின் மேற்பார்வையில் சுயநிர்ணயம் வேணுமா வேண்டாமா என்று தமிழர்களிடத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பு செய்ய பரிந்துரைத்தால் இவர்கள் செய்யும் உலகமகா சேவைகளின் சிறப்பை மெச்சலாம். ஆனால், இவர்களோ ஈழவிடயத்தில் புலம்பெயர் தமிழர்களை குத்திக்காட்டுவதையே இலங்கை அரசுக்கு ஆதரவு தருவது போல் செய்பவர்கள். 

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது புலிகளின் சித்த்தாந்தம். அது புலத்தில் புலி ஆதரவாளர்களால் (அவர்களின் பதம் Pro-LTTE Ideology) மட்டுமே பேசப்படுகிறது என்பது மாதிரியான ஒரு தோற்றப்பாட்டை இவர்கள் உருவாக்குகிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. அது இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க ஒரு தடையாய் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் புலிகளின் தன்னாட்சி, தேசம், தேசியம் என்கிற கோட்பாடுகளை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுகிறது சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group)

புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னும் இன்னும் கூட புலத்தில் வாழும் தமிழர்கள் எமக்குரிய சுயநிர்ணய உரிமை கேட்கிறார்கள். அதுக்கு பதில் சொல்ல யாருமில்லை. இலங்கையின் அரசியல் யாப்பு, நீதித்துறை, சட்ட ஒழுங்கை மட்டும் அறிவுஜீவிகளும் கொள்கைவகுப்பாளர்களும் விமர்சித்து எழுதிவிட்டு அங்கெல்லாம் மறுக்கப்படும் உரிமைகளுக்கு என்ன தீர்வு என்று கேட்டால் இவர்களுக்கு கசக்கிறது. பயங்கரவாத ஒழிப்பில் போர்க்குற்றம் நிகழ்ந்து, மனிதத்திற்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டது என்றும் ஏதேதோ சொல்லி பிரச்சனையின் மூலம் பற்றியோ அல்லது தமிழர்களின் அரசியல் அபிலாசை பற்றியோ பேச மறுப்பதோடு, புலம் பெயர் தமிழர்களை குற்றங்குறை கூறுவதையும் முழுநேரமாய் செய்வார்கள் போல.

இப்போ இது குறித்து நான் இங்கே முக்குவதற்கு காரணம், இப்போ மறுபடியும் இலங்கையில் கொஞ்சம், கொஞ்சமாக ஈழத்தமிழர்களின் "சுய நிர்ணய உரிமை" குறித்து அறிவுஜீவிகள் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பது தான். இலங்கையின் பத்திரிகை சுதந்திரம், தனிமனித உயிர் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ராணுவ அடக்குமுறை மூலம் பறிக்கப் பட்டாலும், அது குறித்து இப்போது இவர்கள் பேசுவது நல்லதோர் அறிகுறியாய் தோன்றுகிறது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை/தனியாட்சி குறித்த பேச்சுகள் எப்போதோ தோற்றம் பெற்றாலும், அது அப்பப்போ இலங்கை அரசால் தட்டிக்கழிக்கப்பட்டே வந்தது. இப்போ ராஜபக்கேஷேக்களின் ஆட்சியில் அட்டூழியம் தலைவிரித்தாட, நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்க சிங்கள அறிவு சீவிகளும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இலங்கையின் அரசியல் திருத்தச்சட்டங்கள் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பதிமூன்றாவது திருத்தச்சட்டம் காத்திரமான முறையில் செயற்படுத்தப்பட வேண்டுமாம்!! இது இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கான அதிவிஷேட கண்டுபிடிப்பு என்பது உபரித்தகவல். பதினேழாவது திருத்தச்சட்டம் என்பது பதினெட்டாவது திருத்த சட்டத்திற்கு வழியமைக்கும் என்றெல்லாம் எழுதுகிறார்கள். நல்ல விடயம்.  அட, நீங்க குழம்பாதீங்க இந்த திருத்த சட்ட மூலங்களின் வழி அவர்கள் அறிவுறுத்துவது இலங்கையின் ராணுவ ஆக்கிரமிப்பை ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தான் அப்படியென்று இலங்கை விடயத்தில் கொஞ்சம் யதார்த்தம் மீறி யோசிக்கிறார்கள் போல. குறிப்பாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் வரை தனது அதிகாரத்தை செலுத்தும் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை குறித்த மாற்றம் பற்றி குமுறுகிறார்கள் அவ்வளவே.

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் என்றவுடன் தான்  இன்னோர் விடயமும் ஞாபகம் வருகிறது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த சட்ட மூலம் வடக்கு-கிழக்கு இணைப்பு, அதிகாரப் பரவலாக்கல் என்று இருந்தது.  அங்கேயும் பிற்காலத்தில் உச்சநீதிமன்றம் வடக்கு-கிழக்கை பிரித்தது வேறு விடயம். 2002 ம ஆண்டு பேச்சுவார்த்தைகளின்  போது சமஷ்டி ஆட்சிமுறையில் அதிகாரப்பரவலாக்கம் என்கிற பதத்தை பாவிப்பது தவறு என்று தான் சுட்டிக்காடியத்தை கனேடிய நிபுணர்கள் ஏற்றுக்கொண்டதாக போரும் சமாதானமும் நூலில் எழுதியிருக்கிறார் அன்ரன் பாலசிங்கம். காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதுகுறித்து குளறுபடியான கருத்துக்களை கொண்டிருப்பது தான் என்கிறார். அது எவ்வளவு தூரம் குளறுபடியானது என்பதற்கு முன்னாள் முதலமைச்சர் என அழைக்கப்பட்ட  வரதராஜப் பெருமாள் தனது பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று துறந்துவிட்டு இந்தியாவிடம் மறுபடியும் தஞ்சமடைந்ததில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

புலிகள் சமஷ்டி ஆட்சிமுறையில் தீர்வு தேடினார்கள் என்கிற விமர்சனப் பார்வைக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். இங்கே இந்தக்கூற்றின் மூலம் அவர் சொல்ல விளைந்தது தமிழர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியே. அது உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமை (Internal, External Self-Determination) குறித்த சர்வதேச, ஐ. நாவின் (அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச விதிகள்) சட்ட திட்டங்களுக்கு அமைவாக பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆராயப்பட்டது.

எது எப்படியோ ஆரம்பத்திலிருந்தே, அதாவது புலிகளின் காலத்துக்கு முன்பிருந்தே ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது முன்வைக்கப்பட்டே வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அது புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் ஏனோ நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இப்போது ஈழத்திலிருந்து அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படும் ஓர் குற்றச்சாட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து காத்திரமாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பது தான். அதுக்குப் பின்புலத்தில் இந்தியா செயற்படுகிறது என்பது பட்டவர்த்தனமான உண்மை.

தவிர, முக்கியமாய் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே ஈழப்பிரச்சனையின் முனைப்பும் மழுங்கடிக்கப்படுகிறது. சர்வதேச சட்டங்கள், நியாயம், தர்மம் என்று எல்லாமே ஈழத்தமிழர்களின் விடயத்தில் சரியாய் அமைந்திருந்தும் போர்க்குற்றங்கள் குறித்த நியாயமான விசாரணையே இழுபறியாய் இருக்கிறது. போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டியது தான். ஆனால், அதை மட்டுமே நம்பியிருந்து எங்கள் சுயநிர்ணய உரிமை குறித்த குரலை வெறுமனே அது புலம்பெயர் தமிழர்களின் கோட்பாடு, கொள்கை என்கிற சர்வதேச சூழ்ச்சிக்கு பலியிடுவது நியாயமில்லை. அதை இப்போது ஈழத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் பேசத் தலைப்பட்டிருப்பது ஆரோக்கியமான ஓர் நகர்வாய் தோன்றுகிறது. தமிழர்களின் பூர்வீக வடக்கு, கிழக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை, ராணுவ முகாம்களை முற்றாக அகற்றிவிட்டு அங்குள்ள தமிழர்களிடம் எங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமா என்று கேட்கவேண்டியது தானே.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது புலிகளின் கண்டுபிடிப்போ அல்லது பொழுதுபோகாத புலம்பெயர் தமிழர்களின் கற்பனையோ அல்ல. அது தான் ஈழவிடுதலை!!! தமிழர்கள் என்கிற ஒரு தனியினம் தனது அடிப்படை உரிமைகள், பொருளாதார, அரசியல், பண்பாட்டு உரிமைகளை பாதுக்காக தனியே பிரிந்து செல்வதென்பது  எந்தவொரு சந்தேச சட்டத்திலும் பிழை என்று சொல்லப்படவில்லை. ஈழத்தில் வாழும் தமிழர்கள் அவர்களுக்குரிய சுயநிர்ணய உரிமை  குறித்து பேசும் சுதந்திரம் இலங்கை அரசால் அனுமதிக்கப்படும்வரை காத்திருக்க சொல்கிறார்களா இந்த அறிவுஜீவிகள்?

தொடர்புடைய பதிவுகள்:
உதவி:Image Courtesy: lulurathi :)

அக்டோபர் 01, 2011

வர்ணமும் ஜாதியும் தாராண்மை ஜனநாயகமும்!!!


வலியவன் சட்டமியற்றி ஆண்டுகொண்டிருக்க, தக்கன அனைத்தும் பிழைத்துக்கொள்ள மற்றவன் எல்லாம் புலம்பியோ அல்லது அமைதிகாத்தோ நகர்கிறது அனைவரின் பொருளியல் வாழ்வும். அமேரிக்கா நியுயோர்க்கில் கீழே 'Wall Street' இல் குழுமியிருந்து பொருளாதார சுனாமியால் பாதிக்கப்பட்டு வாழ வழி தெரியாதவன் எதிர்ப்பை காட்டும் போது கைகளில் Champagne கிண்ணத்துடன் அவர்களுக்கே உரிய மிடுக்கான ஆடை மற்றும் தோரணையுடன், முகத்தில் மாறாத புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

மீண்டும் பொருளாதார வீழ்ச்சி, நிச்சயமில்லா வாழ்வாதாரம் என்று எதிர்காலம் மற்றும் வாழ்க்கை குறித்த பயங்கள் அமெரிக்காவிலிருந்து உலகின் அத்தனை பாகங்கங்களுக்கும் தொற்றாக பரவிக்கிடக்கிறது.

மனிதவாழ்வை அதன் தரத்தை தக்கவைத்துக்கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளைவாய் துன்பமும், கஷ்டமும்  எல்லோருக்கும் பொதுவானது என்றால் பொறுத்துக் கொண்டு போகலாம் என்று தேற்றிக்கொள்ளலாம். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் என்பது வர்க்க வேறுபாடுகள் தவிர்ந்த வேறு வடிவங்களில் இல்லையா என்று நினைத்தால் உரிமை மறுப்பு என்பது என்னென்ன வடிவங்களில் 'Free Market World' இல் நடந்துகொண்டிருக்கிறது என யோசிக்க வைக்கிறது. இந்த எல்லைகளற்ற சுதந்திர வர்த்தகம் எங்கிருந்து எப்படி தோற்றுவாய் கொண்டது, கொஞ்சம் பின்னோக்கி தேடிப்பார்க்கிறேன்.

உலகப்போர்கள், பனிப்போர் என்றார்கள். அங்கே பெரும்பாலும் ராணுவம் மோதிக்கொண்டது. முதலாம் உலகப்போரின் பின்பு கம்யுனிசம், பாசிசம் மற்றும் நூற்றாண்டு கடந்து ஜனநாயகத்தின் மீள்பிறப்பு உருவானது என்றார்கள். ஒருவழியாய் அங்கிருந்து முன்னேறி ரஷ்யாவும், சீனாவும் இன்னும் சில நாடுகளும் கம்யுனிஷம், சோஷலிஷம் என்றார்கள். காலப் போக்கில் அதுவும் சொத்துரிமை, நாட்டின் மொத்த உற்பத்தி, மனித உரிமைகள் என்று வேண்டியதும், வேண்டாததுமான கணக்கு வழக்குகள் தொடர அதுவும் வழக்கொழிக்கப்பட்டது.

சித்தாங்கள் தோற்றுப்போனதா அல்லது அதன் வழிவகைகள் தோற்றுப்போனதா என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன், என் அறிவுக்கு எட்டியவரை. தாராள தனியார் சொத்துடமை சட்டம் தான் பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்று அதுவும் தாரளாமாய் அனுமதிக்கப்பட்டது. முடிவு பொருளாதார சுனாமியாய் உலகில் உழைத்துப் பிழைப்போரில் வயிற்றில் அடிக்கிறது. எப்படியோ, உலகப்போரின் முடிவில் பனிப்போர் ஆரம்பமாகியது. பனிப்போர் முடிவின் போது புதிதாய் ஓர் இலக்கில் காலடி வைத்துக்கொண்டிருந்தது உலகம். இப்போது தாராள ஜனநாயகம் தான் உலக மயமாக்கலுக்கும் பொருந்துமாம்!!

புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் பாடியதை யாரோ அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதலாளிகள் ரூம் போட்டு நிறையவே யோசித்து ரசித்திருப்பார்கள் போல. சர்வதேச சமூகம் என்று தனக்குத்தானே பெயர்சூட்டி "புதிய உலக ஒழுங்கு" என்று புதிதாய் ஓர் கோட்பாட்டை உருவாக்கினார்கள். அமேரிக்கா தன் அரசியல் பொருளாதார சுயதேவைப் பூர்த்திக்கு உள்நாட்டு குழப்பங்களையும், அதனை அடக்கியொடுக்க சர்வாதிகாரிகளையும் உருவாக்கினார்கள். முன் எப்போதையும் விட "இனப்படுகொலை" என்பது உலகில் அதிகமாய் நடைபெற்றது, அது அதிகம் பேசப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சாமுவேல் ஹண்டிங்டன். இவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, விட்டுவிடுங்கள்.

எங்கேயோ சுற்றி எப்படி யோசித்தாலும் ஒரு புள்ளியில் மறுபடியும் புத்தி சிக்கிக்கொண்டது. புதிய உலக ஒழுங்கில் எல்லாமே ஒழுங்காய் இருக்கவேண்டும் என்கிற நியதி ஏனோ தலைகீழாய் மாறிப்போனது. அல்லது தலைகீழ் விதியே பொது விதியானது. உலகமயமாக்கலில் ஒருசாரார் திளைத்தாலும் அதன் பெயரால் உரிமைகளும், சொந்த மண்ணும் பறிக்கப்பட்டவர்கள் மதம், இனம், மொழி, பண்பாடு என்கிற கூறுகள் அல்லது அம்சங்களின் அடிப்படையில் போராடவும் செய்கிறார்கள்.

என்னதான் அமெரிக்கர்கள் போல ஆங்கிலம் பேசினாலும், Corn Flakes, McDonalds சாப்பிட்டாலும் அது செரித்து முடித்தபோது என் சுயம் என்னை கேள்வி கேட்டது. என் வேர்கள் எங்கே? என் அடையாளங்கள் என்ன? நான் அமெரிக்கர்கள் போல சிரித்தாலும், அழுதாலும், பேசினாலும், நடந்தாலும் நான் அமெரிக்கன் கிடையாது. என் வேர்கள், பண்பாடு, மக்கள், எனக்கு என் மண்ணில் மறுக்கப்பட்ட உரிமைகள் என்று என் தனித்தன்மைகள் குறித்த ஆயிரம் கேள்விகள் எனக்குள்.

கேள்விகள் பிறக்கும் போதெல்லாம் அது குறித்த தேடல்களும் இயல்பாகவே உருவாகிவிடும் எனக்குள். என் உரிமைகள் குறித்த அறிவுத்தேடலில் சிக்கியது தான் ஜாதி, வர்ண சமூக அமைப்பும் அதன் தாக்கங்களும். என் மண்ணில் எனது உரிமைகள் பறிக்கப்படுவதற்கு உலக அரசியலும் காரணம், யாரும் மறுக்கமுடியாது. அது இன்று உலகால் ஓரளவிற்கு அறியவும் செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் எப்படி வர்ணமும் ஜாதியும் ஆட்சிபீடத்தில் கோலோச்சுகிறது, எப்படி பெரும்பானமையினரின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. வல்லவன் வகுத்த சட்டங்களும், தக்கன பிழைப்பதும் இங்கேயும் கொஞ்சம் மனக்கசப்போடு!!

முதலில் வர்ணம், ஜாதி என்பதன் அடிப்படை தத்துவமே சுத்த அபத்தம் என்று சொன்னால் அது மிகையே இல்லை. இதன் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து இனி ஆகப்போவது ஒன்றுமில்லை. அந்தளவுக்கு ஜாதி குறித்த அறிவீனங்கள் விஷவாயுவாக பரவிக்கிடக்கிறது எம்மிடையே. வர்ணம் என்றால் அது பிராமணர்கள்-குரு/தீட்சிதர், சத்திரியர்கள்-போர்மறவர், வைஷ்ணவர்கள்-வியாபாரிகள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிறது. ஜாதியின் கணக்குவழக்கு எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், ஜாதி என்பது தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டு மனிதர்கள் பாகுபடுத்தப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதுவரை தெளிவு.

சரி, வர்ணத்தை யார் கண்டுபிடித்தார்கள்? பதில் ஆரியர்கள்! ஆரியர்களின் வர்ணம் குறித்த குறிப்புகள் மற்றும் பிரிவுகள், பாகுபாடுகள்  தமிழர்களிடையே இருந்ததில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதை பெரும்புலவர் வெள்ளைவாரணனார் தொல்காப்பிய ஆய்வுரைப்பகுதியில் "...... பழந்தமிழகத்தில் மக்களை நிலவகையாற்பகுத்தல் அல்லது குலவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் என்றுமே நிலவியதில்லை" எனக் குறிப்பிடப்படுகிறது (தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் மு.கருணாநிதி ப. 244).

ஜாதி என்பதும் அவரவர் செய்த கர்ம வினைகளின் விளைவாம்!!! அது "கர்மா" என்றும் அழைக்கப்படுகிறது. அது என்ன கருமமோ எனக்கு புரியவில்லை. இருந்தாலும் இரத்தம், மரணம், அழுக்கு சம்பந்தமான எந்தவொரு வேலை அல்லது தொழிலையும் பிராமணர்கள் செய்வதில்லை. அவ்வாறான வேலைகளை செய்ய "சூத்திரர்" எனப்படுவோர் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று படித்த போது (Francis Fukuyama- The Origins of Political Order pg. 166) மனதில் இயல்பாய் இன்னோர் கேள்வி எழுந்தது. பிராமணர்களும் சூத்திரர் போல் மனிதப்பிறவிகள் தானே? பிறகென்ன?

அவ்வாறான குருதி, மரணம், அழுக்கு சம்பந்தப்பட்ட வேலைகள் தூய்மையற்ற தொழில்களாம்!! ம்ம்ம்ம்....இருக்கட்டும், இருக்கட்டும்.... அப்படிஎன்றால் இன்னோர் கேள்வி மனித உடலும், இரத்தமும் எல்லா மனிதர்களுக்கும் இயற்கை கொடுத்தது. அது பிராமணர்களுக்கும், சூத்திரர்களுக்கும் வேறு, வேறு நிறமோ குணமோ காட்டுவதில்லை. உயர் ஜாதி அல்லது வர்ணத்தின் அடிப்படையில் படைக்கப்படவர்களின் உடம்பில் இறுதி சந்தனமும், ஜவ்வாதுமா வெளியேறுது. எல்லா மனித உடலிலும் இருந்தும் ஒரே மாதிரியான கழிவு, மலம், சலம் தானே ஒழுகிவழியுது. பிறகு இதிலென்ன பாகுபாடு!!!

ஏன் வர்ணமும் ஜாதியும் எப்போதும் மதத்தோடு தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகிறது. கடவுளின் தலையிலிருந்து பாதம் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் மனிதப் பிறப்பின் வர்ணத்துடனும்; ஜாதி என்பது கர்மா அல்லது பாவம் என்று கொண்டாலும்; அது கூட எப்படி பிராமணிய மதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. ஆக, வர்ணமும் ஜாதியும் காரணங்களாய் காட்டப்பட்டு மனிதர்கள், மனிதர்கள் தவிர்ந்த வேறு பிறவிகளாய் பார்க்கப்படுகிறார்கள். அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தொடர்வது தான் விந்தை! இதையே
இப்படியும் கூறுகிறார்கள்.... "பார்பனியத்திற்கென்று ஒரு மெய்யியல் இருக்கிறது, (கர்ம, தர்ம, தண்டக்கோட்பாடு. இதுவே வர்ணாச்சிரம தர்மம்) சாதிக்கென்று தனியே ஒரு மெய்யியல் இல்லை. (தமிழ்த்தேசியம்-சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை)

"If one wanted an example of a religion that, a la Marx, justified the domninance of a single, small elite over the rest of society, one would choose not Christianity or Islam, with their underlying message or universal equality, but rather the Brahmanic religion that appeared in India in the two millennia B.C. according to the Rg Veda" (Francis Fukuyama, The Oringins of Politcal Order, pg, 163).

கிறஸ்துவம் அல்லது முஸ்லிம் மதத்தில் சொல்லப்படும் செய்தி போல் எல்லோருக்கும் "பொதுமை" என்கிற சமத்துவம் பிராமணிய மதத்தில் ஏன் இல்லை என்று புக்குயாமாவின் மேற்சொன்ன கூற்றும் யோசிக்க வைக்கிறது. கடவுளின் முன் எல்லோரும் சமம் என்றால் எப்படி வர்ணம், ஜாதி என்று அர்த்தமற்ற விடயங்களால் பாகுபாடு காட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்.

இந்த கூற்றின் விவரத்தை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் கூற்றில் நோக்குகிறேன்.

"தமிழ்நாட்டில் எவ்வளவு தான், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை ஏந்திப் பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடினாலும் அதனை முற்றிலும் வீழ்த்த முடியவில்லை. அரசுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, கலை இலக்கியத்துறை ஆகியவற்றில் இன்றும் தமிழ்நாட்டில் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. தமிழ்நாட்டில் செயற்படும் பார்ப்பனியத்திற்கு உயிரும் ஊட்டசத்தும் தில்லித் தலைமை பீடத்திலிருந்து வருகிறது" (தமிழ் தேசியம்-சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை).

ஆக, என்னுடைய புரிதல் அமெரிக்காவில் ஏழை, பணக்காரன் என்கிற வர்க்க வேறுபாடுகள் பொருளாதார சுனாமியில் மனிதர்களின் இன்னோர் பக்கத்தை படம் பிடித்துக்க்காட்டுகிறது. அதே போல் ஓரளவிற்கு நானறிந்த இந்திய-தமிழ்நாட்டு சூழலில் வர்க்க வேறுபாடு என்பது வர்ண-ஜாதி அடிப்படையில் கோலோச்சுகிறது. ஒரு தனிமனிதனை வர்ணம்-ஜாதியின் பெயரால் பாகுபடுத்தி கல்வியும், பொருளாதார மேம்பாடும் மறுக்கப்பட்டால் அவன் எப்போது வாழ்வில் உய்வது. இல்லையே!! இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அது சட்டமாக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதாடலாம்.

எனக்கு தமிழ்நாட்டு சூழல் அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும், இட ஒதுக்கீடு என்பது கூட மறுபடியும் ஜாதியை அங்கே வலியுறுத்தி நிற்கிறது போல் தெரிகிறது. எந்தவொரு அரச ஆவணங்களிலும் எதற்காக ஒரு தனிமனிதனின் இந்த ஜாதி என்கிற முத்திரை பதிக்கப்படுகிறது . இந்த அபத்தங்களை ஒழிக்கவேண்டுமானால் இதை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமோ!!

இருந்தும் ஒரு சிறுபான்மையினர் இந்த வர்ண-ஜாதி மெய்யியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தியா என்கிற ஒரு மிகப்பெரிய ஒரு நாட்டை தனது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்திருப்பது வியக்கவே வைக்கிறது. இவ்வளவிற்கும் இந்தியா ஒரு ஜனநாயக நாடாமே!!!மொத்தத்தில் அமெரிக்காவின், இந்தியாவின் தாராள ஜனநாயகம் ஒரு குறிப்பிட்ட சாராரின் நலன்கள் பேணத்தான் போலும்.

Reference:

1. The Clash of Civilizations and the Remaking of World Order (Paperback Edition 2003) - Samuel P. Huntington

2. The Origins of Political Order  (2011) - Francis Fukuyama

3. தொல்காப்பியப் பூங்கா - (பன்னிரண்டாம் பதிப்பு 2003) கலைஞர் மு. கருணாநிதி.

4. "தமிழ்த் தேசியம்" சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை - 2009
 - தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி

Image Courtesy: Googleசெப்டம்பர் 21, 2011

ஏன் இப்படியென்று கேட்கமாட்டேன்!!!

அந்த படத்தில் நான் காண்பது ஒரு இந்திய அமைதிப்படை ராணுவச் சிப்பாய் சீருடை இன்றி இருப்பதாய் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் பார்த்து, அந்த காட்சி சொல்லும் உண்மைகள் அத்தனையையும் மெளனமாய் மனதுக்குள்ளே படித்துவிட்டு விலகிவிட்டேன். இரண்டு நாட்களுக்கப் பிறகு அது மனதில் காட்சியாய் நிழலாட அது குறித்து எதையாவது கிறுக்கி வைக்க தோன்றுகிறது. பொறுக்கவில்லை மனம் :(

ஆளவந்தான் படத்தில கமல் ஒரு பாட்டுப் பாடுவார். மிருகம் கொன்று, மிருகம் கொன்று  கடவுள் வளர்க்கப் பார்க்கிறேன். கடவுள் கொன்று, கடவுள் கொன்று மிருகம் மட்டும் வளர்கிறதே என்று. அந்த கதாபாத்திரத்துக்கு Schizophrenia என்கிற ஓர் நிலை அவரை எதையும் காட்சிப்பிழையாய் பார்ப்பதாய் தோன்றியது. ஆனால், கொஞ்சம் ஆழமாய் கவனித்தால் அது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மனிதன், மனிதம் பற்றிய ஆழ்மனக் குழப்பம் என்பது புரிகிறது.

"It is proved again and again that, what B. R. Ambedkar said about Indians are true: “Indians today are governed by two different ideologies. Their political ideal set in the preamble of the Constitution affirms a life of liberty, equality and fraternity. Their social ideal embodied in their religion denies them.”

கேரளாவைச் சேர்ந்த ஓர் பெண் விரிவுரையாளரின் தளத்தில் இந்தப் படம் கிடைத்தது. தளத்தில் அம்பேத்காரின் இந்த வார்த்தைகளும் சிக்கியது. அதை கொஞ்சம் எனக்கு தெரிந்த தமிழில், என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

இன்றைய இந்தியர்கள் இரண்டு விதமான கருத்தியல்/சித்தாந்தங்களால் ஆளப்படுகிறார்கள். இந்திய அரசியல் யாப்பின் முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. மதத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் அவர்களது சமூக குறிக்கோள் அரசியல் யாப்பில் சொல்லப்பட்டவைகளை மறுக்கிறது. இது தான் அம்பேத்கார் சொன்னதின் உள்ளடக்கம்.

இது அவரது காலத்தில் சொல்லப்பட்டது என்றாலும், இன்று காலம் கடந்து இதப் படித்த போதும் நிறையவே யோசிக்க வைக்கிறது.


செப்டம்பர் 18, 2011

நானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும்!!


வயது வருடங்களாய் முன்னே போக மனித வாழ்வின் சுவாரஸ்யமான இளமைக்காலமும், வேகமும் நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்சென்று எங்கோ மிதக்க வைக்குது. காலக்கடிகாரம் எந்த இடத்தில் நின்று போனால் பிடிக்குமோ, அந்த இடத்தில் நின்று கொண்டே நகர மறுக்கிறது. இருந்தாலும் வாழ்க்கையின் அழுத்தங்களும், யதார்த்தங்களும் மறுபடியும் உந்தித் தள்ளினால் மிலினியத்தில் வேகத்தடையின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டியும் இருக்கிறது. வாழ்க்கையின் சூட்சுமங்கள் புரியுமுன்பே காலக்கடிகாரம் தன் ஓட்டத்தை நிறுத்தியும் விடுகிறது.

மனித உடலுக்குள் உயிர்க்கடிகாரம் அல்லது உள்ளமை கடிகாரம் ஒன்று எங்கள் உணர்வுகளுக்குப் புலப்படாமலே இயற்கை அதை இயக்கிக்கொண்டிருக்கிறது. உயிர், மெய்யின் அசைவும் இசைவும்; வாழ்க்கையுடனான இணக்கப்பாடும் உடம்புக்குள் ஓர் உயிர்க்கடிகையின் ஓட்டத்தில் பிரமிக்க வைக்கிறது. காலக்கடிகை மனதுக்கும், உயிர்க்கடிகை உடலுக்கும் நிகழ்ச்சி நிரல் போடுகிறது. அதன் வழி இயல்பாய் அறிந்தோ, அறியாமலோ எல்லாமே நடந்தேறுகிறது. இந்த பிரமிப்பின் எல்லைக்குள் மனிதனும் மற்றும் உயிரினங்களும் மட்டும் தான் அடங்குமா என்கிற கேள்வி மனதில் மனதில் தொக்கி நிற்கிறது.

கணணி என்கிற இயந்திரத்துக்குள்ளும் Internal Clock என்பது இயற்கையாய் இன்றி, செயற்கையாய் மனிதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கணணி குறித்த "Internal Clock and Y2K" என்று 1999 இன் முடிவில் பூலோகத்தின் ஆளுமைத் தன்மையை தன் இரட்டை சுழியங்களில் (00) பயம் காட்டிய வரலாற்று ஞாபகம் வருகிறது. கணணியிடம் இரட்டை இலக்கங்களில் திகதி, மாதம், வருடம் என்று மனிதன் சொல்லிக்கொடுத்தான். 1999 இன் முடிவில் 99 என்பது 1900 என்று கணணி தவறாய் நினைத்துக்கொண்டது. அது வருடம் 2000 என்று இருந்திருக்க வேண்டுமென்று மனிதகுலம் வழக்கம் போல் ஒரு தொழில்நுட்ப வராற்றுப்பிழையில் இருந்து பாடம் கற்றுக்கொண்டது. அதன் ஆபத்து தடுக்கப்பட்டாலும், அதுகுறித்த அதிர்வலைகள் இன்றும், என்றும் வரலாறு தான்.

இப்படித்தான் காலக்கடிகை, Y2K என்றால்  இந்தியர்களின் ஞாபகமும் இயல்பாகவே ஒட்டிக்கொண்டு கூட வருகிறது. இந்தியாவின், இந்தியர்களின் அபரிமிதமான தொழில்நுட்ப அறிவு உலகிற்கு அமெரிக்காவால் மிகப்பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டும், அடையாளப்படுத்தவும் பட்டது. இந்தியா எப்படி தொழில் நுட்ப அறிவில் இப்படி முன்னேறியது என்று கொஞ்சம் பின்னோக்கிப்போனால், 1951 இல் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு உருவாக்கிய IIT என்றழைக்கப்படும் Indian Institution of Technology தான் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது என்று தெரிகிறது. பிறகு காலப்போக்கில் அது பரிமாண வளர்ச்சியடைந்து இன்று உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இப்படி Y2K என்கிற கணணி வரலாற்றோடு தீவிரமானது "Outsorucing" என்கிற இந்தியர்களின் கடல் கடந்த கணணி தொழிநுட்பப் பயணம். இது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் நண்பர் Thomas L.Friedman இந்திய தொழில்நுட்ப அறிவு சார் துறை பற்றி எழுதியதன் சுருக்கம்.

வெளிநாடுகளில் இருக்கும் பாரிய நிறுவனங்களின் பணிகள் சிலவற்றை பகுதியாக இந்திய கணணி அறிவாற்றலுள்ளவர்களிடம் வியாபாரப் பேரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு Outsorucing நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் நான் வாழும் நாட்டிலிருந்து கட்டணச் சேவைகளை பெறுவதன் விளைவாக உரையாடியிருக்கிறேன். இவர்களின் தொழில் சார் அனுபவம், பேச்சு என்பன என்னிடத்தில் ஏதோவொரு பிரதிபலிப்பை விட்டுச்சென்றதுண்டு.  

தங்கள் சூழலுக்கும், வாழ்வுக்கும் பெரும்பாலும் ஒவ்வாத தூரத்தில் இருக்கும் மனிதர்களிடம் இயந்திரத்தனமான உரையாடல். யாரிடம் பேசினாலும் ஒரு கூட்டு மனோ நிலை, கூட்டு நடத்தை என்கிற மனப்பதிவை உருவாக்குவார்கள். அதாவது ஒருவரின் சொற்பிரயோகம், பேச்சின் தொனி எல்லோருக்கும் ஒரேமாதிரி ஒத்துப்போவதாய் இருக்கும். அது அவர்கள் தவறல்ல. அப்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள், என் போன்ற வெளிநாட்டு வாழ் வாடிக்கையாளர்களை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் குறித்து திருப்திப்படுத்துவதே நோக்கமாய்.

அவர்களுக்கு அது வாழ்வாதாரம். இருந்தாலும், ஒவ்வாத விதமாய் எத்தனை பேர் அதிருப்தியோடு பணி செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் பேச்சிலிருந்து புரிந்துகொண்டிருக்கிறேன். ஒருமுறை இவ்வாறான ஓர் அழைப்பின் பொது ஒருவர் தான் தமிழ்நாட்டில் ஓர் call centre இல் இருந்து பேசுவதாக நான் கேட்டதால் சொன்னார். அவர் சொன்ன இன்னோர் விடயம், இந்தியா தவிர வேறெந்த நாட்டிலாவது போய் வாழவிரும்புவதாக! எனக்கு ஓரளவு இந்திய அரசியல், பொருளியல் வாழ்வு பற்றி தெரிந்திருந்ததால் அவர் கூற்றுக்கு அதிகம் ஆச்சர்யப்படவில்லை நான்.

ஒரு கூடு அல்லது குறுவறை (Cubicle) ஒன்றில் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் உட்காருவார்களோ தெரியாது. நான் யோசிப்பதுண்டு இவர்கள் இப்படி இயந்திரத்தனமாய் பேசிப் பேசி ஓர் "உணர்வற்ற நிலைக்குள்" (Cubicle Coma) செல்வதில்லையா என்று. அதன் அர்த்தம் அந்த சின்னஞ் சிறிய கூட்டுக்குள் புகுந்து கொண்டவுடன் அயர்ச்சியும், சலிப்பும், இயந்திரத்தனமும் ஒருவரிடம் ஒட்டிக்கொள்வது என்பது தான்.

இந்திய Outsorucing பற்றிய என் நண்பருடன் பேசியதில் அவர் சொன்னது இது. மீதியை உங்கள் சிந்தனைக்கும் விமர்சனத்துக்கும் விட்டுவிடுகிறேன்.

"இருக்கும் மக்கள் தொகையைக் கொண்டு சிறந்த அறிவார்ந்த மூளைகளை நம்மிடையே உருவாக்கிக் கொள்ள முடியுமெனினும் பிழைப்புவாத சிந்தனை ரீதியிலேயே முன்பு இஞ்சினியர்கள், மருத்துவர்கள் என்பது சற்றே மருவி... இப்பொழுதுசாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் என்றே பெருமள்வில் ரப்பர் ஸ்டாம்ப் பண்ணப்படுகிறது. ஏனைய துறைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு.

ஏரோநாடிகள் இஞ்சினியர் படித்த ஓர் இளைஞன் உடனடி பணம் மென்பொருள் எழுதுவதில் கிடைக்கிறது என்பதற்காக தன்னுடைய சிறப்பு பாடத்தினையே மென்பொருள் எழுதும் துறைக்காக மாற்றி அந்த படிப்பை விட்டே விலகிக் கொள்கிறான். இந்தியா அது போன்ற மாணவர்களை தங்களது சொந்த கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே!

எல்லா விதத்திலும் சைனாவுடன் போட்டி போடுகிறார்கள் என்றால், சைனாவைப் போல போர் விமானங்களையும் தாங்களே கட்டிக் கொள்ளும் டெக்னாலஜியில் R & Dல் (Research and Development) நிதியை அதிகப்படுத்தி இதிலுமல்லவா போட்டி போட்டு சரிசமாக வளர வேண்டும். தவிர்த்து f2௦, f24 ரக விமானங்களை அமெரிக்காவிடம் வாங்குவதில் என்ன பெரிய பெருமை இருந்து விடப் போகிறது."

சரி, இதெல்லாம் உலகமயமாக்கலின் விளைவுகள் என்று யோசிக்கும் பொழுதில் மனதில் இன்னோர் விடயம் தட்டுப்படுகிறது. நாம் எல்லோரும் மில்லினியத்தில் உலகமயமாக்கலுக்கு ஒரே விதமாய் தான் பிரதிபலிப்பை காட்டுகிறோமா என்று. இயந்திரமயமாகிப் போன நகர வாழ்விற்கும், இயற்கையோடு ஒன்றிப்போய் வாழ நினைக்கும் ஒவ்வொரு நாட்டின் பழங்குடியினருக்கும் இடையே எத்தனை, எத்தனை போராட்டங்கள். அவை எல்லாம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப் படாமலேயே இருளுக்குள் கிடக்கின்றன. எனது அறிவுக்கு எட்டியவரையில் வடஅமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கிறேன் பேர்வழியாய் கொன்று குவிக்கப்பட்டார்கள் செவ்விந்தியர்கள் என்னும் பழங்குடியினர் அல்லது மண்ணின் மைந்தர்கள். அன்று முதல் இன்றுவரை உலகமயமாக்கலின் பிதாமகர்களோடு அவர்களும் எதுவோ ஒன்றுக்காய் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

எந்தவொரு நாட்டின் பழங்குடியினர் என்று பார்த்தாலும் அவர்களது வாழ்வியல் பெரும்பாலும் இயற்கையோடு ஒன்றியதாகவே அமைந்துபோகிறது. இயற்கை என்றால் சினிமா தனங்களோடு காட்டுக்குள் சுற்றிச்சுற்றி பாட்டுப்பாடுவது அல்ல. நிலம், நீர், காற்று, மலை என்று அந்த இயற்கையின் போக்கிற்கு ஏற்றாற்போல் தங்கள் வாழ்வியலை கட்டமைத்துக்கொண்டவர்கள். இயற்கையின் சமநிலையை தங்கள் வாழ்வாதாரத்திற்காய் கூட கலைக்கவோ அல்லது குலைக்கவோ விரும்பாதவர்கள். இயற்கையை மட்டுமே படித்து அதன்வழி வாழ்பவர்கள். அவர்களின் உயிர்ப்புக்கும், உய்வுக்குமான வாழ்வியல் முறை முதல் மரபுவழி சட்டங்கள் வரை தங்களுக்கென்று தனி இயல்புகளோடு, விதிகளோடு வாழும் முறையை கட்டமைத்துக் கொண்டவர்கள்.

இயற்கைக்கும், இயல்பு நிலைக்கும் குந்தகம் விளைவிப்பதே பெரும்பாலும் உலகமயமாக்கலின் விளைவாய் போய்விட்ட சூழல் இன்று. பல்தேசிய நிறுவனங்களின் வியாபார நோக்கத்தில் பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம் எப்படி நசுக்கப்படுகிறது என்று யோசித்த போது தான் இந்தியஆதிவாசிகளின்  போராட்டம் இயல்பாய் ஞாபகத்தில் வருகிறது. Outsourcing என்று இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவும் உழைப்பும் குறைந்த விலைக்கு அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு விற்கப்படுகிறது. இன்னோர் துருவத்தில் இந்தியாவின் ஆதிவாசிகளின், அவர்கள் நேசிக்கும் இயற்கை முதல் அது அள்ளிக்கொடுத்த வளங்கள் வரை பல்தேசிய நிறுவனங்களால் பறிக்கவும் படுகிறது.

ஈழம், இந்திய பூர்வகுடிகள் (ஆதிவாசிகள்) என்று நினைக்குந்தோறும் என் புத்தியில் இடறும் ஓர் வார்த்தை "Lebensraum". அதன் பொருள் அகராதியின் விளக்கப்படி, தன் இயல்பான வளர்ச்சிக்கு தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் (இன்னொரு நாட்டின் அல்லது மக்களின்) நிலப்பரப்பு அல்லது நாட்டின் வாழ்நிலத்தேவை என்பதாகும். ஒரு சினிமா நடிகையின் அல்லது நடிகரின் பெயரளவிற்கு இந்த வார்த்தை ஒன்றும் போலி வாழ்க்கை வாழும் எங்களுக்கு தேவையில்லை தான். நடிகை அனுஷ்கா தனது பெயரை "Lebensraum" என்று மாற்றிக்கொண்டால் அந்த வார்த்தையின் தார்ப்பரியம் இளைய தலைமுறைக்குப் புரிந்தாலும் புரியும். எப்படி இருந்தாலும் இருந்தாலும் அந்த ஒற்றைவார்த்தையில் ஒளிந்திருக்கிறது உலகமயமாக்கலின் ஒட்டுமொத்த சூத்திரம்.

நிலத்தையும், வளங்களையும் சூறையாட ஒரு மக்கள் கூட்டத்தை என்னென்ன வழிகளிலெல்லாம் கொன்றொழிக்கவும், கொடுமைப்படுத்தவும், துரத்தியடிக்கவும், அவர்களை மனித சிதைவுக்கு உள்ளாக்க முடியுமோ அத்தனையும் இந்த வார்த்தைக்குள் அடங்கும். ஹிட்லரும், ஹிட்லரின் நாஜிப்படைகளும் தான் "Lebensraum" என்கிற இனவழிப்பின் மாதிரிக்கு, ஒரு நாட்டின் வாழ்நிலத்தேவை என்கிற கோட்பாட்டை கண்டுபிடித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்து செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டதும், அமேரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளத்திற்காய் ஹிட்லர் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் (வியட்னாம் கணக்கில் கொள்ளப்படவில்லை) ஜனநாயகம் வளர்ப்பதும், ஹிட்லரால் இனவழிப்பு செய்யப்பட்டவர்கள் என்று ஏகபோக உரிமைகளை அனுபவித்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பவர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது!!

இந்திய ஆதிவாசிகளின் விடயத்திலும் இது தான் நடைபெறுகிறது போலும் என்று செய்திகளை, கட்டுரைகளை படித்தபோது தெரிந்துகொண்டேன். வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு தத்தளிக்கவைக்கப் படுகிறார்கள் இந்திய பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகள். அடக்கப்படுபவன் எத்தனை நாட்களுக்குத் தான் பொட்டுப் பூச்சியாய் அடங்கிப்போவான். மாவோயிஸ்டுகள் உருவானார்கள், ஆதிவாசிகளின் உரிமைக்காய் போராட. மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் என்று அவர்களை ஒடுக்க அரசபடைகளை விடவும், கூலிப்படைகள் வேறு உருவாக்கப்பட்டு ஆதிவாசிகள் அழித்தொழிக்கப் படுகிறார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் தத்துவம் போலும். என் மூளையில் உறைக்கும் ஒரே கேள்வி, அரசியல் யாப்பு, பொதுச்சட்டம், பாதுகாப்பு, பொருளாதார கொள்கைகள் இதெல்லாம் மக்களுக்காய், மக்களை காப்பாற்ற என்றால் பிறகேன் மக்கள் இது குறித்து எப்போதும் போராடவும், போராடுபவர்களுக்கு ஆதரவும் கொடுக்கிறார்கள்!!! அரசை தானே ஆதரிக்க வேண்டும்?

எப்பிடி சுத்தியடிச்சு யோசிச்சாலும் ஒரு விடயம் தெளிவாய் தெரிகிறது. இங்கே அரசுகளும், அரசியல் சட்டங்களும், பொருளாதார கொள்கைகளும் வலியோரைக் காக்கவே உருவாக்கப்படுகிறது. எளியோரை எப்போதும் இவர்களுக்கு சேவகம் செய்யென்று என்று மறைமுகமாய் பணிக்கிறது. சரி, ஆதிவாசிகள் விடயத்திற்கு வருவோம்.

இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் ஆதிவாசிகள் பரந்து வாழ்கிறார்கள். இருந்தாலும் இந்திய அரசால் சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட்  மாநிலங்களிலுள்ள ஆதிவாசிகளின் வாழ்நிலைகள், வாழ்க்கைசூழல் என்பன சீரழிக்கப்படுகிறன. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் இரும்புத்தாது கனிம வளத்திர்காய் அங்கிருந்து பழங்குடியினர்/ஆதிவாசிகள் ஆயிரக்கணக்கில் விரட்டியடிக்கப்படுவதும் கொடுமைப்படுத்தவதும் நிகழ்ந்தேறுகிறது. இதற்கு இந்திய அரசு தரப்பில் சொல்லப்படும் விளக்கங்கள் என்பது பறிக்கப்படும் ஆதிவாசிகளின் உரிமைகள் மற்றும் அரசபயங்கரவாதம் குறித்த மறுப்புக்கு ஒப்புக்கு சப்பாணியாய் தோன்றுகிறது.

நான் ஓர் ஈழத்தமிழ் என்கிற அனுபவ அடிப்படையில் யோசித்துப்பார்க்கும்
போது புரிகிறது இந்திய ராணுவப்படைகளின் கொடூரமுகமும் அட்டூழியங்களும். எங்களுக்கே உரிய வாழ்நிலங்கள் பறிக்கப்பட்டு, வாழ்நிலைகள் கசப்பானதாக ஆக்கப்படும் கொடுமைகள் அனுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.


இது குறித்த தேடலில் ஆதிவாசிகள் மீது இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் அநீதிகளின் சாட்சியமான ஓர் கட்டுரை இது.

"...உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. .....சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின. ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர். மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர்......"

மாவோயிஸ்ட்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பதன் காரண, காரிய தொடர்பை ஆராய்வதை தவிர்த்து அவர்கள் ஆட்கடத்தல், கொலை செய்கிறார்கள் என்கிற குயுக்தியான விமர்சனம் வைக்கப்படுகிறது. இதுக்கு ஒத்து ஊதுவதற்கு சில அறிவுசீவிகள் வேறு! அருந்ததி ராய் போன்றோர் மாவோயிஸ்ட்களின் போராட்ட நியாங்களை ஆதரித்தால், நீ மாவோயிஸ்ட்களை ஆதரிக்கிறே என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இந்திய ஜனநாயக சட்டத்தின் பிரகாரம் மாவோயிஸ்ட்கள் செய்வது தவறென்றால், இந்திய அரச படைகள் இழைக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவையெல்லாம் கூட குற்றங்கள் தானே! அது இந்தியப்படை, அமெரிக்கப்படை, ஐ.நாவின் அமைதிப்படை என்றதும் அறிவுசீவிகள் ஏன் நெற்றிக்கண்ணை திறக்க மறுக்கிறார்கள்.  

சாராசரி குடிமக்களின் அரசியல், பொருளாதார உரிமைகள் ஏன் எப்போதும் கிடப்பிலேயே போடப்படுகின்றன்றன. நாங்கள் செய்த தவறு தான் என்ன!

உலகமயமாக்கலில் உதிரிகளாய் ஆகிக்கொண்டிருக்கும் oursorucing மனிதர்களுக்கும், இந்திய பழங்குடியினருக்கும்/ஆதிவாசிகளுக்கும் எங்கேயோ ஒரு நூலிழையில் தொடர்பு மறைந்திருக்கிறதோ!! முன்னவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட நினைக்கிறார்கள். பின்னவர்களோ சொந்த நிலத்திலேயே வாழும் வழியும் வகையும் புரியாமல் தங்களுக்குத் தெரிந்தவரை எதிர்க்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைகளின் அட்டூழியங்களை சகித்துக்கொண்டு வாழ்பவனின் காலக்கடிகாரமும் ஒரு நாள் அந்த நினைவுகளில் நிறுத்திக் கொள்ளப்படும் பொழுதில் நீதி பெறுமோ இவர் தேசங்களும்!!

Image Courtesy: Google