டிசம்பர் 31, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் - கல்வியும் வேலையும்

தனம், கல்வி, தளர்வறியா மனம் இம்மூன்றும் ஒருங்கே அமைந்தால் ஒருவரின் வாழ்வு பெரும்பாலும் சிறப்பாய் அமைந்துவிடும். ஆனால், கல்வி தான் மற்ற இரண்டுக்குமே அடிப்படை என்பது யதார்த்த உண்மை. தொல்காப்பியத்தில் பெருமிதம் நான்கு என்று குறிப்பிட்டு, கல்வி, தறுகண் (உண்மையைப் பேசி மனதில் மாறாத உறுதியோடிருத்தல்), இசைமை (புகழ்), கொடை இப்படி வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆக எப்படிப்பார்த்தாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வியின் சிறப்பும் முக்கியத்துவமும்  வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்று தனிமனித அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வியை ஐக்கியநாடுகள் அமைப்பு அறிவித்திருக்கிறது. என்னதான் அப்படி அறிவிக்கப்பட்டிருந்தாலும் உலகில் இன்றும் கூட கல்வி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சில சந்தர்ப்பங்களில் பறிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதும் போது ஏனோ ஈழமும் காஷ்மீரும் கண்முன்னே தோன்றுகிறது. அடிப்படை உரிமையென்று கூறிக்கொண்டாலும் அவரவர் வசதிக்கேற்றவாறு அதை விலைகொடுத்து வாங்கவும் முடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார காரணிகள், அரசியல் கொள்கைகள் என்பவற்றால் நலிந்தோரிடமிருந்து இந்த கல்வி என்கிற உரிமை சூறையாடப்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இன்றைய பொருளாதார வாழ்க்கை முறை காரணமாக குழந்தைகளுக்கு ஏறக்குறைய மூன்று வயதிலிருந்தே கல்வி என்கிற கருத்துப்படிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. அது வசதியான வீட்டுக்குழந்தை என்றால் "Montessori" என்றழைக்கப்படும் "Pre-School" concept இற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் ஆரம்பப் பாடசாலை செல்லும் வயதில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் ஓர் தனியார் பாடசாலையில் அந்தக்குழந்தை கல்வியை தொடரும். பிறகு அதே குழந்தை "Prep School" என்று சொல்லப்படும் வசதியான வீட்டு குழந்தைகள் மட்டுமே படிக்கும் பாடசாலையில் பல்கலைக்கழக ஆயத்தக்கல்வியையும் கூடவே மேல்தட்டு வாழ்வின் பாரம்பரிய விழுமியங்களையும் கற்றுக்கொள்கிறது. 

இங்கே பெரும்பாலும் உலகமயமாக்கலுக்கேற்றவாறு அதன் சர்வதேச பரிமாணங்களில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறான குழந்தைகள் தான் பின்னாளில் "Elites" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயர்ந்தோர் குழாமாக தம்மை உருவாக்கி சமூகத்தை ஆட்டுவிக்கும். Public School களில் நாடு (தேசம்), தேசியம், நாட்டுக்கு (தேசியத்திற்கு) இவர்கள் வளர்ந்து ஆற்றவேண்டிய கடமைகள் என்று பாடம் நடத்தப்படும். இவ்வாறாக சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வசதியான வீட்டிலுள்ள ஓர் குழந்தை "Public School" என்று சொல்லப்படும் பொதுவாக எல்லோருக்கும் ஆன அந்த கல்விமுறையை குறுக்குவழியில் கடந்து செல்கிறது. மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள் என்று வரும்போது இவர்களுடன் மற்றவர்கள் போட்டியும் போடவேண்டும்.

அதற்கு தங்களை சிறந்த முறையில் தயார்ப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

பொதுவாக எந்தநாட்டு பெற்றோராயினும் "Public School System" என்பதில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அதனாலேயே வாயை, வயிற்றைக்கட்டி காசை சேமித்து குழந்தைகளை "Pre-School - Prep School" வரை தனியார் பாடசாலைக்கு அனுப்ப விரும்புகிறார்கள். நான் Public School இல் கல்விகற்று யாருமே வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லை என்று சொல்லவரவில்லை. இங்கே கல்வியை பெற்றுக்கொள்வதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, போராட்டத்தையே சொல்கிறேன்.

இன்றைய உலகில் கல்வியின் அளவைகொண்டு மட்டும் ஒருவரின் சுபீட்சமான எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை எந்தத்துறையில் கல்வியில் கால்பதிக்கிறது என்பதை வைத்தே அதன் சுபீட்சமான எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன் செய்தியில் பார்த்தேன். 

ஓர் தமிழ்நாட்டு மாணவன் தன் பதின்நான்கு வயதிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணணித்துறையில் பட்டப்படிப்பை தொடர்வதாக. அவருக்கு பொருளாதார காரணிகள் இயைபாக இருந்து அவர் அந்த துறையில் முன்னுக்கு வந்திருக்கலாம். இன்று கணணித் துறையில் உட்சபட்ச கல்வியை கற்றவர்களும் மருத்துவத்துறையிலும் உள்ளவர்களும் அதிக "Job Security" உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்ற துறைகளில் கால்பதிக்கும் குழந்தைகள் நாட்டுக்குத்தேவைதான். அவர்களின் அறிவும் திறமையும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு விலைபோகாதவரையில் சந்தோசம் தான். ஆனால், மற்றத்துறைகளில் ஏன் வேலை உத்தரவாதமோ, அதற்குரிய மதிப்போ கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் மனதில் எழாமலில்லை.

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் Business News என்பதில் எந்தெந்த பெரிய, பெரிய நிறுவனங்கள் எப்படியெப்படி தங்கள் செலவினங்களை குறைப்பது குறித்த வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்பது குறித்து அலசி ஆராய்வார்கள். அப்போதெல்லாம் என் காதில் விழும் சொற்கள் இவை, (Cost-Cutting - Downsizing, Reengineering, Layoff, Cutting down redundancies.)

 இவற்றுக்கெல்லாம் எனக்குத்தெரிந்து தமிழில் ஒரேயொரு அர்த்தம் தான், அது  "வேலையிழப்பு". இங்கே முக்கி, முக்கி நான்கு அல்லது ஐந்து வருடங்கள் பட்டப்படிப்பு படித்து முடித்து வேலை தேடி அலைபவர்களுக்கு இதுதான் காய்ச்சிய ஈயமாய் காதில் பாய்ந்து மூளையில் எரியும் செய்தி. 

அதுவும் இல்லையா அரசின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பொதுச் சேவைகளை ஏன் தனியார்மயப்படுத்தக்கூடாது என்று பீதியை கிளப்புவார்கள். சில சமயங்களில் அப்படியே செய்யவும் செய்வார்கள். பொதுதுறைகள், பொதுசேவைகள்  தனியார்மயப்படுத்தப்பட்டால் அது பொதுசனத்துக்கு எவ்வளவது தூரம் அனுகூலமான விளைவுகளை கொண்டுவரும் என்று யாரும் அறுதியிட்டுக்கூறமுடியாது.

இங்கே தான் மறுபடியும் போராட்டம் ஆரம்பிக்கும் வாழ்க்கையில். இருந்தவேலை நிச்சயமில்லை அல்லது அதை இழக்கும் சூழ்நிலை. இனி புதிதாய் ஏதாவது வேலை தேடவேண்டும் அல்லது கல்வியை தொடரவேண்டும். இதில் காதல், கல்யாணம், குடும்பம் என்கிற commitment இருக்கிறதா? உங்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்.வேலையில்லை அதனால் பணமில்லை. எதிர்காலம் நிச்சயமில்லை. அதனால் உருவாகும் பதட்டங்கள், மனக்குழப்பங்கள் இவைதான் இளையதலைமுறையின் பிரச்சனைகள். இதன் காரணமாகத்தான் இன்று பலர் ஏதாவது சித்தாந்தம், கொள்கைகள் அவற்றின் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று நம்பி எத்தனையோ அமைப்புகளோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். சில சமயங்களில் அரசுகளுக்கு தலையிடியாயும் ஆகிப்போகிறார்கள். 

ஆனால், பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்கள் வகுத்துக்கொண்ட கொள்கைகள் மூலம் தீர்வு காண்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும், இப்படியெல்லாம் வயதையும் வாழ்க்கையையும் அதன் சந்தோசங்களையும் தொலைக்கும் ஓர் இளையதலைமுறைதான் இங்கே உருவாகிறது என்றால் அது அவர்கள் பிழையல்லவே!!

ஆட்சிக்கட்டிலை அலங்கரிக்க அரசியல்வாதிகள் சொல்வது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வறிய, நடுத்தர பொருளாதார சூழலிலிருந்து படித்து முன்னுக்கு வந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழக படிப்பை முடித்து வெளியே வரும்போது இங்கே எந்த அரசும் தங்க தாம்பாளத்தில் வைத்து வேலையை நீட்டிவிடப்போவதுமில்லை. இப்போதுள்ள, பொதுவாக எந்த நாட்டு அரசாங்கங்களுக்கும் பணவீக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று நாட்டு மக்களுக்கு தண்ணி காட்டவே வேலையும் நேரமும் சரியாய் இருக்கிறது. யாரும் பணவீக்கம் எப்படி உருவானது என்பது பற்றியோ அல்லது அதன் விளைவாய் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டது பற்றியோ அதிகம் ஆராய்வதில்லை.

ஆக, ஒரு நாடாயினும் சரி, ஐக்கியநாடுகள் அமைப்பென்றாலும் சரி கல்வியை ஒப்புக்கு அடிப்படை உரிமை என்று அறிவித்துவிட்டு அதற்குரிய கொள்கைகளை வகுக்காமல், அதை நடமுறைச்சாத்தியமாக்காமல் நலிந்தோருக்கும் அந்த உரிமை சமமாய் கிடைக்கப்போவதில்லை. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். நான் வாழும் நாட்டில் கல்வியமைச்சு என்று ஓர் அமைச்சோ அல்லது அமைச்சரோ கிடையாது. மாகாண அரசுகளே அதற்குரிய பொறுப்பை வகிக்கின்றன. 

அண்மைய ஓர் அறிக்கையின் படி கனடாவின் கல்வித்துறை சிறந்த ஒன்றாக கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதில் குறைபாடுகள் இல்லை என்று நான் சொல்லமாட்டேன். அண்மையில் இங்கிலாந்தில் பல்கலைக்கழக படிப்பிற்கான விலையை மூன்று மடங்காக அதிகரித்தபோது அங்கு மாணவர் சமுதாயம் எவ்வளவு தூரம் கொதித்துப்போனது என்பது கல்வியின் முக்கியத்தையும் அதற்கான போராட்டத்தையும் விளக்கியது. அந்த கோபத்தின் உச்சம் Royal Family யில் உள்ளவர்களை தாக்கக்கூட துணியவைத்தது. கல்வி வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வியாபாரப்பொருள் தான். என்ன ஒரு வித்தியாசம் இங்கே வளர்ச்சியடைந்த நாடுகளில் ஆரம்பக்கல்வியும் உயர்கல்வியும் எல்லோருக்கும் பெரும்பாலும் பாரபட்சமின்றி கிடைக்கிறது.

இளைய தலைமுறைக்கு கல்விக்கும் வேலைவாய்ப்பிற்குமுரிய சந்தர்ப்பங்கள் சமமாக உருவாக்கப்பட்டால் அது நிச்சயம் சுபீட்சமான ஓர் நாடாக உருவாகும். இந்த இரண்டுமே  அதிக போராட்டம் இல்லாமல் கிடைக்கவேண்டும். ஆனால் யதார்த்தம், இவையிரண்டுக்கும் போராடாவே வாழ்க்கையின் பாதி தீர்ந்துவிடுகிறது.

13 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

// வறிய, நடுத்தர பொருளாதார சூழலிலிருந்து படித்து முன்னுக்கு வந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழக படிப்பை முடித்து வெளியே வரும்போது இங்கே எந்த அரசும் தங்க தாம்பாளத்தில் வைத்து வேலையை நீட்டிவிடப்போவதுமில்லை.//

உண்மைதான். குறிப்பாக இளையர்களின் சிந்தனைக்குரிய கட்டுரை. என் போன்ற இளைஞர்களுக்கு இது போன்ற கட்டுரைகள் படிப்பதற்கும் , அதற்கான மாற்றைச் சிந்திப்பதற்கும் நேரம் கிடைப்பதில்லை.

எங்களுக்குரிய நேரமெல்லாம், டேட்டிங், ச்சாட்டிங்... இப்படியே போய் விடுகிறது.

Rathi சொன்னது…

சத்ரியன்,

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

//எங்களுக்குரிய நேரமெல்லாம், டேட்டிங், ச்சாட்டிங்... இப்படியே போய் விடுகிறது.//

டேட்டிங், ச்சாட்டிங்... இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுவரை தான். ஆனால், அந்த வயதை தாண்டிவரும்போது இருண்ட எதிர்காலம் தான் மிச்சமிருக்கும் என்ற நிலையில்லாமல் இருக்கவேண்டும்.

தவறு சொன்னது…

பொருளாதார சூழல் சரியின்மையால் அழிந்த எதிர்காலங்கள் எத்தனையோ ரதி. இன்றைக்கும் கண்முன்னே குடும்பத்தை வழி நடத்துவதற்காக கூலி வேலைக்கு செல்லும் சிறார்கள் அதிகம். காரணம் பொருளாதாரம் ரதி.

அப்புறம் குருஜியை மிஞ்சி விடுவீங்க போலிருக்கு ரதி...வாழ்த்துகள்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இங்கு 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' இதில் கல்வியும் அடக்கம்..

அப்புறம் சித்தாந்த ரீதியாக இளையோர் இயக்கங்கள் பக்கம் சென்றாலும் திருமணம் என்ற பந்தத்தில் மாட்டிக்கொண்டால் இயக்கமாவது சித்தாந்தமாவது...

Thekkikattan|தெகா சொன்னது…

நன்கு சூழ்நிலையை அவதானித்து கல்வி பெருவதின் அவசியத்தையும், அது செல்லும் திசையயும் சுட்டி எழுதியிருக்கீங்க. அருமையா இருக்கு!

// ஆனால், மற்றத்துறைகளில் ஏன் வேலை உத்தரவாதமோ, அதற்குரிய மதிப்போ கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் மனதில் எழாமலில்லை.//

அதற்கு முதன்மைக் காரணமாக நான் கருதுவது ஒரு நாட்டின் பொருளாதார புழக்கமும், கற்றறிந்தவர்களின் மனத் தெளிவும் ஏனைய துறைகளையும் வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றுகிறது என்று கருதுகிறேன். என்னுடைய படிப்பு முற்றும் முழுதுமாக விலங்கியல் துறையிலிருந்து மாறுபட்டு, முதன்மையாக ‘வனவியல் சார்ந்தும், விலங்குகளை அழிவிலிருந்து மீட்டெடுப்பதுமாக’ அமைந்து போனது ஆனால் போதுமான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் அமைத்துக் கொடுக்காத நிலையால் படித்தவர்கள் அனைவரும் ஏதோ கிடைத்த வேலைகளில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ஒரு நிலை.

இந்த ஊழல்களின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இது போன்ற துறைகளை சிறப்பாக எடுத்து சீரமைக்க முன் வந்தாலே இப்படி பஞ்சம் பிழைக்க ஊர் ஊராய் சுற்றும் அவலம் நிகழாது. யோசிப்பார்களா?

ஜோதிஜி சொன்னது…

தெகா

நண்பர் சொன்னது நினைவில் வந்து போகின்றது.

எல்லா வசதிகளும் இங்கே இருந்து விட்டால், ஆள்பவர்கள் நல்லவர்களாக இருந்து விட்டால் இந்தியர்களில் பாதிப் பேர்கள் வெளியுலகம் தெரியாமலேயே செத்துப் போய்விடுவார்கள்.

உங்களையே எடுத்துக் கொள்ளுங்க. அரை டவுசர் போட்ட போது அட்லாண்டாவைப் பற்றி எதாவது தெரியுமா?

survival of fittest.

ரதி ஈழத்திலே வாழ்ந்திருந்தால் இது போன்ற ஒரு எழுத்தாளர் கிடைத்து இருப்பாரா?

ரதி இந்த இடுகை குறித்து வேறு சில விசயங்களை பகிர்ந்து கொள்கின்றேன். மின் அஞ்சல் வாயிலாக.

Rathi சொன்னது…

முதலில் சத்ரியன், தவறு, KRP செந்தில், தெகா, ஜோதிஜி எல்லோருக்கும் என் நன்றியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளும்.

புது வருடத்திற்கு ஏதாவது பயனுள்ள பதிவெழுத வேண்டுமென்று நினைத்து எழுதியது. இதுவரை என் முயற்சி வீண்போகவில்லை என்பது உங்கள் விமர்சனங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

என் தளத்தை தொடர்ந்து படிக்கும் இன்னும் இரண்டுபேரின் வருகைக்கு காத்திருக்கிறேன்.

Rathi சொன்னது…

தவறு,

கல்விக்காக பள்ளிக்கூடம் போகும் வயதில் கூலி வேலைக்கு அனுப்பப்படும் சிறுவர்கள்!! ஈழத்துக்கு இணையான வலி இது எனக்கு. எத்தனையோ தடவை "குழந்தை தொழிலாளர்கள் குறித்து எழுத வேண்டுமென்று நினைத்து தோற்றுப்போயிருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் எழுதியே தீரவேண்டும் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.

அப்புறமா, என் குருஜியை இந்த ஒருபதிவில் மிஞ்சமுடியாது என்று எனக்கு தெரியும். குறைந்தபட்சம் குருஜி அளவுக்காவது எழுத வேண்டும். அதற்கு எனக்கு இன்னும் பயிற்சி வேண்டும்.

செந்தில்,

யதார்த்தத்தையும், யதார்த்தமாகவும் பேச, எழுத செந்தில் தான். உங்கள் கருத்துக்கு நன்றி.

Rathi சொன்னது…

தெகா,

நீங்க சொன்ன "பஞ்சம் பிழைக்க ஊர் ஊராய் சுற்றும் அவலம்", அது தான் எங்களின் நிலையும். காரணங்கள் வேறுவேறு. ஆனால், அதன் பிரதிபலிப்புகள் ஒன்றுதான்.

//ஒரு நாட்டின் பொருளாதார புழக்கமும், கற்றறிந்தவர்களின் மனத் தெளிவும் ஏனைய துறைகளையும் வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றுகிறது //

இங்கே புதிதாய் யாரையாவது சந்திக்கும் போது சில சமயங்களில் நாகரிகமாக கேட்பார்கள், "What do you do for living"? என்று. என்ன வேலை என்பதைத் தான் அப்படி கேட்பார்கள். பிறகு அந்த வேலை பற்றி அதன் இயல்பு பற்றி கேட்டுத்தெரிந்துகொள்வார்கள். எனக்கு கனடியர்களிடம் பிடித்த குணங்களில் இதுவும் ஒன்று.

ஜோதிஜி,

//இது போன்ற ஒரு எழுத்தாளர் கிடைத்து இருப்பாரா?//

நான் இன்னும் பதிவர் தான் ஜோதிஜி. இன்னும் வளரவேணும்.

அப்புறமா, இத்தோட பத்து தடவைகள் என் மின்னஞ்சல் பெட்டியை சோதித்துவிட்டேன். என்ன திட்டு விழப்போகிறதோ என்கிற படபடப்புடன்.

ஹேமா சொன்னது…

ரதி...கல்வி பற்றி நிறையவே விளாசி அலசியிருக்கீங்க.எனக்குப் படிப்புப் பற்றி நிறையச் சொல்லத் தெரியாது.ஆனா எங்க நாட்டுப் படிப்பு முறைக்கும் இங்குள்ள படிப்புமுறைக்கும் வித்தியாசம் தெரிகிறது.ஒரு மாணவனின் திறமை அவன் எந்த வழிக்கல்வி படித்தால் வாழ்வில் முன்னேறுவான் என 8 ம் வகுப்பிலேயே அறிந்து அதன் வழிக்கல்வியைக் கொடுக்கிறார்கள்.
நாங்களோ சைவசமயத்திலும் தமிழிலும் முழுப் புத்தகத்தையுமே கரைத்துக் குடிக்காத குறைதான்.கண்ட பலன் என்ன.என்னமோ எல்லாம் சொல்ல இருக்கு கல்விபற்றி.
உங்களைமாதிரி சொல்லத்தெரியேல்ல ரதி.

ரதி...2011 எப்பிடிப் பிறந்திருக்கு.சந்தோஷமா இருங்க.இந்த வருஷமும் எங்கள் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்காகப் பிரார்த்திப்போம் !

Rathi சொன்னது…

ஹேமா,

புதுவருட வாழ்த்துக்கள்.

ஈழத்தில் அமைதியும் சுதந்திரமும் கிடைக்கவேணும் என்றத தவிர வேறென்ன நாங்கள் அதிகமா விரும்பபோறம்.
யாழ்ப்பாணச் செய்திகள் ஒன்றும் நிம்மதியாய் இல்லை.

ஹேமா, நான் முக்கி, முக்கி பந்தி பந்தியாய் சொன்னதை உங்களால் நாலே வரியில் கவிதையில் சொல்லமுடியும்! அது தான் உங்களின் சிறப்பு.

மேலைத்தேசங்களில் கல்வியின் சிறப்பை விட ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை எந்த விதத்திலும் துன்புறுத்த கூடாது என்பது தான் சிறப்பு. தவிர, பெற்றோரும் பாடசாலை, படிப்பு பற்றி கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்களும் உள்வாங்கப்படுவார்கள். இந்த விடயத்தில் எங்கட ஆட்கள் மற்றைய இனத்தவர்களைப் பார்த்து இப்போ நிறைய முன்னேற்றம்.

பின்னே, எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சரியான வழியில் சீரமைக்கும் ஓர் கடப்பாடு இருக்கு என்று உறுதியாய் நம்புகிறவர்கள்.

எல்லாத்தையும் விட சிறப்பு அண்மையில் தமிழ் பெண் ஒருவர் (இளையவர்) கல்விச்சபை ஒன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு "திருக்குறள்" மீது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

விந்தைமனிதன் சொன்னது…

சாராயம் விற்ற முதலைகளெல்லாம் 'கல்வித்தந்தை'களாக வலம் வரவும், கல்விதர வேண்டிய அரசு சாராயம் விற்கவும் செய்யும் ஒரு தேசத்தில் இருந்து எழுதுகிறேன்...

கல்வி என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பது வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கக் கடவது என்று அடித்தட்டு மக்களின் மீது சாபமிட்ட நவீன விஸ்வாமித்ரர்களை ஆண்டின் இறுதியில் நினைவூட்டி இருக்கிறீர்கள். கல்வி மட்டுமல்ல... குடிநீர், சுகாதாரம், வாழ்விடம் என எல்லா அடிப்படை உரிமைகளும் இங்கு பறிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பின்னணியில் இருக்கும் சுயநல அரசியல் அமைப்பை எதிர்த்து நிற்பது எவ்வாறு? உரிமைகள் என்பன கொடுக்கப்படுவன அல்ல! எடுக்கப்படுவன!

ஆளும் அதிகார அமைப்பிற்கெதிரான கலகக்குரல்கள் ஏதேனும் ஒரு கருத்தியல் அடிப்படையில்தான், சித்தாந்த அடிப்படையில்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

//ஏதாவது சித்தாந்தம், கொள்கைகள் அவற்றின் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று நம்பி எத்தனையோ அமைப்புகளோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். சில சமயங்களில் அரசுகளுக்கு தலையிடியாயும் ஆகிப்போகிறார்கள். ஆனால், பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்கள் வகுத்துக்கொண்ட கொள்கைகள் மூலம் தீர்வு காண்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். //

சித்தாந்தங்களின்கீழ் ஒன்றிணைவது அவற்றின்மீதான புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலும் இன்றைய சமூக அமைப்புக்கும்,இழிநிலைக்கும் மாற்று தேடும் தாகத்தின் அடிப்படையில் அல்லவா?

Rathi சொன்னது…

ராஜாராமன்,

இந்த ஒரு விடயத்தில் உங்கள் கருத்தோடு என் கருத்து ஒத்துப்போகாது என்றே தோன்றுகிறது.

எந்த வழிமுறை சிறந்தது என்பதல்ல இங்கே பிரச்சனை. எந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலும் ஏன் இன்னும் எந்தவொரு பிரச்சனைக்கும் இன்னும் எந்தவொரு தீர்வும் உங்களால் காணமுடியவில்லை என்பதே என் கேள்வி.

தங்களுக்கெதிரான அநீதிகளுக்கெதிராக ஜனநாயக வழியில் கிளர்ந்தெழ தெரியாதவர்கள் எப்படி நீங்கள் சொல்லும் வழிமுறையில் ஒன்றிணைந்து மாற்றுத்தேடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்.