டிசம்பர் 27, 2010

ஆயிரம் காலப்பயிரும் பெண்களும்!

மனிதனாய் பிறந்த யாராகினும் தன்னை தன் தனித்தன்மைகளோடு அடையாளப்படுத்த முயன்றாலும் எப்போதுமே தனியாய் வாழ்ந்துவிட முடிவதில்லை. ஒவ்வொருவரும்  தன்னை இந்த சமூகம் என்கிற கட்டமைப்புக்குள், சமூக இருப்பு என்கிற நிலைக்குள் தக்கவைத்தோ அல்லது சிக்கவைத்தோ கொள்ளவேண்டியிருக்கிறது. தேவைகள், ஆசைகள், இலட்சியங்கள் என்று ஏதோ ஒன்றுக்காய் மனம் அலைபாயவும் ஓடவும், தேடவும் செய்கிறது. ஆசைகளை இயல்பாகவே ஒதுக்கிவிட்டு இலட்சியங்களுக்காய் ஒடுபவர்களுக்குள் எப்போதுமே ஓர் தெளிவான உள்நோக்கு இருக்கும். அவர்கள் எதற்கும் எளிதில்  சஞ்சலமோ சங்கடமோ கொள்வதில்லை. அவர்கள் எந்தநிலையிலும் மற்றவரை சார்ந்து தான் வாழவேண்டும் என்கிற நிலைக்குள் தங்களை தாங்களே தள்ளுவதுமில்லை. தனிமனித தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆசைகளை நிவர்த்தி செய்ய ஒடுபவர்களே இங்கே வாழ்க்கை சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். 

பொதுவாக சொல்வார்கள் மனிதன் தன் பயங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவே வேறு விடயங்களில் கருத்தையும், கவனத்தையும் செலுத்துகிறான் என்று. பசி, பிணி, மரணம் இந்த மூன்றும் தான் மனிதனை அதிகம் பாதிக்கும் பயமல்ல, பீடிக்கும் பயங்கள். பசியும், பிணியும் வாட்டாத போது உடற்பசிக்கு தீனிவேண்டுமே. பசி வந்தால் தீர்க்கவும், பிணி வந்தால் ஆறவும், மரண பயத்தை போக்கவும் உண்டான சமூக ஏற்பாடே திருமணம். திருமணம் என்கிற ஓர் இயல்பான உடன்பாட்டு ஒப்பந்தம் பொருளாதார நிர்ப்பந்தம் மற்றும் கலாச்சார கலப்படங்களால் சமூகத்திற்கு சமூகம், நாட்டுக்கு நாடு என்று வேறுபடுகிறது. அங்கே பிறகு ஆண், பெண் என்கிற ஒப்பந்தக்காரர்களின் ஆதிக்கம், ஆளுமை என்கிற கூறுகள் சார்ந்த மேலோங்கிய நிலைகள் பிறக்கின்றன. 

நான் வாழும் நாட்டில் எத்தனையோ விதமான மனிதர்கள், அவர் தம் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் இவற்றுக்கு ஏதோ வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறேன். சில சமயங்களில் அது வெறும் அறிமுகம் என்கிற நிலை தாண்டி அதன் உட்கூறுகளை அறியவும் நேரிடுகிறது. அப்போதெல்லாம் நான் கவனித்தது பெண் எனப்படுபவள் எப்போதும் குடும்பத்தின் ஆணிவேர் மட்டுமல்ல. அவள் எப்படி தன்னை குடும்பம் என்கிற கூட்டுறவுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்கிறாள் என்பதும் தான். குடும்பம் என்கிற அமைப்பில் பெண்ணானவள்  தாய் என்கிற இயற்கை நிலை காரணமாகவும், சமூக ஏற்பாடுகள் காரணமாகவும் அதிக பொறுப்புகளையும் கடமைகளையும் கொண்டிருக்கிறாள். தன் கடமையிலிருந்து எப்போதும் வழுவாதிருக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. 


பொதுவாக இல்லாமல் தமிழ் கலாச்சாரம் என்று நோக்கினால், தமிழ்கலாச்சாரம் எப்போதுமே "Male Dominant Culture" என்பது எல்லோரும் அறிந்ததே. அதாவது ஆண்களின் மேலாட்சிநிலை அல்லது ஓங்கிய தன்மை தமிழ்கலாச்சாரத்தின் ஓர் கவனிக்கப்படவேண்டிய அம்சம். பெண் என்பவள் சிறுவயது முதலே ஆண் என்கிற ஏதோவொரு உறவுக்கு, அப்பா, அண்ணா, தம்பி, சித்தப்பா, மாமா இப்படி, இணங்கிப்போகிற அல்லது வளைந்துகொடுக்கும் இயல்புகள் (Submissive) கொண்டவளாய் வளர்க்கப்படுகிறாள். இந்த மனப்பாங்கு தான் பின்னாளில் புருஷன் குடும்பம் என்று வரும்போது வாழ்க்கைப்பட்டு போகிற இடத்தில் மதிக்கப்படும், வாழ்க்கை வளம் பெறும் என்கிற அபத்த கருத்துதிணிப்புகள் தமிழ்கலாச்சாரத்தில் நிறைந்துகிடக்கிறது. இங்கே எத்தனை பெண்களுக்கு, "நீ நீயாய் உன் இயல்புகளோடு இரு" என்று கற்றுக்கொடுக்கிறார்கள். எல்லாமே எதிர்மறையாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது. "இது இப்பவே இப்பிடி எண்டால் பிறகு வாறவனுக்கு எப்படி அடங்கி போகப்போகுது" என்று சில பாட்டிகள், அம்மாக்களே அங்கலாய்ப்பார்கள். 

சரி என்னென்னவோ கண்டங்களைக் கடந்து வீட்டில் செல்லாமாகவோ அல்லது கண்டிப்பகவோ வளர்க்கப்பட்டு திருமணம் என்கிற வாழ்வியல் மாற்றம் ஒன்றுக்குள் காலடி எடுத்தும் வைப்பார்கள் பெண்கள். பெரும்பாலான பெண்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வே உண்டாகும். இருந்தாலும், பெண் கல்வியும் அதன் வழிவந்த பொருளாதார ஸ்திரத்தன்மையும் பெண்களுக்கு பெரும்பாலும் ஓர் அசாத்திய துணிச்சலை கொடுக்கும்.  இதன் காரணமாக இவர்கள் குடும்பம் என்கிற அமைப்பில் முரண்பாடுகள், மனப்போராட்டம்,  சலனங்கள் வந்தாலும் சமாளித்துக்கொண்டு கரையேறி விடுவார்கள். தவிரவும், பொருளியல் வாழ்வின் அழுத்தங்கள் காரணமாக பரஸ்பரமான புரிதல்களுடன் கூடிய பரிமாற்றமாக திருமணவாழ்க்கை அமைந்துவிடும்.  


பெண் எனப்படுபவள் கணவனுக்கு எப்போதும் அடங்கியவளாக நடக்கவேண்டும் என்கிற மனப்பாங்கோடு வளர்க்கப்படும் பெண்களுக்கு கூட நல்ல புரிதல்களுடன் கூடிய வாழ்க்கைத்துணை கிடைத்தால் திருமணத்துக்குப் பிறகேனும் தேறி ஓர் சுதந்திரபிறவியாய் வாழமுடியும். அப்படி சந்தோஷமாய் வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே துணையின் இயல்புக்கு இணங்கிப்போகிற, தன்னை மாற்றிக்கொள்கிற, எதிர்க்காத சாத்வீக குணவியல்பு கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் என்னை அதிகம் வியப்படைய வைப்பவர்கள். நான் நினைப்பதுண்டு எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்று. சில பெண்கள் சர்வசாதாரணமாக சொல்வார்கள், "இனி என்ன செய்யிறது. பிள்ளையளுக்காகவேனும் இப்பிடியே வாழ்ந்துதான் ஆகவேணும்" என்று. இப்படிப்பட்ட குடும்பங்களில் வளரும் குழந்தைகள் எப்படிப்பட்ட மனப்பாங்குடன் வளருவார்கள் என்பது பற்றி தனிப்பதிவே போடலாம். 

என் பணித்தலத்தில் ஓர் இந்தியப் பெண் சொல்வார், என் கணவர் அவருக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமென்றாலும் அவரே எழும்பிப்போய் எடுத்து குடிக்கமாட்டார். இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு தன்னை ஏவுவார் என்று. ஏன் நீங்கள் அவருக்கு இதையெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாதா என்று ஆங்கிலத்தில் கேட்டேன். எப்போதுமே ஏதாவது பேசினால், "He dominates the conversation" என்பார். இப்போதெல்லாம் அவர் சிரிப்பதை நான் பார்ப்பதுமில்லை. அவர் குடும்பம் பற்றி கேட்பதுமில்லை.  ஆனாலும் நிறையப்படித்த, அவர் கணவரை விடவும் அதிக சம்பாத்தியம் கொண்ட ஓர் பெண்மணி தன்னுடைய சொந்தவாழ்க்கையில் ஏன் இப்படி சுறுசுறுப்பில்லாமல், எப்போதும் மந்தமாய் இருக்கிறார் என்று நான் நினைப்பதுண்டு. தன் குழந்தைகளுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டிருக்கிறேன் என்பார். எத்தனை நாளைக்கு என்று நான் மனதுக்குள் கேட்டுக்கொள்வேன். இன்னோர் வேற்றினப்பெண்மணி, "நாங்கள் நாயும் பூனையும் மாதிரி சண்டைபோடுவோம். ஆனால், bedtime என்றால் ஒற்றுமையாகிவிடுவோம்" என்று வெடிச்சிரிப்பு சிரிப்பார். கனடாவில் பெண்கள் உரிமைகள் அதிகம் பாதுகாக்கப்படுவதால் பெண்கள் பெரும்பாலும் உடல்ரீதியாக துன்புறுத்தப்படுவதில்லை. அப்படி ஏதாவது நடந்தது தெரியவந்தால் ஆணுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

போதைக்கு அடிமையான கணவனோடு குடித்தனம் நடத்தும் பெண்களும் உண்மையில் பொறுமைசாலிகளே. நித்தம், நித்தம் குடிபோதையில் வந்து மனைவி என்கிற பெண் ஜென்மத்தை அடிக்கும் கணவன்களுக்கும் பஞ்சமில்லாததுதான் தமிழ்சமூகம். எவ்வளவோ கனவுகளுடன் ஓர் ஆணை வாழ்க்கை துணையாய் ஏற்றுக்கொள்வார்கள் சில பெண்கள். வறுமையிலும் வாழலாம். ஓர் மொடாக்குடியனுடன் எப்படி வாழ்க்கையை பகிரமுடியும் என்று மனதுக்குள் மறுதலிக்கும் பெண்களும் எங்கள் தமிழ்சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். பொதுவாக பெண்கள் பற்றிய ஓர் கட்டுரையில் சொல்லியிருந்தார்கள் சில பெண்கள் ஆண்கள் குடிப்பதை ஊக்கப்படுத்துவார்களாம். காரணம், குடும்பத்தின் அதிகாரத்தை தங்களின் கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பதற்குத்தான் என்று சொல்லியிருந்தார்கள். 

ஆயிரம் பொய்சொல்லி வளர்த்த ஆயிரம் காலப்பயிர் விதிவிலக்குகளாய் சில வேளைகளில் ஆரம்பத்திலேயே கருகிப்போவதும் உண்டு. திருமணத்திற்குப் பிறகும் ஆணோ, பெண்ணோ தன் சுய விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும் போதும் அப்படி நடந்துபோக நேரிடுகிறது. காலம் போகிற வேகத்துக்கும் மாற்றங்களுக்கும் ஏற்றாற்போல் பெண்கள் தங்களை தங்கள் சமூக இருப்பை இப்போதெல்லாம் தக்கவைக்க நிறையவே போராடி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். பொருளியல்வாழ்வின் அழுத்தங்கள், பெண்கள் கல்வி, ஓரளவுக்கு பெண்கள் பற்றிய ஆண்களின் புரிதல் என்று சில காரணிகளால் பெண்கள் நிலை இப்போ முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனாலும், பெண் உரிமைகள் அதிலும் திருமணத்திற்குப்பின் பெண்கள் சுதந்திரம் தமிழ்சமூகத்தில் இன்னும் சிறப்பாய் சொல்லுமளவிற்கு இல்லை என்பதே என் கருத்து.


நன்றி: படங்கள் அறியது 

19 கருத்துகள்:

Vinoth சொன்னது…

சம்பதித்து குடும்பத்தை காப்பற்றும் ஆணிற்கு குடிக்க உரிமையில்லையா என்னாங்க உஙக ஞாயம் ?

தவறு சொன்னது…

தனது சமூகஇருப்பை தக்கவைத்து கொள்ள போராடி கொண்டிருக்கிறார்கள் அதேசமயம் சீரழியவும் கற்று கொண்டிருக்கிறார்கள் ரதி.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்தியப்பெண்கள் அதிலும் தமிழகபெண்கள் தங்களை கொஞ்சம் உணர்ந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தற்போது அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் அதனை நமக்கு தெளிவாக உணர்த்தினாலும் பெண்களே பெண்களை அடிமைபடுத்துவதற்கு துணைபோகும் வரைக்கும், பெண் விடுதலை சாத்தியமில்லாமல்தான் போகும்.

நீங்கள் மொடாக்குடியன் பற்றி மட்டும் சொல்லியிருப்பதால் நான் பதில் சொல்லவேண்டாம் என்று பார்த்தேன். ஆனால் நான் குடிப்பதை பற்றி இதுவரை என மனைவி கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால் குடித்தபிறகு நான் தவ நிலைக்கு சென்று யாரோடும் பேசாது படிக்கவோ, தொலைக்காட்சி பார்கவோ மட்டும் செய்வேன். அதனால் தொல்லை விட்டது என்றும் நினைத்திருக்கலாம். இன்றைக்கு தெளிவு படுத்திகொள்கிறேன்..

ஹேமா சொன்னது…

ரதி... நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.ஆனாலும் இருக்கும் சுதந்திரத்தை நாங்கள்(பொதுவாக)நாட்டிலும் சரி அகதி தேசத்திலும் சரி....சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பது பல பெண்களைப் பார்த்து எனக்குள் எழும் கேள்வி.

படைப்பிலேயே கொஞ்சம் தளர்வோடும்,உச்ச உணர்ச்சியோடும் படைக்கப்பட்டிருக்கிறோம்.
உடம்பும்கூட அப்படித்தான்.ஒரு ஆண் குடித்துவிட்டு உடையில்லாமல் இரவு முழுதும் தெருவோரம் கிடப்பதற்க்கும் ஒரு பெண் கிடப்பதற்குமான வித்தியாசம் எத்தனை விபரீதங்களைக் கொண்டு வரும்.எமக்கு இயற்கையான நியதி இது.இதில் சமூகத்தையோ,
வீட்டு அங்கத்தனரையோ, ஆண்களையோ சொல்லிக்கொண்டிருப்பது தவறுதானே.முதலில் நாங்கள் எங்களைச் சரியாக்குவோம்.சுதந்திரம் இயல்பாகவே எமக்கிருக்கிறது.
பாவித்துக்கொள்வோம்.

குடிகாரர்களைப் பற்றிச் சொல்லப்போனால்.
குடிப்பது தவறேயல்ல.அடுத்தவர்களுக்குக் கஸ்டம் கொடுக்காமல் தன்னை உணர்ந்து தன் சந்தோஷத்திற்கு குடிப்பதால் எதுவுமில்லை.
நானும்தான் அடிக்கடி தேநீர் குடிப்பேன்.
குடிப்பதால் கெட்டவர்கள் என்றில்லை.
குடிக்காதவர்கள் எந்த விதத்திலும் நல்லவர்களுமில்லை.

என்னைத் ஏதாச்சும் திட்டவேணுமோ ரதி.கொஞ்சம் கூடுதலாகச் சொல்லிடேனோ !

Rathi சொன்னது…

வினோத்,

நான் குடிக்க உரிமை இல்லையா, இருக்கா என்பது பற்றி பேசவில்லை. இந்த குடி திருமணம் என்கிற பந்தத்தில், குடும்பத்தில் எவ்வாறான சீரழிவுகளை கொண்டுவரும் என்பது குறித்தே சொல்லவந்தேன். இங்கே சொல்வார்கள், Marriage is a life time commitment என்று. நானும் நினைப்பேன் என்னப்பா இது இவர்கள் நினைத்தால் திருமணம் செய்வார்கள், பிறகு விவாகரத்தும் வாங்குவார்கள். பிறகேன் இப்படி சொல்கிறார்கள் என்று. ஆனால் அதிலுள்ள பொறுப்புகளை புரிய வைக்கத்தான் அப்படி சொல்கிறார்கள் என்று பிறகு புரிந்துகொண்டேன்.

நான் எங்கேயும் நியாயம் சொல்ல முற்படவில்லை நண்பரே. நான் உழைக்கிறேன் அதனால் குடிப்பேன் என்பது ஓர் தனிநபர் முடிவு. அது அளவுக்கு மீறும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. இங்கே ஒருவரின் குடிப்பழக்கத்தால் அவரின் குடும்பத்தில் பிரச்சனை என்றால் அரசு நிச்சயம் அந்த குடும்பத்தை அதன் பொருளாதார சுமையை ஏற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறது. நிச்சயமாய் வரிசெலுத்தும் பொதுமக்கள் இவ்வாறான பிரச்சனைகளை சமாளிக்க அரசு அதிக பணம் ஒதுக்கும் போது கேள்விகேட்பார்கள். நியாயம் தானே.

குடி, ஆனால் வீட்டையும் நாட்டையும் கெடுக்காதே என்பது தான் இங்கே சொல்லப்படுவது.

Rathi சொன்னது…

தவறு,

இப்படி வைத்துக்கொள்வோமா, போராடுபவர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அறிந்தோ, அறியாமலோ சிலர் சீரழிந்து போகிறார்கள்.

Rathi சொன்னது…

செந்தில்,

சில பேர் மொடாக்குடியாய் குடித்துவிட்டு வீட்டில் மனைவி முதல் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் வரை திட்டித்தீர்க்கும் "பெருங்குடி மகன்கள்" இருக்கிறார்கள். சில நேரம் அந்த எல்லையையும் தாண்டுவார்கள்.
உங்கள் தவநிலை பற்றி மனைவியிடம் கேட்டுவிட்டு நிச்சயம் பதில் சொல்லுங்கள்.

Rathi சொன்னது…

ஹேமா,

செந்தில் சொன்ன பெண்களே பெண்களை அடிமைப்படுத்த துணைபோவதும், நீங்கள் சொல்லும் சுதந்திரத்தை முழுதுமாய் பயன்படுத்துகிறார்களா என்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியதுதான். ஹேமா, முன்பெல்லாம் "குடிப்பதே தவறு" என்று நினைத்திருந்தேன். இப்போதும் அப்படியே தோன்றினாலும், குடிப்பவர்களில், மது, தேநீர் அல்ல :))) எத்தனையோ நல்லவர்களை பார்த்தபின், சந்தித்தபின் என் கருத்து கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறது. ஆனால், மதுவுக்கு அடிமையாகி (addicted) ஆண்கள் எத்தனையோபேர் குடும்பத்தை, அதன் சந்தோசத்தை சீர்குலைக்கவோ, சீரழிக்கவோ இல்லையா?

வினோத் மாதிரியே நீங்களும் என்னை ஒரு விடயத்தில் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ஒரு குடும்பத்தலைவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானால் பெண் மீது அதிக பொறுப்புகள் சுமத்தப்படாதா? தனிமனிதர்கள் தானே சமூகத்தின் அங்கம். அந்த தனி அங்கமும் கொஞ்சம் யோசிக்கட்டும்! யோசிக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஹேமா, இது திட்டல்ல. உங்கள் வாதத்திற்கு என் பாராட்டுக்களை பெற்றுக்கொள்ளுங்கள். என் தளத்தில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டலாம், எழுதலாம்.

ஹேமா சொன்னது…

ரதி...குடிப்பது வேறு அதற்கே அடிமையாவது வேறு.எந்தற்கும் அடிமைப்படும்போதுதான் அங்கே அடுத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
செயற்பாடுகளும் தடைப்படுகிறது.குடிக்கு அடிமைப்படுவர்களுக்கு நான் வக்காளத்து அல்ல !

ஜோதிஜி சொன்னது…

இந்த நாள் இனிய நாள்.

வேலையின் காரணமாக காலையில் சீக்கிரம் எழுந்து விட்டேன். இந்த தலைப்பை இதில் உள்ள விசயங்களைப் பார்த்து வரிக்கு வரி படித்து விட்டு நகரும் படி கட்டிப் போட்டு விட்டீங்க.

இடையிலே கடல் இருக்கிறது. இல்லாவிட்டால் நடந்து வந்து கைகுலுக்கியிருப்பேன்.

எனக்கு பல புரிதல்கள் (எனக்குச் சேர வேண்டியதையும் சேர்த்து சொல்கின்றேன்) கிடைத்தது.

நான் சொல்ல வேண்டிய எப்போதும் நினைத்துக் கொண்டு இருக்கும் இரண்டு விசயங்களை மிகத் தெளிவாக ஹேமா புட்டு புட்டு வைத்து குழாய்புட்டு கொடுத்து என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்து விட்ட ஸ்விஸ்க்கு நன்றிங்கோ?

இது ஆணாதிக்கம் அல்ல. இயல்பான வார்த்தைகளில் உள்ள உண்மையான நிலவரம் இதுதானே?

ஜோதிஜி சொன்னது…

நீங்க சொன்ன பெட்லைன் தான் நான் பார்த்த கேட்ட சந்தித்த பல குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறது????????????

ஜோதிஜி சொன்னது…

ஆக மொத்தம் கடைசியில் கிடைத்த படத்தின் மூலம் நான் அறிந்து கொண்ட தகவல் ரதியாருக்கு படம் தேர்ந்தெடுக்கும் கலையின் சூட்சமம் புரிந்து விட்டது.
சரிதானே?

Rathi சொன்னது…

உங்களுக்கு இந்தப்பதிவில் நிறையப்புரிதல்கள் என்பது விமர்சனத்தில் புரிந்தது.

பாராட்டுக்கு என் நன்றிகள்.

படத்தின் சூட்சுமம்!! ம்ம்ம்..... நான் படத்தின் மூலம் சொல்லவந்ததை புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அதுக்குப் பெயர் தான் சூட்சுமமா!! :)).

பல குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கும் சூட்சுமத்தையும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

//கொண்டு இருக்கிறது//

இதுக்கு என் நன்றியும், பாராட்டுக்களும் :)

விந்தைமனிதன் சொன்னது…

திருமணம் என்பது அரசியல் அதிகாரப் படிநிலையின் நுண்ணலகு. அதிகாரம் என்ற‌ வார்த்தையினுள்ளே அடிபணிதல் என்ற பொருளும் ஒளிந்திருக்கின்றது. "குடும்பம்,அரசு மற்றும் தனிச் சொத்துரிமையின் தோற்றம்" என்ற லெனினின் நூலையும், ராகுல சாங்கிருத்யாயனின் "வால்கா முதல் கங்கைவரை" நூலையும் சிபாரிசு செய்கிறேன். மற்றபடி இடுகை தன் மையக்கருத்தை ஆணித்தரமாக எடுத்துவைக்கத் தவறிவிட்டது என்பதே என் கருத்து.

ஹேமாவுக்கு,

ஆதிச்சமூகம் என்பது தாய்வழிச்சமூகமாகவே இருந்து வந்திருக்கின்றது. இன்றும் தொடரும் தாய்த்தெய்வ வழிபாடு என்பது தாய்வழிச்சமூகத்தின் நீட்சியே! தாய்வழிச் சமூகம் நடைமுறையில் இருந்தபோது பெண்ணே சமூகத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்திருக்கிறாள். நீங்கள் சொல்வதுபோல படைப்பிலேயே பெண் தளர்வு கொண்டவளாகவும், உச்ச உணர்ச்சியுள்ளவளாகவும் படைக்கப்படவில்லை. தாய்வழிச்சமூகம் மறைந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கைமுறை பெண்ணுக்கு அளித்ததுதான் நீங்கள் சொன்ன தளர்வும் உணர்வும்...

விந்தைமனிதன் சொன்னது…

//
//கொண்டு இருக்கிறது//

இதுக்கு என் நன்றியும், பாராட்டுக்களும் :) //

ஏற்கனவே வீட்டுல மூணு ராஜகுமாரிங்க மிரட்டல் தாங்காம பதிவுலகத்துக்குள்ள ஒளிஞ்சிக்கலாம்னு பார்த்தா, இங்கேயும் மிரட்டல் :))) எதுக்குடா வம்புன்னு வார்த்தையை தனித்தனியாவே பிரிச்சி எழுத ஆரமிச்சிட்டாருபோல! ஜோதிஜி! யாருக்கும் பயப்படாம நீங்க பாட்டுக்கு போயிட்டே இருங்க... சிங்கம்ல :)))))

ஹேமா சொன்னது…

நன்றி விந்தையாருக்கு.இயல்பாகவே படைப்பிலேயே பெண்ணுக்கு பலக்குறைவும் உடம்பு ரீதியான பாதிப்பையுமே சொல்ல வந்திருந்தேன்.விளக்கம் தந்தமைக்கு நன்றி.

ஜோதிஜி....பாவம்.... !

Rathi சொன்னது…

ராஜாராமன்,

புருஷன்,பெண்டாட்டி பிரச்சனைக்கும் Leninism!!! :(( குடும்பப் பிரச்னையை எவ்வளவு தூரம் சித்தாந்த அடிப்படையில் அணுக முடியும், தீர்க்க முடியும். ஒரு தத்துவம், சித்தாந்தம் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். அது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம். அந்த "Theory' எல்லாம் எப்படி apply பண்றது என்று விளக்குங்களேன். யாராவது பிரச்சனை என்று சொன்னால் அவர்களிடம், "OK, let's problem solve. Let us begin from Lenin....." இப்படியா ஆரம்பிக்க முடியும். ஏற்கனவே மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறிமிதிப்பது போல் ஏன் இந்த கொடுமை!!!

விந்தைமனிதன் சொன்னது…

அக்கா! உங்களிடம் ஒரு கேள்வி... பதிலை நிதானமாகவே யோசியுங்கள்! உங்கள் முன் ஒரு பிரச்சினையோ, கேள்வியோ இருக்கின்றது... அதற்கு தீர்வை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? உங்கள் சிந்தனை எங்கிருந்து கிளைக்கின்றது? அந்த சிந்தனைக்குத் தேவையான அறிவு, தகவல்கள், பகுத்தறிதல் என்பது எப்படி எழுகின்றது? எங்கிருந்து அதனைப் பெற்றீர்கள்? சிந்திக்கும் திறன்பெற்ற மனிதஜீவி எங்கிருந்து அதனைப் பெற்றது? இதற்கான விடைகளை ஆராயுங்களேன்!

அப்புறம் ஒன்று...நான் லெனினிஸத்தை இங்குத் தீர்வாக முன்வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் தீர்வேதும் தரவில்லை. குடும்பம் என்கிற அமைப்பின் தோற்றத்தைப் பற்றிய விரிவான அலசல்கள் அடங்கிய இரன்டு புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்தேன்... அவ்வளவுதான்.

யப்பா! கொஞ்சம் விட்டால் நான் கோட்பாட்டுவாதி என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கின்றதே! நான் அந்த அளவு இன்னும் வளரவில்லை அக்கா :))))

ஜோதிஜி சொன்னது…

காலை வணக்கம்.

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.
1.1.2011