டிசம்பர் 25, 2010

பழைய "கள்"ளும் புதிய மொந்தைகளும்!!!

இந்தியா, காங்கிரஸ் இந்த இரண்டு சொற்களுமே ஈழத்தமிழர்கள் மனதில் என்றைக்குமே ஆறாத காயத்தையும், மறையாத வடுவையும் உண்டாக்கிய, இன்னுமின்னும் அவ்வாறே உருவாக்கிக்கொண்டிருக்கும் பெயர் சொற்கள். முள்ளிவாய்க்கால் அழிவையும் இழப்பையும் நினைக்குந்தோறும் கூடவே இந்தியா என்ற சொல்லும் மறக்காமல் ஞாபகத்திற்கு வந்துதொலைக்கிறது. அன்றுமுதல் இன்றுவரை ஒப்பந்தங்கள் மூலம் வெளிப்படையாகவும் திரைமறைவிலும் உருவாக்கிய அழிவுகள் தவிர, இப்போதெல்லாம் இலங்கைக்கு குடை பிடிக்கும் இந்தியா அதன் அதிகாரிகள் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் பற்றிய தீர்வுகளுக்கு ஏறுக்கு மாறாய் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் பத்து லட்சம் மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது அதை சர்வதேச மனித உரிமைகள் சாசனத்திற்கேற்பவேனும் தன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த நேரு அரசு. அதன் பிறகு இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் காலகாலமாய் போடப்பட்டிருக்கின்றன. பெயர்போன பண்டா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் மலையகத்தமிழர்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஒப்பந்தங்களிலும் இதுவே தான் தொடர்ந்தது.

1957 இல் பண்டாரநாயக்கா - தந்தை செல்வா - ஒப்பந்தம் (Regional Council), 1965 இல் டட்லி சேனா நாயக்கா - தந்தை செல்வா ஒப்பந்தம் (District Council) இதையெல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் குப்பையில் தூக்கிப்போட்டபோது இந்தியா கண்டுகொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த சிறீமாவோ (Federal Form of Govt) மற்றும் ஜெயவர்த்தனாவும்
(District Council without Executive Power) எங்கள் அடிப்படை உரிமைகளுக்கான தீர்வுத்திட்டங்களை கடாசிவிட்டு தங்கள் பேரினவாதக் கொள்கைகளையே நிலைநிறுத்தினார்கள். இப்படி இலங்கை என்ற நாட்டில் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட போதும், காலங்காலமாய் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையும் கண்டுகொள்ளாத இந்தியா நேரடியாக களமிறங்கியது. காரணம், தமிழர்கள் மீதுள்ள அக்கறையல்ல. இலங்கை என்ற நாடு தெற்காசியாவில் மற்றைய நாடுகளின் பக்கம் சாராமலிருக்கவே என்பது எல்லோரும் அறிந்தது.

அதன் விளைவு தான் 1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம். ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்துக்கே சங்கு ஊதிவிட்டது. பிரச்சனை தமிழனுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் என்றாலும், இந்தியா இடையே நுழைந்து எப்போதுமே ஏதாவதொரு ஒப்பந்தம் போட்டு எங்கள் உயிர்களும் உரிமைகளும் பறிக்கப்பட துணை போனதன்றி வேறெதையும் சாதித்தது கிடையாது.

இந்த சாணக்கியத்தின் தொடர்ச்சி தான் இன்னும் தொடர்கிறது. அண்மையில் தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சொன்னது பற்றிய பத்திரிகை செய்தி. மேற்குலகத்தின் இலங்கை மீதான போர்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையை காப்பாற்றுவது, அழிவுக்குட்பட்ட தமிழர்கள் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் இந்தியாவுக்கு கணிசமான பங்கை கொடுப்பது என்று இந்தியா இலங்கையுடன் பேரம் பேசுகிறது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக தமிழர்கள் தவறான புரிதல்களை கொண்டுள்ளார்களாம். புலம்பெயர் தமிழர்கள் முக்கியமானவர்கள் இல்லையாம் என்பது இவர் கூற்று.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. என்னை அதிகம் வெறுப்பேற்றும் விடயம் இந்திய அறிவுசீவிகள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றி எழுந்தமானமாய் ஆளாளுக்கு இன்றுவரை பேசுவது தான். 1987 ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த பதின்மூன்றாவது திருத்தச்சட்டம். இது மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வை இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கிறது. சிவசங்கர் மேனன் 13 வது திருத்த சட்டத்தின் படி அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று இந்தியா இலங்கை மீது ஓர் முடிவை திணிக்காதாம். 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தமே 1977 பொது தேர்தலில் வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு (mandate) எதிரானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இவர்கள் சொன்னவுடன் இந்தா பிடி வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வென்று இலங்கை தூக்கி கொடுக்கும் என்று நினைக்கிறார்களா?

அடுத்து இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சர் S. M. கிருஷ்ணா மாவீரர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் ஓர் இந்திய தூதரக கிளையை திறந்து வைத்து ஓர் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் சொன்னதும் 13 வது திருத்தச்சட்டத்தின் வழி இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாம். அதுதவிர, யாழ்ப்பாணத்தில் பேசும்போது ஆறுமுகநாவலர் பற்றி பேசியும்; தெற்கில் பேசும்போது புத்தரின் பிறந்தநாளுக்கு "கபிலவஸ்து" நினைவுச்சின்னம் அனுப்புவது பற்றியும் பேசினார் என்று TamilNet செய்தி தளம் குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணத்தில் பேசுறதுக்கு நிறைய தயார்ப் படுத்திக்கொண்டு போயிருப்பார் போல.இவங்க இரண்டு பேரில் யார் சொல்வதை பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றி நாங்கள் நம்பவேண்டும்!! ஒருவர் 13 வது திருத்தச்சட்டம் இலங்கை மீது திணிக்கப்படாது என்பார். மற்றவர் அதுதான் தீர்வுக்கு வழி சொல்லும் என்கிறார். ஏன் இப்படி ஈழத்தமிழர்களை குழப்புகிறார்கள்.

இந்த காங்கிரஸ் கண்மணிகள் வரிசையில் இப்போ புதிதாய் ஈழத்தமிழர்கள் பற்றி அக்கறைப்படுபவர் ராகுல் காந்தி. இந்த காங்கிரசின் கத்துக்குட்டி எல்லாம்  ஈழத்தமிழர்களுக்குரிய தீர்வைப் பற்றி பேசுவதென்றால் ஈழத்தமிழா உன் நிலை தான் என்ன? இலங்கை அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவில்லை என்று இவர் ரொம்பவே கவலைப்படுகிறாராம். காங்கிரஸ் காரர்கள் போற்றித்துதிக்கும் இந்த வளர்ந்த குழந்தை ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று யார் அழுதார்கள். ஏன் இப்பிடி?

ஆனாலும் ஒரேயொரு ஆறுதல் நேருவின் வம்சத்தில் இவர் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றி இதுவரை பேசவில்லை என்பதுதான். ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சாடி சிங்களத்தின் கோபத்திற்கு வேறு ஆளாகியிருக்கிறார் போலும். காலங்காலமாய் ஏதாவது சபை, ஒப்புக்கு அதிகாரம் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்திய அறிவு சீவிகள் மட்டும் அதே பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றியும், ராகுல் காந்தி போன்றவர்கள் ஈழத்தமிழர்கள் போல் அக்கறையுள்ளவர்கள் போலவும் தங்களுக்கு ஏதாவது அரசியல் தேவைகள் ஏற்படும் போது மட்டும் பேசுவார்கள்.

இவர்கள் என்னதான் பேசினாலும் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பாக விக்கிலீக்ஸ் ஆதாரங்கள் மற்றும் ஐ. நா. வின் முன்னெடுப்புகள் தொடர்ந்தால், அதில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும்!!

7 கருத்துகள்:

விந்தைமனிதன் சொன்னது…

testing for comment moderation....
1...2...3...

தவறு சொன்னது…

அரசியல்,சூழ்ச்சி ஓர் இனம் அழிந்துபோவதில் தான் இந்தியாவின் பாதுகாப்பு என்றால் ஓர் இனம் அழிந்துபோவதில் இந்தியாவுக்கு என்ன கவலை இருந்துவிடப் போகிறது.

ஈழ தமிழினம் உங்களை போன்றவர்களால் உயிர்பெறும் என் நம்பிக்கை. நல்ல தலைமை அமைத்து ஒன்றிணைத்தல் அவசியம்.

அது எப்பொழுது!!!???

விந்தைமனிதன் சொன்னது…

தனிமனித நலன்சார்ந்தும், பெரு நிறுவனங்களின் வியாபார நலன் சார்ந்துமே ஒரு ஏகாதிபத்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இன்று வடக்கு கிழக்கின் 'மறுசீரமைப்பி'ல் கொழுக்கும் இந்திய, சீன நிறுவனங்களைக் கவனியுங்கள். யாருக்காக இந்தியாவும் சீனாவும் இந்தப்போருக்குக் கால்தாங்கியதெனப் புரியும். ஈழப்போராட்டம் என்பது இனி இந்திய ஏகாதிபத்தியத்தை உடைத்தெறியப்படுவதற்கான மக்கள்போராட்டத்துடன் தான் பிணைந்திருக்க முடியும். ஏகாதிபத்தியத்துக்கெதிரான போராட்டம் என்பது அடித்தட்டில் வாழும் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கப்படும் மக்களை அரசியல்ரீதியாக ஒன்றுதிரட்டுவதன்மூலமே வெல்லமுடியும்.

இந்திய மக்களை எப்படி அரசியல்மயப்படுத்துவது???

தேடுங்கள்... கிடைக்கும் விடைகள் வியப்பளிக்கும்!

ஜோதிஜி சொன்னது…

எஸ் எம் கிருஷ்ணா இந்த பதவிக்கு வந்த போதே மனதிற்குள் வியப்பாக இருந்தது. அவருடைய தனிப்பட்ட ஓழுக்கம் சார்ந்த விசயங்கள் இங்குள்ள அனைவரும் அறிந்ததே. ஏறக்குறைய பொம்மை போல அந்த பதவிக்கு ஒரு ஆள் வேண்டும் என்பதாக சோனியாக போட்டுருப்பதாக எனக்குத் தோன்றியது. பக்கத்து கர்நாடகாவில் முதல் தலையாக இருந்த போது தமிழ்நாட்டில் மேல் காட்டிய அக்கறை தெரிந்தவர்களுக்கு நன்றகாகத் தெரியும்?

இவருக்கு ஈழம் குறித்து புரிந்து? என்னமோ போங்க?

நீங்க வேணாப் பாருங்க நான் ஏற்கனவே வலைதளத்தில் எழுதியபடி ஒரு காலகட்டத்தில் உள்ளே வேலைவாய்ப்பு மற்ற அத்தனை விசயங்களிலும் சீனாவின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல் தமிழர்களும் சிங்கள அடிப்படை பொதுமக்களும் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜோதிஜி சொன்னது…

ராகுல் குறித்து அவரின் எதிர்காலம் குறித்து மனதிற்குள் சிலவற்றை குறித்து வைத்துள்ளேன்.

பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று?

ஹேமா சொன்னது…

அம்மா பகையாம்....குட்டி உறவாம்.
நாங்க இதை நம்பணுமாம்.
ம்ம்ம்.....எல்லாம் காலம்தான் !

Rathi சொன்னது…

Comment moderation சரிபார்த்தவருக்கு... :) ஒன்றை கவனித்தீர்களா நீங்கள் சொன்ன கருத்தையே ஜோதிஜியின் கருத்து வேறு விதமாய் பிரதிபலிக்கிறது.

தவறு,

இந்தியா தன் சொந்த நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்படுவதில்லை. இதில் ஈழம் பற்றி அக்கறை கொள்ளாது என்பது தெளிவு. ஆனால், இந்த அறிவுசீவிகள் ஆளுக்கொரு டயலாக் விடுவது தான் எரிச்சலை கிளப்புகிறது.

ஜோதிஜி,

Incompetent Leader ஒருவரை தேர்ந்தேடுத்ததிற்கான தண்டனையை நாட்டு மக்கள் தான் அனுபவிக்க வேண்டுமென்கிற கொடுமை. ஆனால் அந்த திறமையற்ற, செயல் திறன் போதாமை எல்லாம் அனுமார் வால் மாதிரி நீண்டு ஈழத்தில் ஏற்கனவே நொந்துபோனவர்களை இன்னும் ஏன் குழப்ப வேண்டும்.

ராகுல் காந்தி குறித்து உங்கள் காலக்கடிகை ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்தியை காட்டாது.

ஹேமா,

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? எனக்கென்னவோ இவர் "நாமல்" இட்ட கொஞ்சம் பயிற்சி எடுக்கலாமோ எண்டு தோணுது.

அவரும் யாழ்ப்பாணத்தில என்ன சிங்கள நிகழ்வு நடந்தாலும் தோளில துண்டோட வந்திடுவார் போல, போட்டோவுக்கு போஸ் குடுக்க. மற்றவர் தமிழ்நாட்டில வந்து Punch Dialogue விட்டுக்கொண்டிருக்கிறார். எப்பிடிப்பாத்தாலும் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இந்த வாரிசுகளால் விமோசனம் கிடையாது தானே.