டிசம்பர் 20, 2010

இலங்கை தேசியம் - ஈழத்தமிழர்களின் கடமைகள் - என் புரிதல்

தேசியம் என்பது என்ன?
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

தேசம் என்றால் என்ன?
சேர்ந்தாற்ப் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதாரமும். பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்த்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின். 

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண். இரண்டாவது தேவை பொதுமொழி, மூன்றாவது தேவை பொதுப்பொருளியல். நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான "நாம்", "நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.  

-தமிழ் தேசக் குடியரசு - ஒரு விவாதம் - பெ.மணியரசன்-

"The major mistake that the Commissioners, in their ignorance, made, was to assume that Ceylon was one nation. The reality was that it was one country (a geographic entity), with two nations (Sinhalese and Tamils), and five communities ....."

The most accurate definition of a "nation" from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:

"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."

-Diaspora referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Seniwiratne-

ஒரு விடயத்தை பெ. மணியரசன் அவர்கள் சொன்னாலும் செனிவிரட்னே அவர்கள் சொன்னாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான். இதுக்கெல்லாம் இப்போது இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அவரின் பரிவாரங்கள் புதிதாய் விளக்கமும், வியாக்கியானமும் சொல்ல தலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இருப்பது ஒரேயொரு இனமாம். அதாவது இலங்கையர்கள். அங்கே தமிழர், சிங்களவர்கள் என்கிற பாகுபாடு கிடையாது என்பதாகத்தான் இவர் சொல்கிறார் என்பது என் புரிதல். "இலங்கையர்கள்" என்பது ஓர் நாட்டின் குடிமகனுடைய குடியுரிமை அடையாளம். அதெப்படி இனப்பாகுபாட்டுககொள்கைகள் உள்ள ஓர் நாட்டில் என் உரிமைகளை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுடனான என் தனித்தன்மையை பிரதிநித்துவப்படுத்தும் என்றெல்லாம் நான் ஏதோ அறிவுசீவித்தனமாய் கேள்வியெல்லாம் கேட்கப்போவதில்லை.

இலங்கை தேசியத்தின் எந்தவொரு கூறிலும் இவரின் கூற்றுக்கு ஏற்றாற்போல் நாங்கள் சமமாக உள்வாங்கப்பட்டிருக்கிறோமா என்று நானும் யோசித்து பார்க்கிறேன், தேசிய கொடிமுதல் தேசிய இனம் என்பதுவரை!!! இதற்கு பதில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதையும் கடந்து செல்வோம். 

காலங்காலமாக இலங்கை தேசியத்தில் ஈழத்தமிழர்களின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு, பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக இலங்கையின் இனப்பாகுபாட்டு கொள்கைகளால் திட்டமிடப்பட்டே சிதைக்கப்படுகிறது. அது செல்லும் பாதை ஈழத்தமிழனின் உயிரை குடிப்பதை, இன, மான உணர்வை, விடுதலை உணர்வுகளை மழுங்கடிப்பதிலேயே மும்முரமாய் செயற்படுகின்றன.

ஆனாலும், இன்றும் தமிழர்கள் "இலங்கை தேசியத்துக்கு" தங்கள் பங்களிப்பை செய்யவேண்டும் என்றுதான் சிங்கள ஆட்சியாளர்களும், அவர்களின் இனப்பாகுபாட்டுக் கொள்கைகளுக்கு துணைபோகும், விலைபோகும் சில ஈழத்தமிழர்களும் Broken Record போல் ஒப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான மண் காலங்காலமாக சிங்கள பேரினவாதக் கொள்கைகளால் சூறையாடப்பட்டு பறி போய்க்கொண்டுதான் இருக்கிறது. அது 2010 May மாதத்திற்குப் பிறகு இன்னும் அதிகளவில் வடக்கில் கூட சிங்கள குடியேற்றங்கள், புத்தருக்கு விகாரைகள், தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு என அமைக்கப்பட்ட உல்லாச விடுதிகள் ("Resorts") எல்லாம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் மண்ணில் எங்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழ் மன்னர்களின் சிலைகளைக்கூட விட்டுவைக்க விரும்பவில்லை சிங்கள ஆட்சியாளர்கள். இதையெல்லாம் வாய் மூடி மெளனியாய் சகித்துக்கொள். இது தான் ஓர் தமிழனாய் நீ இலங்கை தேசியத்துக்கு ஆற்றும் கடமை என்பது சிங்கள ஆட்சியாளர்களின் அறிவுரை. தமிழுக்கு அதற்குரிய சட்டரீதியான அங்கீகாரத்துக்கு சாவுமணியடிக்க நினைத்தவர் SWRD பண்டாரநாயக்கா (1956). அது ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளரிடமிருந்தும் தொற்றித் தொடர்ந்து தன்னை நவீன "துட்ட கெமுனு" என்று அழைத்துக்கொள்ளும் ராஜபக்க்ஷேவையும் விட்டுவைக்கவில்லை. அண்மைக்காலங்களில் இலங்கையில் தேசிய கீதம் இனிமேல் தமிழில் பாடப்பட மாட்டாது என்கிற ஒரு செய்தியும் அது குறித்த குழப்பங்கள் தமிழர்களை கவலை கொள்ள வைத்தது. காரணம், அது இலங்கையில் தமிழர்களை வந்தேறு குடிகளாய் வரலாற்றில் பதியவைக்கும் ஓர் முயற்சி என்று சில அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். ராஜபக்க்ஷேவின் அமைச்சரவை தலைமையில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும்; இது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும், இன்றைய செய்திகளின் படி இலங்கையின் தேசியகீதம் தமிழிலும் இசைக்கப்படலாம் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான ஹெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளாராம்.

பெயரளவில் தமிழுக்கு அதன் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும் பெரும்பாலான அரச கரும கடிதங்கள் சிங்கள மொழியிலேயே எழுதப்படும்; தமிழன் பூர்வீக பூமியில் இலங்கை தேசிய கீதம் தமிழில் பாடப்படாதென்றால்; ஏனென்று கேள்விகேட்காமல், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று புரியாமல் ஏற்றுக்கொள்வது தான் தமிழன் இலங்கைத்தேசியத்துக்கு ஆற்றும் மொழிசார் கடனோ!!

இலங்கை தேசியத்துக்கு பொருளாதார ரீதியாக உன் பங்களிப்பை செய் என்று சொல்லும் இலங்கை அரசியல் ஈழத்தமிழனின் நிலமும், வளமும் High Security Zone என்கிற பெயரில் பறிபோகும் நிலங்கள் பற்றியோ அல்லது கடலில் மீன்பிடிக்க விதிக்கப்படும் தடைகள் பற்றியோ அக்கறை கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. தமிழனின் வாழ்நிலங்கள் பறிக்கப்பட்டு இந்தியா ஏதாவது விமானத்தளம் அமைக்கும். அல்லது, சீனா துறைமுகம் அமைக்கும். இது பற்றி வாய் திறந்து எதுவும் பேசாமல் இருப்பது தான் ஈழத்தமிழன் இலங்கை தேசியத்துக்கு செய்யும் பொருளாதார பங்களிப்பு என்பது ஏனோ "மரத்தமிழனுக்கு" (எழுத்துப்பிழையல்ல) புரிவதில்லை. உடனே யாராவது, நான் யாழ் அரச அதிபர் இமெல்டா என்பவரை மனதில் நினைத்துக்கொண்டு இப்படி எழுதுகிறேன் என்று புரிந்துகொண்டால் அது என் தவறல்ல. இலங்கை தேசியத்திற்கு தமிழர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் பற்றிய இமெல்டாவின் சிந்தனைகள். உன் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் தான் பறிக்கப்பட்டாலும், நீ வீதியோரங்களில் தான் வாழ்ந்தாலும் இலங்கை தேசியத்தின் பொருளாதாரத்தை மட்டும் வாழவைத்துவிடு தமிழா!!!

இறுதியாக தமிழனின் பண்பாடு, பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் அது இலங்கை தேசியத்துக்கு ஆற்றும் கடமை பற்றி ஓரிரு வார்த்தைகள். இலங்கையின் ஆட்சியாளர்கள் எப்படி "தமிழ்ப்பண்பாட்டுக்கு" அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள் என்பதை அண்மைய முக்காலமும் உணர்ந்த தெய்வம் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கை அரசும், துணை குழுக்களும் (வேற யாரு, தமிழர்களின் சாபக்கேடுகளில் ஒன்றிரண்டுகள் தான்) தமிழ்ப்பெண்களை எப்படி பாலியல் அடிமைகளாக்கினார்கள், சிங்கள சிப்பாய்களை எப்படி சந்தோசப்படுத்தினார்கள்  என்பதை; அது எப்படி விடுதலை சார்ந்த உளவியல் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை நான் விளக்கத்தேவையில்லை. ஈழத்தமிழனின் பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் பற்றிய என் பதிவு. ஈழத்தில் வாழும் தமிழர்களின் மத்தியில் கருத்துருவாக்கங்கள், பண்பாட்டு சீரழிவுகள் திட்டமிடப்பட்டே நிகழ்த்தப்படும். அது குறித்து தமிழனே மூச்சுக்கூட விடாதே. அது தான் நீ இலங்கை தேசியத்துக்கு ஆற்றும் இன்னோர் கடமை.மொத்தத்தில் தமிழனே உன் உயிர், நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு, பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் எல்லாமே இலங்கையில் அழிக்கப்படும். அழிக்கப்படட்டுமே!! இருந்தாலும் மெளனிகளாய் நீ இலங்கை தேசியத்தை மட்டும் வாழவைத்துவிடு!! தேசிய நீரோட்டத்தில் மூழ்கி, முக்குழித்து முத்தெடுத்து உன் குருதியில் இலங்கையை, சிங்கள தேசியத்தை நீராட்டு. இதைத்தான் சர்வதேசமும் வேறோர் பெயரில் "மீள் இணக்கம்" என்று சொல்கிறது, எதிர்பார்க்கிறது. அதை விடுத்து, "தேசம், தேசியம், தன்னாட்சி" என்று தமிழர்கள் பேசினால் சர்வதேசமும் சிங்கள தேசியத்துடன் சேர்ந்து எங்களை கோபித்துக்கொள்கிறது. ஏன் இப்பிடி???

Joseph Stalin கூற்றுப்படி தமிழன் தனியே தன் தனித்தன்மைகளோடு வாழும் எல்லா உரிமைகளும் தகுதிகளும் இருக்கிறது. அதற்குரிய வரலாற்று ஆதாரங்களும் ஈழத்தமிழர்களிடம் தாராளமாகவே இருக்கிறது. இருக்கட்டுமே!!! சிங்கள தேசியம், பூகோள அரசியல் இவையிரண்டுமே ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்துக்கும் சமாதி கட்டிவிட்டுத்தான் ஸ்டாலின் சொன்னதைப்பற்றி யோசிப்பார்கள் போலும்.

பி.கு: என் தம்பி விந்தைமனிதன் (ராஜாராமன்) "என்ன சவுண்டையே காணோம்" என்று கேட்டதால், இது ஈழம் பற்றிய என் அவசர பதிவு. பிழைகள், குற்றங்கள் இருந்தால் மன்னிக்கவும்.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம்,தமிழ்த் தேசியம் என்று எவரும் உரிமை கொண்டாடமுடியாது.அதற்கான ஆதாரங்களும் இல்லை.வடமுனை முதல் தென்கரை வரை ஆட்சி புரிந்தவர்கள் சிங்களவர்கள் தான் என்று பேரினவாதியான எல்லாவல மேதானந்த தேரர் அடித்துக் கூறுகின்றார்.

கடந்த கால சரித்திரத்தைப் புரட்டினால் 2500 வருடங்களுக்கு மேல் 186 சிங்கள மன்னர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.இதற்கான கல்வெட்டுகளும் சான்றுகளும் இருக்கின்றன.

இலங்கையை தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று கூறுவது வெறும் கட்டுக்கதை.இதில் எந்த ஒரு உண்மையும் கிடையாது.அவர்கள் கூறுவது போல் தமிழ் மன்னர்கள் ஆண்டிருந்தால் அவர்கள் எந்த ஒரு நீர்த்தேக்கத்தையோ வாவிகளையோ அல்லது அணைக்கட்டுக்களையோ கட்டியிருக்கின்றனரா? இல்லவே இல்லை.

இன்று தமிழர்களின் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கும் நல்லூர்க் கோவிலைக் கட்டியவர் சபுமல் குமரயா என்ற பராக்கிரபாகு மன்னரின் பிரதிநிதி. இந்தியாவிலிருந்து வந்த காளிங்க மன்னரின் படையெடுப்பை முறியடித்து வெற்றிகண்டதின் ஞாபகமாகவே நல்லூர் கோயில் கட்டப்பட்டது.

காளிங்க மன்னருடன் வந்த கேரள சிப்பாய்களில் பலர் அங்கேயே தங்கிவிட்டனர்.இவர்கள் பின்னர் தமிழர்கள் ஆனார்கள்.ஆனால் இவர்கள் தமிழர்கள் அல்ல.வந்தேறு குடிகளேயன்றி காலம் காலமாக வாழ்ந்தவர்கள் அல்ல.தமிழ் மொழி அங்கே இருந்தது என்றும் கூறமுடியாது.

எந்தவொரு சிங்களவரும் பிறமத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை.தமிழர்களுக்கு எதிராகச் சண்டை செய்யவும் இல்லை.ஆனால் வடக்குக் கிழக்கில் பௌத்தர்களின் பாரம்பரிய விகாரைகள்,தூபிகள் தமிழர்களினால் தகர்க்கப்பட்டுள்ளன.அந்த இடங்களில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

நான் 1950 களில் புதைபொருள் ஆய்வு தொடர்பாக அங்கு சென்று பல விவரங்களைத் திரட்டியுள்ளளேன். 1583 வாவிகளும் 1083 கிராமங்களும் 1583 பௌத்த வழிபாட்டுத் தலங்களும் இருந்தன.அவற்றைத் திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

ஒவ்வொரு வாவிகளிலும்,கால்வாய்களிலும் ஆரம்ப இடத்தில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டன.ஆனால் அவை இப்பொழுது அழிக்கப்பட்டுள்ளன.இவை மீண்டும் புனரமைத்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களை விட சிங்கள மக்களே கல்வி,பொருளாதாரம் என்பவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு ஒரு உதாரணம் கல்வி அபிவிருத்தி.கொழும்பில் 17 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.இங்கு உயர்தரம் படிப்பிக்கும் பாடசாலைகள் 32 மட்டுமே இருக்கின்றன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கின்றனர்.அங்கு உயர்தரம் படிக்க 33 பாடசாலைகள் இருக்கின்றன.இதை நான் கேட்டால் இனவாதியாகுமா?

யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரை "தத்த" என்ற பெயர் கொண்ட இனத்தவர்கள் இருந்தனர்.இவர்கள் சிங்களவர் என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

காங்கேசன்துறை துறைமுகம் கூட முதலாவது பராக்கிரமபாகு மன்னரால் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கு காணப்படும் கல்வெட்டுக்கள் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன.வர்த்தக ரீதியான கட்டளைகளும்,சட்டங்களும் அறிவிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து தமிழர்கள் வியாபார நோக்கமாக இங்கு வந்தனர்.இவர்களின் மொழி தமிழ்.இவர்கள் இந்த அறிவிப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது.இதுதான் உண்மை.இப்படி எல்லாவல மேதானந்த தெரிவித்தார் !

தமிழ் உதயம் சொன்னது…

இது தான் இன்றைய ஈழத்தின் நிலை.

http://nkashokbharan.blogspot.com/2010/06/blog-post_22.html?

யாரை நொந்து என்ன பயன்.

தவறு சொன்னது…

எதிர்த்தால் துன்புறுத்தபடுவாய் உயிருடன் வாழ ஒத்துப்போகும் ஈழதமிழினம்.

யார் பேசுவது ? யாரிடம் யாரை விட்டு பேசுவது ?
இதற்கான வழிகள்தான் என்ன?

அடிப்படை உரிமைகளை பெறவே தடை.அத்துமீறல்களை எப்படி தடுப்பது ரதி?

உங்களின் மனகுமுறல்களுக்கு யாரால் பதில் அளிக்கமுடியும்.

Rathi சொன்னது…

ஹேமா,

நான் இந்த தேரர்கள் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்வது கிடையாது. இலங்கையில் இருப்பது ஒரேயொரு இனம் தான் என்று ஜனாதிபதி குயுக்தியாய் சொல்லும் போது இவர்கள் இன்னும் என்னதான் சொல்லமாட்டார்கள். வடக்கும் கிழக்கும் எங்கள் மண்தான். அதைத்தானே இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ராஜீவ் - ஜெயவர்த்தனா சொன்னார்கள். பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதை மாற்றிவிட்டார்கள். அது வேறு கதை.

தமிழ் உதயம்,

இதுதான் இன்றைய நிலை என்று விட்டு அதை கடந்து போக முடியாதல்லவா!!! தவிர நீங்கள் கொடுத்த சுட்டி படித்தேன். ஒற்றுமையை வலியுறுத்துபவர் ஏன் வேற்றுமைகளை இவ்வளவு விலாவாரியாக விளக்கவேண்டும் என்றிருக்கிறது.

தவறு,

சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் "தமிழர்களைத்" தான் சகிக்க முடிவதில்லை. வாயில்லாப் பிராணிகளாய் அங்குவாழ்பவர்கள் யாரை எதிர்ப்பார்கள் "இந்த தமிழர்களையா"!!

விந்தைமனிதன் சொன்னது…

சிங்கள எதிரிகளைவிட தமிழ் ஒட்டுக்குழுக்களை நினைத்தால் வயிறு எரிகிறது. காக்கைவன்னியன்களும், பிள்ளையான்களும், கருணாக்களும், டக்ளஸ்களும், சித்தார்த்தன்களும் தமிழினத்திற்குத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவரும் சாபக்கேடுகள்.

ஒருமுறை தமிழ்நாட்டின் பிரபலக் கவிஞர்(கண்ணதாசனா என்று நினைவில்லை) கேட்டாராம்... " கட்டபொம்மனைக் கொன்னுட்டாங்க, ஊமைத்துரையையும் கொன்னுட்டாங்க, பூலித்தேவன், மருது சகோதரர்கள், வேலுநாச்சி இப்படி எல்லாரையும் கொன்னுட்டாங்க... அப்ப நாமெல்லாம் மிச்சமிருந்த எட்டப்பன் வகையறா வாரிசாடா? அப்ப நமக்கெல்லாம் எதுக்குடா மானம் மரியாதை?"ன்னு.

தமிலு வலய்ப்பதிவு சொன்னது…

ஈலாயா (Eelaayaa)
http://ulikininpin16.tumblr.com/