டிசம்பர் 11, 2010

எண்ணமும் எழுத்தும் - சிந்தனை சிதறல்கள்..

"எண்ணம் என்றால் என்ன?"
"எண்ணம் நினைவின் பதிலளிப்பு"-

ஜே.கிருஷ்ணமூர்த்தி.

என்னதான் உதறித்தள்ளினாலும் மீண்டும், மீண்டும் ஈழம், போர்க்குற்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சாட்சிகள் என்று மனதில் காட்சிகளாய் நினைவுகள் நீண்டுகொண்டே செல்கின்றன. நினைவுகளையும் எண்ணங்களையும் இழுத்து நிறுத்தி வைக்கவோ அல்லது உதறித்தள்ளவோ முடிவதில்லை. என் எண்ணங்கள் நினைவுப்புழுதியை கிளப்பி எங்கெங்கோ சென்று கடைசியில் ஈழத்துப் பெண்களிடத்தில் கொஞ்சநேரம் நிலைகொண்டது. ஈழம் பற்றி, போர்க்குற்றம் பற்றி சர்வதேசத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மூன்று பெண்கள்.

ஈழத்து பெண்கள் M.I.A (Hip Hop Artist) என்றழைக்கப்படும் மாயா மாதங்கி அருள்பிரகாசம் முதல் தமிழ்வாணி ஞானகுமார், கல்பனா போன்ற முகம் காட்டாத சிலர் நினைவில் வந்து போகிறார்கள்.

மாயாவை அவரின் இசையை  விட துணிச்சல் தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது. சர்வதேச ஊடகங்களில் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி தன்னுடைய பாணியில் துணிச்சலாய் பேசிய ஒரேயொருவர் மாயா தான். அமெரிக்க ஊடகங்களில் ஒன்றான New York Times - Lynn Hischberg என்கிற ஊடகவியலாளர் மாயா ஈழப்பப்போராட்டம் பற்றி சொல்லாததை சொன்னதாய் சொல்லி கருத்துக்களை திரித்தபோது இவர் போராடியது துணிச்சலானதாய் பட்டது எனக்கு. அடுத்து, சிறிது காலத்துக்கு முன் "Born Free" என்ற அவரது பாட்டு அமெரிக்காவில் You Tube இல் தடை செய்யப்பட்டது. மற்ற நாடுகளில் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  போர், இனப்படுகொலை என்பன பற்றி விவரிக்கிறது இந்தப்பாடல்; அமெரிக்காவை சித்தரிக்கிறது, விமர்சிக்கிறது; இதெல்லாம் இப்பாடல் பற்றி அமெரிக்க ஊடகங்கள் கண்டுபிடித்து சொன்னதிலிருந்து நான் தெரிந்துகொண்டவை. தவிர, (இப்போதைய விக்கிலீக்ஸ் ஆதாரங்கள் வெளியிடப்படுமுன்பே) இந்தப்பாடல் அமெரிக்காவை சித்தரிப்பதாக சில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அமெரிக்க தொலைக்காட்சி ஊடகங்கள் இவரை, இவரது பாடலை, இலங்கை நிலவரத்தை பாய்ந்து, பாய்ந்து பேசவைத்தது. (காணொளியை இணைத்து 18+ என்று எழுத, விளம்பரம் தேட விருப்பமில்லை.) இதெல்லாம் நடந்து கொஞ்சகாலம் ஆனாலும் இப்போ ஏன் எனக்கு இது ஞாபகம் வருகிறது என்றால், இலங்கைக்கான முன்னாள் வெளிவிவகார செயலாளரும், தற்போதைய ஐ. நா மன்றத்தின் நிரந்தரப்பிரதிநிதி பாலித கோஹன மாயா பற்றி சொன்னது தான். அதுமட்டுமா சொன்னார்? இதையும் தான் சொன்னார், Tamil people, they are our sisters; They are our brothers!!!! இப்போ இவர் ஆஸ்திரேலியா இலங்கை என்று இரட்டை குரியுரிமை (Dual Citizenship) கொண்டவர். ஆஸ்திரேலியா, Rome Statute -ICC (International Criminal Court) வின் ஓர் உறுப்பினர் என்பதாலும் இவர் ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர் என்பதாலும் இலங்கையில்  போற்குற்றங்களுக்கு துணைபோனார் என்று விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து, தமிழ்வாணி ஞானகுமார் என்கிற பிரித்தானியாவைச் சேர்ந்த பெண். இவர் கடந்தவருட ஈழத்தின் இறுதிப்போரில் அகப்பட்டு உயிர் தப்பி வந்தது பலரும் அறிந்தது. இன்றுவரை சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடந்தால், தான் சாட்சி சொல்ல தயாராய் இருப்பதாய் சொல்கிறார். ஈழத்தின் இனப்படுகொலை பற்றி தன்னால் ஆன வரை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறார். இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷே சொன்னது, "Nothing should exist beyond the No Fire Zone". "No Fire Zone" இற்கு வெளியே தற்காலிக வைத்தியசாலை இருந்தாலும் அது "Legitimate Target" என்று சொன்ன பெருமைக்குரியவர். இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்று சொல்லப்படும் முக்கியமானவர்களில் ஒருவர். ஈழத்தின் இறுதிப்போரில் வைத்தியசாலைகள் கூட இலங்கைப்படையின் தாக்குதலுக்கு தப்பவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் அறிக்கைகள் மூலம் சொல்கின்றன. அதை நேரில் பார்த்த, வாழ்ந்த அனுபவம் தமிழ்வாணிக்கு உண்டு. தமிழ்வாணியின் அனுபவத்தை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்காக. Channel 4 வெளியிட்ட பேட்டி. இவரிடம் நான் பார்த்து அதிசயிக்கும் விடயம் பேசும் போது, குறிப்பாக ஈழத்தில் தன் அனுபவங்களைப் பேசும் போது எந்த தயக்கமும் இன்றி உறுதியுடன் வரும் ஒவ்வொரு வார்த்தையும். ஈழத்தில் கொத்து கொத்தாய் மரணத்தை கண்முன்னே கண்டவரின் சாட்சியம் சர்வதேசத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? இல்லை வழக்கம் போல் இலங்கை இதையும் கட்டுக்கதை என்று சொல்லுமா?

தற்சமயம், இசைப்பிரியாவின் படுகொலைக்குப் பின், இசைப்ரியாவை (Channel 4 மூலம்) அடையாளம் காட்டிய முன்னாள் புலி உறுப்பினர் என்று சனல் 4 அடையாளம் காட்டும் "கல்பனா" என்பவர். இவரின் சாட்சியத்தை பதிவு செய்தபோது  Jonathan Miller சொன்னது, இலங்கை அரசு இதையும் "Propaganda" (பொய்ப்பிரச்சாரம்) என்று சொன்னாலும் சொல்வார்கள் என்றும் அதற்கு கல்பனாவின் பதில் என்னவென்பதும் தான். இவரின் சாட்சியம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் செய்தியில் உறுதிப்படுத்தப்பட்ட இசைப்ரியாவின் மரணத்திற்கு அது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மேலும் வலு சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, இசைப்பிரியா     ஆயுதம் ஏந்தி போராடிய ஓர் போராளி அல்ல. அவர் ஓர் கலைஞர் மற்றும் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றியவர் என்பது கல்பனா என்பவரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் இறந்து கிடந்த நிலப்பகுதி 53 வது படையணியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உண்மைகள் ஐ. நா. வால் உள்வாங்கப்படுமிடத்து இலங்கை ராணுவத்தின் முக்கிய படையணிகளில் ஒன்றான 53 வது பிரிவின் கட்டளைத்தளபதி கமல் குணரத்னே என்பவர் போர்க்குற்ற விசாரணைக்கு உடபடுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத்தின் இந்த மூன்று பெண்களையும் நினைத்தபோது இலங்கையின் போர்குற்றம் பற்றி மனதில் தோன்றியவைகளை பதிவாக்கிவிட்டேன். இவர்களின் மனோதிடமும், தைரியமும் என்னை ஏனோ கவர்கிறது. இவர்களைப் பற்றி என் எண்ணங்களை எழுதிவிட்டு, தொலைக்காட்சியை திறந்தால் அங்கே "தென்றல்" திரைப்படத்தில் தங்கர்பச்சான் சமூக பொறுப்போடு (?) எழுதுகிற ஓர் நடுத்தர வயது ஆணை எப்படி மாய்ந்து, மாய்ந்து ஒருதலையாய் காதலிப்பது என்று பதின்மவயதின் ஆரம்பங்களில் இருக்கும் ஓர் பெண்ணுக்கு சொல்லிகொடுத்திருந்தார். அதையும் மூடிவிட்டு ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "வன்முறைக்கு அப்பால்" இல் மூழ்க முயற்சித்தேன், முடியவில்லை, தொடர்கிறேன்.

தன்னுடைய ஆட்சியில் எந்தவொரு ராணுவ சிப்பாயோ அல்லது தளபதியோ சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என்று இலங்கை ஜனாதிபதி சூளுரைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார். தவிர, முன்னாள் ராணுவ தளபதிகள் சிலர் இப்போது வெளிநாட்டு தூதரகங்களிலோ அல்லது ஐ. நாவின் பிரதிநிதியாகவோ பதவிமாற்றம் பெற்றிருக்கிறார்கள். போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க Diplomatic Immunity என்பதை இலங்கையின் இராணுவத்தளபதிகள் தான் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் போலும். தவிர ராஜபக்க்ஷே ஒரு படி மேல் போய் "Head of State Immunity" பெற்றிருக்கிறார். அவர் தான் சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட இலங்கை ஜனாதிபதி ஆயிற்றே. அவர் பதவியில் இருக்கும் வரை போற்குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவாரா?

 ஐ. நா. வின் செயலாளருக்கு இலங்கையில் இறுதிப்போரில் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டனவா என்று ஏற்கனவே அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு ஆராய்ந்து சொல்ல இருக்கிறார்கள். பிறகு அவர் இது தொடர்பாக மேற்கொண்டு முடிவுகளை எடுப்பாராம். வருகிற மாதத்தில் அது பற்றிய அறிக்கை வெளியிடப்படுமாம். காத்திருக்கிறோம், இவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்காக!!!

இதையெல்லாம் விட ஒரு நாள் நான் வழக்கம் போல் யாழ் தளத்தில் நடந்த விவாதங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ இது கண்ணில் பட்டது.

அரசு கேள்வி பதில்,
"ஈழப்போராட்டம் விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன?"
விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை. 

இந்த குறிப்பிட்ட "அரசு" கேள்வி பதிலை நான் புத்தகத்திலோ அல்லது இணையத்திலோ நேரடியாக படிக்கவில்லை. இருந்தாலும், அரசு கேள்வி பதிலில் நடிகைகளின் இடை, தொடை, தொப்புள் என்று ஒப்பிடுபவருக்கு இருக்கும் ஈழம் பற்றிய அறிவை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே விளக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

குமுதம் பற்றிய என்னுடைய இன்னோர் கருத்தையும் பதிந்துகொள்கிறேன். குமுதத்தின் ஒரு பிரிவான இணையத்தள, குமுதம்.காம் என்கிற வீடியோ பகுதியில் தமிழகத்தில் உள்ள மற்றும் சில ஈழத்தமிழர்களை அவ்வப்போது பேட்டி கண்டு ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது, இவர்கள் தமிழ்நாட்டில் குமுதம் பத்திரிகையில் "ஞாநி" போன்றவர்களை எழுதவைத்து புலிகள் மீது விஷத்தை கக்க வைப்பார்கள். அதே, இணையம், பேட்டிகள் என்று வரும்போது மட்டும் புலத்து தமிழர்களுக்கு எந்த செய்திகளை விற்க வேண்டும் என்ற வியாபார சூத்திரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தான்!!

என் ஈழம் பற்றிய எண்ணங்களின் தொடர்ச்சிக்கு நினைவுகளின் பதில் இவை.


நன்றி: படங்கள் அறியது.

12 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

ஆச்சரியப்படுத்திய கருத்துகள். பாதி விசயங்கள் எனக்குத் தெரியாதது. ரதி என்ற பிம்பம் எப்படி எழுத வேண்டும்? எப்படி எழுத முடியும்? என்று என் மனதிற்குள் உருவகமாக வைத்திருந்தேனோ அது நிறைவாய் வந்துள்ளது.

இங்குள்ள வெகுஜன இதழ்களை குறை சொல்லாதீர்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும்? தமிழ்நாட்டு தமிழர்கள் எதை விரும்புவார்கள்? எப்போது விரும்புவார்கள்? எதனால் விரும்புவார்கள்? என்பதை உணர்ந்த காரணத்தால் இப்படித்தான் கொடுப்பார்கள்.

ஒரு சின்ன உதாரணம். இப்போது பெய்த மழையில் சிங்காரச் சென்னையின் சாலை வசதிகள் எப்படி மாறியுள்ளது என்பதை பார்த்தாலே புரியும்? அதுவே ஒரு செய்தியாக மாற வேண்டிய அவஸ்யமில்லை என்ற போது பக்கத்து தீவைப் பற்றி எழுத வேண்டிய அவஸ்யம் இவர்களுக்கு வரும் என்பதை நீங்க எப்படி எதிர்பார்க்க முடியும்?

திருமாவேலன் கட்டுரைகளை படித்துப் பாருங்கள். ஆனந்த விகடனில் எழுதுகிறார்.

ஜோதிஜி சொன்னது…

நானும் பலமுறை தவறு தளத்தில் பல படங்களை ரசித்துள்ளேன்.

ஈழமக்களின் தற்போதைய குறீயீட்டுப் படமா இது?

Rathi சொன்னது…

ஆஹா!! முதல் விமர்சனமும் வாழ்த்தும் ஜோதிஜியிடமிருந்து. சந்தோசம்.

///ஈழமக்களின் தற்போதைய குறீயீட்டுப் படமா இது?///

:)

அது, ஈழம் பற்றிய என் மனதின் பிரதிபலிப்புகள். எதையும் புதிதாய் வித்தியாசமாய் சொல்லலாமே என்ற ஓர் முயற்சிதான். :)

தமிழக ஊடகம், தமிழக மக்கள் இதில் யார் மாறவேண்டும் என்று சொல்கிறீர்கள்? இரண்டுபேருமே மாறினால் நல்லதில்லையா.

ஹேமா சொன்னது…

ரதி...இந்த மூன்று வீராங்கனைகள் போல எங்கள் நாட்டில் எத்தனை வீராங்கனைகள் இன்றைய இசைப்பிரியாவரை.இந்த வீரமும் விவேகமும் அறிவும்தான் எங்களை வீழ்த்த மூலகாரணமாக இருந்திருக்குமோ.முன்னேறிக்கொண்டு வரும் ஒரு இனமாக அடுத்தவர்களின் கண்ணுக்குப் பட்டதால் கவிழ்க்கும் திட்டத்தோடு நடந்த சதித்திட்டம்தானே இந்தப் போரின் முடிவு.

இன்று செய்தி கவனித்தீர்களா ரதி.இனி தேசிய கீதம் இலங்கை முழுதும் சிங்களத்தில் மட்டும்தானாம்.
ஏனென்றால் ஒரு இனம் ஒரு நாடாம் !

இலண்டனில் தங்களுக்குக் கிடைத்த தோல்வியை நிச்சயம் ஏதோ வேறு வழிகளில் தமிழனின் தலைகளில் அடித்தே சமப்படுத்த முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறது
சிவப்புச் சால்வைக்காரக் கும்பல் !

எங்கள் நிலை மனதின் பிரதிபலிபாய் படம் !

தவறு சொன்னது…

இப்பதிவில் தாங்கள் எழுதியுள்ளவிசயங்கள் எனக்கு தெரியாதது.

தமிழக ஊடகங்கள் நிறைய தன்னுடைய தர்மத்தை இழந்துவிட்டது.

தமிழகமக்களை விட ஊடகங்கள் தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறதோ அவ்வாறே பொதுமக்கள் சிந்திப்பு.

ஜோதிஜி போல ஒரு சிலருக்கு தான் ஈழம் பற்றிய

செய்திகள் ஓரளவுக்கு தெரியும். தங்களின் தளம் மூலமாகவே ஈழம் பற்றிய புதியசெய்திகளை அறிகிறேன்.

தாங்கள் என் தளத்திற்கு கொடுத்த அங்கீகாரம் மற்றும் ஜோதிஜியின் ரசிப்பு என்னை மேலும் பொறுப்புள்ளவனாய் ஆக்குகிறது ரதி.
எனது நன்றிகள் ரதி.

விந்தைமனிதன் சொன்னது…

ஜோதிஜி திருமாவேலனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் உண்மை. வெகுஜன இதழில் பத்திரிகையாளராய் வேலை பார்க்கும்போது அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் திறமையாய் இயங்க முடியும் என நிரூபித்தவர்.

//"தென்றல்" திரைப்படத்தில் தங்கர்பச்சான் சமூக பொறுப்போடு (?) எழுதுகிற ஓர் நடுத்தர வயது ஆணை எப்படி மாய்ந்து, மாய்ந்து ஒருதலையாய் காதலிப்பது என்று பதின்மவயதின் ஆரம்பங்களில் இருக்கும் ஓர் பெண்ணுக்கு சொல்லிகொடுத்திருந்தார்.//

தங்கர்பச்சான் மட்டுமல்ல, தமிழுணர்வு, பண்பாடு பற்றி பேசும் தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகள், கலைஞர்களின் மனவோட்டம் இதுதான். தங்கர், சீமான் இப்போது லேட்டஸ்ட்டாக வ.கௌதமன் வரை எல்லாருமே எப்படியாவது தாவணியை தமிழ் இளம்பெண்களின் தேசிய உடையாக மாற்றினால் 'கலாச்சாரத்தைக்' காப்பாற்றி விடலாம் என்ற ஆழ்ந்த 'புரிதலும்' நம்பிக்கையும் உள்ளவர்கள்.

சீமானின் 'தம்பி' படம் முற்போக்கான படம் என்று தமிழ் தேசியம் பேசும் எல்லாரும் கொண்டாடினார்களே என்று போய்ப் பார்த்தேன். நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் உரையாடல் பின்வருமாறு:

நாயகன்: எனக்கு உன்னைக் காதலிக்கிறதுக்கெல்லாம் நேரமில்லை

நாயகி : உங்களைக் காதலிக்கிறதைத் தவிர எனக்கு வேற வேலையுமில்லை

அடப்பாவமே! தமிழ்த் தேசியர்களின் நிலை இப்படியா ஆகவேண்டும்? இன்று வரை எனக்கு சீமானின்மேல் பெரிய நம்பிக்கையோ பிடிப்போ வராததற்கு இந்தப் படமும் ஒரு காரணம். எனக்குத் தெரிந்தவரை இந்துத்துவர்களுக்கும் தமிழ்த்தேசியர்களுக்கும் பெரியளவு வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

விந்தைமனிதன் சொன்னது…

ஜோதிஜியிடமும் சரி உங்களிடமும் சரி. எனக்குப் உறுத்தும் விஷயம் இந்த பின்னூட்ட மட்டுறுத்தல். தூக்கிவிடுங்களேன்... ஜனநாயக விரோதம் :))))

Rathi சொன்னது…

ஹேமா,

இப்பவெல்லாம் நீங்க விமர்சனங்களில் பிச்சு உதறுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

///இந்த வீரமும் விவேகமும் அறிவும்தான் எங்களை வீழ்த்த மூலகாரணமாக இருந்திருக்குமோ.///

இது தான் ஹேமா என் கருத்தும். உண்மையில் புலிகளின் De facto State இல் தமிழர்க்குரிய ஓர் தாயகம் எப்படி இருக்கும் என்பதை நிறுவிக்காட்டினார்கள். அது தான் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் பொறுக்கவில்லையே.

உண்மையில் இந்தப் பதிவை நான் எழுத தூண்டியது ஓர் போர்குற்ற காணொளி தான். வழமையாக எல்லா காணொளிகளிலும் இறந்த உடல்களை மட்டுமே காட்டியிருந்தார்கள். ஒரு காணொளி மிக குறிகிய நேரம் தான். ஓர் பெண் போராளியை உயிருடன் காட்டினார்கள். அதில் அவர் கைகள் வழமை போல் பின்னால் கட்டப்பட்டு அவரை பின்னாலிருந்து யாரோ எட்டி உதைத்தோ அல்லது அடிக்கவோ செய்கிறார்கள். ஆனால், அந்த சகோதரியின் முகத்தில் தெரிந்த அந்த கோபமும், உறுதியும் என்னை ஒரு கணம் நிலை குலைய வைத்துவிட்டது. பிறகு அவருக்கு என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மீண்டும் அதை பார்க்க மனதில் தைரியம் இல்லாமல் மூடிவிட்டேன்.

///இனி தேசிய கீதம் இலங்கை முழுதும் சிங்களத்தில் மட்டும்தானாம்.
ஏனென்றால் ஒரு இனம் ஒரு நாடாம் !//

ஹேமா, இது போன்ற செய்திகளை உங்கள் தளத்தின் மூலம் தமிழக தமிழர்களுக்கு சொல்லுங்கள்.

Rathi சொன்னது…

தவறு,

ஏதோ என்னால் முடிந்தவரை ஈழம் பற்றி எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதுகிறேன்.

இலங்கையின் போர்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தம் எங்களிடமிருந்து மட்டுமில்லாமல் தமிழகத்திலிருந்தும் சர்வதேசத்துக்கு போகுமானால் அது ஓர் கூடுதல் பலம் இல்லையா?

தமிழக ஊடகங்கள் ஏன் இப்படி என்ற கேள்விக்கு ஜோதிஜி சொன்ன கருத்து தான் ஞாபகத்திற்கு வருகிறது.

உங்கள் தளத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஜோதிஜி அல்லது நான் கொடுத்ததல்ல. அது உங்கள் ரசனை, முயற்சி, திறமைக்கு நீங்கள் தேடிய நியாயமான அங்கீகாரம்.

உண்மையிலேயே, நான் பதிவெழுத தொடங்கிய நாட்களில் கூகிளில் எனக்கு பிடித்தமாதிரி, என் பதிவுக்கு பொருந்திறமாதிரி படங்களை தேடி களைத்து விட்டுவிட்டேன். அதனால் படங்கள் போடாமலேயே பதிவை எழுதினேன். உங்கள் அறியது தளம் தான் என் பதிவின் பிரதிபலிப்பிற்கான படங்களை தந்தது. தொடர்ந்து நல்ல படங்களை கொடுங்கள்.

வானம் சொன்னது…

ஊடகங்கள் தமது நெறியை இழந்து பல காலமாகிவிட்டது. தாங்கள் விரும்பும் கருத்தை மக்களின் கருத்தாக மாற்றுவதற்கு ஏதுவாகத்தான் செய்திகள் தயாராகின்றன. அவுட்லுக் இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது,’’news is no more a raw material.it is finished product with gift wrapping.'' தற்போதைய ஊடகங்களின் பணி மக்களுக்கு ஒரு பாதையை காட்டுவதல்ல,போதையை ஊட்டுவதுதான்.
இணையம்தான் இப்போதைய ஆறுதல்.

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

பல புதிய தகவல்கள் அறிந்தேன்..

Rathi சொன்னது…

ராஜாராமன்,

நீங்கள் இருவரும் குறிப்பிடும் திருமாவேலன் கட்டுரைகளை படிக்கவேண்டும். பதிவுலக அறிமுகத்தின் பின் குமுதம், ஆனந்த விகடன் படிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டேன். இந்த ஒருவரையாவது நீங்கள் சொல்வதால் படிக்கவேண்டும்.

இந்துத்துவம், தமிழ்தேசியம் பேசுபவர்கள் பற்றிய ஒப்பீடு கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாய் இருப்பதாய் எனக்கு தோணுது. கொஞ்சம் விளக்குங்களேன்.

தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியல் வேண்டுமானால் எப்போதும் ஒரே அர்த்தத்தை கொடுக்கலாம். தமிழ்நாட்டில் "பேசப்படும்" தமிழ்த்தேசியம், ஈழத்தின் "தேவை" தமிழ்த்தேசியம் இரண்டுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு என்பது என் கருத்து. (Albert Camus), அல்பேர்ட் கம்யூ, அநீதிக்கு எதிராய் மக்கள் ஒன்று திரண்டால் அது கிளர்ச்சி என்றும் ஒரு கருத்துக்கு வசப்பட்டு மக்கள் அணி சேர்ந்தால் அது புரட்சி என்றும்; கிளர்ச்சியில் நீதியும் தர்மமும் இருப்பதாக சொல்லியிருக்கிறார். இந்த அடிப்படையை புரிந்து கொண்டால் ஈழத்தமிழர்களின் "தமிழ்த்தேசியம்" பற்றிய தேவை, அவசியம் இரண்டும் புரியும்.

தமிழ்நாட்டில் தமிழர்களை "கருத்து/கொள்கை/சித்தாந்தம்" என்கிற ரீதியில் ஒன்றுசேர்த்து புரட்சி செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா, ராஜாராமன்?

"தம்பி" படம் ஓர் முற்போக்கான படம் என்பது உலக மகா காமெடியாய் இருக்கிறது. புலம் பெயர் தமிழர்கள் பெரும்பாலானோரை பொறுத்தவரை அது ஓர் வியாபாரப்படம், Commercial Film. இதுக்குமேல் நான் விளக்க தேவையில்லை. தவிர, அந்தப்படத்தில் நடித்த பூஜா என்ற நடிகை நிஜத்தில் யாரென்றே தெரியாதவராகத்தான் சீமான் இருந்தார் என்பது கொஞ்சம் வேதனையான விடயமும் கூட.

வானம்,

//தாங்கள் விரும்பும் கருத்தை மக்களின் கருத்தாக மாற்றுவதற்கு ஏதுவாகத்தான் செய்திகள் தயாராகின்றன. //

ஊடகம் என்பதே கருத்துக்களை உருவாக்கும் ஓர் நிறுவனம் என்று படித்த ஞாபகம் வருகிறது. பெரும்பாலும், கருத்துக்களை உருவாக்குவதன் மூலம் எந்தவொரு ஊடகமும் வியாபார இலக்கை எட்டமுடியாது. அது யாருக்காக, என்ன கருத்ததை உருவாக்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சன்மானம், லாபம் எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது.

இணையம் இப்போதைய ஓர் ஆறுதல் தான், மறுக்கமுடியவில்லை. ஆனாலும், அங்கேயும் கட்டண சேவைகள் கொஞ்சம் அதன் இயல்பு நிலைகளை மாற்றிவிடுமோ என்று யோசிக்கவைக்கிறது.


பயணமும் எண்ணங்களும்,

தமிழ்நாட்டில் பலபேருக்கு இது வெறும் தகவலாய் இருக்கலாம். எங்களுக்கு ஒருசில நாட்களில் படுகொலை செய்யப்பட்ட நாற்பதாயிரம் பேரின் சாவுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் ஐ. நா. மனிதாபிமான அடிப்படையிலேனும் நீதிக்குட்பட்டு மனிதத்துக்கும், தமிழினத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஓர் போர்குற்ற விசாரணைக்கு உடன்படுமா என்ற அவா, அவலம்.