டிசம்பர் 07, 2010

கலாச்சாரமும் தனிமனித சமூக இருப்பும்

                                                                                               


தனிமனித சிந்தனைகள், தனிமனித ஒழுக்கம் தான் இறுதியில் ஓர் சமூகத்தின் இருப்பையும் தீர்மானிக்கிறது என்றால் அது மிகையில்லை. அந்தவகையில் தனிமனிதனாக தனித்தன்மைகளோடு வாழுவது மட்டுமல்ல சமூகவாழ்வையும் அதன் தார்ப்பரியங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இவ்வாறாக மனிதர்களை பல பொதுத்தன்மைகளோடு இணைக்கும் அம்சங்கள், எண்ணக்கரு, கருத்தாக்கம் தான் கலாச்சாரம் எனப்படுகிறது. ஓர் இனத்தின் அல்லது குழுவின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகள், சிந்தனையின்  வெளிப்பாடு, மற்றும் தனிப்பொருள் கூறுகள் தான் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் ஆகின்றன.

கலாச்சாரம் பற்றி யாருக்கும் பாடம் எடுப்பது என் எழுத்தின் நோக்கமல்ல. இங்கே நான் சொல்லவருவது கலாச்சாரம் சார்ந்த புறவயத்தோற்றங்கள் பற்றியல்ல. இது அகவயமானது. உரிமைகள் மறுக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சிந்தனை சார்ந்தது. மிக சமீபகாலமாக ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களின் கலாச்சார சீரழிவுகள் என்கிற கட்டுரைகள் படித்ததின் வெளிப்பாடே இது. எந்தவொரு கலாச்சாரத்தையும் இன்னொன்றோடு ஒப்பிட்டு விளக்குவது அபத்தம். ஒவ்வொரு கலாச்சாரமும் அதன் தனிதன்மைகளோடு, இயல்புகளோடு இருக்கிறது. என் வரையில் தனிமனித சிந்தனைகளை மழுங்கடிக்கும் எந்த அம்சமும் தமிழ்கலாச்சாரத்தில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. அந்தவகையில், தமிழ்கலாச்சாரம் தன் தனிதன்மைகளோடு காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. காலமாற்றங்களில் சிக்குண்டு என் வேர்களை இழந்து, கலாச்சார அடையாளங்களை தொலைத்தால் பின்னர் நான் யார்!! என்னை எப்படி கூப்பிடுவார்கள்!! என் தனிமனித சிந்தனை தனித்தன்மை கொண்டதேயாயினும் என் கலாச்சாரமும் அதன் பண்புகளும், விழுமியங்களும் தானே  எனக்குரிய சமூக அடையாளத்தை கொடுக்கின்றன.விடுதலை, சுதந்திரம் பற்றிய சிந்தனைகள் அமெரிக்காவால் மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளின் பேரினவாதிகளாலும் மக்கள் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இவர்களின் கருத்து திணிப்புகளால் எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் பற்றி நாங்கள் மறக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். No culture is superior to another என்று ஒப்புக்குச் சொல்லிச்சொல்லியே அமெரிக்க கலாச்சாரம் எங்களை ஆட்கொண்டுவிட்டது. யாழ்ப்பாணத்திலும் சிங்கள ராணுவம் கேட்பது, "புலிகளின் காலத்தில் நீங்கள் இவ்வளளவு சுதந்திரமாக இருந்தீர்களா?" என்பதுதான். சிங்களராணுவத்தின்  சுதந்திரம் பற்றிய சிந்தனைகளையும், செயல்களையும் தான் பிரித்தானியாவின் சனல் 4 அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறதே. இன்னும் சிலரின் கருத்து, "யாழ்ப்பாணம் இப்ப குட்டி சிங்கப்பூர் ஆயிட்டுது". என்னய்யா இது! சிங்கப்பூரில் தமிழுக்கும் அந்த மொழியைப்பேசுபவனுக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. சொந்த மண்ணில் சுற்றிவர ராணுவக்காவல் அங்கே பண்ணை மிருகங்களாய் அடைபட்டுக்கிறான் தமிழன். தமிழன் என்றால் ஈழத்தில் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்த லட்சணத்தில் இலங்கையில் சிங்கள ராணுவமும், பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் தான் சுதந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றால் எம் இனம் எப்போ தான் மீள்வது!!

இதில் புலத்து தமிழன், ஈழத்து தமிழன் என்று ஒருவரை ஒருவர் விரல் நீட்டி இணையங்களில் வேறு விமர்சம் செய்துகொள்கிறார்கள். ஈழத்தில் இருந்து தான் தறி கெட்டுப்போக வேண்டுமா! புலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கிறது. ஈழம் என்றாலும், புலம் என்றாலும் சில சமுதாயப்பிறழ்தல்களையும், விதிவிலக்குகளையும் மட்டுமே காட்டி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், இந்த ஒன்றிரண்டு விதிவிலக்குகள் எதிர்காலத்தில் ஓர் முன்மாதிரியாக (Role Model) தமிழ் சமூகத்திற்கு அமையுமேயானால் எங்கள் தனித்தன்மைகளை, கலாச்சாரா பண்பாட்டு விழுமியங்களை இழந்து நிற்போம். விடுதலை என்பது அபத்தமாய் வெறும் புறத் தோற்றங்களிலும், கேளிக்கைகளிலுமே வெளிப்பட்டு நிற்கும். அதையெல்லாம் விளம்பரப் படங்களாய் சிங்கள ஆட்சியாளர்கள் உலகிற்கு பறந்து, பறந்து காட்டுவார்கள். அதுமட்டுமல்ல, எங்களுக்காய், எங்களின் விடுதலைக்காய் போராடி உயிர் நீத்தவர்களை, அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்த இதைவிட வேறு உத்திகளே வேண்டாம்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுத்திலிருந்து,


"கருத்து விலங்கிட்டு  மனித மனங்களை சிறை கொள்வது ஓர் நுட்பமான அடக்குமுறை யுக்தி. உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் இந்த கருத்தாதிக்க யுக்தியையே கடைப்பிடிக்கிறார்கள். மனிதர்களை விழித்தெழச் செய்யாது அவர்களை அறியாமை உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு ஏகாதிபத்தியங்களும் சரி, பேரினவாதிகளும் சரி, இந்த கருத்து போதமையையே பாவித்து வருகின்றனர். அடிமை கொண்ட மக்களின் கிளர்ச்சியை நசுக்க, புரட்சியை முறியடிக்க, விடுதலை உணர்வை கொன்றுவிட கருத்தாதிக்கமானது ஓர் கனரக ஆயுதமாய் பாவிக்கப்பட்டு வருகிறது."
(விடுதலை கட்டுரை தொகுப்பு, "கருத்துலகமும் வாழ்வியக்கமும்"). 


கலாச்சாரம் குறித்து நிற்கும் சிந்தனையின் வெளிப்பாடுகள் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எங்கள் விடுதலையை நோக்கியதாகவே கட்டிஎழுப்படவேண்டும் என்பது என் கருத்தும் விருப்பமும். 

என் பதிவுக்கு நான் தேர்ந்தெடுத்த படங்களை நண்பர் "தவறு" அவர்களின் அறியது தளத்திலிருந்து தந்ததிற்கு என் நன்றிகள். 

 

6 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நீங்க சொல்வது உண்மைதான். தாங்கள் எம்மாதிரியான சூழலில் இருக்கோம் என்பதை மறக்கடிக்கும் முயற்சி தான். கொஞ்ச நாள்ல யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைச்சா ஆச்சரியப்படுவதற்கில்லை.

தவறு சொன்னது…

"தமிழன் என்றால் ஈழத்தில் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்த லட்சணத்தில் இலங்கையில் சிங்கள ராணுவமும், பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் தான் சுதந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றால் எம் இனம் எப்போ தான் மீள்வது!!"

காலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை விட்டு ஒன்றிணைந்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தால் மட்டுமே ஒர் இனம் அல்லல் பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையாவது உலகிற்கு காட்டமுடியும் ரதி .

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,

ஒரு விவேக் ஓபராய், அசினையே யாழ்ப்பாணத்தால் தாங்கமுடியவில்லை. கிரிக்கெட் ஸ்டேடியம்......!! என்னாகும் நிலைமை.:)


தவறு,

பெரும்பாலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயத்தில் எல்லோரும் (குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள்) ஒன்றாய் தான் நிற்கிறார்கள். ஈழத்தில் இருப்பவர்கள் நிலை தான் விளக்க முடியாதது. சில செய்திகளில் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் நாங்கள் நிம்மதியாய் இருப்போம் என்று சொல்லும் போதும் அவர்களை கோபித்துக்கொள்ளவும் முடிவதில்லை. நாங்களும் வாயை மூடிக்கொண்டிருந்தால் இவர்களின் நிலை இன்னுமின்னும் மோசமாகும் என்பதை என்றோ ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.

அண்மைய செய்திகளில் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். லண்டன் சம்பவத்திற்குப் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று ஊர்வலம் நடத்தி ஜனாதிபதிக்கு ஆதரவாக கோசம் போட வைத்திருக்கிறார்கள்.

விந்தைமனிதன் சொன்னது…

யாழ்ப்பாணம் பற்றிக் கேள்விப்படும் செய்திகள் வேதனையைத் தருகின்றன. கல்கி ஆஸ்ரமப் போதை அடிமைகளைப்போல யாழ் மக்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் போல.

ஹேமா சொன்னது…

ரதி...எங்களைப்போலச் சிலர்தான் இப்படிப் புலம்புகிறோமோ என்னமோ என்று நான் சிலசமயம் யோசிக்கிறனான்.ஏனென்றால் இங்கு நம்மவர்கள் பிள்ளைகளுக்கு எப்படிப் பெயர்கள் வைக்கிறார்கள் ?"சுவிஸன்".இந்தப் பெயருக்கு அர்த்தம் என்ன.இந்தப்பெயர் எந்த நாடு அல்லது இனம் காட்டுகிறதா?

எனக்குத் தெரிந்தவர் யாழ் போய் வந்து சொன்னது.."அங்க இப்ப ஒரு பிரச்சனையும் இல்ல.ஆமிக்கரங்காள்கூட தமிழ் கதைக்கிறாங்கள்.அன்பாய் இருக்கிறாங்கள்".
ம்ம்ம்...அப்போ ...நம்மவரை என்ன சொல்வது.நாங்கள் சொல்லும் கலாசார அழிவுக்கு நாங்களும்தானே கோல் குடுக்கிறம்.

யாழ் போகும் சிங்களவருக்கு எங்களின் காலாசரங்கள் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறதாம் நம் அரசாங்கம்.இது எப்பிடியிருக்கு !

ஜோதிஜி சொன்னது…

ஹேமா நன்றி

நான் சொல்ல விரும்பியதை சரியாக சொல்லிவிட்டீர்கள். நாம் எப்போதும் சுதந்திரத்தை அதன் அளவீடுகளை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

காரணம் நமக்கு அது தேவையாய் இருப்பதும் இல்லை. சுதந்திரத்திற்கு முன்பு அருணாசலத்தை யாழ்பாண மக்கள் தூற்றினார்கள்.

இவரின் கொள்கைகள் நோக்கங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் எதையும் அன்றைய தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அடுத்தடுத்து வந்த தலைவர்களின் நிலைமையும் இதே தான். பிரபாகரன் வரைக்கும்.

காரணம் நம் தமிழர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் சுதந்திரம் மட்டும் தான் முக்கியம் அடுத்த வருடம் அடுத்த சந்ததி குறித்து கவலைப்படுவதும் இல்லை. அதை யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள தயாராகவும் இல்லை.

இவர்களை போன்ற கருத்துக்களால், ஒற்றுமையில்லாத தன்மையினால் தான் இன்று புலம் பெயர்ந்து கனடா நாட்டில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் புதிய ஈழத் தமிழினம் உருவாகக் காரணமாக இருக்கிறது.

ஒற்றுமை தொடக்கத்திலேயே உருவாகி இருந்தால் ரதி கனடாவில் வாழாமல் இன்று ஈழத்தில் யாரோ ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு சாதாரண பெண்மணியாக வாழ்க்கைப்பட்டு இருப்பார்.

ஒரு வகையில் இவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.