டிசம்பர் 02, 2010

வாழ்க்கை கோலங்கள் - காதலாகி, கல்யாணமாகி...

காதல், கல்யாணம், குடும்பம் என்று மனிதவாழ்க்கையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டவர்கள் என்றாவாது ஒருநாளேனும், "அட... ச்சீ..." என்று நிச்சயமாய் வெறுத்துப் போயிருப்பீர்கள். அட விடுங்க, வாழ்க்கை என்றாலே அப்படித்தானே. காதலிக்கும் போது பெரும்பாலும் எந்தப் பொறுப்பும் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை ஒரு பக்கம் தீர்த்துக்கொண்டே, பொறுப்பாய் காதலிக்கவும் செய்திருப்பீர்கள்.

சரி ஒருமாதிரி சிக்கிமுக்கி காதலிச்சு சம்சாரி ஆகியிருப்பீர்கள். அல்லது அம்மா எப்பவும் போலவே நல்லாத்தான் சமைச்சிருப்பா. ஆனால், கொஞ்சநாளாவே அம்மாவின் சமையலை கொஞ்சம் குறை சொல்லி அல்லது எத்தனை நாளைக்குத்தான் எனக்காக சமைச்சு கஷ்டப்படுவாய் என்று அம்மா மேல் திடீர் கரிசனை வந்து..... சரி, சரி விடுங்க. 

எப்படியோ கல்யாணமாகி "Honeymoon" phase முடிந்தபிறகு கொஞ்சம், கொஞ்சமாக யதார்த்தவாழ்க்கைக்கு திரும்பும் போது தான், "நீங்க அப்பாவாகப்போறீங்க" என்று மனைவி சொல்வார். இந்த தருணத்தில் தான் ஆண்கள் யோசிப்பார்கள், "இது எந்த ராத்திரியின் பலாபலன்" என்று. ஒருவாறு அசடு வழிந்து அல்லது திக்குமுக்காடி சமாளித்து, சந்தோசப்பட்டு இனி வாழ்க்கையின் அடுத்த கட்டம், புதிதாய் ஓர் உறவின் வரவு பற்றி யோசிப்பார்கள். இடையே பெண்களின் உடல் உள மாற்றங்கள் வேறு இவர்களையும் பாதிக்கும். முக்கியமான ஒன்று உடலுறவு பற்றியது. இங்கே, அதற்கெல்லாம் வகுப்புகள் வைத்து மருத்துவ ரீதியான விளக்கங்கள் கொடுத்து அவர்களின் பயத்தையும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார்கள்.

சரி, ஒருமாதிரி குழந்தையும் பிறந்தாயிற்று. மேலைத்தேசங்களில் கணவனுக்கும் குழந்தையைப் பராமரிக்கும் அடிப்படை பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. குழந்தைக்கு diaper மாற்றுவதிலிருந்து குளிப்பாட்டுவது வரை. என்ன இருந்தாலும், வேலைக்குப் போகாத மனைவி என்றால் பிரச்சனை இல்லை. எப்போதுமே வீட்டில் இருந்து குழந்தையையும் கவனித்து கணவனையும் கவனித்துக்கொள்வார். இங்கே கனடாவில் குழந்தை பிறந்தபின் மனைவிக்கு ஆறுமாதமும், கணவனுக்கு ஆறு மாதமும்,  maternity leave கொடுப்பார்கள். 

கணவன், மனைவி இரண்டுபேருமே வேலைக்குப் போகும் குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கொஞ்சம் காணலாம். காலையில் அரக்கப்பரக்க வேலைக்குப் போக ஆயத்தமாவதில் தொடங்கும் அக்கப்போர். அப்போது தான் மனைவி சொல்வார், "அப்பா பிள்ளையை உடுப்பை போட்டு வெளிக்கிடுத்துங்கோ" என்று. "நான் வேலைக்கு போக நேரம் போகுது நீர் ஒருக்கா வெளிக்கிடுத்துமப்பா", அது பெரும்பாலும் கனடா வாழ் தமிழ்க்குடும்பங்களில் கேட்கும் காலை நேர உரையாடல். வீட்டில் குழந்தையை பராமரிக்க யாராவது இல்லாவிட்டால் அவர்களை "Day Care" என்று பொதுவாக சொல்லப்படும் குழந்தைகள் காப்பகத்திலும், வசதியானவர்கள் ஆயின் "Preschool" (Montessori School) இல் கொண்டு சென்று சேர்த்து விட்டு வேலைக்கு ஓடவேண்டும். 
 
 

பிறகு வேலை முடிந்து மறுபடியும் அரக்கப் பறக்க traffic நடுவே சிக்கித்திணறி மீண்டு வந்து குழந்தையை கொஞ்சும் அம்மாக்கள், அப்பாக்கள் அடடடா அதைவிட அழகு உலகில் வேறேதும் உண்டா என்ன. வீடு வந்து சேர்ந்தால் சமையல், சாப்பாடு என்கிற சந்தோசங்கள், சங்கடங்கள். இங்கே சில பெண்கள் வீட்டு வேளைகளில் கணவனைப் பங்கெடுக்கப் பழக்கிவிடுவார்கள். வேற வழி, பழியே என்று பழகித்தானே ஆகவேண்டும். "எங்கட வீட்ட கிழமையில ரெண்டு அல்லது மூண்டு நாள் அப்பாதான் சமையல்" என்று சொல்வதோடு விட்டால் பிரச்சனையில்லை. நாலு சொந்தம் பந்தம் கூடும் சமயங்களில், "அப்பா நல்லா கோழிக்கறி வைப்பார்" என்று அப்பாவின் சமையலுக்கு நளபாக பட்டம் வேறு கொடுப்பார்கள். பிறகென்ன, அடுத்தமுறை எங்கேயாவது பார்ட்டி என்றால் அப்பா கோழிக்கறி சமைச்சுக்கொண்டு போகவேணும். 

அது தவிர, சமையலிலிருந்து தப்பிக்கொண்டாலும்  grocery shopping போக பெரும்பாலும் அப்பாக்கள் பழகியே தீரவேண்டும். "கனடா கத்தரிக்காய்க்கும், தமிழ் கத்தரிக்காய்க்கும்" வித்தியாசம் தெரியாமல் வாங்கி வந்தால் வீட்டில் பாட்டு விழும். சில பேர் வீடுகளில் இந்த உரையாடலை நான் கேட்டிருக்கிறேன். "தமிழ் கடை சாமான்" என்று வேறு தமிழ் கடையில் சென்று வாங்க வேண்டும். ஆக கல்யாணமாகி கொஞ்சநாட்களிலேயே இதையெல்லாம் பழகிக்கொள்வது நன்று. 

வாழ்க்கை கோலங்கள் அவ்வப்போது தொடரும்...... 

7 கருத்துகள்:

தவறு சொன்னது…

மாற்றம் ஒன்னுதான் மாறாதது. எல்லாரும் எல்லாமும் சூழலுக்கு தகுந்த மாதிரி மாறி தான் ஆகனுங்க ரதி.

Rathi சொன்னது…

தவறு,

நீங்க சொல்றது சரிதான். எல்லாரும் சூழலுக்கு தகுந்த மாதிரி மாறித்தான் ஆகணும். ஆனால், அதை புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள முடியாமல் குழம்பும் போது தான் குடும்பத்தில் பிரச்சனைகளே ஆரம்பிக்குது.

ஜோதிஜி சொன்னது…

குறும்புக்கார ரதி என்பதை நான் இனி குறும்பி ரதி என்று அழைப்பதாக எண்ணம்.

ஜோதிஜி சொன்னது…

"இது எந்த ராத்திரியின் பலாபலன்" என்று. ஒருவாறு அசடு வழிந்து அல்லது திக்குமுக்காடி சமாளித்து, சந்தோசப்பட்டு இனி வாழ்க்கையின் அடுத்த கட்டம், புதிதாய் ஓர் உறவின் வரவு பற்றி யோசிப்பார்கள்

ம்ம்ம்ம் அச் அச் அச்..............

Rathi சொன்னது…

//குறும்பி ரதி என்று அழைப்பதாக எண்ணம்//

தாராளமா...:)

ஹேமா சொன்னது…

ரதி...வாழ்க்கைக் கோலங்களும் அதற்குள் நம்மவர்கள் சுத்தும் சுத்தலும் அழகுதான்.சொன்ன விதம் அழுகிறதா சிரிக்கிறதா எண்டு கிடக்கு !

Rathi சொன்னது…

ஹேமா,

வாழ்க்கையை எப்பவுமே balance பண்ணிப் பழகவேணும் எண்டுதான் கொஞ்சம் சிரிப்பாகவும், கொஞ்சம் சீரியசாகவும் எழுதினனான்.