டிசம்பர் 31, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் - கல்வியும் வேலையும்

தனம், கல்வி, தளர்வறியா மனம் இம்மூன்றும் ஒருங்கே அமைந்தால் ஒருவரின் வாழ்வு பெரும்பாலும் சிறப்பாய் அமைந்துவிடும். ஆனால், கல்வி தான் மற்ற இரண்டுக்குமே அடிப்படை என்பது யதார்த்த உண்மை. தொல்காப்பியத்தில் பெருமிதம் நான்கு என்று குறிப்பிட்டு, கல்வி, தறுகண் (உண்மையைப் பேசி மனதில் மாறாத உறுதியோடிருத்தல்), இசைமை (புகழ்), கொடை இப்படி வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆக எப்படிப்பார்த்தாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வியின் சிறப்பும் முக்கியத்துவமும்  வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்று தனிமனித அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வியை ஐக்கியநாடுகள் அமைப்பு அறிவித்திருக்கிறது. என்னதான் அப்படி அறிவிக்கப்பட்டிருந்தாலும் உலகில் இன்றும் கூட கல்வி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சில சந்தர்ப்பங்களில் பறிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதும் போது ஏனோ ஈழமும் காஷ்மீரும் கண்முன்னே தோன்றுகிறது. அடிப்படை உரிமையென்று கூறிக்கொண்டாலும் அவரவர் வசதிக்கேற்றவாறு அதை விலைகொடுத்து வாங்கவும் முடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார காரணிகள், அரசியல் கொள்கைகள் என்பவற்றால் நலிந்தோரிடமிருந்து இந்த கல்வி என்கிற உரிமை சூறையாடப்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இன்றைய பொருளாதார வாழ்க்கை முறை காரணமாக குழந்தைகளுக்கு ஏறக்குறைய மூன்று வயதிலிருந்தே கல்வி என்கிற கருத்துப்படிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. அது வசதியான வீட்டுக்குழந்தை என்றால் "Montessori" என்றழைக்கப்படும் "Pre-School" concept இற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் ஆரம்பப் பாடசாலை செல்லும் வயதில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் ஓர் தனியார் பாடசாலையில் அந்தக்குழந்தை கல்வியை தொடரும். பிறகு அதே குழந்தை "Prep School" என்று சொல்லப்படும் வசதியான வீட்டு குழந்தைகள் மட்டுமே படிக்கும் பாடசாலையில் பல்கலைக்கழக ஆயத்தக்கல்வியையும் கூடவே மேல்தட்டு வாழ்வின் பாரம்பரிய விழுமியங்களையும் கற்றுக்கொள்கிறது. 

இங்கே பெரும்பாலும் உலகமயமாக்கலுக்கேற்றவாறு அதன் சர்வதேச பரிமாணங்களில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறான குழந்தைகள் தான் பின்னாளில் "Elites" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயர்ந்தோர் குழாமாக தம்மை உருவாக்கி சமூகத்தை ஆட்டுவிக்கும். Public School களில் நாடு (தேசம்), தேசியம், நாட்டுக்கு (தேசியத்திற்கு) இவர்கள் வளர்ந்து ஆற்றவேண்டிய கடமைகள் என்று பாடம் நடத்தப்படும். இவ்வாறாக சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வசதியான வீட்டிலுள்ள ஓர் குழந்தை "Public School" என்று சொல்லப்படும் பொதுவாக எல்லோருக்கும் ஆன அந்த கல்விமுறையை குறுக்குவழியில் கடந்து செல்கிறது. மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள் என்று வரும்போது இவர்களுடன் மற்றவர்கள் போட்டியும் போடவேண்டும்.

அதற்கு தங்களை சிறந்த முறையில் தயார்ப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

பொதுவாக எந்தநாட்டு பெற்றோராயினும் "Public School System" என்பதில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அதனாலேயே வாயை, வயிற்றைக்கட்டி காசை சேமித்து குழந்தைகளை "Pre-School - Prep School" வரை தனியார் பாடசாலைக்கு அனுப்ப விரும்புகிறார்கள். நான் Public School இல் கல்விகற்று யாருமே வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லை என்று சொல்லவரவில்லை. இங்கே கல்வியை பெற்றுக்கொள்வதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, போராட்டத்தையே சொல்கிறேன்.

இன்றைய உலகில் கல்வியின் அளவைகொண்டு மட்டும் ஒருவரின் சுபீட்சமான எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை எந்தத்துறையில் கல்வியில் கால்பதிக்கிறது என்பதை வைத்தே அதன் சுபீட்சமான எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன் செய்தியில் பார்த்தேன். 

ஓர் தமிழ்நாட்டு மாணவன் தன் பதின்நான்கு வயதிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணணித்துறையில் பட்டப்படிப்பை தொடர்வதாக. அவருக்கு பொருளாதார காரணிகள் இயைபாக இருந்து அவர் அந்த துறையில் முன்னுக்கு வந்திருக்கலாம். இன்று கணணித் துறையில் உட்சபட்ச கல்வியை கற்றவர்களும் மருத்துவத்துறையிலும் உள்ளவர்களும் அதிக "Job Security" உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்ற துறைகளில் கால்பதிக்கும் குழந்தைகள் நாட்டுக்குத்தேவைதான். அவர்களின் அறிவும் திறமையும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு விலைபோகாதவரையில் சந்தோசம் தான். ஆனால், மற்றத்துறைகளில் ஏன் வேலை உத்தரவாதமோ, அதற்குரிய மதிப்போ கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் மனதில் எழாமலில்லை.

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் Business News என்பதில் எந்தெந்த பெரிய, பெரிய நிறுவனங்கள் எப்படியெப்படி தங்கள் செலவினங்களை குறைப்பது குறித்த வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்பது குறித்து அலசி ஆராய்வார்கள். அப்போதெல்லாம் என் காதில் விழும் சொற்கள் இவை, (Cost-Cutting - Downsizing, Reengineering, Layoff, Cutting down redundancies.)

 இவற்றுக்கெல்லாம் எனக்குத்தெரிந்து தமிழில் ஒரேயொரு அர்த்தம் தான், அது  "வேலையிழப்பு". இங்கே முக்கி, முக்கி நான்கு அல்லது ஐந்து வருடங்கள் பட்டப்படிப்பு படித்து முடித்து வேலை தேடி அலைபவர்களுக்கு இதுதான் காய்ச்சிய ஈயமாய் காதில் பாய்ந்து மூளையில் எரியும் செய்தி. 

அதுவும் இல்லையா அரசின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பொதுச் சேவைகளை ஏன் தனியார்மயப்படுத்தக்கூடாது என்று பீதியை கிளப்புவார்கள். சில சமயங்களில் அப்படியே செய்யவும் செய்வார்கள். பொதுதுறைகள், பொதுசேவைகள்  தனியார்மயப்படுத்தப்பட்டால் அது பொதுசனத்துக்கு எவ்வளவது தூரம் அனுகூலமான விளைவுகளை கொண்டுவரும் என்று யாரும் அறுதியிட்டுக்கூறமுடியாது.

இங்கே தான் மறுபடியும் போராட்டம் ஆரம்பிக்கும் வாழ்க்கையில். இருந்தவேலை நிச்சயமில்லை அல்லது அதை இழக்கும் சூழ்நிலை. இனி புதிதாய் ஏதாவது வேலை தேடவேண்டும் அல்லது கல்வியை தொடரவேண்டும். இதில் காதல், கல்யாணம், குடும்பம் என்கிற commitment இருக்கிறதா? உங்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்.வேலையில்லை அதனால் பணமில்லை. எதிர்காலம் நிச்சயமில்லை. அதனால் உருவாகும் பதட்டங்கள், மனக்குழப்பங்கள் இவைதான் இளையதலைமுறையின் பிரச்சனைகள். இதன் காரணமாகத்தான் இன்று பலர் ஏதாவது சித்தாந்தம், கொள்கைகள் அவற்றின் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று நம்பி எத்தனையோ அமைப்புகளோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். சில சமயங்களில் அரசுகளுக்கு தலையிடியாயும் ஆகிப்போகிறார்கள். 

ஆனால், பிரச்சனைகளுக்கெல்லாம் அவர்கள் வகுத்துக்கொண்ட கொள்கைகள் மூலம் தீர்வு காண்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும், இப்படியெல்லாம் வயதையும் வாழ்க்கையையும் அதன் சந்தோசங்களையும் தொலைக்கும் ஓர் இளையதலைமுறைதான் இங்கே உருவாகிறது என்றால் அது அவர்கள் பிழையல்லவே!!

ஆட்சிக்கட்டிலை அலங்கரிக்க அரசியல்வாதிகள் சொல்வது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வறிய, நடுத்தர பொருளாதார சூழலிலிருந்து படித்து முன்னுக்கு வந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழக படிப்பை முடித்து வெளியே வரும்போது இங்கே எந்த அரசும் தங்க தாம்பாளத்தில் வைத்து வேலையை நீட்டிவிடப்போவதுமில்லை. இப்போதுள்ள, பொதுவாக எந்த நாட்டு அரசாங்கங்களுக்கும் பணவீக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று நாட்டு மக்களுக்கு தண்ணி காட்டவே வேலையும் நேரமும் சரியாய் இருக்கிறது. யாரும் பணவீக்கம் எப்படி உருவானது என்பது பற்றியோ அல்லது அதன் விளைவாய் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டது பற்றியோ அதிகம் ஆராய்வதில்லை.

ஆக, ஒரு நாடாயினும் சரி, ஐக்கியநாடுகள் அமைப்பென்றாலும் சரி கல்வியை ஒப்புக்கு அடிப்படை உரிமை என்று அறிவித்துவிட்டு அதற்குரிய கொள்கைகளை வகுக்காமல், அதை நடமுறைச்சாத்தியமாக்காமல் நலிந்தோருக்கும் அந்த உரிமை சமமாய் கிடைக்கப்போவதில்லை. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். நான் வாழும் நாட்டில் கல்வியமைச்சு என்று ஓர் அமைச்சோ அல்லது அமைச்சரோ கிடையாது. மாகாண அரசுகளே அதற்குரிய பொறுப்பை வகிக்கின்றன. 

அண்மைய ஓர் அறிக்கையின் படி கனடாவின் கல்வித்துறை சிறந்த ஒன்றாக கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதில் குறைபாடுகள் இல்லை என்று நான் சொல்லமாட்டேன். அண்மையில் இங்கிலாந்தில் பல்கலைக்கழக படிப்பிற்கான விலையை மூன்று மடங்காக அதிகரித்தபோது அங்கு மாணவர் சமுதாயம் எவ்வளவு தூரம் கொதித்துப்போனது என்பது கல்வியின் முக்கியத்தையும் அதற்கான போராட்டத்தையும் விளக்கியது. அந்த கோபத்தின் உச்சம் Royal Family யில் உள்ளவர்களை தாக்கக்கூட துணியவைத்தது. கல்வி வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வியாபாரப்பொருள் தான். என்ன ஒரு வித்தியாசம் இங்கே வளர்ச்சியடைந்த நாடுகளில் ஆரம்பக்கல்வியும் உயர்கல்வியும் எல்லோருக்கும் பெரும்பாலும் பாரபட்சமின்றி கிடைக்கிறது.

இளைய தலைமுறைக்கு கல்விக்கும் வேலைவாய்ப்பிற்குமுரிய சந்தர்ப்பங்கள் சமமாக உருவாக்கப்பட்டால் அது நிச்சயம் சுபீட்சமான ஓர் நாடாக உருவாகும். இந்த இரண்டுமே  அதிக போராட்டம் இல்லாமல் கிடைக்கவேண்டும். ஆனால் யதார்த்தம், இவையிரண்டுக்கும் போராடாவே வாழ்க்கையின் பாதி தீர்ந்துவிடுகிறது.

டிசம்பர் 27, 2010

ஆயிரம் காலப்பயிரும் பெண்களும்!

மனிதனாய் பிறந்த யாராகினும் தன்னை தன் தனித்தன்மைகளோடு அடையாளப்படுத்த முயன்றாலும் எப்போதுமே தனியாய் வாழ்ந்துவிட முடிவதில்லை. ஒவ்வொருவரும்  தன்னை இந்த சமூகம் என்கிற கட்டமைப்புக்குள், சமூக இருப்பு என்கிற நிலைக்குள் தக்கவைத்தோ அல்லது சிக்கவைத்தோ கொள்ளவேண்டியிருக்கிறது. தேவைகள், ஆசைகள், இலட்சியங்கள் என்று ஏதோ ஒன்றுக்காய் மனம் அலைபாயவும் ஓடவும், தேடவும் செய்கிறது. ஆசைகளை இயல்பாகவே ஒதுக்கிவிட்டு இலட்சியங்களுக்காய் ஒடுபவர்களுக்குள் எப்போதுமே ஓர் தெளிவான உள்நோக்கு இருக்கும். அவர்கள் எதற்கும் எளிதில்  சஞ்சலமோ சங்கடமோ கொள்வதில்லை. அவர்கள் எந்தநிலையிலும் மற்றவரை சார்ந்து தான் வாழவேண்டும் என்கிற நிலைக்குள் தங்களை தாங்களே தள்ளுவதுமில்லை. தனிமனித தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆசைகளை நிவர்த்தி செய்ய ஒடுபவர்களே இங்கே வாழ்க்கை சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். 

பொதுவாக சொல்வார்கள் மனிதன் தன் பயங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவே வேறு விடயங்களில் கருத்தையும், கவனத்தையும் செலுத்துகிறான் என்று. பசி, பிணி, மரணம் இந்த மூன்றும் தான் மனிதனை அதிகம் பாதிக்கும் பயமல்ல, பீடிக்கும் பயங்கள். பசியும், பிணியும் வாட்டாத போது உடற்பசிக்கு தீனிவேண்டுமே. பசி வந்தால் தீர்க்கவும், பிணி வந்தால் ஆறவும், மரண பயத்தை போக்கவும் உண்டான சமூக ஏற்பாடே திருமணம். திருமணம் என்கிற ஓர் இயல்பான உடன்பாட்டு ஒப்பந்தம் பொருளாதார நிர்ப்பந்தம் மற்றும் கலாச்சார கலப்படங்களால் சமூகத்திற்கு சமூகம், நாட்டுக்கு நாடு என்று வேறுபடுகிறது. அங்கே பிறகு ஆண், பெண் என்கிற ஒப்பந்தக்காரர்களின் ஆதிக்கம், ஆளுமை என்கிற கூறுகள் சார்ந்த மேலோங்கிய நிலைகள் பிறக்கின்றன. 

நான் வாழும் நாட்டில் எத்தனையோ விதமான மனிதர்கள், அவர் தம் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் இவற்றுக்கு ஏதோ வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறேன். சில சமயங்களில் அது வெறும் அறிமுகம் என்கிற நிலை தாண்டி அதன் உட்கூறுகளை அறியவும் நேரிடுகிறது. அப்போதெல்லாம் நான் கவனித்தது பெண் எனப்படுபவள் எப்போதும் குடும்பத்தின் ஆணிவேர் மட்டுமல்ல. அவள் எப்படி தன்னை குடும்பம் என்கிற கூட்டுறவுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்கிறாள் என்பதும் தான். குடும்பம் என்கிற அமைப்பில் பெண்ணானவள்  தாய் என்கிற இயற்கை நிலை காரணமாகவும், சமூக ஏற்பாடுகள் காரணமாகவும் அதிக பொறுப்புகளையும் கடமைகளையும் கொண்டிருக்கிறாள். தன் கடமையிலிருந்து எப்போதும் வழுவாதிருக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. 


பொதுவாக இல்லாமல் தமிழ் கலாச்சாரம் என்று நோக்கினால், தமிழ்கலாச்சாரம் எப்போதுமே "Male Dominant Culture" என்பது எல்லோரும் அறிந்ததே. அதாவது ஆண்களின் மேலாட்சிநிலை அல்லது ஓங்கிய தன்மை தமிழ்கலாச்சாரத்தின் ஓர் கவனிக்கப்படவேண்டிய அம்சம். பெண் என்பவள் சிறுவயது முதலே ஆண் என்கிற ஏதோவொரு உறவுக்கு, அப்பா, அண்ணா, தம்பி, சித்தப்பா, மாமா இப்படி, இணங்கிப்போகிற அல்லது வளைந்துகொடுக்கும் இயல்புகள் (Submissive) கொண்டவளாய் வளர்க்கப்படுகிறாள். இந்த மனப்பாங்கு தான் பின்னாளில் புருஷன் குடும்பம் என்று வரும்போது வாழ்க்கைப்பட்டு போகிற இடத்தில் மதிக்கப்படும், வாழ்க்கை வளம் பெறும் என்கிற அபத்த கருத்துதிணிப்புகள் தமிழ்கலாச்சாரத்தில் நிறைந்துகிடக்கிறது. இங்கே எத்தனை பெண்களுக்கு, "நீ நீயாய் உன் இயல்புகளோடு இரு" என்று கற்றுக்கொடுக்கிறார்கள். எல்லாமே எதிர்மறையாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது. "இது இப்பவே இப்பிடி எண்டால் பிறகு வாறவனுக்கு எப்படி அடங்கி போகப்போகுது" என்று சில பாட்டிகள், அம்மாக்களே அங்கலாய்ப்பார்கள். 

சரி என்னென்னவோ கண்டங்களைக் கடந்து வீட்டில் செல்லாமாகவோ அல்லது கண்டிப்பகவோ வளர்க்கப்பட்டு திருமணம் என்கிற வாழ்வியல் மாற்றம் ஒன்றுக்குள் காலடி எடுத்தும் வைப்பார்கள் பெண்கள். பெரும்பாலான பெண்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வே உண்டாகும். இருந்தாலும், பெண் கல்வியும் அதன் வழிவந்த பொருளாதார ஸ்திரத்தன்மையும் பெண்களுக்கு பெரும்பாலும் ஓர் அசாத்திய துணிச்சலை கொடுக்கும்.  இதன் காரணமாக இவர்கள் குடும்பம் என்கிற அமைப்பில் முரண்பாடுகள், மனப்போராட்டம்,  சலனங்கள் வந்தாலும் சமாளித்துக்கொண்டு கரையேறி விடுவார்கள். தவிரவும், பொருளியல் வாழ்வின் அழுத்தங்கள் காரணமாக பரஸ்பரமான புரிதல்களுடன் கூடிய பரிமாற்றமாக திருமணவாழ்க்கை அமைந்துவிடும்.  


பெண் எனப்படுபவள் கணவனுக்கு எப்போதும் அடங்கியவளாக நடக்கவேண்டும் என்கிற மனப்பாங்கோடு வளர்க்கப்படும் பெண்களுக்கு கூட நல்ல புரிதல்களுடன் கூடிய வாழ்க்கைத்துணை கிடைத்தால் திருமணத்துக்குப் பிறகேனும் தேறி ஓர் சுதந்திரபிறவியாய் வாழமுடியும். அப்படி சந்தோஷமாய் வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே துணையின் இயல்புக்கு இணங்கிப்போகிற, தன்னை மாற்றிக்கொள்கிற, எதிர்க்காத சாத்வீக குணவியல்பு கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் என்னை அதிகம் வியப்படைய வைப்பவர்கள். நான் நினைப்பதுண்டு எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்று. சில பெண்கள் சர்வசாதாரணமாக சொல்வார்கள், "இனி என்ன செய்யிறது. பிள்ளையளுக்காகவேனும் இப்பிடியே வாழ்ந்துதான் ஆகவேணும்" என்று. இப்படிப்பட்ட குடும்பங்களில் வளரும் குழந்தைகள் எப்படிப்பட்ட மனப்பாங்குடன் வளருவார்கள் என்பது பற்றி தனிப்பதிவே போடலாம். 

என் பணித்தலத்தில் ஓர் இந்தியப் பெண் சொல்வார், என் கணவர் அவருக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமென்றாலும் அவரே எழும்பிப்போய் எடுத்து குடிக்கமாட்டார். இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு தன்னை ஏவுவார் என்று. ஏன் நீங்கள் அவருக்கு இதையெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாதா என்று ஆங்கிலத்தில் கேட்டேன். எப்போதுமே ஏதாவது பேசினால், "He dominates the conversation" என்பார். இப்போதெல்லாம் அவர் சிரிப்பதை நான் பார்ப்பதுமில்லை. அவர் குடும்பம் பற்றி கேட்பதுமில்லை.  ஆனாலும் நிறையப்படித்த, அவர் கணவரை விடவும் அதிக சம்பாத்தியம் கொண்ட ஓர் பெண்மணி தன்னுடைய சொந்தவாழ்க்கையில் ஏன் இப்படி சுறுசுறுப்பில்லாமல், எப்போதும் மந்தமாய் இருக்கிறார் என்று நான் நினைப்பதுண்டு. தன் குழந்தைகளுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டிருக்கிறேன் என்பார். எத்தனை நாளைக்கு என்று நான் மனதுக்குள் கேட்டுக்கொள்வேன். இன்னோர் வேற்றினப்பெண்மணி, "நாங்கள் நாயும் பூனையும் மாதிரி சண்டைபோடுவோம். ஆனால், bedtime என்றால் ஒற்றுமையாகிவிடுவோம்" என்று வெடிச்சிரிப்பு சிரிப்பார். கனடாவில் பெண்கள் உரிமைகள் அதிகம் பாதுகாக்கப்படுவதால் பெண்கள் பெரும்பாலும் உடல்ரீதியாக துன்புறுத்தப்படுவதில்லை. அப்படி ஏதாவது நடந்தது தெரியவந்தால் ஆணுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

போதைக்கு அடிமையான கணவனோடு குடித்தனம் நடத்தும் பெண்களும் உண்மையில் பொறுமைசாலிகளே. நித்தம், நித்தம் குடிபோதையில் வந்து மனைவி என்கிற பெண் ஜென்மத்தை அடிக்கும் கணவன்களுக்கும் பஞ்சமில்லாததுதான் தமிழ்சமூகம். எவ்வளவோ கனவுகளுடன் ஓர் ஆணை வாழ்க்கை துணையாய் ஏற்றுக்கொள்வார்கள் சில பெண்கள். வறுமையிலும் வாழலாம். ஓர் மொடாக்குடியனுடன் எப்படி வாழ்க்கையை பகிரமுடியும் என்று மனதுக்குள் மறுதலிக்கும் பெண்களும் எங்கள் தமிழ்சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். பொதுவாக பெண்கள் பற்றிய ஓர் கட்டுரையில் சொல்லியிருந்தார்கள் சில பெண்கள் ஆண்கள் குடிப்பதை ஊக்கப்படுத்துவார்களாம். காரணம், குடும்பத்தின் அதிகாரத்தை தங்களின் கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பதற்குத்தான் என்று சொல்லியிருந்தார்கள். 

ஆயிரம் பொய்சொல்லி வளர்த்த ஆயிரம் காலப்பயிர் விதிவிலக்குகளாய் சில வேளைகளில் ஆரம்பத்திலேயே கருகிப்போவதும் உண்டு. திருமணத்திற்குப் பிறகும் ஆணோ, பெண்ணோ தன் சுய விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும் போதும் அப்படி நடந்துபோக நேரிடுகிறது. காலம் போகிற வேகத்துக்கும் மாற்றங்களுக்கும் ஏற்றாற்போல் பெண்கள் தங்களை தங்கள் சமூக இருப்பை இப்போதெல்லாம் தக்கவைக்க நிறையவே போராடி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். பொருளியல்வாழ்வின் அழுத்தங்கள், பெண்கள் கல்வி, ஓரளவுக்கு பெண்கள் பற்றிய ஆண்களின் புரிதல் என்று சில காரணிகளால் பெண்கள் நிலை இப்போ முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனாலும், பெண் உரிமைகள் அதிலும் திருமணத்திற்குப்பின் பெண்கள் சுதந்திரம் தமிழ்சமூகத்தில் இன்னும் சிறப்பாய் சொல்லுமளவிற்கு இல்லை என்பதே என் கருத்து.


நன்றி: படங்கள் அறியது 

டிசம்பர் 25, 2010

பழைய "கள்"ளும் புதிய மொந்தைகளும்!!!

இந்தியா, காங்கிரஸ் இந்த இரண்டு சொற்களுமே ஈழத்தமிழர்கள் மனதில் என்றைக்குமே ஆறாத காயத்தையும், மறையாத வடுவையும் உண்டாக்கிய, இன்னுமின்னும் அவ்வாறே உருவாக்கிக்கொண்டிருக்கும் பெயர் சொற்கள். முள்ளிவாய்க்கால் அழிவையும் இழப்பையும் நினைக்குந்தோறும் கூடவே இந்தியா என்ற சொல்லும் மறக்காமல் ஞாபகத்திற்கு வந்துதொலைக்கிறது. அன்றுமுதல் இன்றுவரை ஒப்பந்தங்கள் மூலம் வெளிப்படையாகவும் திரைமறைவிலும் உருவாக்கிய அழிவுகள் தவிர, இப்போதெல்லாம் இலங்கைக்கு குடை பிடிக்கும் இந்தியா அதன் அதிகாரிகள் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் பற்றிய தீர்வுகளுக்கு ஏறுக்கு மாறாய் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் பத்து லட்சம் மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது அதை சர்வதேச மனித உரிமைகள் சாசனத்திற்கேற்பவேனும் தன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த நேரு அரசு. அதன் பிறகு இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் காலகாலமாய் போடப்பட்டிருக்கின்றன. பெயர்போன பண்டா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் மலையகத்தமிழர்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஒப்பந்தங்களிலும் இதுவே தான் தொடர்ந்தது.

1957 இல் பண்டாரநாயக்கா - தந்தை செல்வா - ஒப்பந்தம் (Regional Council), 1965 இல் டட்லி சேனா நாயக்கா - தந்தை செல்வா ஒப்பந்தம் (District Council) இதையெல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் குப்பையில் தூக்கிப்போட்டபோது இந்தியா கண்டுகொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த சிறீமாவோ (Federal Form of Govt) மற்றும் ஜெயவர்த்தனாவும்
(District Council without Executive Power) எங்கள் அடிப்படை உரிமைகளுக்கான தீர்வுத்திட்டங்களை கடாசிவிட்டு தங்கள் பேரினவாதக் கொள்கைகளையே நிலைநிறுத்தினார்கள். இப்படி இலங்கை என்ற நாட்டில் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட போதும், காலங்காலமாய் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையும் கண்டுகொள்ளாத இந்தியா நேரடியாக களமிறங்கியது. காரணம், தமிழர்கள் மீதுள்ள அக்கறையல்ல. இலங்கை என்ற நாடு தெற்காசியாவில் மற்றைய நாடுகளின் பக்கம் சாராமலிருக்கவே என்பது எல்லோரும் அறிந்தது.

அதன் விளைவு தான் 1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம். ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்துக்கே சங்கு ஊதிவிட்டது. பிரச்சனை தமிழனுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் என்றாலும், இந்தியா இடையே நுழைந்து எப்போதுமே ஏதாவதொரு ஒப்பந்தம் போட்டு எங்கள் உயிர்களும் உரிமைகளும் பறிக்கப்பட துணை போனதன்றி வேறெதையும் சாதித்தது கிடையாது.

இந்த சாணக்கியத்தின் தொடர்ச்சி தான் இன்னும் தொடர்கிறது. அண்மையில் தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சொன்னது பற்றிய பத்திரிகை செய்தி. மேற்குலகத்தின் இலங்கை மீதான போர்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையை காப்பாற்றுவது, அழிவுக்குட்பட்ட தமிழர்கள் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் இந்தியாவுக்கு கணிசமான பங்கை கொடுப்பது என்று இந்தியா இலங்கையுடன் பேரம் பேசுகிறது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக தமிழர்கள் தவறான புரிதல்களை கொண்டுள்ளார்களாம். புலம்பெயர் தமிழர்கள் முக்கியமானவர்கள் இல்லையாம் என்பது இவர் கூற்று.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. என்னை அதிகம் வெறுப்பேற்றும் விடயம் இந்திய அறிவுசீவிகள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றி எழுந்தமானமாய் ஆளாளுக்கு இன்றுவரை பேசுவது தான். 1987 ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த பதின்மூன்றாவது திருத்தச்சட்டம். இது மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வை இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கிறது. சிவசங்கர் மேனன் 13 வது திருத்த சட்டத்தின் படி அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று இந்தியா இலங்கை மீது ஓர் முடிவை திணிக்காதாம். 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தமே 1977 பொது தேர்தலில் வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு (mandate) எதிரானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இவர்கள் சொன்னவுடன் இந்தா பிடி வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வென்று இலங்கை தூக்கி கொடுக்கும் என்று நினைக்கிறார்களா?

அடுத்து இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சர் S. M. கிருஷ்ணா மாவீரர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் ஓர் இந்திய தூதரக கிளையை திறந்து வைத்து ஓர் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் சொன்னதும் 13 வது திருத்தச்சட்டத்தின் வழி இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாம். அதுதவிர, யாழ்ப்பாணத்தில் பேசும்போது ஆறுமுகநாவலர் பற்றி பேசியும்; தெற்கில் பேசும்போது புத்தரின் பிறந்தநாளுக்கு "கபிலவஸ்து" நினைவுச்சின்னம் அனுப்புவது பற்றியும் பேசினார் என்று TamilNet செய்தி தளம் குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணத்தில் பேசுறதுக்கு நிறைய தயார்ப் படுத்திக்கொண்டு போயிருப்பார் போல.இவங்க இரண்டு பேரில் யார் சொல்வதை பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றி நாங்கள் நம்பவேண்டும்!! ஒருவர் 13 வது திருத்தச்சட்டம் இலங்கை மீது திணிக்கப்படாது என்பார். மற்றவர் அதுதான் தீர்வுக்கு வழி சொல்லும் என்கிறார். ஏன் இப்படி ஈழத்தமிழர்களை குழப்புகிறார்கள்.

இந்த காங்கிரஸ் கண்மணிகள் வரிசையில் இப்போ புதிதாய் ஈழத்தமிழர்கள் பற்றி அக்கறைப்படுபவர் ராகுல் காந்தி. இந்த காங்கிரசின் கத்துக்குட்டி எல்லாம்  ஈழத்தமிழர்களுக்குரிய தீர்வைப் பற்றி பேசுவதென்றால் ஈழத்தமிழா உன் நிலை தான் என்ன? இலங்கை அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவில்லை என்று இவர் ரொம்பவே கவலைப்படுகிறாராம். காங்கிரஸ் காரர்கள் போற்றித்துதிக்கும் இந்த வளர்ந்த குழந்தை ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று யார் அழுதார்கள். ஏன் இப்பிடி?

ஆனாலும் ஒரேயொரு ஆறுதல் நேருவின் வம்சத்தில் இவர் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றி இதுவரை பேசவில்லை என்பதுதான். ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சாடி சிங்களத்தின் கோபத்திற்கு வேறு ஆளாகியிருக்கிறார் போலும். காலங்காலமாய் ஏதாவது சபை, ஒப்புக்கு அதிகாரம் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்திய அறிவு சீவிகள் மட்டும் அதே பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் பற்றியும், ராகுல் காந்தி போன்றவர்கள் ஈழத்தமிழர்கள் போல் அக்கறையுள்ளவர்கள் போலவும் தங்களுக்கு ஏதாவது அரசியல் தேவைகள் ஏற்படும் போது மட்டும் பேசுவார்கள்.

இவர்கள் என்னதான் பேசினாலும் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பாக விக்கிலீக்ஸ் ஆதாரங்கள் மற்றும் ஐ. நா. வின் முன்னெடுப்புகள் தொடர்ந்தால், அதில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும்!!

டிசம்பர் 22, 2010

கொஞ்சம் ரசிக்க....!!

                         


இது குளிர்காலம்......!!


தமிழிலில் அண்மையில் கேட்ட ஓர் பாடல், "வெயிலோடு விளையாடி...". நாங்கள் கனடாவில் குளிரோடு மல்லுக்கட்டி என்று பாடவேண்டும் போலுள்ளது. கனடாவில் இது குளிர்காலம். இன்றுடன் குளிர்காலம் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும், ஒருவாரத்துக்கு முன்னமே பனி கொட்டத்தொடங்கிவிட்டது. பனி என்றால் அது ஓர் 5cm-25cm (ஏதாவது புரியுதா மக்களே!!) வரை கொட்டலாம். அத்தோடு உறைமழையும் கொட்டினால் அதோ கதிதான். கார்கள் வீதியில் சறுக்கும். மனிதர்கள் வீதியில் நடக்கும்போதே சறுக்குவார்கள். உறை பனியில் சறுக்கி விழுந்து, யாராவது தூக்கிவிட்டு எழுந்து, முடிந்தால் நடக்கலாம். இல்லையென்றால் எலும்பு முறிந்தோ அல்லது உடைந்தோ வைத்தியசாலை தான். இந்த வருடம் குளிர் காலம் கடுமையாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் கனடா அறிவித்திருக்கிறது. 

சரி விடுங்க, இந்த  படம் நண்பர் "தவறு" அவர்களின் அறியது தளத்தில் என்னை கவர்ந்தது. 

காதலில் கொஞ்சம் மதிமயங்கி ....!!

           
காதல் நினைவால் செயல் மறப்பர்-எதையும் 
கருதி செயல்படும் நிலை மறப்பர்

மயக்கம், மறத்தல், என
மோகமுற்று, பித்தாகி 

தயக்கமில்லை சாவதற்கென்று
தலைகொடுக்கத் துணிந்து விடும் காதலால் 

(தொல்காப்பியப் பூங்கா - காதலாகி கசிந்துருகி )

பதிவுலகில் நான் ....!!!
 தமிழ்மணமும் நட்சத்திரப்பதிவரும்.....!!

ஆரப்பா அது தமிழ்மணத்திடம் கோள்மூட்ட ஓடுறது. தயவு செய்து "கோள்மூட்டி" என்ற பட்டத்தை வாங்கிக்கொண்டு ஓடவும்.

ஹா..ஹா... ஹா..... நாங்களும் ரவுடிதான் 

ரவுடி மாதிதி சிரிக்க கஷ்டமாத்தான் இருக்கு.

இதெல்லாம் சும்மா பகிடி. யாரும் சீரியஸா எடுக்காதீங்க.

நன்றி: படங்கள் அறியது 

டிசம்பர் 20, 2010

இலங்கை தேசியம் - ஈழத்தமிழர்களின் கடமைகள் - என் புரிதல்

தேசியம் என்பது என்ன?
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

தேசம் என்றால் என்ன?
சேர்ந்தாற்ப் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதாரமும். பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்த்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின். 

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண். இரண்டாவது தேவை பொதுமொழி, மூன்றாவது தேவை பொதுப்பொருளியல். நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான "நாம்", "நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.  

-தமிழ் தேசக் குடியரசு - ஒரு விவாதம் - பெ.மணியரசன்-

"The major mistake that the Commissioners, in their ignorance, made, was to assume that Ceylon was one nation. The reality was that it was one country (a geographic entity), with two nations (Sinhalese and Tamils), and five communities ....."

The most accurate definition of a "nation" from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:

"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."

-Diaspora referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Seniwiratne-

ஒரு விடயத்தை பெ. மணியரசன் அவர்கள் சொன்னாலும் செனிவிரட்னே அவர்கள் சொன்னாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான். இதுக்கெல்லாம் இப்போது இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அவரின் பரிவாரங்கள் புதிதாய் விளக்கமும், வியாக்கியானமும் சொல்ல தலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இருப்பது ஒரேயொரு இனமாம். அதாவது இலங்கையர்கள். அங்கே தமிழர், சிங்களவர்கள் என்கிற பாகுபாடு கிடையாது என்பதாகத்தான் இவர் சொல்கிறார் என்பது என் புரிதல். "இலங்கையர்கள்" என்பது ஓர் நாட்டின் குடிமகனுடைய குடியுரிமை அடையாளம். அதெப்படி இனப்பாகுபாட்டுககொள்கைகள் உள்ள ஓர் நாட்டில் என் உரிமைகளை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுடனான என் தனித்தன்மையை பிரதிநித்துவப்படுத்தும் என்றெல்லாம் நான் ஏதோ அறிவுசீவித்தனமாய் கேள்வியெல்லாம் கேட்கப்போவதில்லை.

இலங்கை தேசியத்தின் எந்தவொரு கூறிலும் இவரின் கூற்றுக்கு ஏற்றாற்போல் நாங்கள் சமமாக உள்வாங்கப்பட்டிருக்கிறோமா என்று நானும் யோசித்து பார்க்கிறேன், தேசிய கொடிமுதல் தேசிய இனம் என்பதுவரை!!! இதற்கு பதில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதையும் கடந்து செல்வோம். 

காலங்காலமாக இலங்கை தேசியத்தில் ஈழத்தமிழர்களின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு, பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக இலங்கையின் இனப்பாகுபாட்டு கொள்கைகளால் திட்டமிடப்பட்டே சிதைக்கப்படுகிறது. அது செல்லும் பாதை ஈழத்தமிழனின் உயிரை குடிப்பதை, இன, மான உணர்வை, விடுதலை உணர்வுகளை மழுங்கடிப்பதிலேயே மும்முரமாய் செயற்படுகின்றன.

ஆனாலும், இன்றும் தமிழர்கள் "இலங்கை தேசியத்துக்கு" தங்கள் பங்களிப்பை செய்யவேண்டும் என்றுதான் சிங்கள ஆட்சியாளர்களும், அவர்களின் இனப்பாகுபாட்டுக் கொள்கைகளுக்கு துணைபோகும், விலைபோகும் சில ஈழத்தமிழர்களும் Broken Record போல் ஒப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான மண் காலங்காலமாக சிங்கள பேரினவாதக் கொள்கைகளால் சூறையாடப்பட்டு பறி போய்க்கொண்டுதான் இருக்கிறது. அது 2010 May மாதத்திற்குப் பிறகு இன்னும் அதிகளவில் வடக்கில் கூட சிங்கள குடியேற்றங்கள், புத்தருக்கு விகாரைகள், தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு என அமைக்கப்பட்ட உல்லாச விடுதிகள் ("Resorts") எல்லாம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் மண்ணில் எங்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழ் மன்னர்களின் சிலைகளைக்கூட விட்டுவைக்க விரும்பவில்லை சிங்கள ஆட்சியாளர்கள். இதையெல்லாம் வாய் மூடி மெளனியாய் சகித்துக்கொள். இது தான் ஓர் தமிழனாய் நீ இலங்கை தேசியத்துக்கு ஆற்றும் கடமை என்பது சிங்கள ஆட்சியாளர்களின் அறிவுரை. தமிழுக்கு அதற்குரிய சட்டரீதியான அங்கீகாரத்துக்கு சாவுமணியடிக்க நினைத்தவர் SWRD பண்டாரநாயக்கா (1956). அது ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளரிடமிருந்தும் தொற்றித் தொடர்ந்து தன்னை நவீன "துட்ட கெமுனு" என்று அழைத்துக்கொள்ளும் ராஜபக்க்ஷேவையும் விட்டுவைக்கவில்லை. அண்மைக்காலங்களில் இலங்கையில் தேசிய கீதம் இனிமேல் தமிழில் பாடப்பட மாட்டாது என்கிற ஒரு செய்தியும் அது குறித்த குழப்பங்கள் தமிழர்களை கவலை கொள்ள வைத்தது. காரணம், அது இலங்கையில் தமிழர்களை வந்தேறு குடிகளாய் வரலாற்றில் பதியவைக்கும் ஓர் முயற்சி என்று சில அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். ராஜபக்க்ஷேவின் அமைச்சரவை தலைமையில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும்; இது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும், இன்றைய செய்திகளின் படி இலங்கையின் தேசியகீதம் தமிழிலும் இசைக்கப்படலாம் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான ஹெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளாராம்.

பெயரளவில் தமிழுக்கு அதன் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும் பெரும்பாலான அரச கரும கடிதங்கள் சிங்கள மொழியிலேயே எழுதப்படும்; தமிழன் பூர்வீக பூமியில் இலங்கை தேசிய கீதம் தமிழில் பாடப்படாதென்றால்; ஏனென்று கேள்விகேட்காமல், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று புரியாமல் ஏற்றுக்கொள்வது தான் தமிழன் இலங்கைத்தேசியத்துக்கு ஆற்றும் மொழிசார் கடனோ!!

இலங்கை தேசியத்துக்கு பொருளாதார ரீதியாக உன் பங்களிப்பை செய் என்று சொல்லும் இலங்கை அரசியல் ஈழத்தமிழனின் நிலமும், வளமும் High Security Zone என்கிற பெயரில் பறிபோகும் நிலங்கள் பற்றியோ அல்லது கடலில் மீன்பிடிக்க விதிக்கப்படும் தடைகள் பற்றியோ அக்கறை கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. தமிழனின் வாழ்நிலங்கள் பறிக்கப்பட்டு இந்தியா ஏதாவது விமானத்தளம் அமைக்கும். அல்லது, சீனா துறைமுகம் அமைக்கும். இது பற்றி வாய் திறந்து எதுவும் பேசாமல் இருப்பது தான் ஈழத்தமிழன் இலங்கை தேசியத்துக்கு செய்யும் பொருளாதார பங்களிப்பு என்பது ஏனோ "மரத்தமிழனுக்கு" (எழுத்துப்பிழையல்ல) புரிவதில்லை. உடனே யாராவது, நான் யாழ் அரச அதிபர் இமெல்டா என்பவரை மனதில் நினைத்துக்கொண்டு இப்படி எழுதுகிறேன் என்று புரிந்துகொண்டால் அது என் தவறல்ல. இலங்கை தேசியத்திற்கு தமிழர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் பற்றிய இமெல்டாவின் சிந்தனைகள். உன் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் தான் பறிக்கப்பட்டாலும், நீ வீதியோரங்களில் தான் வாழ்ந்தாலும் இலங்கை தேசியத்தின் பொருளாதாரத்தை மட்டும் வாழவைத்துவிடு தமிழா!!!

இறுதியாக தமிழனின் பண்பாடு, பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் அது இலங்கை தேசியத்துக்கு ஆற்றும் கடமை பற்றி ஓரிரு வார்த்தைகள். இலங்கையின் ஆட்சியாளர்கள் எப்படி "தமிழ்ப்பண்பாட்டுக்கு" அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள் என்பதை அண்மைய முக்காலமும் உணர்ந்த தெய்வம் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கை அரசும், துணை குழுக்களும் (வேற யாரு, தமிழர்களின் சாபக்கேடுகளில் ஒன்றிரண்டுகள் தான்) தமிழ்ப்பெண்களை எப்படி பாலியல் அடிமைகளாக்கினார்கள், சிங்கள சிப்பாய்களை எப்படி சந்தோசப்படுத்தினார்கள்  என்பதை; அது எப்படி விடுதலை சார்ந்த உளவியல் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை நான் விளக்கத்தேவையில்லை. ஈழத்தமிழனின் பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் பற்றிய என் பதிவு. ஈழத்தில் வாழும் தமிழர்களின் மத்தியில் கருத்துருவாக்கங்கள், பண்பாட்டு சீரழிவுகள் திட்டமிடப்பட்டே நிகழ்த்தப்படும். அது குறித்து தமிழனே மூச்சுக்கூட விடாதே. அது தான் நீ இலங்கை தேசியத்துக்கு ஆற்றும் இன்னோர் கடமை.மொத்தத்தில் தமிழனே உன் உயிர், நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு, பண்பாடு சார்ந்த உளவியல் உருவாக்கம் எல்லாமே இலங்கையில் அழிக்கப்படும். அழிக்கப்படட்டுமே!! இருந்தாலும் மெளனிகளாய் நீ இலங்கை தேசியத்தை மட்டும் வாழவைத்துவிடு!! தேசிய நீரோட்டத்தில் மூழ்கி, முக்குழித்து முத்தெடுத்து உன் குருதியில் இலங்கையை, சிங்கள தேசியத்தை நீராட்டு. இதைத்தான் சர்வதேசமும் வேறோர் பெயரில் "மீள் இணக்கம்" என்று சொல்கிறது, எதிர்பார்க்கிறது. அதை விடுத்து, "தேசம், தேசியம், தன்னாட்சி" என்று தமிழர்கள் பேசினால் சர்வதேசமும் சிங்கள தேசியத்துடன் சேர்ந்து எங்களை கோபித்துக்கொள்கிறது. ஏன் இப்பிடி???

Joseph Stalin கூற்றுப்படி தமிழன் தனியே தன் தனித்தன்மைகளோடு வாழும் எல்லா உரிமைகளும் தகுதிகளும் இருக்கிறது. அதற்குரிய வரலாற்று ஆதாரங்களும் ஈழத்தமிழர்களிடம் தாராளமாகவே இருக்கிறது. இருக்கட்டுமே!!! சிங்கள தேசியம், பூகோள அரசியல் இவையிரண்டுமே ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்துக்கும் சமாதி கட்டிவிட்டுத்தான் ஸ்டாலின் சொன்னதைப்பற்றி யோசிப்பார்கள் போலும்.

பி.கு: என் தம்பி விந்தைமனிதன் (ராஜாராமன்) "என்ன சவுண்டையே காணோம்" என்று கேட்டதால், இது ஈழம் பற்றிய என் அவசர பதிவு. பிழைகள், குற்றங்கள் இருந்தால் மன்னிக்கவும்.

டிசம்பர் 11, 2010

எண்ணமும் எழுத்தும் - சிந்தனை சிதறல்கள்..

"எண்ணம் என்றால் என்ன?"
"எண்ணம் நினைவின் பதிலளிப்பு"-

ஜே.கிருஷ்ணமூர்த்தி.

என்னதான் உதறித்தள்ளினாலும் மீண்டும், மீண்டும் ஈழம், போர்க்குற்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சாட்சிகள் என்று மனதில் காட்சிகளாய் நினைவுகள் நீண்டுகொண்டே செல்கின்றன. நினைவுகளையும் எண்ணங்களையும் இழுத்து நிறுத்தி வைக்கவோ அல்லது உதறித்தள்ளவோ முடிவதில்லை. என் எண்ணங்கள் நினைவுப்புழுதியை கிளப்பி எங்கெங்கோ சென்று கடைசியில் ஈழத்துப் பெண்களிடத்தில் கொஞ்சநேரம் நிலைகொண்டது. ஈழம் பற்றி, போர்க்குற்றம் பற்றி சர்வதேசத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மூன்று பெண்கள்.

ஈழத்து பெண்கள் M.I.A (Hip Hop Artist) என்றழைக்கப்படும் மாயா மாதங்கி அருள்பிரகாசம் முதல் தமிழ்வாணி ஞானகுமார், கல்பனா போன்ற முகம் காட்டாத சிலர் நினைவில் வந்து போகிறார்கள்.

மாயாவை அவரின் இசையை  விட துணிச்சல் தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது. சர்வதேச ஊடகங்களில் ஈழத்தமிழர்களின் நிலை பற்றி தன்னுடைய பாணியில் துணிச்சலாய் பேசிய ஒரேயொருவர் மாயா தான். அமெரிக்க ஊடகங்களில் ஒன்றான New York Times - Lynn Hischberg என்கிற ஊடகவியலாளர் மாயா ஈழப்பப்போராட்டம் பற்றி சொல்லாததை சொன்னதாய் சொல்லி கருத்துக்களை திரித்தபோது இவர் போராடியது துணிச்சலானதாய் பட்டது எனக்கு. அடுத்து, சிறிது காலத்துக்கு முன் "Born Free" என்ற அவரது பாட்டு அமெரிக்காவில் You Tube இல் தடை செய்யப்பட்டது. மற்ற நாடுகளில் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  போர், இனப்படுகொலை என்பன பற்றி விவரிக்கிறது இந்தப்பாடல்; அமெரிக்காவை சித்தரிக்கிறது, விமர்சிக்கிறது; இதெல்லாம் இப்பாடல் பற்றி அமெரிக்க ஊடகங்கள் கண்டுபிடித்து சொன்னதிலிருந்து நான் தெரிந்துகொண்டவை. தவிர, (இப்போதைய விக்கிலீக்ஸ் ஆதாரங்கள் வெளியிடப்படுமுன்பே) இந்தப்பாடல் அமெரிக்காவை சித்தரிப்பதாக சில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அமெரிக்க தொலைக்காட்சி ஊடகங்கள் இவரை, இவரது பாடலை, இலங்கை நிலவரத்தை பாய்ந்து, பாய்ந்து பேசவைத்தது. (காணொளியை இணைத்து 18+ என்று எழுத, விளம்பரம் தேட விருப்பமில்லை.) இதெல்லாம் நடந்து கொஞ்சகாலம் ஆனாலும் இப்போ ஏன் எனக்கு இது ஞாபகம் வருகிறது என்றால், இலங்கைக்கான முன்னாள் வெளிவிவகார செயலாளரும், தற்போதைய ஐ. நா மன்றத்தின் நிரந்தரப்பிரதிநிதி பாலித கோஹன மாயா பற்றி சொன்னது தான். அதுமட்டுமா சொன்னார்? இதையும் தான் சொன்னார், Tamil people, they are our sisters; They are our brothers!!!! இப்போ இவர் ஆஸ்திரேலியா இலங்கை என்று இரட்டை குரியுரிமை (Dual Citizenship) கொண்டவர். ஆஸ்திரேலியா, Rome Statute -ICC (International Criminal Court) வின் ஓர் உறுப்பினர் என்பதாலும் இவர் ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர் என்பதாலும் இலங்கையில்  போற்குற்றங்களுக்கு துணைபோனார் என்று விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து, தமிழ்வாணி ஞானகுமார் என்கிற பிரித்தானியாவைச் சேர்ந்த பெண். இவர் கடந்தவருட ஈழத்தின் இறுதிப்போரில் அகப்பட்டு உயிர் தப்பி வந்தது பலரும் அறிந்தது. இன்றுவரை சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடந்தால், தான் சாட்சி சொல்ல தயாராய் இருப்பதாய் சொல்கிறார். ஈழத்தின் இனப்படுகொலை பற்றி தன்னால் ஆன வரை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறார். இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷே சொன்னது, "Nothing should exist beyond the No Fire Zone". "No Fire Zone" இற்கு வெளியே தற்காலிக வைத்தியசாலை இருந்தாலும் அது "Legitimate Target" என்று சொன்ன பெருமைக்குரியவர். இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்று சொல்லப்படும் முக்கியமானவர்களில் ஒருவர். ஈழத்தின் இறுதிப்போரில் வைத்தியசாலைகள் கூட இலங்கைப்படையின் தாக்குதலுக்கு தப்பவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் அறிக்கைகள் மூலம் சொல்கின்றன. அதை நேரில் பார்த்த, வாழ்ந்த அனுபவம் தமிழ்வாணிக்கு உண்டு. தமிழ்வாணியின் அனுபவத்தை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்காக. Channel 4 வெளியிட்ட பேட்டி. இவரிடம் நான் பார்த்து அதிசயிக்கும் விடயம் பேசும் போது, குறிப்பாக ஈழத்தில் தன் அனுபவங்களைப் பேசும் போது எந்த தயக்கமும் இன்றி உறுதியுடன் வரும் ஒவ்வொரு வார்த்தையும். ஈழத்தில் கொத்து கொத்தாய் மரணத்தை கண்முன்னே கண்டவரின் சாட்சியம் சர்வதேசத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? இல்லை வழக்கம் போல் இலங்கை இதையும் கட்டுக்கதை என்று சொல்லுமா?

தற்சமயம், இசைப்பிரியாவின் படுகொலைக்குப் பின், இசைப்ரியாவை (Channel 4 மூலம்) அடையாளம் காட்டிய முன்னாள் புலி உறுப்பினர் என்று சனல் 4 அடையாளம் காட்டும் "கல்பனா" என்பவர். இவரின் சாட்சியத்தை பதிவு செய்தபோது  Jonathan Miller சொன்னது, இலங்கை அரசு இதையும் "Propaganda" (பொய்ப்பிரச்சாரம்) என்று சொன்னாலும் சொல்வார்கள் என்றும் அதற்கு கல்பனாவின் பதில் என்னவென்பதும் தான். இவரின் சாட்சியம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் செய்தியில் உறுதிப்படுத்தப்பட்ட இசைப்ரியாவின் மரணத்திற்கு அது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மேலும் வலு சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, இசைப்பிரியா     ஆயுதம் ஏந்தி போராடிய ஓர் போராளி அல்ல. அவர் ஓர் கலைஞர் மற்றும் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றியவர் என்பது கல்பனா என்பவரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் இறந்து கிடந்த நிலப்பகுதி 53 வது படையணியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உண்மைகள் ஐ. நா. வால் உள்வாங்கப்படுமிடத்து இலங்கை ராணுவத்தின் முக்கிய படையணிகளில் ஒன்றான 53 வது பிரிவின் கட்டளைத்தளபதி கமல் குணரத்னே என்பவர் போர்க்குற்ற விசாரணைக்கு உடபடுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத்தின் இந்த மூன்று பெண்களையும் நினைத்தபோது இலங்கையின் போர்குற்றம் பற்றி மனதில் தோன்றியவைகளை பதிவாக்கிவிட்டேன். இவர்களின் மனோதிடமும், தைரியமும் என்னை ஏனோ கவர்கிறது. இவர்களைப் பற்றி என் எண்ணங்களை எழுதிவிட்டு, தொலைக்காட்சியை திறந்தால் அங்கே "தென்றல்" திரைப்படத்தில் தங்கர்பச்சான் சமூக பொறுப்போடு (?) எழுதுகிற ஓர் நடுத்தர வயது ஆணை எப்படி மாய்ந்து, மாய்ந்து ஒருதலையாய் காதலிப்பது என்று பதின்மவயதின் ஆரம்பங்களில் இருக்கும் ஓர் பெண்ணுக்கு சொல்லிகொடுத்திருந்தார். அதையும் மூடிவிட்டு ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "வன்முறைக்கு அப்பால்" இல் மூழ்க முயற்சித்தேன், முடியவில்லை, தொடர்கிறேன்.

தன்னுடைய ஆட்சியில் எந்தவொரு ராணுவ சிப்பாயோ அல்லது தளபதியோ சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என்று இலங்கை ஜனாதிபதி சூளுரைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார். தவிர, முன்னாள் ராணுவ தளபதிகள் சிலர் இப்போது வெளிநாட்டு தூதரகங்களிலோ அல்லது ஐ. நாவின் பிரதிநிதியாகவோ பதவிமாற்றம் பெற்றிருக்கிறார்கள். போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க Diplomatic Immunity என்பதை இலங்கையின் இராணுவத்தளபதிகள் தான் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் போலும். தவிர ராஜபக்க்ஷே ஒரு படி மேல் போய் "Head of State Immunity" பெற்றிருக்கிறார். அவர் தான் சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட இலங்கை ஜனாதிபதி ஆயிற்றே. அவர் பதவியில் இருக்கும் வரை போற்குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவாரா?

 ஐ. நா. வின் செயலாளருக்கு இலங்கையில் இறுதிப்போரில் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டனவா என்று ஏற்கனவே அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு ஆராய்ந்து சொல்ல இருக்கிறார்கள். பிறகு அவர் இது தொடர்பாக மேற்கொண்டு முடிவுகளை எடுப்பாராம். வருகிற மாதத்தில் அது பற்றிய அறிக்கை வெளியிடப்படுமாம். காத்திருக்கிறோம், இவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்காக!!!

இதையெல்லாம் விட ஒரு நாள் நான் வழக்கம் போல் யாழ் தளத்தில் நடந்த விவாதங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ இது கண்ணில் பட்டது.

அரசு கேள்வி பதில்,
"ஈழப்போராட்டம் விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன?"
விடுதலைப்புலிகளின் உலகம் அறியாமை. 

இந்த குறிப்பிட்ட "அரசு" கேள்வி பதிலை நான் புத்தகத்திலோ அல்லது இணையத்திலோ நேரடியாக படிக்கவில்லை. இருந்தாலும், அரசு கேள்வி பதிலில் நடிகைகளின் இடை, தொடை, தொப்புள் என்று ஒப்பிடுபவருக்கு இருக்கும் ஈழம் பற்றிய அறிவை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே விளக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

குமுதம் பற்றிய என்னுடைய இன்னோர் கருத்தையும் பதிந்துகொள்கிறேன். குமுதத்தின் ஒரு பிரிவான இணையத்தள, குமுதம்.காம் என்கிற வீடியோ பகுதியில் தமிழகத்தில் உள்ள மற்றும் சில ஈழத்தமிழர்களை அவ்வப்போது பேட்டி கண்டு ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது, இவர்கள் தமிழ்நாட்டில் குமுதம் பத்திரிகையில் "ஞாநி" போன்றவர்களை எழுதவைத்து புலிகள் மீது விஷத்தை கக்க வைப்பார்கள். அதே, இணையம், பேட்டிகள் என்று வரும்போது மட்டும் புலத்து தமிழர்களுக்கு எந்த செய்திகளை விற்க வேண்டும் என்ற வியாபார சூத்திரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தான்!!

என் ஈழம் பற்றிய எண்ணங்களின் தொடர்ச்சிக்கு நினைவுகளின் பதில் இவை.


நன்றி: படங்கள் அறியது.

டிசம்பர் 07, 2010

கலாச்சாரமும் தனிமனித சமூக இருப்பும்

                                                                                               


தனிமனித சிந்தனைகள், தனிமனித ஒழுக்கம் தான் இறுதியில் ஓர் சமூகத்தின் இருப்பையும் தீர்மானிக்கிறது என்றால் அது மிகையில்லை. அந்தவகையில் தனிமனிதனாக தனித்தன்மைகளோடு வாழுவது மட்டுமல்ல சமூகவாழ்வையும் அதன் தார்ப்பரியங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இவ்வாறாக மனிதர்களை பல பொதுத்தன்மைகளோடு இணைக்கும் அம்சங்கள், எண்ணக்கரு, கருத்தாக்கம் தான் கலாச்சாரம் எனப்படுகிறது. ஓர் இனத்தின் அல்லது குழுவின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகள், சிந்தனையின்  வெளிப்பாடு, மற்றும் தனிப்பொருள் கூறுகள் தான் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் ஆகின்றன.

கலாச்சாரம் பற்றி யாருக்கும் பாடம் எடுப்பது என் எழுத்தின் நோக்கமல்ல. இங்கே நான் சொல்லவருவது கலாச்சாரம் சார்ந்த புறவயத்தோற்றங்கள் பற்றியல்ல. இது அகவயமானது. உரிமைகள் மறுக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சிந்தனை சார்ந்தது. மிக சமீபகாலமாக ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களின் கலாச்சார சீரழிவுகள் என்கிற கட்டுரைகள் படித்ததின் வெளிப்பாடே இது. எந்தவொரு கலாச்சாரத்தையும் இன்னொன்றோடு ஒப்பிட்டு விளக்குவது அபத்தம். ஒவ்வொரு கலாச்சாரமும் அதன் தனிதன்மைகளோடு, இயல்புகளோடு இருக்கிறது. என் வரையில் தனிமனித சிந்தனைகளை மழுங்கடிக்கும் எந்த அம்சமும் தமிழ்கலாச்சாரத்தில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. அந்தவகையில், தமிழ்கலாச்சாரம் தன் தனிதன்மைகளோடு காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. காலமாற்றங்களில் சிக்குண்டு என் வேர்களை இழந்து, கலாச்சார அடையாளங்களை தொலைத்தால் பின்னர் நான் யார்!! என்னை எப்படி கூப்பிடுவார்கள்!! என் தனிமனித சிந்தனை தனித்தன்மை கொண்டதேயாயினும் என் கலாச்சாரமும் அதன் பண்புகளும், விழுமியங்களும் தானே  எனக்குரிய சமூக அடையாளத்தை கொடுக்கின்றன.விடுதலை, சுதந்திரம் பற்றிய சிந்தனைகள் அமெரிக்காவால் மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளின் பேரினவாதிகளாலும் மக்கள் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இவர்களின் கருத்து திணிப்புகளால் எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் பற்றி நாங்கள் மறக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். No culture is superior to another என்று ஒப்புக்குச் சொல்லிச்சொல்லியே அமெரிக்க கலாச்சாரம் எங்களை ஆட்கொண்டுவிட்டது. யாழ்ப்பாணத்திலும் சிங்கள ராணுவம் கேட்பது, "புலிகளின் காலத்தில் நீங்கள் இவ்வளளவு சுதந்திரமாக இருந்தீர்களா?" என்பதுதான். சிங்களராணுவத்தின்  சுதந்திரம் பற்றிய சிந்தனைகளையும், செயல்களையும் தான் பிரித்தானியாவின் சனல் 4 அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறதே. இன்னும் சிலரின் கருத்து, "யாழ்ப்பாணம் இப்ப குட்டி சிங்கப்பூர் ஆயிட்டுது". என்னய்யா இது! சிங்கப்பூரில் தமிழுக்கும் அந்த மொழியைப்பேசுபவனுக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. சொந்த மண்ணில் சுற்றிவர ராணுவக்காவல் அங்கே பண்ணை மிருகங்களாய் அடைபட்டுக்கிறான் தமிழன். தமிழன் என்றால் ஈழத்தில் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்த லட்சணத்தில் இலங்கையில் சிங்கள ராணுவமும், பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் தான் சுதந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றால் எம் இனம் எப்போ தான் மீள்வது!!

இதில் புலத்து தமிழன், ஈழத்து தமிழன் என்று ஒருவரை ஒருவர் விரல் நீட்டி இணையங்களில் வேறு விமர்சம் செய்துகொள்கிறார்கள். ஈழத்தில் இருந்து தான் தறி கெட்டுப்போக வேண்டுமா! புலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கிறது. ஈழம் என்றாலும், புலம் என்றாலும் சில சமுதாயப்பிறழ்தல்களையும், விதிவிலக்குகளையும் மட்டுமே காட்டி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், இந்த ஒன்றிரண்டு விதிவிலக்குகள் எதிர்காலத்தில் ஓர் முன்மாதிரியாக (Role Model) தமிழ் சமூகத்திற்கு அமையுமேயானால் எங்கள் தனித்தன்மைகளை, கலாச்சாரா பண்பாட்டு விழுமியங்களை இழந்து நிற்போம். விடுதலை என்பது அபத்தமாய் வெறும் புறத் தோற்றங்களிலும், கேளிக்கைகளிலுமே வெளிப்பட்டு நிற்கும். அதையெல்லாம் விளம்பரப் படங்களாய் சிங்கள ஆட்சியாளர்கள் உலகிற்கு பறந்து, பறந்து காட்டுவார்கள். அதுமட்டுமல்ல, எங்களுக்காய், எங்களின் விடுதலைக்காய் போராடி உயிர் நீத்தவர்களை, அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்த இதைவிட வேறு உத்திகளே வேண்டாம்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுத்திலிருந்து,


"கருத்து விலங்கிட்டு  மனித மனங்களை சிறை கொள்வது ஓர் நுட்பமான அடக்குமுறை யுக்தி. உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் இந்த கருத்தாதிக்க யுக்தியையே கடைப்பிடிக்கிறார்கள். மனிதர்களை விழித்தெழச் செய்யாது அவர்களை அறியாமை உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு ஏகாதிபத்தியங்களும் சரி, பேரினவாதிகளும் சரி, இந்த கருத்து போதமையையே பாவித்து வருகின்றனர். அடிமை கொண்ட மக்களின் கிளர்ச்சியை நசுக்க, புரட்சியை முறியடிக்க, விடுதலை உணர்வை கொன்றுவிட கருத்தாதிக்கமானது ஓர் கனரக ஆயுதமாய் பாவிக்கப்பட்டு வருகிறது."
(விடுதலை கட்டுரை தொகுப்பு, "கருத்துலகமும் வாழ்வியக்கமும்"). 


கலாச்சாரம் குறித்து நிற்கும் சிந்தனையின் வெளிப்பாடுகள் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எங்கள் விடுதலையை நோக்கியதாகவே கட்டிஎழுப்படவேண்டும் என்பது என் கருத்தும் விருப்பமும். 

என் பதிவுக்கு நான் தேர்ந்தெடுத்த படங்களை நண்பர் "தவறு" அவர்களின் அறியது தளத்திலிருந்து தந்ததிற்கு என் நன்றிகள். 

 

டிசம்பர் 03, 2010

இந்தியரின் பார்வையில் போர்க்குற்றங்கள்.. ஊடகங்கள்...

கடந்த சில நாட்களாகவே ஈழம், போர்க்குற்றம், பிரித்தானியா, ஐரோப்பா, Channel 4, ராஜபக்க்ஷே, Wiki Leaks என்று செய்திகளிலும், பதிவுலகிலும் படித்தும், பார்த்தும் ஏதோவொரு சின்ன சந்தோசத்தோடு கூடிய கசப்பான மனோநிலைக்குள் எங்களை அறியாமல் தள்ளப்பட்டுவிட்டோம்.

எல்லாமே ஏதோ ஈழம் பற்றிய துன்பங்களுக்கு தீர்வு சொல்லாவிட்டாலும், சின்னதாய் ஓர் நம்பிக்கையை எங்கள் மனங்களில் விதைக்காமலும் இல்லை. ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் போர்க்குற்றம் ஒழிந்திருக்கிறதா? அல்லது போர்க்குற்றத்தில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் எங்களின் இனவழிப்பு மறைக்கவோ அல்லது வெளிக்கொணரவோ செய்யப்படுகிறதா? இந்தக் கேள்விகள் சுற்றிச்சுற்றி ஏனோ கடந்த சில நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 

போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற ஒரு வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் முனைப்பில், மனிதம்  காப்பாற்றப்பட வேண்டும் என்ற மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடுவதில் உள்ள நியாயங்கள் சில கேள்விகளையும், பொறுப்புகளையும்  எங்களிடம் விட்டுச்செல்கின்றன. 

                                

செய்தி ஊடகங்கள், பதிவுலகம் என்று தொடர்ந்து செய்திகளை கவனித்து வருகிறேன். பதிவுலகில் தமிழ்நாட்டு தமிழர்கள் ஐரோப்பிய தமிழர்களின் ராஜபக்க்ஷேவின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கு பாராட்டு தெரிவிப்பத்தோடு, ஈழம் பற்றிய இந்திய நிலைப்பாடு குறித்து கேள்விகளையும், விசனங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். நியாயமானது தான். பிரித்தானியாவின் ஜனநாயகப்பண்பு இந்தியாவில் இல்லை அதனால் இந்தியனாய் வெட்கி தலைகுனிகிறேன் என்றெல்லாம் எது அவர்களை விசனப்பட வைக்கிறது? 

ஆனாலும், பதிவுலகம் தாண்டி மக்கள், அரசு என்கிற அளவுகளில் இதற்கான முனைப்புகளும், அழுத்தங்களும் கொடுக்கப்படுகிறதா என்று யோசித்தால், இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ஈழத்தமிழர்கள் இனவழிப்பில், போர்குற்ற விசாரணைகளில் ஓர் வெளிநாட்டு ஊடகம் செய்யும் முன்னெடுப்பை, எப்போதும் ஈழத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்று சொல்லப்படும் இந்தியாவும் அதன் ஊடகங்களும் ஏன் செய்யத்தவறுகின்றன என்பது ஆச்சர்யப்படுவதற்குரிய விடயமல்ல. இருந்தாலும் ஓர் இந்தியரின் பார்வையில் இந்தியாவும் ஈழமும் என்கிற சிந்தனை அலைகளை, கேள்விகளை இந்தியர்களிடமும், என்போன்றவர்களிடமும்  விட்டுச்சென்ற ஓர் தளம் இது. தொடர்புடைய பதிவு.

எதுவாயினும் புரட்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் உருவாக்க முடியாது என்கிற இந்த விமர்சனம் இன்றைய நாளில் ஏனோ என்னைக்கவர்ந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

டிசம்பர் 01, 2010

போர்க்குற்றங்களும்...... புலம்பெயர்தமிழர்களும் - என் புரிதல்கள்

இலங்கையின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த Channel 4 ஊடகமும் சர்வதேச சமூகத்திற்கு தங்களால் இயன்றவரை நெருக்கடிகளை கொடுக்கும் இந்த வேளையில் தமிழர்களாகிய நாங்களும் எங்களின் பங்கை சொல்லவும், செய்யவும் வேண்டியது எங்கள் கடமை.                                    

Protesters at Heathrowஇலங்கை ஜனாதிபதி வழக்கமான சிவப்பு சால்வையும், தன்னை யாரும் அசைக்க முடியாது என்கிற வெற்றிப்புன்னகையுடன் இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளில் கலந்து சிறப்பித்துவிட்டு; இப்போது Oxford பல்கலைக்கழகத்தில் உரையாற்ற Private Visit என்கிற பெயரில் பிரித்தானியா சென்றிருக்கிறார். அங்கு அவர் பாதுகாப்பு செயலரையும் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

இந்தியாவில் இவரை சிறப்பிக்க அழைக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும் அதற்கு நிறையவே கண்டனங்கள் எழுந்ததன. ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்கள் தங்களால் இயன்றவரை இலங்கையின் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணைக்காக பிரித்தானியாவில் கைது செய்யப்படவேண்டுமென்று முயன்றுவருகின்றனர். அந்த முயற்சி போதுமா, போதாதா, வெற்றியளிக்குமா, இல்லையா  என்கிற கேள்விகளையும், சந்தேகங்களையும் கடந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.    

                                  இந்த நேரத்தில் Channel 4 தன் பங்கிற்கு இலங்கையின் போர்குற்றம் தொடர்பான சில காணொளிகளை மீண்டும் வெளியே கொண்டுவந்திருக்கிறது. அது கடந்த வருடம் வெளியிடப்பட்டதன் மேலதிக விவரங்கள் என்று சொல்லப்படுகிறது. இதை வழக்கம் போல் இலங்கை தன் பாணியில் மறுத்திருக்கிறது. ஈழத்தமிழன் சாவு பற்றிய எந்த காணொளியும் உண்மையென உறுத்திபபடுத்தப்பட (Authenticate) வேண்டுமாம்!!! செத்தவன் எழும்பிவந்து, "நான் செத்திட்டன்" என்று சொன்னால் தான் நம்புவார்களோ?

இதோ உலகால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத எங்கள் உறவுகளின் மரணம். பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள அக்கறை, அவசரம் இதில் இருக்கவேண்டும் என்று யாரும் இலங்கை பற்றிய பொது அறிவுள்ளவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.