நவம்பர் 08, 2010

ஈழத்தமிழர்களும்.... நல்லிணக்கங்களும்- என் புரிதல்கள்.

ழம் என்பது நிஜமாக முடியாக் கனவு போல் ஆகிவிட்டது என்கிற சித்தரிப்புகள், திட்டமிடப்பட்ட வெறுப்பூட்டல்களுக்கு மத்தியில் எது இதை எழுதத்தூண்டுகிறது!! ஈழம் என்கிற உணர்வா அல்லது கடப்பாடா என்று யோசித்தால், இரண்டுமே என்றுதான் பதில் வருகிறது. தனி ஈழம் என்கிற கருத்தியல் அதுவாய் உருவாகவில்லை. அடிப்படையில் எங்களுக்குரிய தீர்வு அதுவாகத்தான் இருக்கும், இருக்கவேண்டும் என்பது தமிழர்கள் விடயத்தில் இலங்கையின் இனப்பாகுபாட்டு அரசியல், கல்வி, பொருளாதார கொள்கைகளால் இயல்பாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது


எந்தவொரு இன விடுதலைப் போருக்கும் சளைத்ததல்ல ஈழவிடுதலைப்போராட்டம். இனவிடுதலைக்கான போராட்ட வரலாற்றின் பக்கங்களில் தனக்கென்றோர் இடத்தை, யார் மறுத்தாலும், அடைந்துதான் இருக்கிறது. அது தனக்குரிய இயல்புகளோடும், வரையறைகளோடும், துரோகங்களோடும் தற்காலிகமாய் பின்தள்ளப்பட்டுள்ளது. ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்காலத்தில் மீண்டும் உயிர் பெறுமா இல்லையா என்பதை இலங்கை மற்றும் பூகோள அரசியல் சூழ்நிலைகள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஈழம் பற்றிய தற்கால செய்திகள், கருத்து திணிப்புகள், அறிவுஜீவிகள் சிலரின் எதிர்வுகூறல்கள் என் போன்றவர்களை கலக்கமடையவும் கோபமடையச் செய்யாமலும் இல்லை. சில கருத்துருவாக்கங்கள் ஓர் உளவியல் சிதைவை உருவாக்கும் நோக்குடனும், சில சமயங்களில் அது இயல்பாகவும் அமைந்துவிடுகின்றன. சமீபகால செய்திகளான யாழ் நூல்நிலையத்திற்குள் தெற்கிலிருந்து சிறுகுழுவாய் வந்து அத்துமீறி நுழைந்த சிங்களவர்கள், வடக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களர்களின் குடியேற்றம் என்று வெந்த புண்ணை கீறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு நடுவே மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்துடைப்பு விசாரணைக்குழு. இவையெல்லாம் இலங்கையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை, மீள் இணக்கத்தை உருவாக்குமா!


யாழ்நூலகத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் மருத்துவத்துறை சார்ந்த கருத்தரங்கு நடக்கிறது அதனால் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு அனுமதி இல்லை என்று தெளிவாக எழுதப்பட்ட போதிலும், அத்துமீறி நுழைத்து தங்கள் மேலாதிக்க மனோநிலையை நிரூபித்திருக்கிறார்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர். தமிழனை யார் வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம், துன்புறுத்தலாம், தமிழன் பூமியை சூறையாடலாம் என்கிற நோய்கொண்ட கூட்டுமனோநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்களா? எது அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டியது?அப்படியானால் குற்றம் யாருடையது?  கொஞ்சம் யோசித்தால், இங்கே எய்தவன் வேறு, அம்பு வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது திண்ணமாகிறதுஅரசன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியோ!! மேற்சொன்னது ஓர் சிறிய உதாரணம் மட்டுமே. ஈழத்தமிழர்கள் பற்றிய சரியான புரிதலோ அல்லது எங்களின் உண்மை நிலைகள் பற்றிய செய்திகளோ பெரும்பான்மை சமூகத்தினருக்கு போய் சேருவதில்லை என்பதும் ஓர் காரணம். சீனா எப்படி தன் நாட்டில் கூகிளை வடிகட்டுகிறதோ, அதேபோல் ஈழம் பற்றிய செய்திகளும் இலங்கையில் இணையம் மூலமும் வடிகட்டப்படுகிறது. இன்றும் கூட ஊடகத்துறை அரச கட்டுப்பாட்டில் இருப்பதாக நிறையவே குற்றச்சாட்டுகள்


தமிழர் பூர்வீக பூமியில் பெரும்பான்மை அரசியல் இனவிகிதாசாரத்தை அதிகரிக்கும் இன்னோர் முயற்சி திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள். ஆண்டாண்டு காலமாய் கிழக்கில் சத்தமின்றி அரங்கேறிக்கொண்டிருந்த இந்த திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் இப்போது வடக்கில் ஆரவாரத்தோடு நடந்தேறுகிறது, அவ்வளவே. அண்மையில் செய்திகளில் படித்தது, சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இப்போது தாங்களும் உள்நாட்டில் இடம்பெயந்தோர் (Internally Displaced People-IDPs) என்று யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறுகிறார்கள் என்பது தான். ஆனால், இவர்கள் பற்றிய  யதார்த்தம் ஏனோ இயல்பின்றி இருக்கிறது. அவர்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து போய், இப்போது மீண்டும் திரும்பி வருபவர்களேயானாலும் அவர்களின் வருகையும், குடியேற்றமும் ஏன் இயல்பாயில்லை. சீனாவின் உதவியுடன் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. சிங்கள ராணுவம் அவர்களுக்கு பாதுகாப்பு. திடீரென்று வேரோடு பெயர்ந்து வந்து புதியதோர் வாழ்விடத்தில் எந்த வாழ்வாதாரத்தை நம்பி இவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்? இலங்கையின் ஊடகத்துறை பேச்சாளர் சொல்வது, அந்த நாட்டின் குடிமகன் ஒருவர் தான் விரும்பியபடி நாட்டின் எந்தப்பகுதியிலும் வாழலாமாம். இது தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டது என்று நம்பினால், then, we all live in Utopian dream. 


ஒருகாலத்தில் உயர் பாதுகாப்பு வலயம்- High Security Zone (HSZ) என்று ராணுவத்தால், குறிப்பாக வடக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா கூட முன்பு ஓர் அறிக்கை விட்டிருந்தது. வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான புனர்வாழ்வு, மீள்குடியமர்த்தல் என்பன சர்வதேச நியமங்களுக்கு அமைவாய் இல்லை என்று International Crisis Group (ICG) தன் அறிக்கையில் சுட்டிக்காடியுள்ளது. தமிழர்கள் வீதியோரங்களில் கூடாரங்களில் தான் குடித்தனம் செய்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்வதை விட இப்படி ஓர் அமைப்பு சொன்னால் வலு அதிகம் போலும். தமிழர்களுக்குரிய நியாயமான தேவைகளை கூட செய்துகொடுக்க முடியாத ஓர் அரசுக்கு அவசர, அவசரமாய் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்யவேண்டிய தேவை அதிகமாய் இருக்கிறது


இவற்றையெல்லாம் விட, சமீபத்திய சேர்க்கை "படிப்பினைகள் மற்றும் மீள் இணக்க ஆணைக்குழு" (Lessons Learnt and Reconciliation Commission), போற்குற்றங்களிலிருந்து தன்னை தப்பவைக்கும், அமெரிக்காவின் ஆசிர்வாதத்தோடு இலங்கை அரசு கண்டுபிடித்த ஓர் உத்தி. அதாவது, சர்வதேச ஆதரவுடன் கடந்த வருடத்தில் பயங்கரவாதத்தை இலங்கையில் ஒழிப்பதாக கூறி ஓர் இனத்தின் விடுதலைப்போராட்டத்தை கருவறுத்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததா என்று விசாரிக்கிறார்களாம். இவர்கள் விசாரித்து, கண்டறியும் உண்மைகளுக்கு பிறகு இலங்கையில்  உள்ள இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாகுமா என்பது ஒருபுறமிருக்க, இதன் நம்பகத்தன்மை பொதுவாகவே சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தவிர, அதில் சாட்சியம் அளித்தவர்கள் வெறுப்புக்கும், நம்பிக்கையின்மைக்கும் ஆளானது கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லாதது!! நேற்றைய செய்தி ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கிறாராம். ஒருவேளை, இங்கிலாந்து செல்ல இவருக்கு அவ்வளவு அவசரமோ!!!


இலங்கை ஒரே நாடு. அங்குள்ள வாழும் இனங்கள் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் வாழவேண்டுமாம் என்று அரசு போராடியதாம் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறதாம். எப்படி, தமிழனின் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பறித்து பெரும்பான்மை சமூகத்தை குடியேற்றுவதன் மூலமா? இலங்கை அரசின் கொள்கைகள் இரு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதா என்பதற்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்ததே. அரசு தான் அப்படி. நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா? சரி யாரிடம் நீதி கேட்பது. இலங்கையின் நீதித்துறையின் தார்ப்பரியங்களுக்கு எனக்கு தெரிந்த இரண்டு உதாரணங்களை சொல்லலாம். ஒன்று ராஜீவ், ஜெயவர்த்தனாவின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி இணைக்க வேண்டும் என்று கையெழுத்து போட்டுவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் அதற்கு அரசு தடைவாங்கியது. அடுத்தது, சர்வதேச குடியுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (International Covenant on Civil and Political Rights (ICCPR-1997)) இலங்கையும் கையெழுத்துப் போட்டிருக்கிறது. பிறகு, 2006 இல் இலங்கையிலுள்ளவர்கள் யாரும் . நாவின் மனித உரிமைகள் அமைப்பிடம் மனித உரிமைகள் மீறப்படுவதன் மூலம் பாதிக்கப்படுகிறோம் என்று முறைப்பாடு செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டது. ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றமே இந்த லட்சணத்தில் இருந்தால் மிச்சம், மீதி எப்படி உருப்படும்? படிநிலையில் உச்சநீதிமன்றத்திற்கு கீழ்யுள்ள நீதி பரிபாலன அலகுகள் மற்றும் காவல்துறை என்பன தமிழர் உரிமைகள் பற்றிய பிரக்ஞையை தொலைத்தனவாகவே தோன்றுகிறது.


ஜனநாயகத்தின் அங்கங்களான மக்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசு, அதன் அரச நிர்வாக கட்டமைப்புகள், நீதி பரிபாலனம், காவல் என்று எல்லாமே இலங்கையைப் பொறுத்தவரை சோபையிழந்த அலங்காரங்கள் என்றாகிவிட்டன. சர்வதேசத்தின் முன் இலங்கை தன்னை அடையாளப்படுத்த ஜனநாயகதிற்குரிய இந்த சோபைகள் பயன்படலாம். அது பற்றிய உண்மையான யதார்த்தங்கள் மற்றும் நடைமுறைகள் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனையும் கொண்டுவரப்போவதில்லை என்பது அனுபவத்தினூடே கண்டறிந்த உண்மை.

18 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

மீண்டும் ஒரு முறை உள்ளே வருவேன்.

ஜோதிஜி சொன்னது…

நீங்கள் இனப்பாகுபாடு காரணமாக தனிஈழம் தான் தீர்வாக இருக்கும் என்று சொல்றீங்க. ஆனால் இப்போது புலிகளின் கட்டுபாடு இல்லாத சுதந்திரத்தை தமிழர்கள் அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள். இதன் காரணமாகவே கமல் பிறந்த நாள் வாழ்த்து முதல் இடை ஓப்பீடு வரைக்கும் எத்தனையோ பேர்கள் தங்கள் பதிவுலக சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருக்காங்களே?

தமிழர்களுக்காகவே என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத்தும் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் அறிக்கையில் இது போன்ற வார்த்தைகள் வருவதே இல்லையே? ஏன்?

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சேனநாயகா தெளிவாக நடத்திய குடியேற்றங்களுக்குப் பிறகு இப்போது தான் உண்மையான சிங்கள மக்களின் பிரதிநிதியாக உள்ள ராஜபக்ஷே இந்த குடியேற்றங்களை இப்போது நடத்திக் கொண்டுருக்கிறார்.

அடுத்த 25 வருடங்கள் ஆகும். வேறொரு பிரபாகரன் உருவாக?

Rathi சொன்னது…

ஜோதிஜி,

சினிமா நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வது ரசிகனின் கடமை, ஓர் சந்தோசம்!? நடிகைகளின் இடை மற்றும் இன்னபிற ஒப்பீடுகளால் ஒருவேளை sexual stimulation உண்டாகலாம். ஈழத்துக்காய் பலியான ஆயிரமாயிரம் போராளிகளையும், பிரபாகரனையும் நினைத்தால் அந்த கிளுகிளு உணர்வுகள் தோன்றும் என்று நினைக்கிறீர்களா!!

நீங்களே சொல்லிவிட்டீர்களே பதிவுலக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்று. பின்னே, அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரத்தையுமா அனுபவிக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் இதெல்லாம் உளவியல் சிதைவை உருவாக்கும் உத்திகள்.

//தமிழர்களுக்காகவே என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத்தும்...//

பதிலும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று. நான் பேசுவதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். முரண்பட்டால் விவாதியுங்கள். அரசியல் வியாதிகள் ஏன் இதுபோல் வார்த்தைகளை பேசவில்லை என்றால் என்னிடம் பதில் இல்லை. ஒருவேளை இவர்களுக்கு வாக்களித்ததோடு கடமை முடிந்ததென்று சினிமாவுக்கு செல்லும் citizens யாரும் தங்களை தட்டிக்கேட்க மாட்டார்கள் என்ற தைரியமாய் கூட இருக்கலாம்.

பிரபாகரன் பற்றிய பேச்சு வேண்டாம். இனிமேல் ஈழத்தமிழினத்துக்கு அப்படியோர் தலைவர் கிடைக்கவே போவதில்லை.

தமிழ் உதயம் சொன்னது…

பிரபாகரன் பற்றிய பேச்சு வேண்டாம். இனிமேல் ஈழத்தமிழினத்துக்கு அப்படியோர் தலைவர் கிடைக்கவே போவதில்லை. .////


உண்மை. உண்மை.

மேலும் எதுவுமே தீர்மானமாய் சொல்ல முடியாத ஆரூடம் தான் உள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா, எந்திரன் திரைப்பட கொண்டாட்ங்கள் என்று வேறு ஒரு காட்சியை காட்டுகிறது ஊடகங்கள். தமிழர் தலைவர்கள் மீண்டுமொரு இமாலய தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்,

விந்தைமனிதன் சொன்னது…

ஈழம்பற்றி எழுதுவதும் படிப்பதும் இப்போதெல்லாம் எனக்கு மிகுந்த மனவலியை உண்டுபண்ணி விடுகின்றது. ஏதாவது எழுதவோ, படிக்கவோ, பேசவோ நேரிடும்போதெல்லாம் நத்தை கூட்டுக்குள் சுருங்குவதைப்போன்று சுருங்கி விடுகிறேன். ஆனாலும் அதையும் மீறி நாம் செல்ல வேண்டிய தூரம் மிக நீளமாய் இருக்கின்றதே!

சர்வதேச ஏகாதிபத்திய அரசியலின் விளையாட்டு மைதானமாக ஈழம் ஆகிவிட்டதன் வேதனையையும், எமது ரணங்களையும் இனி முன்னெடுத்துப் போவது யார்? யார் தலைமையின் கீழ் தமிழர்கள் ஒன்றிணையப் போகிறார்கள்? யூத இனம்போல தமிழினமும் தமது மீட்சியினைப் பெறுமா?

Rathi சொன்னது…

தமிழ் உதயம் உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் கருத்துக்கு நன்றி.

//நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா, எந்திரன் திரைப்பட கொண்டாட்ங்கள் என்று வேறு ஒரு காட்சியை காட்டுகிறது ஊடகங்கள். தமிழர் தலைவர்கள் மீண்டுமொரு இமாலய தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்//

இதே தான் என் கருத்தும். எம்மவர்களின் சில கூத்துக்களை பற்றி, ஈழத்திலும், புலத்திலும், எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு. நீங்கள் அதற்கு அடி எடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள். பார்க்கலாம் நேரமிருக்கும் போது இந்த கதம்பமும் கைவருமா என்று முயற்சிக்க வேண்டும்.

Rathi சொன்னது…

ராஜாராமன், ஈழம் பற்றிய உங்கள் வலியை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. உங்களிடம் இருக்கும் அதே கேள்விகள் தான் இப்போ அநேகமானோரிடம் இருக்கிறது.

தலைவராய் இருக்க பல முன்வருவார்கள். ஆனால், அதற்குரிய தகுதியோடு அங்கீகாரத்தையும் தமிழினத்திடமிருந்து ஒருவரால் பெறமுடியுமா? புலிகளை வெறுக்கும் ஒரு சாராரைத்தவிர, மற்றவர்களுக்கு தெரியும் ஈழத்தமிழினத்தலைவரின் தகுதிகள் என்னவென்று.

தமிழ் உதயம் சொன்னது…

இதையெல்லாம் வாசிக்கும் போது, எல்லா நம்பிக்கைகளும் பொய்த்து போகுது.

;///யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்!!

http://www.newjaffna.com/fullview.php?id=ODI3

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தனி ஈழம் என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட உரிமைப் போராட்டமாக இருந்தவரைக்கும் அதனைப்பற்றிய பார்வைகளும், இப்போது அதனைப்பற்றிய பார்வைகளும் முற்றிலும் மாறி விட்டது உண்மைதான். ஆனால் தனிமனித ஒடுக்குதல்கள் இருக்கும்வரைக்கும் ஒரு போராட்டம் என்பது நீருபூத்த நெருப்பாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். கால மாற்றத்திற்கு ஏற்ப போராட்ட களமும் மாறிவிட்டது என்பதை தனி ஈழம் அமைந்தபின் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

சுத்திர ஈழம் மலர்ந்தே தீரும் ...

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,

நம்பிக்கை பொய்த்துப்போவதற்கும், செந்திலின் பதிலிலுள்ள நம்பிக்கைக்கும் இடையே தான் இன்று ஈழம் தொடர்பான எண்ணங்கள் ஊடாடுகின்றன. இலங்கையின் ஜனநாயகம், நீதி பொய்த்துப்போய் நீண்டகாலமாகிவிட்டது. அதற்காய் வருத்தப்பட்டுக்கொண்டிராமல் அதை உலகிற்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், "எந்த அரசியலிலும் சிக்காமல்" உண்மையாய் ஈழத்திற்காய் உழைப்பவர்கள். இதையெல்லாம் உலகம் அறிந்து கொண்டால் உடனே தமிழீழம் கிடைக்குமா தெரியாது. ஆனால், தமிழர்கள் குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது மதிக்கப்படலாம்.

கடந்த Nov 09/10 மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, படிப்பினைகள் மற்றும் மீள் இணக்க ஆணைக்குழு மீது தங்கள் விமர்சனத்தை வைத்திருப்பது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்.

//Sri Lanka’s government and justice system cannot or will not uphold the rule of law and respect basic rights.//

http://www.nationmultimedia.com/2010/11/09/opinion/War-crimes-whitewashed-Why-human-rights-groups-rej-30141831.html

Rathi சொன்னது…

//ஆனால் தனிமனித ஒடுக்குதல்கள் இருக்கும்வரைக்கும் ஒரு போராட்டம் என்பது நீருபூத்த நெருப்பாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். சுத்திர ஈழம் மலர்ந்தே தீரும்.//

இயல்பாய் யதார்த்தங்களை பேச செந்தில் தான். எங்கள் நம்பிக்கையை வாழவைக்கிறீர்கள்.

உங்கள் பதிவுகளை விடவும் பின்னூட்டங்களை அதிகம் விரும்பி படிப்பேன். எழுத்தில், கருத்தில் குறை கண்டால் அப்பப்போ ராஜாராமனுக்கு போடுவீங்க பாருங்க ஒரு Speed Break!!! :))

என் எழுத்துக்கும் அப்படிப்பட்ட விமர்சனத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். நன்றி.

ஹேமா சொன்னது…

ரதி...சுகமா."ஏதோ இருக்கிறோம்" என்பதை பதிலாய் எடுத்துக்கொள்கிறேன் !

பிச்சுப் பிச்சு வச்சிடுப் பிறகு அதுக்கு கருத்துக் கேட்டா எப்பிடி !

இலங்கை இனப்பாகுபாடு இல்லாத நாடாம்.எல்லாரும் ஒற்றுமையா இருக்கவேணுமாம்.பயங்கரவாதத்தை வேரோட பிடுங்கிட்டினமாம்.நாட்டை வளமாக்க புலம் பெயர்ந்த தமிழர்களும் ஒத்துழைக்கவேணுமாம்.ஆனா எல்லாரும் சிங்களம் படிச்சுக்கொள்ளவேணுமாம்.
அவையளுக்கு மட்டும் தமிழ் தேவையில்லையாம்.
நீங்களும் நானும் இனிச் சிங்களம் தெரிஞ்சால்தான் விமான நிலையத்துக்குள்ளால யாழ்ப்பாணம் போகலாமோ என்னமோ!

அதுசரி ரதி 1983-1984 காலகட்டத்தில இவையள் எங்க மணியங்காட்டில இருந்தவை.
எங்களையெல்லோ கொழும்பில இருந்து அடிச்சுக் கலைச்சவை !

இன்றைய செய்திகளைக் கேட்டபிறகும்கூட மனம் நினைக்கிறது...இப்படியே சிவப்புச் சால்வைகாரனின் குடும்ப அரசியல் போய்க்கொண்டிருந்தால் ....
எங்காவது ஒரு தமிழனுக்காவது கோபம் வராதா.பிரபாகாரன் போல இல்லாவிட்டாலும் கற்களைச் சேகரித்து ஒருவன் எறிய வரமாட்டானா என்ன.எங்கள் காலத்தில் இல்லையோ என்னவோ நிச்சயம் தீர்வு தேடி ஒருவன் எதிர்த்துக் கல் எறியப் பிறந்திருக்காமல் இல்லை.இன்னும் இன்னும் நம்பிக்கையோடு...

நெஞ்சில் இரத்தம் வடிய ஒரு அகதித் தமிழிச்சி !

Rathi சொன்னது…

ஹேமா இப்படிப்பேசி நான் அறிந்ததில்லை. உங்கள் உள்ளக்குமுறலும், நியாயமான கோபமும் புரிகிறது, ஹேமா.

//நெஞ்சில் இரத்தம் வடிய ஒரு அகதித் தமிழிச்சி !// இதைப்படிக்க மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

ம்ம்ம்ம்..... மணியம் காட்டில் இருந்து எத்தனையோ வருடங்களுக்கு முன் போனவையாம். இப்ப அடையாளமே மாறியிருக்கிற இடத்தில வந்து தாங்க சரியா இங்க தான் இருந்தவையள் எண்டு கண்டுபிடிச்சிட்டினமாம்.

அதை விட, தங்களை யாரும் அங்கே தடுக்கவில்லையாம்!! -இப்பிடி சொன்னா அது தங்களின் சொந்த இடம் தங்களை யாரும் தடுக்க ஏலாது என்கிற மாதிரி ஒரு கருத்தை மறைமுகமாய் சொல்லினம் போல.

அரசாங்கமும் தங்களுக்கு உதவவில்லையாம்.-ம்ம்ம்ம் .... எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!!

தமிழன் பேய்க்கு பேன் பாக்கிறவன் தானே!!!

சிவப்பு சால்வைக்காரர்களின் அரசியல் எங்களுக்கு மட்டும் அழிவில்லை, தங்களுக்கும் நாட்டுக்கும் ஆப்பு வைக்கும் என்பதை பெரும்பான்மையினரும் புரிந்துகொள்கிற வரை இது தொடரத்தான் போகிறது. வெளி விவகாரக்காரர் வேற சொல்லியிருக்கிறார் இறுதி யுத்தத்தின் போது புலம் பெயர் தமிழர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களாம்!!!???? (கவுண்டமணி மாதிரி "அடங்கொன்னியா" என்றுதான் சொல்லத்தோன்றுகிறது)அதனால இப்போ வடக்கில் புனர்வாழ்வுக்கும் முன்வந்து உதவட்டாம். செய்தியை எந்த தளத்தில் படித்தேன் என்பதை தவற விட்டுவிட்டேன். அல்லது இணைத்திருப்பேன்.

எல்லாக்கூத்தும் நடக்கட்டும். அதற்கு எம்மவர்களும் சிலர் உடன்போகிறார்கள். ஆனால் நிச்சயம் ஈழம் மலரும். அதைப்பார்க்க நாங்கள் அனேகமாக இருக்கமாட்டோம்.

தவறு சொன்னது…

"தமிழனை யார் வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம், துன்புறுத்தலாம், தமிழன் பூமியை சூறையாடலாம் என்கிற நோய்கொண்ட கூட்டுமனோநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்களா? எது அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டியது?அப்படியானால் குற்றம் யாருடையது? "

சுடும் உண்மை. ஆதிக்கமனோபாவம் அன்றி வேறு ஏது. தொடருங்கள் ரதி...

Rathi சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தவறு என்கிற நண்பரே/நண்பியே. தொடர்ந்து வாருங்கள்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

//புலிகளை வெறுக்கும் ஒரு சாராரைத்தவிர, மற்றவர்களுக்கு தெரியும் ஈழத்தமிழினத்தலைவரின் தகுதிகள் என்னவென்று. //
நெத்தியடி.

அனாமிகா துவாரகன் சொன்னது…

//ரதி...சுகமா."ஏதோ இருக்கிறோம்" என்பதை பதிலாய் எடுத்துக்கொள்கிறேன் !//

வாசித்த மறு வினாடியே உப்பு நீர் கரிப்பை உணர்கிறேன். எப்படி இருக்கிறாய் என்ற கேள்வியே 2009ம் ஆண்டுக்குப் பிறகு பல தமிழர்கள் கேட்பதில்லையே.

//பிரபாகாரன் போல இல்லாவிட்டாலும் கற்களைச் சேகரித்து ஒருவன் எறிய வரமாட்டானா என்ன.எங்கள் காலத்தில் இல்லையோ என்னவோ நிச்சயம் தீர்வு தேடி ஒருவன் எதிர்த்துக் கல் எறியப் பிறந்திருக்காமல் இல்லை.இன்னும் இன்னும் நம்பிக்கையோடு...

நெஞ்சில் இரத்தம் வடிய ஒரு அகதித் தமிழிச்சி ! //

நெஞ்சை யாரோ அமுக்குவது போல வலிக்கிறது

Rathi சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி. உணர்வுகளை விட்டுச்சென்றிருக்கிறீர்கள்.