நவம்பர் 27, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் 3 - Shopaholic & Material Culture

தேவைகள், விருப்பங்கள் இரண்டுக்கும் இடையே எங்கே கோடு போடுவது என்பது சில சமயங்களில் கடினமாகவே இருப்பதும் உண்டு. தேவை, விருப்பம் அல்லது இரண்டின் காரணமாகவோ அல்லது வேறு வகையில் பார்த்தால் சமூக நிர்ப்பந்தங்கள் இவற்றின் காரணமாகவோ விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையை அதன் போக்கில் நகர்த்தவும் நேரிடுகிறது. இந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கையை இழுத்துப்பிடித்து நகர்த்திக்கொண்டிருக்கும் போது, தனிமனித விருப்பு வெறுப்புகளை ஊடங்கங்கள் தங்கள் பங்கிற்கு உலகமயமாக்கலுக்கேற்றவாறு மூளைச்சலவை செய்து மேலும்  நுகர்வுக்கலாச்சாரத்திற்கு எங்களை தயார்ப்படுத்துகிறது.

மக்களின் நலன்களையோ அல்லது நாட்டின் பொருளாதார நலன் சார் தேசியத்தையோ   அரசாங்கங்களும் அதன் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் வாதிகளோ அவர்களின் கட்சிகளோ முன்னிலைப்படுத்துவதில்லை. தேர்தல் வரும் சமயங்களில் ஆளும் கட்சி எதிர் கட்சியையோ அல்லது மறுவளத்திலோ குற்றஞ்சொல்லி விமர்சித்து; நாங்கள் தான் சிறந்த ஆட்சியாளர்கள். எங்கள் ஆட்சியில் தான் தேனும் பாலும் வழிந்தோடும் என்று வாக்கு வங்கியில் வாக்குகளை குவிப்பது தான் அவர்களின் கட்சி தேர்தல் அறிவிப்பு/கட்சி கோட்பாட்டு அடிப்படை, "Election Platform".

நாங்களும் யோசிப்போம் இருக்கிறது இரண்டே இரண்டு கட்சி. யார் அல்லது எந்தக்கட்சி அரசியலின் பெயரால் செய்த தகிடுதத்தங்கள் குறைவாய் இருக்கிறது என்று அதிகம் வித்தியாசமில்லவிட்டாலும்; எங்களுக்கெல்லாம் எப்போதும் மறுக்கப்படாததாய் இருக்கும் ஒரேயொரு ஜனநாயக உரிமையான தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமாலும்; அந்த ஒரு உரிமையாவது இருக்கிறதே என்று நம்பி யாரோ ஒருவருக்கு வாக்களிப்போம்.

அண்மையில் தங்களுக்கு ஓர் விடிவு வராதா என்று ஹெயிட்டியில் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களை செய்திகளில் பார்த்த போது கசப்பாய் உணர்ந்தேன். அரசியலில் எவ்வளவு தான் அவநம்பிக்கை என்றாலும்,  எங்களுக்குரிய நாங்கள் விரும்பும் மாற்றங்களை கொண்டுவர தேர்தல்கள் தான் ஒரே வழி என்று அவலப்படுபவர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது.

தேர்தலும் முடிந்தாயிற்று. ஆட்சியும் மாறிவிட்டது. சரி, அடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கொஞ்சமேனும் அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்று செய்திகளை பொறுப்பாக பார்க்கவும், கேட்கவும் செய்வோம். இவர்களின் வாக்குறுதிகளை நம்பி எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று தெரியும். பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பின்னாளில் மறந்துவிடுவதால் அவர்களுக்கு "Selective Amnesia" என்று கிண்டலாய் சொல்வார்கள். இருந்தாலும் ஞாபகமறதியாய் எந்தவாக்குறுதியையாவது காப்பாற்றிவிட்டால் என்கிற நப்பாசை!!

பொறுத்துப் பார்த்து, சரி, அது அவ்வளவு தான் என்று நாங்களும் பிறகு சனல் மாற்றி சினிமாவையோ, ஏதாவது வினோத விளையாட்டு விளையாடி ஓர் வீடு, கார் அல்லது ஒரு சில லட்சங்களை பரிசாக பெறுபவர்களை எங்கள் வீட்டு சோபாவில் இருந்து, "GO, GO" என்று உற்சாகப்படுத்திவிட்டு; நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் உடையைப்போலவே வார இறுதியில் வரும் விருந்துக்கு உடுக்க வேண்டும் என்ற தலையாய கவலையோடு படுக்கைக்கு செல்வோம்.

இப்படி அரசியல் ஆட்சியும் தொலைக்காட்சியுமே எங்கள் வாழக்கையின் அடுத்த நிகழ்வுகளை, பொருளாதார வாழ்வை தீர்மானிக்கும் அளவிற்கு பழகிவிட்டோமா அல்லது பழக்கப்படுத்தப்பட்டோமா! விதம் விதமான விற்பனைப் பொருட்களும் வியாபார, விளம்பர உத்திகளும் அவ்வப்போது காந்தமாய் இழுக்கும். தேவை, விருப்பம் என்பதெல்லாம் தாண்டி, ஒரு பொருளுக்கு சொந்தக்காரனாய் அல்லது சொந்தக்காரியாய்   இருப்பது கெளரவம் என்கிற அளவுக்கு சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.

இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இருந்தாலும் ஓர் சிறிய உதாரணம், குறிப்பிட்ட ஓர் காரையோ அல்லது Brand Name பொருட்களையோ வைத்திருக்கும் ஆண்களை/பெண்களை தான் ஒருவரையொருவர் விரும்பவர் என்கிற கருத்து திணிக்கப்படுவது. சாதாரண அதிகம் பிரபலம் இல்லாத ஓர் நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிப்பவர் பெரும்பாலும் "ஏழை அல்லது மத்தியதர வர்க்கம்" என்ற முடிவுக்கெல்லாம் வரும் படி அபத்தமாய் சிந்திக்க வைப்பது. இப்படி சமூகத்தில் ஒருவரின் உடமை, வசதி, வாழ்க்கை, செல்வாக்கு என்பவற்றை வைத்தே ஓர் தனிமனிதனை எடைபோடப் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த சிந்தனைகளை எங்களிடையே வளர்த்தெடுத்து, வியாபாராத்தையும் வருமானத்தையும் பெரிய பெரிய நிறுவனங்கள் ஜோராக பெருக்கிக்கொள்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவில் "Black Friday" என்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க(!!) முண்டியடித்த கூட்டம் இன்னோர் ஆச்சர்யம் கலந்த எரிச்சல். அமெரிக்கர்களே ஆனாலும் தள்ளுப்பட்டு, அவதிப்பட்டு தள்ளுபடியில் சில அற்ப பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மனிதர்கள் தான். அடித்துப்பிடித்து அதை வாங்கிவிட்டால் எதையோ சாதித்த திருப்தி அவர்கள் கண்கள் பளபளக்கும் பெருமிதப்பேச்சில் தெரிகிறது. அமெரிக்காவில் பொருளாதார சுனாமிக்குப் பின்னும் இப்படி "Shopping" செய்ய எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்டபோது, வந்த பதில் இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட்.

வழக்கம் போல் நிகழ்ச்சியில் வந்த ஆய்வாளர் சொன்னது, இப்படி பொருட்கள் சார்ந்தே மக்கள் சிந்திப்பதால் அவர்கள் சமூகம் சார்ந்த தொடர்புகளை இழக்கிறார்கள், "Loosing social connections" என்பதுதான். பொருள் சார் வாழ்க்கையில் அன்பு, உறவு, சுற்றம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் ஆகிப்போகிறது. பணம் செய்யும் இயந்திரமாகவே ஒருவரையொருவர் சில உறவுகள் பார்க்க நேரிடுகிறது. உறவுகள் சில பொழுதுகளில் பிளவுகளாய், பிரிவாய் முடிந்துபோகிறது. ஏதோ ஒரு விதத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இப்போ, "Antidepressants" (மனச்சோர்வை குறைக்கும் மாத்திரை) எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்வதாக சொன்னார். இன்னோர் விடயம் பலருக்கு ஞாபகம் இருக்கலாம். அமெரிக்காவின் 9/11 இற்குப் பிறகு ஜோர்ஜ் புஷ் அமெரிக்கர்ளுக்கு ஆறுதலளிக்க சொன்ன இன்னோர் விடயம், "GO SHOPPING" ("I encourage you all to go shopping more") என்பதுதானாம்.

சிலபேர் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது ஷாப்பிங் போய் எதையெதையோ எல்லாம் வாங்கிவருவார்கள். பிறகு மனம் தெளிந்த பின் யோசிப்பார்கள், இதை ஏன் வாங்கினேன், இது தேவைதானா என்பதாய். சிலர் கொஞ்சம், கொஞ்சமாய் "Shopaholic" ஆகிவிடுவார்கள்.  இதெல்லாம் ஏதோவொரு பிரச்னையை சமாளிக்க எங்களை அறியாமல் உருவாகும் பிழையான வழிமுறைகள், வடிகால்கள், "Maladaptive Behavior". அதனால் அடிக்கடி ஏன் எதற்கு இப்படி செய்கிறோம் என்று எங்களை நாங்களே கேள்வி கேட்டுக்கொள்வது நன்று.

சமகாலத்தில் இந்த "Material Culture" எனப்படும் பொருளாதார வசதியுடன் கூடிய தனிப் பொருட் கூறுகள் (ஆடை, சிகையலங்காரம் முதற்கொண்டு எந்த தெருவில் வசிக்கிறோம் என்பதுவரை) சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கத்தவறவில்லை. வசதி படைத்தவர்கள், மத்தியதர வர்க்கம், ஏழைகள் அல்லது பராரிகள் என்றெல்லாம் மனிதர்களும் அவர் தம் வசதிகளும் வகைப்படுத்தப்படுகின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதன் இடைவெளியை வேறு அதிகமாக்குகிறது. இருப்பதை தக்கவைத்துக்கொள்ள போராடுவது மட்டுமல்ல, சமூக அந்தஸ்துகளில் எங்களை உயர்த்திக்கொள்ள படாத பாடுபடுகிறோம். வாயில் நுரை தள்ள குதிரைகளாய் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று வெறுத்துப் போகிறவர்களும் உண்டு.

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வழுவன்று எனச்சொல்வார்கள். எந்தவொரு மாற்றமும் ஆரோக்கியமானதாய் இருந்தால் நல்லது. ஆனால், நாங்களோ பொருளியல், வாழ்வியல் மாற்றங்கள் என்கிற பெயரில் எத்தனையோ அபத்தங்களை வரவேற்று புதுமையென திளைத்து, களைத்து, சலித்துப்போகிறோம். பிறகு, இன்னுமின்னும் புதுமையை தேடி அலைவோம். அவரவர் திறமைக்கும், வசதிக்கும் ஏற்றாற்போல் அவற்றை நியாயப்படுத்தவும், மறுக்கவும் செய்வோம்.

கொஞ்சம் யோசித்தால் அரசுகளின் பொருளாதார கொள்கைகளே இப்படி பொதுசனத்தின் குரல்வளைகளை நெரிக்கிறதோ என்றும் நியாயபூர்வமாக சிந்திக்கவைக்கிறது. யார் யாருக்கோ அதிகாரம், சலுகைகள் கொடுத்து பொருளாதாரத்தை வளர்க்காவிட்டாலும், அதை படுகுழியில் தள்ளாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக்கொள்வோம். Shop, shop, shop என்று எல்லாவழிகளிலும் மக்களை உசுப்பேத்திவிடுவார்கள். நாங்களும் தேவையோ தேவையில்லையோ மாய்ந்து, மாய்ந்து எல்லாத்தையும் வாங்கி குவிப்போம். பிறகு ஒரே இரவில் பொருளாதாரம் சரிந்துவிட்டது, இனிமேல் செலவை கட்டுப்படுத்துங்கள், சேமியுங்கள் என்று அடிக்கடி தொலைக்காட்சியில் யாராவது அறிவுரை சொல்கிறார்கள்.

சேர்ந்தே இருப்பது என்று திருவிளையாடல் தருமியின் பாணியில் சொன்னால் அது தற்காலத்தில் அரசியல், பொருளியல் இரண்டும் தான். அரசியல் பொருளாதார கொள்கைகள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் அதன் விளைவால் உண்டாகும் மாற்றங்கள் அதன் தாக்கங்களை யாரையும் விட்டுவைப்பதில்லை. பொருளாதார சுனாமி தாக்கினாலும் பொதிமாடுகளாய் அதன் சுமையை தாங்குவோம். ஏன்னா, நாங்க, எல்லா நாட்டின் பொதுசனமும் ரொம்ப நல்லவங்க. அரசியல், பொருளியல் இவை  இரண்டையும் பிரித்துப்போட்டால் கொஞ்சம் மீட்சி கிட்டுமோ! எப்படி பிரிப்பது?

16 கருத்துகள்:

தவறு சொன்னது…

சட்டை நல்லா இருந்தாலே என்ன பிராண்ட் சட்டை என்று கேட்டுவிட்டு அவர்கள் நினைக்கும் பிராண்ட் இல்லாவிடில் சட்டை குறை செல்பவர்கள் நிறைய..

எட்டு நூறு வாங்கும் ஒரு சட்டையை ஒரு பிராண்ட் நேம் வைத்து எட்டாயிரத்துக்கு வாங்கினால் மதிக்கும் குணம் மனிதர்கள் உள்ள உலகம் இது.

காசு தான் பர்ஸ்ட் என்று ஆகிவிட்டது.

அன்பு பாசம் சுற்றம் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நேர்த்தியான அலசல், இதற்கான விடை ஓஷோவிடம் இருக்கிறது. அவரிடம் முட்டாள்கள் பிறக்கிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி முன் வைக்கபட்டபோது ஓஷோ சொன்னார். குழந்தைகள் யாருமே முட்டாள்களாகப் பிறப்பதில்லை, ஆனால் அவர்கள் வளரும்போது முட்டாள்களாக வளர்க்கப்படுகிறார்கள், அதனால்தான் ஒருவன் மன்னனாகவோ, ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இருக்க அவனுக்கு சேவை செய்ய சாதாரண கூலித் தொழிலாளிகளும், படை வீரர்களும், போலிஸ் காரர்களும், மற்றவரும் இருக்கின்றனர் என்றார்.

யு.ஜி .கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்ன "make money, be happy" மட்டுமே இக்கால உலகிற்கு மிகவும் பொருத்தமானது...

Rathi சொன்னது…

தவறு,

உங்களிடமிருந்து இதைவிட கூர்மையான விமர்சனத்தை எதிர்பார்த்தேன். பிராண்ட் நேம், சட்டை விலை என்பதோடு முடித்துவிட்டீர்கள் ஆனாலும், உங்கள் கருத்துக்கு நன்றி.


செந்தில்,

நன்றி. தற்காலத்தில் எங்களை அடிமுட்டாள்களாக அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறது என்பது தான் எரிச்சலான விடயம். Book Case இல் இடமில்லாமல் நான் வைத்திருந்த ஓஷோவின் Book Collection ஸ்டோர் ரூமில் தூங்கிக்கொண்டிருக்கிறது. உங்கள் பதிலைப் பார்த்தவுடன் அதை தேடியெடுத்துப் படிக்கத்தூண்டுகிறது.

ஜோதிஜி சொன்னது…

பணம் செய்யும் எந்திரம்
பணம் துப்பும எந்திரம்
பணமே என் மந்திரம்

இது போன்ற பலவிதமாக யோசித்துக் கொண்டே செல்ல சொல்ல நிறைய இருக்கிறது. செந்தில் சொன்னது போல தலைவர் நல்லக்கண்ணு சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மீண்டும் வருகின்றேன்.

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

தேவை, விருப்பம் என்பதெல்லாம் தாண்டி, ஒரு பொருளுக்கு சொந்தக்காரனாய் அல்லது சொந்தக்காரியாய் இருப்பது கெளரவம் என்கிற அளவுக்கு சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.//

பொருள் சார் வாழ்க்கையில் அன்பு, உறவு, சுற்றம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் ஆகிப்போகிறது.//


மிக தெளிவான பார்வை ரதி..

இப்பதான் பலரை படிக்க ஆரம்பித்துள்ளேன்..

Rathi சொன்னது…

மீண்டும் வாங்க ஜோதிஜி.

பயணமும் எண்ணங்களும்,

நன்றி. தொடர்ந்து படியுங்கள். எண்ணங்களைப் பகிருங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்லா அலசி இருக்கீங்க.. குழந்தைங்களை அதிகமாக குறிவைத்து தாக்குது விளம்பரங்கள். எங்கவீட்டில் பெரியகார் என்கிற ஒப்பீடுகளை சின்னவயசிலேயே வளர்த்துவிடராங்க.. கடையிலோ விளம்பரத்திலோ வருகின்ற எல்லாமே வாங்கவேண்டியதில்லை..அல்லது வாங்க இயலாது என்பதை அடிக்கடி அறிவுறுத்தவேண்டி இருக்கிறது. வளர்க்கின்ற கலையிலேயே..இது மிகச்சிரமமான ஒரு காரியம்:)

சிறுவயதிலேயே சூப்பர் மார்க்கெட் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டால் பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்க எண்ணம் தோன்றிவிடுகிறது. எங்கள் வீட்டில் பிஸ்கட் வாங்க மட்டும் சூப்பர் மார்க்கெட் செல்கிறோம். அப்போது மார்க்கெட்டில் புதியது ஆனால் தேவைப்படலாம் முயற்சித்துப்பார்க்கலம் என்பது மட்டும் அப்போது வாங்கலாம். மற்றபடி இன்றும் அண்ணாச்சி கடைக்கு த்தான் ஆதரவு..தேவையைச் சொல்லி வாங்குவதில் இருக்கும் வசதியை மறக்கக்கூடாது..:)

Rathi சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,

உணர்ந்து எழுதியிருக்கீங்க. இந்தியாவில் எப்படியோ தெரியாது. இங்கு கனடாவில் பல குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் அதன் விளம்பரங்கள் அவர்களின் மனோநிலைக்கும் அவர்களை எப்படி அதை வாங்க வைக்கவேண்டும் என்று பார்த்துப் பார்த்து விளம்பரம் செய்வார்கள். Wii, XBOX, etc. சில நேரம் தலை சுத்தும்.

எனக்கு கூட ஓர் விருப்பம் உண்டு. குழந்தைகளின் விளையாட்டுப்பொருட்கள் அது தொடர்பான விளம்பரங்கள், அரச கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓர் பதிவு போடவேண்டும் என்று. நீங்கள் தொடங்குங்கள் என் போன்றவர்கள் தொடருவோம்.

Thekkikattan|தெகா சொன்னது…

நல்லதொரு வாசிப்பு! மேலைய நாடுகளில் வசிக்கும் பொழுது இந்த ஒரு மனநிலை வாய்க்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட பற்றறுக்கும் நிலைக்கு மிக அருகமையே வந்துவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் நீங்கள் கூறிய அந்த கறுப்பு வெள்ளியன்று க்ரீடிட் கார்ட் இருக்கிறது தேய்த்துக் கொள்வோம் என்ற மனநிலையில் அப்படியேனும் வாங்கிக் கொள்ளும் சக்தி இருந்தும் போகாமல் மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதில்தான் சூட்சூமம் உள்ளது. நான் இத்தனை வருடம் இங்கே இருந்த போதிலும் ஒரு முறை கூட அந்த நாளில் வெளிக்கிளம்பியதே இல்லை...

மேலும் இந்த ப்ராண்டட் பொருட்கள் பொருத்து எனக்கு ஒரு ஈகோ இருக்கிறது அவன் ப்ராண்டை மார்க்கெட் பண்ண நான் என்ன சுவரொட்டியா, என் பணத்தையும் கொடுத்து அவன் ப்ராண்ட் ஷர்ட் போட்டாதான் என்னை மதிப்பான் என்றால் அது போன்ற shallow minded மக்களின் பார்வையில் படாமல் இருக்கக் கூடிய சந்தர்ப்பம் எப்போதும் :) எனக்கு கிடைக்கட்டுமென்று ‘வேண்டிக்’கொள்ள வேண்டியதுதான்.

ஹ்ம்ம்ம்... புறவயமான ஈர்ப்பில் நம்மை தொலைத்துக் கொள்வதே அதிகமாக நடந்தேறுகிறது, மீட்டெடுப்பதில்தான் முழு வாழ்க்கையுமே ஓடி முடிகிறது இன்றைய நிலையில் என்று நினைக்கிறேன். கட்டுரைக்கு நன்றி!

ஹேமா சொன்னது…

ரதி...கனடாவில இருந்தாலும் அரசியல் அரசியல்தான் என்கிறீர்கள்.உண்மையைச் சொன்னால் நான் இந்தளவிற்கு யோசிக்கிறதில்லை.என்னதான் பொருளாதாரப் பிரச்சனை இருந்தாலும் தங்களின் விருப்பங்களையும் தேவைகளையும் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்தென்றாலும் தங்களின் தரத்தை அதே இடத்தில் நிறுத்திக்கொண்டிருப்பார்கள் நம்ம மக்கள்.பொருளாதரம் சுனாமியாய் இருந்தாலென்ன அரசியல்ல யார் குந்தினா என்ன !

விந்தைமனிதன் சொன்னது…

மிக அற்புதமான பதிவு. பவர்கட்டாகிவிட்டதால் மீண்டும் வருவேன்... கமெண்ட்ட!

ஜோதிஜி சொன்னது…

இங்கு உள்ள பல்பொருள் அங்காடிக்கு பலமுறை குழந்தைகளை கூட்டிக் கொண்டு செல்வேன். மனைவியை பொறுத்தவரையிலும் இரண்டு லாபங்கள். இது போன்ற பெரிய கடைகளுக்கு உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வருவது ஒரு சுகம். ஒரு சுற்றுலா அனுபவித்த சந்தோஷம். குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். எல்லாவிதமான விதவிதமான அனுபவங்கள். ஆனால் நான் இவர்களுடன் இருந்தாலும் வேறொன்றை கவனித்துக் கொண்டே இவர்களுடன் ஒட்டாமல் தனியே ஒரு இடத்தில் நின்று கொள்வேன்.

ஜோதிஜி சொன்னது…

வாங்க வரும் மனிதர்களையையும், வாங்கிக் கொண்டுருக்கும் மனிதர்களையையும் கூர்ந்து கவனிக்கும் போது அத்யாவ்ஸ்ய தேவைகளுக்கு வாங்குபவர்களாக எனக்குத் தெரியவில்லை. தங்களுடைய ஆடம்பர தேவைகளுக்கு அள்ளிக் குவித்துக் கொண்டுருப்பவர்களாகவே தெரிகின்றார்கள். நடுத்தர வர்க்கம், இயல்பான சம்பளம் வாங்குபவர்கள் அத்தனை பேர்களும் ஒரு உணவகத்தில் அமர்ந்து 300 அல்லது 400 ரூபாய் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லும் போது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது. எவரும் தங்களுடைய வருமானத்திற்கு உரிய வாழ்க்கை வாழ விரும்பவில்லை என்பதை மட்டும் ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் உறுதியாக உணர்ந்துள்ளேன். இதே போல் கேக் ஷாப்பில் நிற்கும் நவநாகரிக பெணக்ள 40 ரூபாய் மதிப்புள்ள ஒரு திண்பண்டத்தை 70 ரூபாய் கொடுத்து வாங்கி கும்பலாக ரசித்து தின்பது போன்ற பல ஆச்சரிய சம்பவங்களை கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

ஜோதிஜி சொன்னது…

தலைவர் நல்லகண்ணு சொன்னது

ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய கடை வீதிக்குள் ஒருவர் செல்வாராம். உள்ளே உள்ள அத்தனை பொருட்களையும் பார்த்து விட்டு திரும்ப எதுவும் வாங்காமல் வந்து விடுவாராம். வீட்டில் வந்து மனைவியிடம் சொன்னது. நமக்குச் தேவையான வாழ்க்கைக்கு பிரயோஜனப்படக்கூடிய அத்தனை விசயங்களையும் நாம் அனுபவித்துக் கொண்டுருக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையில்லாத எத்தனை விசயங்கள் கடையில் இருக்கிறது. அதில் பணத்தை கொண்டு போய் கொட்ட ஏன் இத்தனை மக்கள் முண்டியடித்துக் கொண்டு தங்களது காசை விரயமாக்குகிறார்கள் என்று ஆதங்கப்பட்டாராம்.

நாகரிக வளர்ச்சி என்பது முட்டாள் தனத்தை தான் அதிகப்படுத்தி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தனதுதேவைகளை அளவீடத் தெரியாதவர்களால் ஒரு சமூக மாற்றம் எங்ஙனம் நிகழும்?

Rathi சொன்னது…

தெகா,

உங்கள் ஆழமான நேர்த்தியான கருத்து மேலும், மேலும் சிந்திக்கத்தூண்டுகிறது. எங்களுக்கு இங்கே கனடாவில் Boxing Day Sale தான் பெரிய கோலாகலம். நானும் இதுவரை ஒருநாளும் அப்படி போனதும் கிடையாது. எந்தப்பொருளும் வாங்கியதும் கிடையாது.

சமூக மாற்றம் என்பது இரண்டாம் பட்சம். தனிமனிதன் தனக்குள் கொண்டுவரும் மாற்றம் தான் சமுதாயத்தில் இயற்கையாக, தவிர்க்க முடியாததாக வரும் மாற்றம் என ஜே. கிருஷ்ணமூத்தியின் கருத்துதான் மனதில் ஓடுகிறது.

ஹேமா,

தேவைகளை நிறைவு செய்வதிலேயே நாங்கள் குறியாய் இருக்கப்போய் தான் அப்பப்போ பொருளாதார சுனாமிகள் எங்களை சுழற்றியடிக்கிறது. நீங்களும் தெகா போல் என்னை சிந்திக்கத்தூண்டுகிறீர்கள், அனால் மறுவளத்தில்.

ராஜாராமன்,

நீங்கள் மறுபடியும் "கமெண்ட்ட", மீண்டும் மின்சாரம் கிடைக்கட்டும் விரைவில்.

ஜோதிஜி,

நடைமுறை பொருளியல் வாழ்வை உதாரணத்தோடு உங்கள் "கதை சொல்லி" பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்.

ஜோதிஜி சொன்னது…

முதல் வெற்றிக்கு வாழ்த்துகள்.