நவம்பர் 27, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் 3 - Shopaholic & Material Culture

தேவைகள், விருப்பங்கள் இரண்டுக்கும் இடையே எங்கே கோடு போடுவது என்பது சில சமயங்களில் கடினமாகவே இருப்பதும் உண்டு. தேவை, விருப்பம் அல்லது இரண்டின் காரணமாகவோ அல்லது வேறு வகையில் பார்த்தால் சமூக நிர்ப்பந்தங்கள் இவற்றின் காரணமாகவோ விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையை அதன் போக்கில் நகர்த்தவும் நேரிடுகிறது. இந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கையை இழுத்துப்பிடித்து நகர்த்திக்கொண்டிருக்கும் போது, தனிமனித விருப்பு வெறுப்புகளை ஊடங்கங்கள் தங்கள் பங்கிற்கு உலகமயமாக்கலுக்கேற்றவாறு மூளைச்சலவை செய்து மேலும்  நுகர்வுக்கலாச்சாரத்திற்கு எங்களை தயார்ப்படுத்துகிறது.

மக்களின் நலன்களையோ அல்லது நாட்டின் பொருளாதார நலன் சார் தேசியத்தையோ   அரசாங்கங்களும் அதன் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் வாதிகளோ அவர்களின் கட்சிகளோ முன்னிலைப்படுத்துவதில்லை. தேர்தல் வரும் சமயங்களில் ஆளும் கட்சி எதிர் கட்சியையோ அல்லது மறுவளத்திலோ குற்றஞ்சொல்லி விமர்சித்து; நாங்கள் தான் சிறந்த ஆட்சியாளர்கள். எங்கள் ஆட்சியில் தான் தேனும் பாலும் வழிந்தோடும் என்று வாக்கு வங்கியில் வாக்குகளை குவிப்பது தான் அவர்களின் கட்சி தேர்தல் அறிவிப்பு/கட்சி கோட்பாட்டு அடிப்படை, "Election Platform".

நாங்களும் யோசிப்போம் இருக்கிறது இரண்டே இரண்டு கட்சி. யார் அல்லது எந்தக்கட்சி அரசியலின் பெயரால் செய்த தகிடுதத்தங்கள் குறைவாய் இருக்கிறது என்று அதிகம் வித்தியாசமில்லவிட்டாலும்; எங்களுக்கெல்லாம் எப்போதும் மறுக்கப்படாததாய் இருக்கும் ஒரேயொரு ஜனநாயக உரிமையான தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமாலும்; அந்த ஒரு உரிமையாவது இருக்கிறதே என்று நம்பி யாரோ ஒருவருக்கு வாக்களிப்போம்.

அண்மையில் தங்களுக்கு ஓர் விடிவு வராதா என்று ஹெயிட்டியில் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களை செய்திகளில் பார்த்த போது கசப்பாய் உணர்ந்தேன். அரசியலில் எவ்வளவு தான் அவநம்பிக்கை என்றாலும்,  எங்களுக்குரிய நாங்கள் விரும்பும் மாற்றங்களை கொண்டுவர தேர்தல்கள் தான் ஒரே வழி என்று அவலப்படுபவர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது.

தேர்தலும் முடிந்தாயிற்று. ஆட்சியும் மாறிவிட்டது. சரி, அடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கொஞ்சமேனும் அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்று செய்திகளை பொறுப்பாக பார்க்கவும், கேட்கவும் செய்வோம். இவர்களின் வாக்குறுதிகளை நம்பி எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று தெரியும். பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பின்னாளில் மறந்துவிடுவதால் அவர்களுக்கு "Selective Amnesia" என்று கிண்டலாய் சொல்வார்கள். இருந்தாலும் ஞாபகமறதியாய் எந்தவாக்குறுதியையாவது காப்பாற்றிவிட்டால் என்கிற நப்பாசை!!

பொறுத்துப் பார்த்து, சரி, அது அவ்வளவு தான் என்று நாங்களும் பிறகு சனல் மாற்றி சினிமாவையோ, ஏதாவது வினோத விளையாட்டு விளையாடி ஓர் வீடு, கார் அல்லது ஒரு சில லட்சங்களை பரிசாக பெறுபவர்களை எங்கள் வீட்டு சோபாவில் இருந்து, "GO, GO" என்று உற்சாகப்படுத்திவிட்டு; நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் உடையைப்போலவே வார இறுதியில் வரும் விருந்துக்கு உடுக்க வேண்டும் என்ற தலையாய கவலையோடு படுக்கைக்கு செல்வோம்.

இப்படி அரசியல் ஆட்சியும் தொலைக்காட்சியுமே எங்கள் வாழக்கையின் அடுத்த நிகழ்வுகளை, பொருளாதார வாழ்வை தீர்மானிக்கும் அளவிற்கு பழகிவிட்டோமா அல்லது பழக்கப்படுத்தப்பட்டோமா! விதம் விதமான விற்பனைப் பொருட்களும் வியாபார, விளம்பர உத்திகளும் அவ்வப்போது காந்தமாய் இழுக்கும். தேவை, விருப்பம் என்பதெல்லாம் தாண்டி, ஒரு பொருளுக்கு சொந்தக்காரனாய் அல்லது சொந்தக்காரியாய்   இருப்பது கெளரவம் என்கிற அளவுக்கு சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.

இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இருந்தாலும் ஓர் சிறிய உதாரணம், குறிப்பிட்ட ஓர் காரையோ அல்லது Brand Name பொருட்களையோ வைத்திருக்கும் ஆண்களை/பெண்களை தான் ஒருவரையொருவர் விரும்பவர் என்கிற கருத்து திணிக்கப்படுவது. சாதாரண அதிகம் பிரபலம் இல்லாத ஓர் நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிப்பவர் பெரும்பாலும் "ஏழை அல்லது மத்தியதர வர்க்கம்" என்ற முடிவுக்கெல்லாம் வரும் படி அபத்தமாய் சிந்திக்க வைப்பது. இப்படி சமூகத்தில் ஒருவரின் உடமை, வசதி, வாழ்க்கை, செல்வாக்கு என்பவற்றை வைத்தே ஓர் தனிமனிதனை எடைபோடப் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த சிந்தனைகளை எங்களிடையே வளர்த்தெடுத்து, வியாபாராத்தையும் வருமானத்தையும் பெரிய பெரிய நிறுவனங்கள் ஜோராக பெருக்கிக்கொள்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவில் "Black Friday" என்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க(!!) முண்டியடித்த கூட்டம் இன்னோர் ஆச்சர்யம் கலந்த எரிச்சல். அமெரிக்கர்களே ஆனாலும் தள்ளுப்பட்டு, அவதிப்பட்டு தள்ளுபடியில் சில அற்ப பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மனிதர்கள் தான். அடித்துப்பிடித்து அதை வாங்கிவிட்டால் எதையோ சாதித்த திருப்தி அவர்கள் கண்கள் பளபளக்கும் பெருமிதப்பேச்சில் தெரிகிறது. அமெரிக்காவில் பொருளாதார சுனாமிக்குப் பின்னும் இப்படி "Shopping" செய்ய எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்டபோது, வந்த பதில் இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட்.

வழக்கம் போல் நிகழ்ச்சியில் வந்த ஆய்வாளர் சொன்னது, இப்படி பொருட்கள் சார்ந்தே மக்கள் சிந்திப்பதால் அவர்கள் சமூகம் சார்ந்த தொடர்புகளை இழக்கிறார்கள், "Loosing social connections" என்பதுதான். பொருள் சார் வாழ்க்கையில் அன்பு, உறவு, சுற்றம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் ஆகிப்போகிறது. பணம் செய்யும் இயந்திரமாகவே ஒருவரையொருவர் சில உறவுகள் பார்க்க நேரிடுகிறது. உறவுகள் சில பொழுதுகளில் பிளவுகளாய், பிரிவாய் முடிந்துபோகிறது. ஏதோ ஒரு விதத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இப்போ, "Antidepressants" (மனச்சோர்வை குறைக்கும் மாத்திரை) எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்வதாக சொன்னார். இன்னோர் விடயம் பலருக்கு ஞாபகம் இருக்கலாம். அமெரிக்காவின் 9/11 இற்குப் பிறகு ஜோர்ஜ் புஷ் அமெரிக்கர்ளுக்கு ஆறுதலளிக்க சொன்ன இன்னோர் விடயம், "GO SHOPPING" ("I encourage you all to go shopping more") என்பதுதானாம்.

சிலபேர் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது ஷாப்பிங் போய் எதையெதையோ எல்லாம் வாங்கிவருவார்கள். பிறகு மனம் தெளிந்த பின் யோசிப்பார்கள், இதை ஏன் வாங்கினேன், இது தேவைதானா என்பதாய். சிலர் கொஞ்சம், கொஞ்சமாய் "Shopaholic" ஆகிவிடுவார்கள்.  இதெல்லாம் ஏதோவொரு பிரச்னையை சமாளிக்க எங்களை அறியாமல் உருவாகும் பிழையான வழிமுறைகள், வடிகால்கள், "Maladaptive Behavior". அதனால் அடிக்கடி ஏன் எதற்கு இப்படி செய்கிறோம் என்று எங்களை நாங்களே கேள்வி கேட்டுக்கொள்வது நன்று.

சமகாலத்தில் இந்த "Material Culture" எனப்படும் பொருளாதார வசதியுடன் கூடிய தனிப் பொருட் கூறுகள் (ஆடை, சிகையலங்காரம் முதற்கொண்டு எந்த தெருவில் வசிக்கிறோம் என்பதுவரை) சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கத்தவறவில்லை. வசதி படைத்தவர்கள், மத்தியதர வர்க்கம், ஏழைகள் அல்லது பராரிகள் என்றெல்லாம் மனிதர்களும் அவர் தம் வசதிகளும் வகைப்படுத்தப்படுகின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதன் இடைவெளியை வேறு அதிகமாக்குகிறது. இருப்பதை தக்கவைத்துக்கொள்ள போராடுவது மட்டுமல்ல, சமூக அந்தஸ்துகளில் எங்களை உயர்த்திக்கொள்ள படாத பாடுபடுகிறோம். வாயில் நுரை தள்ள குதிரைகளாய் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று வெறுத்துப் போகிறவர்களும் உண்டு.

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வழுவன்று எனச்சொல்வார்கள். எந்தவொரு மாற்றமும் ஆரோக்கியமானதாய் இருந்தால் நல்லது. ஆனால், நாங்களோ பொருளியல், வாழ்வியல் மாற்றங்கள் என்கிற பெயரில் எத்தனையோ அபத்தங்களை வரவேற்று புதுமையென திளைத்து, களைத்து, சலித்துப்போகிறோம். பிறகு, இன்னுமின்னும் புதுமையை தேடி அலைவோம். அவரவர் திறமைக்கும், வசதிக்கும் ஏற்றாற்போல் அவற்றை நியாயப்படுத்தவும், மறுக்கவும் செய்வோம்.

கொஞ்சம் யோசித்தால் அரசுகளின் பொருளாதார கொள்கைகளே இப்படி பொதுசனத்தின் குரல்வளைகளை நெரிக்கிறதோ என்றும் நியாயபூர்வமாக சிந்திக்கவைக்கிறது. யார் யாருக்கோ அதிகாரம், சலுகைகள் கொடுத்து பொருளாதாரத்தை வளர்க்காவிட்டாலும், அதை படுகுழியில் தள்ளாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக்கொள்வோம். Shop, shop, shop என்று எல்லாவழிகளிலும் மக்களை உசுப்பேத்திவிடுவார்கள். நாங்களும் தேவையோ தேவையில்லையோ மாய்ந்து, மாய்ந்து எல்லாத்தையும் வாங்கி குவிப்போம். பிறகு ஒரே இரவில் பொருளாதாரம் சரிந்துவிட்டது, இனிமேல் செலவை கட்டுப்படுத்துங்கள், சேமியுங்கள் என்று அடிக்கடி தொலைக்காட்சியில் யாராவது அறிவுரை சொல்கிறார்கள்.

சேர்ந்தே இருப்பது என்று திருவிளையாடல் தருமியின் பாணியில் சொன்னால் அது தற்காலத்தில் அரசியல், பொருளியல் இரண்டும் தான். அரசியல் பொருளாதார கொள்கைகள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் அதன் விளைவால் உண்டாகும் மாற்றங்கள் அதன் தாக்கங்களை யாரையும் விட்டுவைப்பதில்லை. பொருளாதார சுனாமி தாக்கினாலும் பொதிமாடுகளாய் அதன் சுமையை தாங்குவோம். ஏன்னா, நாங்க, எல்லா நாட்டின் பொதுசனமும் ரொம்ப நல்லவங்க. அரசியல், பொருளியல் இவை  இரண்டையும் பிரித்துப்போட்டால் கொஞ்சம் மீட்சி கிட்டுமோ! எப்படி பிரிப்பது?

நவம்பர் 17, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் - 2 Bread Winners and the Shrinking Paycheque

பொருளாதார வாழ்வு பற்றிய புரிதலுக்கும் தற்கால மனித தேவைகளுக்குமிடையே உள்ள இடைவெளியை எதைக்கொண்டு நிரவுவது என்று நினைப்பதுண்டு. பல சமயங்களில் இது தேவையா (Need) அல்லது விருப்பமா (Want) என்கிற குழப்பங்கள் வேறு. இது இரண்டுக்கும் இடையே எங்களை சமநிலைப்படுத்த முயற்சி செய்து வெற்றி, தோல்வியை கண்டவர்கள் பலர் இருப்போம். சில சமயங்களில் அத்தியாவசிய தேவை கூட அனாவசியம் போல் தோன்றும். ஒரு சில பொழுதுகளில் தேவைக்கு மீறிய விருப்பங்களுக்கு எங்களை பலியாக்கிவிட்டோமோ என்றும் நினைப்பதுண்டு. இதையெல்லாம் நிர்ணயிக்கும் காரணிகள் எது அல்லது எவையென்று யோசித்தால் பதில் ஒன்றிலொன்று தொக்கிநிற்கிறது. தேடலின் முடிவில் எங்கோ தூரத்தில் கண்ணுக்குத்தெரியாத புள்ளியாய் அற்பபதராய் தொலைவது போன்ற உணர்வு தான் மிஞ்சுகிறது. ஆனாலும், தனிமனித பொருளாதார தேவைகள் மற்றும் வருமானம், ஒரு நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் உலகமயமாக்கல் என்று மேலோட்டமாக சுருக்கமாக பதில் சொல்லலாம்.

பொருளாதார சுனாமிக்குப்பின் பொருளாதாரம் இத்தனை வீதத்தால் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று ஓர் நிதியமைச்சர் media stunt அடிப்பதிலோ அல்லது இங்கிலாந்தின் எதிர்கால இளவரசரின் நிச்யதார்த்தமோ வறுமைக்கோட்டை அழிக்கப்போவதுமில்லை; இனப்பிரச்சனைகளை தீர்க்கப்போவதுமில்லை. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை அதிலுள்ள சிக்கல்களை யதார்த்தபூர்வமாக சிந்திக்கலாம் என்று தோன்றுகிறது. வேலை அல்லது தொழில் அதன் மூலம் வரும் வருமானம் தான் வாழ்க்கை தரத்தையும் மனித வாழ்வின் நியாயமான சந்தோசங்களையும் நிச்சயிக்கிறது, நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும். தற்கால தேவைகளை தீர்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு குடும்ப வருமானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே கனடாவில் நான் கேட்ட ஓர் சொற்றொடர், "Shrinking Paycheque". வருமானத்தில் வரி, ஓய்வூதியம் அது இதுவென்று எதுக்கெல்லாமோ கழித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டவும் "சம்பளம்" என்று கொஞ்சம் தருகிறார்கள். Bread winners and the Shrinking Paycheque என்று எனக்குள் நானே தத்துவார்த்தமாக சிரித்துக்கொள்வதுமுண்டு, வேதனைப்படுவதுமுண்டு.

சுருங்கிச்செல்லும் வருமானத்தையும் தேவைகளையும் சமப்படுத்த இருக்கவே இருக்கிறது "கடன் அட்டை" (Credit Card) என்று தனியார் வங்கிகள் வரிசையில் நின்று வாரி வாரி (கடன் அட்டையைத்தான்) வள்ளலாய் வழங்குகிறார்கள். இவர்களிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்கமுடியாவிட்டால், "கடன் பட்டார் நெஞ்சம் போல்... " என்ற sentiment எல்லாம் எடுபடாது. அந்த கைங்கரியத்தை மட்டுமா செய்கிறார்கள்! ஏற்கனவே அரச ஒய்வூதியத்திட்டத்திற்கு வருமானத்தில் பிடித்துக்கொள்கிறார்கள். பிறகு இந்த தனியார் வங்கிகள் உங்கள் ஓய்வுக்காலத்தை சந்தோசமாக கழியுங்கள், அதற்காய் இப்போதே சேமியுங்கள் என்று என்னைப்போன்றவர்கள் வங்கிப்பக்கம் போகவே பயப்படுமளவிற்கு பிடித்துவைத்து அறிவுரை சொல்கிறார்கள். ஒருவர் தன் வாழ்வாதாரத்திற்காய் தான் அதையெல்லாம் சொல்கிறார் என்று நினைத்தாலும் சில சமயங்களில் கோபமாய் ஏதாவது சொல்லிவிடுவேனோ என்கிற பயமும் வருகிறது. இருந்தாலும் சில பேருக்கு சொல்லியிருக்கிறேன், "என் சொந்த எதிர்காலம் பற்றிய அக்கறை நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை விட எனக்கு அதிகம் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று.

".... do not rock the boat. Do not ask difficult questions...' இதைத்தானா!! Charlie Veitch சொல்கிறார். இந்த வீடியோ சொல்லும் செய்தியை ஆர்வமிருப்பவர்கள் கவனியுங்கள்.

தொடரும்....நவம்பர் 08, 2010

ஈழத்தமிழர்களும்.... நல்லிணக்கங்களும்- என் புரிதல்கள்.

ழம் என்பது நிஜமாக முடியாக் கனவு போல் ஆகிவிட்டது என்கிற சித்தரிப்புகள், திட்டமிடப்பட்ட வெறுப்பூட்டல்களுக்கு மத்தியில் எது இதை எழுதத்தூண்டுகிறது!! ஈழம் என்கிற உணர்வா அல்லது கடப்பாடா என்று யோசித்தால், இரண்டுமே என்றுதான் பதில் வருகிறது. தனி ஈழம் என்கிற கருத்தியல் அதுவாய் உருவாகவில்லை. அடிப்படையில் எங்களுக்குரிய தீர்வு அதுவாகத்தான் இருக்கும், இருக்கவேண்டும் என்பது தமிழர்கள் விடயத்தில் இலங்கையின் இனப்பாகுபாட்டு அரசியல், கல்வி, பொருளாதார கொள்கைகளால் இயல்பாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது


எந்தவொரு இன விடுதலைப் போருக்கும் சளைத்ததல்ல ஈழவிடுதலைப்போராட்டம். இனவிடுதலைக்கான போராட்ட வரலாற்றின் பக்கங்களில் தனக்கென்றோர் இடத்தை, யார் மறுத்தாலும், அடைந்துதான் இருக்கிறது. அது தனக்குரிய இயல்புகளோடும், வரையறைகளோடும், துரோகங்களோடும் தற்காலிகமாய் பின்தள்ளப்பட்டுள்ளது. ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்காலத்தில் மீண்டும் உயிர் பெறுமா இல்லையா என்பதை இலங்கை மற்றும் பூகோள அரசியல் சூழ்நிலைகள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஈழம் பற்றிய தற்கால செய்திகள், கருத்து திணிப்புகள், அறிவுஜீவிகள் சிலரின் எதிர்வுகூறல்கள் என் போன்றவர்களை கலக்கமடையவும் கோபமடையச் செய்யாமலும் இல்லை. சில கருத்துருவாக்கங்கள் ஓர் உளவியல் சிதைவை உருவாக்கும் நோக்குடனும், சில சமயங்களில் அது இயல்பாகவும் அமைந்துவிடுகின்றன. சமீபகால செய்திகளான யாழ் நூல்நிலையத்திற்குள் தெற்கிலிருந்து சிறுகுழுவாய் வந்து அத்துமீறி நுழைந்த சிங்களவர்கள், வடக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களர்களின் குடியேற்றம் என்று வெந்த புண்ணை கீறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு நடுவே மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்துடைப்பு விசாரணைக்குழு. இவையெல்லாம் இலங்கையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை, மீள் இணக்கத்தை உருவாக்குமா!


யாழ்நூலகத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் மருத்துவத்துறை சார்ந்த கருத்தரங்கு நடக்கிறது அதனால் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு அனுமதி இல்லை என்று தெளிவாக எழுதப்பட்ட போதிலும், அத்துமீறி நுழைத்து தங்கள் மேலாதிக்க மனோநிலையை நிரூபித்திருக்கிறார்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர். தமிழனை யார் வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம், துன்புறுத்தலாம், தமிழன் பூமியை சூறையாடலாம் என்கிற நோய்கொண்ட கூட்டுமனோநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்களா? எது அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டியது?அப்படியானால் குற்றம் யாருடையது?  கொஞ்சம் யோசித்தால், இங்கே எய்தவன் வேறு, அம்பு வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது திண்ணமாகிறதுஅரசன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியோ!! மேற்சொன்னது ஓர் சிறிய உதாரணம் மட்டுமே. ஈழத்தமிழர்கள் பற்றிய சரியான புரிதலோ அல்லது எங்களின் உண்மை நிலைகள் பற்றிய செய்திகளோ பெரும்பான்மை சமூகத்தினருக்கு போய் சேருவதில்லை என்பதும் ஓர் காரணம். சீனா எப்படி தன் நாட்டில் கூகிளை வடிகட்டுகிறதோ, அதேபோல் ஈழம் பற்றிய செய்திகளும் இலங்கையில் இணையம் மூலமும் வடிகட்டப்படுகிறது. இன்றும் கூட ஊடகத்துறை அரச கட்டுப்பாட்டில் இருப்பதாக நிறையவே குற்றச்சாட்டுகள்


தமிழர் பூர்வீக பூமியில் பெரும்பான்மை அரசியல் இனவிகிதாசாரத்தை அதிகரிக்கும் இன்னோர் முயற்சி திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள். ஆண்டாண்டு காலமாய் கிழக்கில் சத்தமின்றி அரங்கேறிக்கொண்டிருந்த இந்த திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் இப்போது வடக்கில் ஆரவாரத்தோடு நடந்தேறுகிறது, அவ்வளவே. அண்மையில் செய்திகளில் படித்தது, சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இப்போது தாங்களும் உள்நாட்டில் இடம்பெயந்தோர் (Internally Displaced People-IDPs) என்று யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறுகிறார்கள் என்பது தான். ஆனால், இவர்கள் பற்றிய  யதார்த்தம் ஏனோ இயல்பின்றி இருக்கிறது. அவர்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து போய், இப்போது மீண்டும் திரும்பி வருபவர்களேயானாலும் அவர்களின் வருகையும், குடியேற்றமும் ஏன் இயல்பாயில்லை. சீனாவின் உதவியுடன் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. சிங்கள ராணுவம் அவர்களுக்கு பாதுகாப்பு. திடீரென்று வேரோடு பெயர்ந்து வந்து புதியதோர் வாழ்விடத்தில் எந்த வாழ்வாதாரத்தை நம்பி இவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்? இலங்கையின் ஊடகத்துறை பேச்சாளர் சொல்வது, அந்த நாட்டின் குடிமகன் ஒருவர் தான் விரும்பியபடி நாட்டின் எந்தப்பகுதியிலும் வாழலாமாம். இது தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டது என்று நம்பினால், then, we all live in Utopian dream. 


ஒருகாலத்தில் உயர் பாதுகாப்பு வலயம்- High Security Zone (HSZ) என்று ராணுவத்தால், குறிப்பாக வடக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா கூட முன்பு ஓர் அறிக்கை விட்டிருந்தது. வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான புனர்வாழ்வு, மீள்குடியமர்த்தல் என்பன சர்வதேச நியமங்களுக்கு அமைவாய் இல்லை என்று International Crisis Group (ICG) தன் அறிக்கையில் சுட்டிக்காடியுள்ளது. தமிழர்கள் வீதியோரங்களில் கூடாரங்களில் தான் குடித்தனம் செய்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்வதை விட இப்படி ஓர் அமைப்பு சொன்னால் வலு அதிகம் போலும். தமிழர்களுக்குரிய நியாயமான தேவைகளை கூட செய்துகொடுக்க முடியாத ஓர் அரசுக்கு அவசர, அவசரமாய் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்யவேண்டிய தேவை அதிகமாய் இருக்கிறது


இவற்றையெல்லாம் விட, சமீபத்திய சேர்க்கை "படிப்பினைகள் மற்றும் மீள் இணக்க ஆணைக்குழு" (Lessons Learnt and Reconciliation Commission), போற்குற்றங்களிலிருந்து தன்னை தப்பவைக்கும், அமெரிக்காவின் ஆசிர்வாதத்தோடு இலங்கை அரசு கண்டுபிடித்த ஓர் உத்தி. அதாவது, சர்வதேச ஆதரவுடன் கடந்த வருடத்தில் பயங்கரவாதத்தை இலங்கையில் ஒழிப்பதாக கூறி ஓர் இனத்தின் விடுதலைப்போராட்டத்தை கருவறுத்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததா என்று விசாரிக்கிறார்களாம். இவர்கள் விசாரித்து, கண்டறியும் உண்மைகளுக்கு பிறகு இலங்கையில்  உள்ள இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாகுமா என்பது ஒருபுறமிருக்க, இதன் நம்பகத்தன்மை பொதுவாகவே சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தவிர, அதில் சாட்சியம் அளித்தவர்கள் வெறுப்புக்கும், நம்பிக்கையின்மைக்கும் ஆளானது கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லாதது!! நேற்றைய செய்தி ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கிறாராம். ஒருவேளை, இங்கிலாந்து செல்ல இவருக்கு அவ்வளவு அவசரமோ!!!


இலங்கை ஒரே நாடு. அங்குள்ள வாழும் இனங்கள் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் வாழவேண்டுமாம் என்று அரசு போராடியதாம் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறதாம். எப்படி, தமிழனின் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பறித்து பெரும்பான்மை சமூகத்தை குடியேற்றுவதன் மூலமா? இலங்கை அரசின் கொள்கைகள் இரு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதா என்பதற்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்ததே. அரசு தான் அப்படி. நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா? சரி யாரிடம் நீதி கேட்பது. இலங்கையின் நீதித்துறையின் தார்ப்பரியங்களுக்கு எனக்கு தெரிந்த இரண்டு உதாரணங்களை சொல்லலாம். ஒன்று ராஜீவ், ஜெயவர்த்தனாவின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி இணைக்க வேண்டும் என்று கையெழுத்து போட்டுவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் அதற்கு அரசு தடைவாங்கியது. அடுத்தது, சர்வதேச குடியுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (International Covenant on Civil and Political Rights (ICCPR-1997)) இலங்கையும் கையெழுத்துப் போட்டிருக்கிறது. பிறகு, 2006 இல் இலங்கையிலுள்ளவர்கள் யாரும் . நாவின் மனித உரிமைகள் அமைப்பிடம் மனித உரிமைகள் மீறப்படுவதன் மூலம் பாதிக்கப்படுகிறோம் என்று முறைப்பாடு செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டது. ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றமே இந்த லட்சணத்தில் இருந்தால் மிச்சம், மீதி எப்படி உருப்படும்? படிநிலையில் உச்சநீதிமன்றத்திற்கு கீழ்யுள்ள நீதி பரிபாலன அலகுகள் மற்றும் காவல்துறை என்பன தமிழர் உரிமைகள் பற்றிய பிரக்ஞையை தொலைத்தனவாகவே தோன்றுகிறது.


ஜனநாயகத்தின் அங்கங்களான மக்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசு, அதன் அரச நிர்வாக கட்டமைப்புகள், நீதி பரிபாலனம், காவல் என்று எல்லாமே இலங்கையைப் பொறுத்தவரை சோபையிழந்த அலங்காரங்கள் என்றாகிவிட்டன. சர்வதேசத்தின் முன் இலங்கை தன்னை அடையாளப்படுத்த ஜனநாயகதிற்குரிய இந்த சோபைகள் பயன்படலாம். அது பற்றிய உண்மையான யதார்த்தங்கள் மற்றும் நடைமுறைகள் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனையும் கொண்டுவரப்போவதில்லை என்பது அனுபவத்தினூடே கண்டறிந்த உண்மை.