ஆகஸ்ட் 28, 2016

வால்காவிலிருந்து கங்கை வரை - எனது பார்வை.

வால்காவிலிருந்து கங்கை வரை புத்தக விமர்சனம் என்பது என் மானுடவரலாற்று இயங்கியல் அறிவு எல்லைக்கு அப்பாற்பட்டது. இருந்தும் மனிதகுலத்தின் அசைவும் இயக்கமும் வரலாறாகிப்போன படிநிலைகளை, காலமாற்றங்களை, அரசியல் ஆட்சிமுறைகளின் தோற்றுவாய்களின் மேலுள்ள ஈடுபாடு படித்ததை, என் புரிதல்களை பகிரலாம் என எழுதவைக்கிறது.

பல்லின உயிரினங்களில் தன்னை முன்னிலைப்படுத்திய மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியை ஆதிகாலத்திலிருந்தே அருகமர்ந்து பார்த்து, அறிந்து பதிந்துவைத்தவர்கள் யாரும் இல்லை. உயிரினங்களில் ஆதிக்க நிலையில் இருக்கும் மனித இனத்தின் ஆரம்பகால வரலாறு மற்றும் பண்பியல் மாற்றங்கள் என்பன தொல் மானுடவியல் ஆய்வாளர்கள் (Paleoanthropologist) அகழ்பொருள் ஆய்வு, உயிர்த்தொகை மரபுவழிப்பண்பு ஆய்வாளர்கள் (Population Geneticist) களின் ஆய்வுகளின் வழியே தான் நமக்கு அறியக்கிடைக்கிறது. 

அறிவியல் ஆய்வுகளின் வழி Y Chromosomes and Mitochondrial DNA mutations அடியொற்றிப்போனால் தற்கால மனிதர்கள் எல்லாருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் தாம் என்பதையும், இனக்குழுக்களின் மூதாதையர்கள், முன்னோடிகளையும் யாராய் இருக்கக்கூடும் என்பதையும் ஆய்வுகளின் வழி உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதில் யார் முன்னே, பின்னே வந்தார்கள், யாரை யார் எப்பிடி ஆள்கிறார்கள் என்பதில் தான் அரசியல் செய்கிறார்கள் நாகரீகமடைந்ததாகக் கூறும் தற்கால மனிதர்கள்.

மனிதவரலாற்றின் அசைவியக்கம் மனிதவிடுதலை நோக்கிப்பயணிக்கிறது. அந்தப் பயணத்தின் உந்துசக்தி கருத்துமுதல் வாதம், பொருள்முதல்வாதம் என்கிற கோட்பாடுகளின் வழி நிறைய தர்க்கவாதங்கள், விவாதங்கள் என தர்க்கிக்கிறது வால்காவிலிருந்து கங்கைவரை. எதுவாகினும், அகழ்வுகள், ஆய்வுகள் வழி கிடைத்த தரவுகளின் அடிப்படையில் புனைவையும் கலந்து படைக்கப்படட இந்தியதுணைக்கண்டத்தின் மானுடவரலாறு தான் வால்காவிலிருந்து கங்கைவரை.

நூல் பற்றிய அறிமுகம் என்றால் இந்தியா பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுதலை அடையும் காலத்துக்கு முன் 1944 இல் ராகுல சாங்கிருத்தியாயன் என்பவரால் ஹிந்தியில் கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவு. இந்தியத்துணைக்கண்டத்தில் ரஷ்யாவின் ஏதோவொரு பகுதியிலிருந்து நுழைந்த ஆதி மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகள் எப்படி ஒரு தேசம் அமைத்து, கருத்துலகக் கருவூலங்களை கட்டியமைத்து, அரசியல்ஆட்சிமுறைமையை  நிறுவிக்கொண்டார்கள் என்கிற வரலாற்றுப்புனைவு. வால்கா நதிப்பிரவாகத்தோடு ஆரம்பித்த ஆதிமனிதக்கூட்டத்தின் ஒருபகுதியினரின் பயணம் கங்கைக்கரையில் தரித்து தங்கிவிட, அதனைத்தொடர்ந்து கட்டவிழும் பாரதம் என்கிற தேசத்தின் மானுட வரலாறே கதைக்களம். 

அதையே கண. முத்தையையா 1949 இல் தமிழிலில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூல் பலதரப்படட விமர்சனங்கள், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறது. 2015 ம் ஆண்டுவரை தமிழில் முப்பத்திநான்கு பதிப்புகள் கண்டிருக்கிறது. 

தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் மற்றும் கருங்கடல்களுக்கு இடையே  ஒரு பகுதியிலிருந்து தான் இந்தியாவிற்குள் ஆரியரின் வருகை ஆரம்பம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படட வரலாறு. இவ்வாறு வந்தவர்கள் தான் பின்னாளில் ரோம, கிரேக்க, ஜேர்மனிய இனக்குழுக்களின் முன்னோடிகளாகளாகவும்; இன்னொருபகுதியினர் அன்று பெர்சியா என்றழைக்கப்படட இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் பஞ்சாப் பகுதிகளில் குடியேறினார்கள் என்பது மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்படட வரலாற்று தரவுகள் கூறும் உண்மைகள். நதிக்கரைகளில் தோற்றம் கண்டது மனித நாகரிகம் என்பது போல வால்கா நதிக்கரையிலிருந்து ஆரம்பமாகிறது இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர் வரலாறும், நாகரிகமும். 

இவ்வாறு வந்தவர்கள் இங்கே ஏற்கனவே இருந்த "தாசர்கள்" என்றழைக்கப்படட திராவிடர்களை (யார் திராவிடர்கள், யார் தமிழர்கள் என்கிற வரலாற்றுக்குள் இப்போது போகவில்லை) எதிர்கொண்டார்கள் என்பதும் ரொமிலா தார்ப்பர் போன்றவர்களால் கூட வரலாறாய்ப் பதியப்பட்டிருக்கிறது. 

ராகுல் சாங்கிருத்தியாயன் இவ்வாறு குடும்பமாய் இருந்து இனக்குழுவாய்/கூட்டுச்சமூகமாய்  (Family to Tribal/Band socity) பரிமாணம் கண்டு ஆட்சி, அரசமைக்கும் முறைகள், கருத்துக்கருவூலங்களின் அடிப்படையிலான அரசியல் நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அவற்றிலுள்ள  குற்றங்குறைகள், மக்கள் தங்களைத்தாங்களே ஆள பொருளியல் வரலாற்று இயங்கியல் தத்துவ பொதுவுடைமை சமுதாயம் உருவாக்குவதலே சிறந்தது என முடித்திருக்கிறார் ராகுல் சாங்கிருத்தியாயன். அதைத் தனது மிகத்திறமையான நடையில் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் கண முத்தையா அவர்கள். 

மனிதவரலாறு என்பது நிகழ்வுகளின் கால அட்டவணைப்படுத்தல் இல்லை என்றாலும் காலம், தேசம் என்கிற தலைப்புகளின் மூலம் உரையாடல் வடிவில் தனித்தனிக்கதைகளாய் அமைந்திருக்கிறது ஒவ்வொருகதைக்குமான பேசுபொருள். 

தேசம்: வால்கா நதிக்கரைப் பிரதேசம் 
ஜாதி:   ஹிந்தோ - ஐரோப்பியர் 
காலம்:  கி.மு. 6000

தேசம்: வால்கா நதிக்கரை மத்திய பாகம் 
ஜாதி:   ஹிந்தோ - ஸ்லாவியர் 
காலம்: கி.மு. 3500

தேசம்: மத்திய ஆசியா (வடக்குறு பூமி)
ஜாதி:   ஹிந்தோ - ஈரானியர் 
காலம்: கி.மு. 3000

தேசம்: வாட்சு நதிக்கரை 
ஜாதி:   ஹிந்தோ ஈரானியர் 
காலம்: கி.மு. 2500 

தேசம்: மேல் சுவாதம் 
ஜாதி:   இந்திய ஆரியர் 
காலம்:  கி.மு. 2000

இடம்:  காந்தாரம் (தட்சசீலம்)
ஜாதி:   இந்திய ஆரியர் 
காலம்:  கி.மு. 1800

தேசம்:  குரு பாஞ்சாலம் 
ஜாதி:    வேதகால ஆரியர் 
காலம்:  கி.மு. 1500 

இதுபோல தலைப்புகளோடும் கால அட்டவணையோடும் அந்தந்த  அத்தியாயத்துக்குரிய கதாபாத்திரத்தின் தன்மைகள், பேசுபொருள், தர்க்கங்கள், வாதங்களோடும் மற்றைய பகுதிகளும் தொடர்கிறது. மொத்தமாய் 20 கதைகள்.

*ஹிந்து, ஈரான், ஐரோப்பாவின் சகல ஜாதிகள் ஒன்றாய் இருந்த காலம்

*இந்தோ ஸ்லாவியர் - இந்திய ஈரான், வெள்ளை ரஸ்யா பிரதேசங்களை சேர்ந்த கலப்பு ஜாதியினர் காலம்.

*ஆரியர் அல்லது ஆரிய காலம் - ஈரான் வெள்ளை ஜாதி இனத்தவர் மற்றும் இந்தியரும் சேர்ந்த காலம்;  தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தகாலம் - தேவாசுரர் யுத்தம், தாமிரம் செப்பு உலோகங்களின் பாவனை.

*ஆரியர் காலக்கதைகள் - ஆரிய சமூகத்தின் வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாஜர் போன்ற மகரிஷிகள் இயற்றிய ருக் வேதங்கள். ஆரிய புரோகிதர்கள் ஆரிய சேனைத்தலைவர் மற்றும் ஜன சமூகத்தின் உரிமைகள் அழிக்கப்படட காலம்.

*வேதத்தின் உபபாகமான உபநிஷதங்கள், பிரம்மஞானம் இவைகளின் உற்பத்தி, இரும்பின் உபயோகம் ஆரம்பித்த காலம்,

*வேற்றுமைகள், விரோதங்கள் வளர்ந்து வியாபாரிகள் பிரபலமான நிலையை அடைந்தததும், ஏழைக்கிராமவாசிகள் அடிமைவாழ்வுக்கு ஆட்பட்டிருந்ததை யாரும் கண்டுகொள்ளாதறிருந்தமை.

*பௌத்தமதம் தழைத்தோங்கிய காலம்.

*இஸ்லாமியர் வருகை, அதை எதிர்க்காமல் வாழாதிருந்து மது, மாது, போதைக்கு அடிமைப்படட மன்னர்கள் கதை.

*ஐரோப்பியர்கள் வருகை. என ஒவ்வொரு காலகட்டத்தின் கதை முடிவிலும் Footnote வடிவில் சொல்லப்படுவது வாசிப்பின் சாரத்தை எளிதாக்குகிறது.

வரலாற்று உண்மைகளோடு கற்பனை கலந்து தொல் வரலாற்றுக்காலத்தின் வால்கா நதியில் தொடங்கி கங்கை நதிக்கரை வரை விலங்குகளை போல் மனிதன் சகவிலங்குளை வேட்டையாடி பசித்தீர்த்துத் திரிந்த காலம் முதற்கொண்டு இனக்குழுவாய் தோற்றங்கொண்டு வாழ்வதில் வளர்ச்சி கண்டு, நாடமைத்தல், ஆட்சியமைத்தலில், அரசாள்வதில் முடிகிறது. உணவு,  நிலம், உலோகம், மற்றும் வளங்களுக்குமாய் தங்களுக்குள் போரிட்டு, வலியவன் வெற்றிகண்டு தங்களைத்தாங்களே ஆளும் முறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். 

அரசு/நாடு உருவாக்கம், அந்த அரசு உருவாக்கத்துக்கும், ஆளவும் அடிமைப்படுத்தவும் மக்களை எப்போதும் மந்தைக்கூட்டமாகவே வைத்துக்கொள்ளத் தேவையான தத்துவக் கொள்கைகள் கண்ணுக்குப்புலப்படாத அகவுலகில் கட்டியமைக்கப்படும் கருத்து பிம்பங்களாய் பிரம்மம் என்கிற பூடகமான, சிக்கலான சூட்சுமப்பொருள் என வேதங்கள், மந்திர வித்தைகள், தந்திரங்கள் என உருவாக்கம் பெற்றன. இந்திரன் போன்ற போர்வெற்றியின் பிம்பங்கள், மற்றும் சுரண்டல் முறை என்பவற்றை இந்தோ ஆரியர்கள் உருவாக்கிக்கொண்டார்கள் என்பதையும் முன்கதையின் பொரும்பாதி சொல்லிமுடிக்கிறது. 

அதன்பிறகு, இந்தியா என்கிற தேசத்தை ஆண்டவர்கள், படையெடுத்தவர்கள், அவர்களை விரட்டியடித்து இந்தியசுதந்திரப் போராட்டத்துக்கான முறைகள் வழிவகைகளை தேடுதல் என்பதாய் முடிகிறது. ஒரு தேசத்தின் விடுதலையே மக்களின் விடுதலை என்பதை கூறி அதுக்கான பாதையில் செல்கிறது முடிவு. 

தத்துவார்த்தமான கேள்வி பதில் வடிவிலான உரையாடல்களும், விளக்கங்களும் ஆசிரியரின் நம்பிக்கையான சமவுடமைச் சமுதாயம் சார்ந்த ஆட்சியமுறையே மக்கள் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தும், விடுதலைக்கு வழிசமைக்கும் என்பதாய் சொல்லிச்செல்கிறது. ஒவ்வொரு சமூகத்தினதும் நியாங்களை உடன்பாடாகவும் முரண்பாடாகவும் அந்தந்த பெயர்கொண்ட கதாபாத்திரங்களோடு ஆசிரியர் மற்றைய பாத்திரப்படைப்புகளின் வழியே தர்க்கிப்பதாய் உருவாக்கப்பட்டிருக்கிறது உரையாடல்கள்.

கருத்துமுதல்வாத - பொருள்முதல் வாத அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்கள் வடிவிலே நகர்கிறது கதைகள். வரலாற்று இயங்கியல் குறித்து முறைப்படி படித்த ஆளில்லை நான். ஆகவே, இதை புரியவேண்டுமானால் ஜேர்மனிய தத்துவாசிரியரான ஹேகல் (Hegel) இன் கருத்ததுமுதல் வரலாற்று இயங்கியல் தத்துவம், கார்ல் மாக்ஸ் இன் பொருளியல் வரலாற்று இயங்கியல் தத்துவம் என்பவற்றின் தத்துவார்த்த அடிப்படை அறிதல் தேவையாகிப் போனது எனக்கு.

"ஹேகல் படைத்த வரலாற்றுத் தத்துவத்தின் மையக்கருத்தாக விளங்குவது இயங்கியல்......மனித மனம், சமூகம், இயற்கை, என்கிற ரீதியில் சகலவற்றையும் வளர்ச்சிப்படிமுறையில் நகர்த்திச்செல்லும் செயலியக்கத்திற்கு அடிப்படையான விதிகள் உள்ளன. இந்த இயங்குவிதிகள் பற்றிய தத்துவக்கோட்பாடே இயங்கியல் எனப்படும். 


இந்த இயங்கியல் விதிகளில் அடிப்படையானது முரணியமாகும்..... (Contradiction) ஹேகலின் இயங்கியல் மனவுலகத்திற்கே முதன்மை கொடுக்கிறது. அவரது தரிசனத்தில் சகலமும் மனவுலகில் தொடங்குகிறது... பிரபஞ்ச பேரான்மாவாகவும், கடவுளாகவும், மனிதனாகவும் ஒன்றோடொன்று சங்கமிக்கும் முழுமையாகவும், சகலதாகவும், சர்வவியாபம் கொண்டு பிரம்மன் நடத்தும் திருக்கூத்துப்பற்றி உபநிடதம் படித்தவர்களுக்கு ஹேகலின் வரலாற்றுக்கடவுளைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்காது. இந்தப் பிரபஞ்ச பேரான்மாவின் சுயசரிதமாகவே மனிதவரலாற்றை எழுதுகிறார் ஹேகல்." 


- அன்ரன் பாலசிங்கம், விடுதலை கட்டுரை தொகுப்பு. 


நான் உபநிடதம் படித்ததில்லை. அதனால் ஹேகலின் கருத்துமுதல் வரலாற்று இயங்கியல் அடிப்படை பற்றி தேடி தெரிந்துகொண்டேன். ஹேகலின் காலத்துக்கு முற்பட்டது உபநிடதம் இயற்றப்பட்ட காலம் என்பதை மனதிற்கொள்ளவேண்டும்.  மனித வரலாற்று இயக்கம் அரசமைத்தல் என்பதோடு முடிவடைகிறது என்றும்; "வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு. (History is the movement of sprit towards) ....அரசு என்பது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒரு முழுமை. தனிமனித மனமும் சமூக மனமும் சங்கமமாகும் ஒன்றியம். அரசு என்ற இந்த உன்னதமான முழுமையிலேயே தனிமனிதன் தனது உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். தனி மனிதன் சுயநல அபிலாசைகளைத் துறந்து, பொதுநல நோக்கிற்காக அரசின் கட்டமைப்பிற்கு கட்டுப்படவேண்டும். அரச சட்டங்களுக்கு அடிபணிய வேண்டும். அரசு என்பது ஒரு தேசத்தின் ஆன்மா. அந்த தேசிய ஆன்மாவில், அந்த முழுமையான உண்மையில், தனி மனிதம் நிறைவு காணமுடியும்." - ஹேகல் . 


-அன்ரன் பாலசிங்கம், விடுதலை கட்டுரை தொகுப்பு. 


உபநிஷதம் - பிர்ம ஞானத்தைப் பற்றியும், ஆத்மா - பரமாத்மா முதலியவைகளை பற்றியும் விளக்குவதோடு வேதத்தின் ரகசியத்தையும் தெளிவாக்கும் தத்துவ நூல். - வால்காவிலிருந்து கங்கை வரை. ஹேகலின் மனவுலக கருவூலத்தின் பிரபஞ்ச பேரான்மா பற்றிய கருத்து ஆன்மீகம், இறையியல் கூறுகளின் தன்மையே ஆக்கிரமிப்பதாயும், அரசுருவாக்கம், அன்றைய சர்வாதிகார ஜேர்மனிய அரசை நியாப்படுத்தல் போன்றன அன்றைய இளையவரான கார்ல் மாக்கஸ் ஐ சீற்றம் கொள்ளவைத்தது என்கிறார் அன்டன் பாலசிங்கம்.


இதன் அடிப்படையில் கார்ல் மாக்சின் வரலாற்று இயங்கியல் என்பது பொருளியல் சார்ந்தது, பொருளிய இயங்கியல் - Materialistic Dialectics. "கார்ல் மாக்ஸ் ஒரு பொருளியல்வாதி. பொருளுலகத்தையே மெய்யுலகமாகக் கண்டவர். பொருளுலகத்திற்கே முதன்மை கொடுத்தவர். பொருளுலகத்திலிருந்தே மனவுலகம் தோற்றப்பாடு கொள்கிறது என்கிற கருத்தைக் கொண்டவர். அவரது உலகப்பார்வை ஹேகலின் ஆன்மீக கருத்துலகிற்கு நேர்மாறானது. ..... கார்ல் மாக்ஸைப் பொறுத்தவரை, மனிதனின் பொருளிய வாழ்வே எல்லாவற்றிக்கும் மூலமானது. மனித மனமும், மனித உறவுகளும், மனித வாழ்வும், மனித வரலாறும் - எல்லாமே மனிதனின் பொருளிய வாழ்விலிருந்து பிரவாகமெடுக்கிறது. இந்தப் பொருளிய வாழ்வின் மூல இயக்கமாகவே இயங்கியலை நிறுவுகிறார் மாக்ஸ்." 


"மனிதர்களின் சமுகவாழ்வைப் பொறுத்தவரை, பொருளாதார வாழ்வே முக்கியமானது. பொருளுற்பத்தியே மனிதவாழ்வுக்கு ஆதாரமானது. மனித தேவைகளை நிறைவு செய்வதும் அதுவே. இதனால், சமூகக் கட்டமைப்பில் பொருண்மிய அமைப்பிற்கே பிரதான இடத்தைக் கொடுக்கிறார் கார்ல் மாக்ஸ். பொருண்மிய அமைப்பே பொருளுற்பத்தியின்  மையம். அதுவே சமூகத்தின் திண்ணியமான அடித்தளம்.....பொருளியவாழ்வே மனவுலகத்தையும் நிர்ணயிக்கிறது. பொருளிய புறநிலைகளின் வெளிப்பாடாகவே கருத்துலகமும் தோற்றப்பாடு கொள்கிறது."


-அன்ரன் பாலசிங்கம், விடுதலை கட்டுரை தொகுப்பு. இந்திய உபகாண்டத்தின் ஆரியர் மானுடவியல் மனிதவரலாறு நாடோடியாய் அலைந்து திரிந்து, குழுவாய், சமூகமாய், இனமாய், பண்பாடு, நாகரிகம், கலை, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகள் என்பதாய் வரலாற்று அசைவியக்கம் தர்க்கங்களாய் வால்காவிலிருந்து கங்கை வரையில் விவரிக்கப்படுவதைக் காணலாம்.இந்தோ ஆரியர்களும் கருத்துலக கருவூலங்களை பிரமம் எனச்சொல்லி அரசாளவும், அடிமைப்படுத்தவும், ஆளுபவர்கள் போகவாழ்க்கை வாழவும் செய்தார்கள் என்கிறார் ராகுல் சாங்கிருத்தியாயன். பாரதம் என்கிற தேசம் பிராமணர்களால் பிராமணியம் என்கிற கருத்தியல்வாத தத்துவங்களால் ஆளப்பட்டு சீரழிவதாக நினைத்தாரோ என்னவோ வால்காவிலிருந்து கங்கை வரை பொருண்மியவாதக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாய் சொல்லப்படுகிறது. 

விலங்கின் இறைச்சிக்கும், உலோகத்தாலான ஆயுதங்களும், பொன்பொருள், அடிமைகள், அடிமைப்பெண்கள், சுகபோக வாழ்வு இவற்றுக்கான அடிதடிகள், வேதே உபநிடதங்களின் உருவாக்கம், பிரம்மக்கொள்கையை வளர்த்து கர்மவினைப் பலனென மக்களை அடிமைப்படுத்தல், அரசைப்போற்றி துதிபாடுதல் முதல் நாடகங்கள், காவியங்கள் என இயற்றி வேட்டுவச் சமூகமாய் இருந்து நாகரிகம் அடைந்து அரசுருவாக்கம், State Building, என பாரதம் கொண்டார்கள் இந்தோ ஆரியர்கள்.

"வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர் முதலிய மகரிஷிகள் ருக் வேத மந்திரங்களை இயற்றினர். அதே காலத்தில் தான் ஆரிய புரோகிதர்களின் உதவியைக்கொண்டு குருபாஞ்சால ஆரிய சேனைத்தலைவர், ஜனசமூகத்தின் உரிமைகளை பலமாகத் தாக்கி இறுதியாக அழித்து முடித்தார்கள்." 

- வால்காவிலிருந்து கங்கை வரை. 

இதேபோல, பாரதத்தின் அநேக பகுதிகளை ஆண்டவர்கள் என்பதாலேயோ என்னவோ குப்தர்களின் மதவழியிலான சாம்ராஜ்ய ஆட்சி, சாணக்கியரின் அரசியல் தந்திரங்கள் ஆசிரியரின் பார்வையில் நிறையவே சாடப்படுகின்றன. யக்ஞவல்க்கீயன் இன் இந்த பித்தலாட்டமான பிரம்மம் பற்றிய கேள்விகளை நாத்தீகர்கள் எழுப்புவார்களென ஒரு கதையில் பிரபா என்பவள் நம்பியதை போல, சுயநல, சுகபோக மன்னன் ஆட்சி முறை மாறி ஜன சமூக ஆட்சிமுறைமையும் மறுபடி மலரும் என்பதான நம்பிக்கைகள் கதைகளின் முடிவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.

பிராமணர்களின் சனாதனம் - ஸ்திரமானது, மாற்றமற்றது; 
பெளத்தத்தின் அநாத்மம் - உள்ளும் புறமும் அழிவற்ற நித்திய வஸ்து ஏதுமில்லை 

என்கிற கருத்துமுதல் வாத தர்க்கவிசாரணைகள் ஆன்மவிடுதலையை நோக்கி பேசப்படுகிறது. ஆன்மவிடுதலை பற்றி பேசியும், சுயநலம் மட்டுமே பேணிய பிராமண ஆட்சியாளர்கள், வேதவியாக்கியர்கள்  போலவே பெளத்தபிக்குகள் கூட தனிச்சொத்துடைமைவாதிகளாய் ஆனதாக முடிக்கிறார் பெளத்த வரலாற்றை. 

அதேபோல, உண்மையானதும், ஒட்டுமொத்தமானதுமான மானுடவிடுதலைக்கான தத்துவக்கோட்பாடுகள், தர்க்கவிசாரணைகள் இறுதி அத்தியாயங்களில் மிக திண்ணியமாகவும், அடர்த்தியாகவும் சொல்லப்படுவதாய் தோன்றியது. 

அரசமைப்பதும், அந்த அரசுக்கு கட்டுப்பட்டு வாழ்வதும், பிரமம் என்கிற கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் கர்மவினை எனக்  குடிகள் அடிமையாய் நீடிப்பதும்  விடுதலையின் முடிவாகக் கொள்ளமுடியவில்லை. மாறாக மனித விடுதலைக்கான சிந்தனை புறவுலகின் பொருளியல் அசைவியக்கத்தின் வழி கட்டமைக்கப்பட்டு அகவயமான விடுதலையின் சிந்தனைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே வால்காவிலிருந்து கங்கைவரை குறித்த எனது புரிதல்.

ஆரம்பகால வேட்டுவச்சமூகத்தில் பெண் குடும்ப அமைப்பின் தலைவி, வேட்டையாடும், போராடும் பலமிக்கவள். கலவிச்சுதந்திரம், ரத்த உறவுகளுக்கிடையேயான உடலுறவு, incest, அது குறித்த கருத்தாதிக்கம் உருவாகாத காலத்தின் போதும் காதல், காமம் என்கிற போட்டியில் அவளுக்குள் மனிதகுலத்தின் primitive instinct இயல்புகள் தலைதூக்குக்குகிறது. தன்னினம், சந்ததி, குடும்பம் தழைத்தோங்க பெற்றமகளை சூழ்ச்சியால் பலிகொள்வதென்பதும் நிகழ்ந்தேறுகிறது. ஒரு சில அத்தியாயங்களுக்குப் பின்னான கதைகள்  சொல்லும் மானுடவரலாற்றில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கினாலும் ஆங்காங்கே பெண்களின் ஆளுமையும் கதைகளின் பாத்திரப்படைப்புகள், தர்க்கங்கங்கள், முரண்பாடுகள் வழி வெளிப்படுகிறது.

பிரவாஹன் - லோபா கதையில் பிரமம் பற்றிய கருத்துருவாக்கம் பித்தலாட்டம் என லோபா வாதாடுவதாகட்டும்; அஸ்வகோஷ் - பிரபா கதைகளில் இருவரும் சேர்ந்துவாழ முடியாமல் அஸ்வகோஷ் பெளத்தம் தழுவுவதும், பிரபா (வெவ்வேறு கதை வெவ்வேறு பிரபா) தன்னை அழித்து அஷ்வகோஷை நாடக இலக்கியத்தில் சிறந்தவனாக செய்வதென்பது புரியாமலும், ஏனிப்படி என்பதாயும் தோன்றிற்று வாசிப்பில். பிராமணீய தத்துவங்கள் படி கணவன் இறந்ததும் பெண்ணை தீயிட்டுக் கொழுத்தியதும் வரலாறே என்கிறார் ஆசிரியர். 

கூடவே, சமூக சாதீய, வர்க்கமுறண்பாடுகளில் சிக்கும் ஆண் - பெண் காதல், தியாகம், கரையேறுதலும் சொல்லப்படுகிறது. இனக்குழுக்களுக்கிடையேயான கலப்புகள், அதனால் உண்டாகும் சமூக, அரசியல் அடையாளச்சிக்கல்கள் வெகுவாகப்பேசப்படுகிறது. கலப்பு மணங்கள், சமூகம் ஏற்க மறுக்கும் பிராமணியம், பிராமணியீமல்லாத அடையாளக்குழப்பங்கள், identity crisis (சுபர்ணயெளதேயன்) என்பனவும் காணலாம் கதைகளில். அது என்னவோ இன்றைய நாட்கள் வரை நீடிப்பதாய் தோன்றியது படிக்கும் போது.

இவ்வாறாக தேசம், அரசியல் ஆளும் முறைமைகள், பொருளாதாரமுறைகள், வாழும்முறைகள், பண்பாடு, கலாச்சாரம் கட்டியமைக்கப்பட்ட தேசத்தில் அந்நிய படையெடுப்புகள் நிகழ்கின்றன. மதத்தின் பெயரால் மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் இஸ்லாம், பொருளீட்டு நோக்கில் பிரித்தானிய காலனியாதிக்கம், கூடவே கிறித்துவ மதம் பரப்பல் பாரததேசத்தை ஆக்கிரமிக்கிறது. தேசம் அமைத்தலோடு வலராறு முடியவில்லை. அந்நிய படையெடுப்புகள், முரண்பாடுகள் வரலாற்றின் இன்னோர் கட்டத்துக்கும்  மாற்றத்துக்கும் பாரத மக்கள் சமூகத்தை இட்டுச்செல்கிறது. 

மங்கோலியர்கள் உடன் ஸமனியர்கள்/பெளத்தர்கள் சேர்ந்து இந்துக்களை தங்கள் பக்கம் சேர்த்திருந்தால் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் பாரததேசத்தில் வளர்ந்திருக்க சாத்தியமில்லை என்கிற போது மதங்களும் அதன் ஆளுமைகளும் மக்களை அந்தியப்படையெடுப்புகள் கூட பிரித்தே வைத்திருக்கிறது என்கிற காலந்தோறும் நிகழ்ந்தேறும் வரலாற்று உண்மை புலப்படுகிறது. இஸ்லாம் தர்மசாத்திரங்களின் படி கூட அடிமைத்தனமும் அடிமைகளும் அனுமதிக்கப்பட்டும், ஆளப்பட்டும் இஸ்லாம் ஆட்சி பாரதத்தில் ஒங்க மதமாற்றம் முக்கியம் என இஸ்லாமியர்கள் நினைத்தையையும் அது முடியாமற்போனதும் விளக்கப்படுகிறது. 

எல்லா மதங்களினதும் கருத்துருவாக்கங்கள் போலவே இஸ்லாமின் பெயரால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய  ஆட்சிமுறையும். கலீபா என்கிற மதத்தலைவர் பதவி உருவாக்கம், அதன் பிறகான வரலாறு என்பன வால்காவிலிருந்து கங்கை வரையில் அதிகம் விவரிக்கப்படவில்லை. அது அதிகம் பாரதத்துக்கு தேவையும் இல்லாமல் இருந்திருக்கலாம். இஸ்லாம் என்கிற பெயரால் அடிமைகள் (Mamluks) ராணுவம் கட்டியமைக்கப்பட்டதும், பின்னாளில் அவர்களின் வாரிசு அரசியல் ஆட்சி முறை உருவானதும் இஸ்லாம் பெயரால் உண்டு. 

இஸ்லாம் பற்றி வால்காவிலிருந்து கங்கை வரையில் சொல்லப்பப்படாதது காலத்தின் தேவை கருதி. Quraysh Tribe - Hashemite lineage இல் இருந்து வந்தவர் தான் Prophet Mohamed, முகம்மது நபிகள். அதே Quraysh இனத்தில் இன்னொரு சந்ததி உமாயத், Umayyad என்பவர்கள். Hashemite மற்றும் உமாயத் (Umayaad) சந்ததிக்கும் பொதுவான ஒரு முன்னோடி Adb Manaf என்பவர். இந்த இரு சந்ததிக்குள்ளும் எப்போதுமே கலீபா பதவிக்கான சண்டை தான் இருந்து வந்தது என்பது வரலாறு. Prophet Mohamed காலத்துக்குப் பின்னாளில் அவரது மருமகனார் அலி உமையத் சந்ததியின் உத்மனுக்குப் (மூன்றாவது கலீபா) பிறகு கலீபா ஆகிறார். அவரும் பின்னாளில் அந்தக்கால அரேபியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு Kharijite சந்ததியால் இல்லாதொழிக்கப்படுகிறார். ஆக, இந்த மூன்று சந்ததிக்குமிடையே நிறையப்பகைகள், சண்டையில் ஈற்றில் அலியின் மகன் ஹுசேய்ன் கொல்லப்படுகிறார். அதன்பின் அலியின் (முகம்மது நம்பிகள் மருமகனார்) வழிபற்றி வந்தவர்கள் Shities முஸ்லிம்கள் எனவும் உமாயத் சந்ததி வழிவந்த மெளவியா (Muawiya) வழிவந்தவர்கள் Sunnis எனவும் இந்நாள் வரை நீடிக்கும் முரண்பாடுகள், சண்டைகள். 

இபடியாக அப்பாஸிட் சந்ததி தான் இஸ்லாத்துக்காக அடிமை ராணுவ முறையை உருவாக்கி தேசங்களை ஆண்டு, இஸ்லாத்தையும் பரப்பி வந்தார்கள். அதன்பிறகு ஒட்டமன்கள் ஒட்டமன் சாம்ராஜ்யம் உருவாக்கி இஸ்லாம் பரப்பும் நோக்கம் இன்னும் விரிவடைந்தது. ஒட்டமன் சாம்ராஜ்யத்தில் அருகேயுள்ள கிறித்தவ நகரங்களில் கிறித்துவ பாதிரிமார்களிடம் அங்கே பாப்டிசம் செய்யப்பட்ட சிறுவர்களின் ப்ட்டியலை கட்டாயத்தின் பேரில் வாங்கி அந்தச் சிறுவர்களை அடிமைகளாக்கி ஒட்டமன் சாம்ராஜ்யாத்தில் அதிகாரிகளாகவும், கவர்னர்களாகவும் சுல்தான்களில் கீழே வேலைக்கமர்த்தப்பட்டார்கள். இவர்கள் கூட ஒருவிதமான ஸ்டேட்டஸ்ம் இல்லாதவர்களாகவே உருவாக்கப்பட்டார்கள். வருடா வருடம் இந்த முறையில் சிறுவர்கள் பறிக்கப்பட்டதும், பெற்றோர் இழந்த குழந்தைகள் இழந்தது தான் என்பதும் வரலாறே. 

பின்னாட்களில் ஓட்டமன்  சாம்ராஜ்யத்திலிருந்து அரபிகளுக்கான தனித்தேசம், பாலஸ்தீனம் உருவாக்க அவர்கள், Hashemite lineage இல் வந்தவர்கள் பிரித்தானியாவிடம் உதவி கோரியதும், ஈற்றில் பிரித்தானியா இஸ்ரேல் என்கிற நாட்டை உருவாக்கியதும் இன்னொரு பெரிய வரலாறாரு. 

இது போல மானுட வரலாற்று அரசியல் பேராசைகள், ஆட்சி ஆசைகள், அதன் கோரவிளைவுகள் இன்னும், இன்றும் தொடர்கிறது.  இதில் எங்கே வரும், எப்படி பொருந்தும் மானுட விடுதலைக்கான வரலாற்று சிந்தனைகள், செயற்பாடுகள். தற்காலத்தில் ராகுல் சாங்கிருத்தியாயன் இருந்திருந்திருந்தால் இது குறித்தெல்லாம் என்ன எழுதியிருப்பாரோ! 

மறுபடி, வால்காவிலிருந்து கங்கை வரைக்கு போனால், பாரதத்தில் பிரித்தானிய காலனியாதிக்கம் பற்றியும், வெள்ளையர்களை எதிர்த்து போராடவேண்டிய கட்டாயம், வழிமுறைகள் பற்றியும் மிக அடர்த்தியான வரலாற்றுத் தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. எகிப்தின் சுயஸ் கால்வாய் இஸ்மாயில் பாஷா என்பவரால் யூதராக இருந்து கிறிஸ்தவராக மதம் மாற்றப்படட, 1875 இல் பிரித்தானிய பிரதமராக இருந்த Benjamin Disraeli யால் பிரித்தானியாவுக்காக வாங்கப்பட்டிருக்கிறது. இதுக்கான காரணம், இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்குமான கப்பற்போக்குவாரத்து பாதையை சுருக்கவும், வசதியாக்கவுமே. 

வால்காவிலிருந்து கங்கைவரை என்கிற வாசிப்பு பற்றிய குறை என்று எனக்கு தோன்றியது ஒரே விதமான உரையாடல்கள் சில சமயங்களில் வாசிப்பில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது. தவிர, பாரததேசம் என்பதாலோ என்னவோ பிராமணியம் மிகக்கடுமையான சாடலுக்கு உள்ளாவதும், அதை எதிர்க்க சரியான சக்திகள் ஏன் உருவாகவில்லை என்பதுமான கேள்விகள் உள்ளோடியது வாசிப்பில். பிராமணியம் உருவாக்கிய பிரம்மம், கருத்துமுதல்வாதம் தான் இன்றும் பாரதத்தை ஆட்டுவிக்கிறது என்பது நிதர்சன வரலாறு. 

மிருகங்களாய் இருந்து இனக்குழுவாய் உருவான எல்லா மனித இனங்களும் வரலாற்று அசைவியக்கத்தின் வழி இன்னும் விடுதலை அடைந்துவிடவில்லை. மானுட வரலாறும் அதன் அசைவியக்கமும் தொடர்கிறது. விடுதலையும் தூரமாகிக்கொண்டே செல்கிறது. காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதார ஜனநாயகம் என்கிற வடிவங்களில் இன்னுமின்னும் அடிமைத்தனங்கள் கண்ணுக்குப் புலப்படாத வகையில் தொடர்கின்றன. 

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. ஆனாலும், மனிதனை மனிதன் மதத்தின் பெயரால், பொருளாசையின் பேரால், மண்ணின் பெயரால் அடிமைப்படுத்தவே செய்கிறான். முதலாளித்துவத்தை எதிர்த்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நினைப்பவர்களிடமும் அதற்கான வழிமுறைகள் இல்லையா அல்லது அவர்கள் வழிமுறைகள் தோற்றுப்போகிறதா என்கிற கேள்வியே மிஞ்சுகிறது. அதற்கான பதிலை தேட சீனா, கியூபா வின் மானுடவரலாறு ஆராயப்படவேண்டுமோ! 


உதவிய புத்தங்கள்: 

விடுதலை, கட்டுரைத் தொகுப்பு, அன்ரன் பாலசிங்கம். 

The Origins of Political Order, Francis Fukuyama.

படம் உபயம்: கூகுள்.

செப்டம்பர் 13, 2014

தமிழிசை மரபும் தமிழர் சாதியும் - யாழ்


குழலினிது யாழினிது யாழ் இனிது என்ப-தம் மக்கள்.... திருக்குறள்  படித்த காலந்தொட்டே யாழ் என்னும் பண்டைய தமிழர் இசைக்கருவி குறித்த ஒரு ஆர்வம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது. குழல் நிலைத்ததைப் போல் யாழ் நிலைத்து நீடிக்காமல் ஏன் அற்றொழிந்து போனது தமிழிசை மரபில் என்கிற ஒரு சிறு தேடலின் விளைவே இப்பதிவு. யாழ் மீட்டப்படுவதை எங்குமே இன்றுவரை பார்த்ததில்லை, கேட்டதில்லை. சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தமிழர் மரபில் யாழ் வாசிப்பவன்  ஆண்,பெண் முறையே பாணன், பாடினி என்னும் காரணப்பெயர் அறிந்ததுண்டு. அண்மையில் தேடற்களஞ்சியமாம் கூகுளில் கிடைத்த ஒரு ஓவியம் வைத்து தேடிப்போக யாழ் என்னும் இசைக்கருவி பற்றிய சில தகவல்கள் கிட்டின. சரி, எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் கிடைத்ததை பகிர்வதில் என்ன்வோ ஒரு திருப்தி.

யாழ் என்னும் இசைக்கருவி பற்றி, 

"யாழ், தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று. 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் "யாழ்" காணப்படுகிறது. 
21 நரம்புகள் கொண்டது பேரியாழ்.
17 நரம்புகள் கொண்டது மகரயாழ் 
16 நரம்புகள் கொண்டது சகோடயாழ் 
7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்." 

மூலம்: 
http://eluthu.com/view-ennam/6289

********​​​​​​​​​​​------------**********"யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர்கள் வாசித்த முதல் இசைக்கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது."  

மூலம்: 
http://blog.dinamani.com/?p=3634

****************

இவ்வாறு பழந்தமிழ்ப் பண்பாட்டு இசைக்கருவி எப்படி மருவி வீணை ஆனது என்பதை சொல்கிறது இப்பதிவு. இவர் எழுத்தை அந்த தளத்திலிருந்து பிரதி எடுத்துப் பதிகிறேன், ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன். பண்ணோடு இசைமீட்டி பண்டைத்தமிழர் வாழ்வியலின் அங்கமான யாழ் பக்தி இலக்கியத்தில் எப்படி தெய்வீகத்தன்மை கற்பிக்கப்பட்டு வீணையாய் மருவியத்தை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். 

தமிழரின் மறைந்த இசைக்கருவி

"இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்' 'பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று." 

Posted by: AK 

மூலம்:
http://tamilkadhalkavithai.blogspot.ca/2013/05/tamilar-isai-karuvi-yaalvilyaal.html

****************பழந்தமிழர் இசை என்று தேடலில் முதலில் கிட்டியது தமிழ் விக்கிபீடியா தகவற்களஞ்சியம் தான். தமிழர்களின் இசை பற்றிய நூல்கள் முச்சங்க காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டதாகவும்; அது மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது எனவும் இந்த இணைப்பில் சொல்லப்படுகிறது. இயல், இசை, நாடகம் என கலையம்சங்கள் பொருதியிருந்ததாகவே பண்டைத் தமிழர் வாழ்வியலும் இருந்திருக்கிறது. இசை பற்றிய சில பண்டைய நூல்கள் காலத்தால் அழிந்துபோனாலும், இன்றும் தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, மருவிய வரலாறுக்கான சான்றுகள் கிடப்பதாய் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு படிக்க இணைப்பு கீழே. இந்த இன்ணைப்பில் கிட்டிய தமிழிசை சுரங்களும், பின்னர் அவை எப்படி வடமொழி வடிவம் கொண்டன என்பதும் மேலும் ஆவலைத் துண்டியது. 

வ எண்  ஏழிசையின்      ஏழிசையின்                  பறவை/விளகுகளின் ஒலி 
              தமிழ்ப்பெயர்      வடமொழிப் பெயர் 

1            குரல்                  சட்சம்                           மயிலின் ஒலி 
2            துத்தம்                ரிஷபம்                          மாட்டின் ஒலி 
3            கைக்கிளை        காந்தாரம்                    ஆட்டின் ஒலி 
4            உழை                 மத்திமம்                       கிரவுஞ்சப்பறவையின் 
                                                                             ஒலி 
5            இளி                   பஞ்சமம்                       பஞ்சமம்      
6            விளரி                  தைவதம்                      குதிரையின் ஒலி       
7            தாரம்                  நிஷாதம்                      யானையின் ஒலி 

இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
 1. குரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச
 2. மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
 3. வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
 4. மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
 5. வன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2
 6. மெல்- உழை சுத்த மத்திமம்- ம1
 7. வல்- உழை பிரதி மத்திமம் - ம2
 8. இளி-பஞ்சமம்- ப
 9. மென் விளரி- சுத்த தைவதம்- த1
 10. வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
 11. மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
 12. வன்தாரம் - காகலி நிஷாதம் - நி2

மூலம்: 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
************************

இயல், இசை, நடனம் என கலைகளைப் பற்றிப் பேசும் நூல்கள், வகைகள், ஏழிசையின் தற்காலத்தில் திரிபுபடுத்தப்பட்ட, திரிபுபட்ட (!) வரலாற்றுவடிவத்தை இப்பாடலின் வழி ஆரம்பத்தில் இளையராராஜா இசைவடிவம் கொடுத்திருப்பது இனிமை. இசை நுணுக்க நயங்கள் ஞானமரபுகள் தாண்டி கடத்தப்படுவதில்லை, வளர்வதில்லை என்பதைக் கட்டுடைத்த தமிழ் சாதி இளையராஜாவும் இன்னும் சிலரும் தான் தமிழர்களின் இன்றைய பரிமாண இசையின் முகவரிகள் என்பதையும் மறுக்கமுடியாது. இப்படியானவர்கள் வர்த்தக இசை கடந்தும் ஒரு இனவழிச் சமூகத்தின் மரபுவழி இசை எனும் களத்தில் என்ன பங்காற்றியிருக்கிறார்கள், அதற்கான புதிய பரிமாணம் எதையாவது கொடுத்திருக்கிறார்களா என்று தேடவேண்டியுள்ளது. 


பாடலின் சில ஆரம்ப வரிகள் இசை, இயல்,  கலை நுணுக்க வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்கிறது.


"......

முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரி, யாவிரை, யாழ் நூல், பஞ்சமரபு 
இவை இசை கூறும்.
செயிற்றியம், கூத்தநூல், நடனக்கலை வகை கூறும்.
பல தொன்நூல்கள் கூறும் தோற்கருவி 
உழவு, முரசு, உடுக்கை, மிருதங்க தாளமேளமாகும்.


துளைக்கருவி புல்லாங்குழலொடு 

மரகிளை ஒடித்து அமைத்து சீவாளி பொருந்தும் முகவீணை 
திமிரி நாயணம் நாதஸ்வரமாகும். 
நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்
ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்
சாரங்கியொடு 
என்றும் நிறை வீணையாகும்.


மிடற்றுக்கருவி குரலாகும் 

பண்பட்டுப் பண்பாடும் குரல் வகையாகும் 
இத்தனையும் ஒருங்கிணைந்து 
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமென 
ஏழிசை எழும்பு(த்)  தாளம் தவறாமல் 
இசைந்தாடும் நடனக்கலை தன்னில்... "
****************
மேலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பதன் பொருள் என்னவென்று இன்னோரு இணைப்பில் கிட்டிய தகவல். 

குரலே துத்தம் கைக்கிளை உழையே 
இளியே தாரம் என்றிவை 
எழும் யாழின் இசைகெழு நரம்பே 
என்பது பிங்கல நிகண்டு 

மூலம்: 
http://malaysiathamizhnerivazhviyaliyakkam.blogspot.ca/2013/11/blog-post_7019.html

சுவாமி விபுலானந்தரின் 'யாழ் நூல்' விமர்சனமாக அமைந்த இக்கட்டுரை மிக மேலோட்டமாக யாழ் இன் வரலாற்றுப்படிமம் பற்றிய ஆதாரங்களை விட்டுச்செல்கிறது.

"சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகா ரத்தையும் தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம் பரியத்தைத் தொடர்ச்சியாக இனங்காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், தேவராவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப்பியலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளை துணையாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோடயாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதீகவியலுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப் புக்கள் கூறப்பட்டு ஒலிகள் அளக் கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற்றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.

பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழா சிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்துரைக்கிறார் அடிகளார்.

இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட் டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத் தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.

01. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசையையும் வெளிக்கொணர்வதும்,
02. தமிழிசை வரலாற்றை விளக்குவதும்,
03. இசை ஆராய்ச்சிக்கு இன்றிய மையாத கணக்கு முறை களைக் கணித மூலம் விளக்குவதும்,
இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்."

மூலம்:
http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/04/21/?fn=f13042116&p=1

****************


இப்படி யாழ் என்னும் இசைக்கருவி மூலம் தமிழர் மரபிசை குறித்து அறியும் முயற்சிக்கான தேடலில் கிடைத்தது பிரித்தானியாவிலிருந்து பிபிசி செய்தி நிறுவனம் உருவாக்கிய யாழ், Harp எனப்படும் இசைக்கருவியின் ஆவணப்பதிவு. அதில் Harp எனப்படும் யாழின் ஆரம்பம், அது பரவி, விரவியிருக்கும் திசை, இசை நுணுக்கம் வரை பேசும் பிபிசி ஆவணம் ஐரோப்பாவை மையமாக வைத்து சர்வதேச விருதுபெற்ற Harpist, Cartin Finch பிரித்தானிய "Royal Harpist to the Prince of Wales 2000 - 2004" ஐக் கொண்டு ஒர் சர்வதேச ஆவணப்படம் தயாரித்திருக்கிறது. எத்தியோப்பாவில் ஹார்ப் இன் ஆதி அந்தத்தைத் தேடிப்போய் ஐரோப்பாவில் நிறுத்தியிருக்கிறார்கள். இத்தாலியில் Harp உற்பத்தியில் தொடங்கி தெற்கு அமெரிக்காவில் வெனிசுவேலா, பிறகு ஸ்பெயின், ஃப்ரான்ஸ் என்று பயணிக்கிறது தொகுப்பு. ஒவ்வொரு இனமும், மக்களும் அவர்களிடையே தனித்திறமையோடு வளர்ந்து நிற்கும் Harpists கள் அவரவர் திறைமையை இசைவழி ரசிக்கவைக்கிறார்கள் காணொளியில். 


தமிழர்களின் யாழ் இந்த Harp வகையைச் சேர்ந்தது தானே என்று அவாவில் கடைசிவரை பொறுத்திருந்து முழுதும் பார்த்து முடித்ததில் தமிழ் யாழ் பற்றி எந்தக் குறிப்பும் கானொளியில் இல்லை என்பது ஏமாற்றமே. என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று யோசித்ததில் எல்லா நாடுகளிலும் அந்த இசைக்கருவியின் பாரம்பரியம் இன்றும் புழக்கத்தில் இருந்தபடியே காலத்துக்கும், இசைக்கும் ஏற்றாற்போல் பரிணாமம் கொடுத்தபடி  வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பண்டையத்தமிழர்களின் யாழ் ஆரியர்களால் வீணைவடிவம் கொடுக்கப்பட்டு திரிபடைந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் சமூகத்தில் வீணையும், கர்நாடக சங்கீதமும் தெய்வீகமாகி வேறு தளத்தில் ஆளப்படுகிறது. தொன்மநூல்களின் வழி நரம்புக்கருவியான யாழ் போன்ற இசைக்கருவிகளைப் பற்றிப் பேசும் தமிழ் மரபு அதற்கான சிற்பங்கள், ஓவியங்கள், இன்னபிற சான்றுகளை வடிக்காமல் எப்படி கோயிற் சிற்பங்களில் கூட வெறெதையெல்லாமொ வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மன்னர்கள்! கைவிடப்பட்ட, கவனிக்காமல் புறக்கணிக்கப்பட்ட தமிழர் பாரம்பரியங்கள் இன்னும் எத்தனையோ என்கிற கேள்விகள் தொக்கி நிற்கிறது.


இதுபோன்ற எண்ணங்கள் உந்தித்தள்ள காணொளியில் இருக்கும் கருத்துக்களைப் படிக்கத் தலைப்பட்டு அங்கேயும் ஒரு தமிழர் என்று நினைக்கிறேன், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அவர் குறிப்பிட்டது, பிபிசி ஆசியாவில் தமிழர்களின் யாழ் என்கிற தொன்மைவாய்ந்த இசைக்கருவி பற்றிக்  குறிப்பிடவில்லை. இந்த ஆவணப்படம் முழுமையான ஒன்றாக இல்லை என்கிறார். அவர் கருத்து முழுமையாக இதோ, 

/Believeitornaught Apr 9, 2014

"This documentary is incomplete and to a great extent misleading without covering the Asian harp history. As many informed global historians would know harp is also a Tamil music instrument called Yaazh that dates back to 2000 plus years with literary evidences and archeological evidences. In fact there were variety of harps called Bary Yaazh, Magara Yaazh, Sengottu Yaazh etc. played with different number of strings and at various occasions. One of the earliest aboriginal Tamil places in Sri Lanka is called Yaazhpanam (misspelt by Britishers as Jaffna) in the name of harp. Also, harpists are called Paanan and his lady would be called Paadini. Never thought BBC would just cover european history alone and mislead the public by ignoring Tamil history of Harp, which comparably or rather more historic than Irish or Welsh or Celtic harp histories."


Comment Courtesy: Believeitornaught. 

இவர் கருத்தைப் படித்த பிறகு 'யாழ்ப்பாணம்' என்ற ஈழத்தின் வடக்கில் ஒரு பகுதிக்கும் யாழ் இசைக்கருவிக்கும் என்ன தொடர்பு இருக்ககூடும் என்று மீண்டும் ஒரு கேள்வி மனதில் தோன்றியது. கட்டற்ற தேடற்களஞ்சியம் கூகுள் கொடுத்த இந்த இணைப்பு இப்படி சொல்கிறது. 

"யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணரமுடியும். சோழநாட்டிலிருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் காலப்போக்கில் குடாநாடு முழுவதுக்கும் அப்பெயர் வழங்கப்பட்டது."

மூலம்: 
http://ejaffna.blogspot.ca/2010/11/blog-post_4548.html

விக்கிபீடியா தகவல்கள் எப்போதும் யாரால் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற நிலையால், இந்தப் புத்தகத்தின் இணைப்பைத் தேடி இணைத்துள்ளேன். அதில் யாழ்ப்பாணம் என்கிற பெயர்க்காரணம் ஒரு வரியில், "யாழ்ப்பாணம் அது யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டமையின் யாழ்ப்பானமமெனப்படுவதாயிற்று." வரலாறு முக்கியம் என்பதால் இதன் சுட்டி கீழே. என் சேமிப்பிற்க்காகவும் வேண்டி. 

http://www.noolaham.net/project/13/1207/1207.pdf

http://noolaham.net/project/06/565/565.pdf

(ஈழத்தமிழர் தொன்மை)

யாழ்ப்பாணம் என்ற காரணப்பெயருக்கு பல செவிவழிக்கதைகளும் உண்டு என்கிறார்கள். எதுவாயினும் 'யாழ்' க்கும் யாழ்ப்பாணத்துக்கும் இருக்கும் தொடர்பை யாரும் நான் தேடியவரையில் மறுக்கவில்லை. 


தேடித்தேடி தொலைந்து ஒருவாறு முக்கியமான பகுதிகளை மட்டும் அல்லது எனக்கு முக்கியம் என்று தோன்றியவைகளை மட்டும் இங்கே யாழ் பற்றி, அதுக்கும் தமிழர்களும் இடையேயான தொன்மக்கூறுகள் பற்றியும் கண்டெடுத்துக் கொடுத்திருக்கிறேன். மறுபடியும், நான் வரலாறு படித்தவர் கிடையாது. அழிந்துபோன, அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் வரலாறு குறித்த ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த எறும்பின் முயற்சி. 

என்னை இப்பதிவெழுதத் தூண்டிய ஓவியம். 
Image & Source Courtesy: Google. 

ஆகஸ்ட் 16, 2014

கத்தி, புலிப்பார்வை என் இரண்டு சதங்கள்!

காலங்காலமாக எப்படி மனித சமூகத்தை கட்டி அமைப்பது,  என்று ஆராய்ச்சிகள் செய்து அந்த கோட்பாடுகளை apply செய்து, trial and error ஆகத்தான் மனித இனம் ஆளப்படுகிறது. எல்லாமே இன்னமும் அதன் இயங்குவிதிகளில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. Tribal society முதல் Modern WEIRD (Sociology acronym stands for Western, Educated, Industrialized, Rich, Democratic) சமூகம் வரை அததற்கான அரசியலும், அரசியல் சார் கட்டமப்புகளும், தகவமைப்புகளும் எப்படி மைய அரசியலில் கொள்கை ரீதியாக கட்டியமைக்கப்படுகிறது, அமுலாக்கப்படுகிறது என்பது சிம்பிள் லாஜிக். 


குற்றங்களுக்கும் காவல்துறை பணியாளர்களுக்குமான எண்ணிக்கையில் இல்லை குற்றங்களை குறைப்பது என்பது. அது சரியான அரசியல், பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் விளைவது. ஒரு சாதாரண குடிமகனை சட்டம் உன்னை தண்டிக்கும் என்று பயம் காட்ட உருவாக்கப்பட்ட, பயத்தை உண்டுபண்ணும் விம்பமே, authority figure, காவற்துறைக்கான சீருடையும், துப்பாக்கியும். அதுபோல மற்ற மற்ற துறைகளும் அதற்கான authority figure களும். அதுவே, ஒருவன் அல்லது ஒருத்தி உலகமகா திருடனாகவோ, திருடியாகவோ இருக்கும் பட்சத்தில் இந்த 'authority figure' பயங்காட்டல்கள் வேலைக்காகாது. காரணம், அங்கே பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு இருக்கும். அங்கெல்லாம் குற்றம் களையவேண்டிய அதிகாரிகள் சிவில் உடையில் ஊடறுத்தும், தொழில் நுட்பத்தை நாடவேண்டியதுமான நிலை. என்ன ஒரு முரண் நகை. 


இது இரண்டிலும் அடங்காமல் தங்களை ஆளவும், ஆளப்படவும் அனுமதிகொடுத்தவர்கள் தங்கள் நியாயங்களை சம்பந்தப்பட்டவர்கள் கருத்திற்கொள்ள தவறுமிடத்தில் அதை உரியவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டியது தான் ஊடகங்கள், மற்றும் இன்னபிற கலைவடிவங்கள், அதன் பிரதி நிதிகளாக தங்களை வரித்துகொண்டவர்கள் கடமை. கலை வடிவம் என்பது முதலில் வணிகம் சார்ந்தது. பிறகு தான் மிச்சம் எல்லாம். கோடி கோடியாகப் பணம் புழங்குமிடத்தில் அதிகபட்ச மனட்சாட்சியை யாரிடமும் எதிரிபார்க்க முடியுமா தெரியாது. தமிழ் சினிமாவின் கோடிகளில் புரட்டப்படுகிறது ஒரு இனத்தின் வாழ்வும், சாவின் அவலங்களும். 


சர்வதேச அரசியலின் சதி வலைக்குள் சிக்குண்டபடியே இருக்கும் ஈழத்தமிழர்கள் என்கிற இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கும்  சர்வதேச அரசியலுக்கும், சிங்களப் பேரினவாதத்தின் கருவிகளாக செயற்படும் மனிதர்களால்  கலைவடிவங்கள் என்னும் போர்வையில் தற்காலத்தில் ஏனோ பலவிதமான கருத்துருவாக்கங்கள் பண்ணப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான, தமிழர்களின் ஆண்டாண்டுகால இனப்படுகொலையை நியாப்படுத்தும் போக்குடையவையாகவே வலிந்து வடிவம்கொடுக்கப்படுகிறதா! இந்து சமுத்திரத்தில் ஊடுருவ நினைக்கும் சர்வதேச அரசியலில் தமிழர்கள் என்கிற இனக்குழுமத்தின் ஒற்றுமையும், போராட்டமும் நசுக்கப்படவேண்டும் என்கிற கொள்கைகளோடு செயற்படுபவர்களுக்காகன ஆதாரசுதி போலவே இருக்கிறது ஈழம் குறித்த சில தமிழக கலைப்படைப்புகள், மற்றும் இந்திய மைய அரசியலின் கொள்கைகளை மையமாகக்கொண்டு இயக்கப்படும் ஈழம் குறித்தான படைப்புகள், படைப்பாளிகள், மற்றும் படைப்பாளிகளின் ஆதரவளர்களின் பேச்சுக்களும் அது குறித்தான அரசியல் நிலைப்பாடுகளும். இதற்கான அண்மைய உதாரணங்கள் மெட்ராஸ் கஃபே, இனம் பொன்ற படங்கள். இந்த இரண்டு படைப்புகளிலும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கலைவடிவங்களை எதிர்த்தவர்களில் சிலர் இப்போது கத்தி, புலிப்பார்வை என்கிற ஈழ அரசியல் சார்ந்து தமிழர்களின் பக்கமுள்ள நியாயமான கோரிக்கைகளுக்கு பாரதுரமான, பாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய படைப்புகளின் அரசியலை ஆதரிப்பது தான் சாபக்கேடு. 


புலிப்பர்வை இயக்குனரின் ஒரு காணொளி பார்க்கும்போது மனதில் தோன்றியவை இவை. தமிழ் நாட்டில் இதுவரை அப்பிடி யாரும் உள்ளது உள்ளபடி, இயல்பாய் ஈழம் பற்றி அதன் விடுதலைப் போர் பற்றிப் படம் எடுத்ததுமில்லை. எங்கள் தமிழை தமிழ் நாட்டில் உடைச்சு, உடைச்சுத் தான் அனேகமா எல்லாருமே பேசுவார்கள். அதையே கலைவடிவமாய்ப் பார்க்கும்போது இயல்போடு ஒட்டுவதில்லை. தவிர, எந்த ஒரு வரலாற்றையும், உண்மையையும் பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேற யாரால் கலைவடிவம் கொடுக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மை ஒத்துக்கொள்ளாது. அது இயற்கை. Blood Diamond என்கிற ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டது. Sierra Leone என்கிற நாட்டில் இருக்கும் வண்டல் குவியல் வைரங்களை வைத்து பின்னப்பட்ட ஒரு அரசியல் கதை. வண்டல் குவியல் என்றால் வைரங்கள் ஆற்றுப்படுகையின் வண்டல் மண்ணுக்குள் அதிகம் ஆழமில்லாமல் புதைந்திருக்குமாம். அதை 'Panning' என்கிற முறையில் வடித்தட்டுப் போன்ற ஒன்றில் அரித்து எடுப்பது. வைரங்களுக்கான இரண்டு நிறுவனங்களின் சண்டையை ஹோலிவுட் ரசிகனின் ரசனைக்காய்ப் படமாக்கினால் எப்படி பாதிக்கப்பட்டவர்களின் கதை சொல்லப்படும்! அந்தப் படம் பற்றி அந்த நாட்டின் அரசியல் நிலவரங்களை சரியாச் சொல்லாமல், அது பற்றிய குறைந்தபட்ச உண்மைகளையெனும் சொல்லாமல் எடுக்கபட்ட படத்தை சம்பந்தப்பட்ட அந்த நாட்டை சேர்ந்தவர்கள் திட்டியவர்கள் தான் அதிகம். ஏன், Spielberg's movie Amistad ஐ கூட பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் விமர்சிக்கவே செய்தார்கள். அனேகமா அப்பிடித்தான் இதுவும் இருக்கலாம். மற்றப்படி, சினிமாத்தனங்கள் இல்லாமல் இருந்தாலே நல்லது. உங்கள் சினிமாத்தனங்களில், இலாபநோக்கங்களில் போராட்டத்தின் நியாயமும் வலியும் சிதைக்கப்படும், முடமாக்கப்படும். 

'இந்தியாவை நேசிக்கிறோம்' என தமிழீழத் தேசியத் தலைவர் முதன்முதல் சொன்னது அமைதிப்படையாக வந்து ஈழத்துக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்ல, பிரபாகரன் தான் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களிடம் பேசியே ஆகவேண்டும் என்று சுதுமலையில் 1987 ஆகஸ்ட் 04 ம் திகதி முதன்முதல் அல்லது ஒரேயொரு தடவை ஈழத்தமிழர்கள் முன் பேசினார் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியிருக்கிறார். அப்போது தான்,  'நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். இனி, சிங்கப் பேரினவாத ராணுவத்திடமிருந்து தமிழர்களின் பாதுகாப்புக்கு இந்தியா தான் பொறுப்பு. 'நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்' என்பதாக பதியப்பட்டிருக்கிறது வரலாற்றில். அதைத்தான், 'We love India speech' என்று இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. புலிப்பார்வை படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி  பேசும்போது அதிகம் ஈழவரலாறு தெரிந்தவராக எனக்குப் படவில்லை. You tube காணொளிகளை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வலிந்து தனது படைப்புக்கான reference ஆகக் குறிப்பிடுவது இயக்குனரின் ஈழவரலாறு குறித்த ஆராய்ச்சியின் அளவின் பஞ்சத்தையே சுட்டுகிறது. இந்தியாவை நேசிக்கிறோம் என்கிற பேச்சின் வரலாற்று ஆரம்பத்தை குறிப்பிட்டிருக்கலாம் இயக்குனர். அவருக்கே தெரியவில்லை போல. எந்தப் பிரச்சனையினதும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு தமிழ் சினிமாவில் காசுபார்க்கலாம் என்கிற நிலை தான் அதன்மீதான பரிதாபத்தையும் உண்டுபண்ணுகிறது. பார்க்கலாம் படம் எப்பிடி வருதுன்னு. கண்டிப்பாக நான் படம் பார்க்கப்போவதில்லை. விமர்சனங்கள் வழி மட்டுமே அறிய ஆவல். முயற்சி தமிழர்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் நல்லவிதமாக கொண்டுசேத்தாலே நல்ல விடயம் தான். ஆனால், அதற்கான எதிர்ப்பும், அரசியல் முண்டுகொடுப்புகளும் படத்தின் மீது சந்தேகத்தை வரவைக்கின்றன. 


எந்தவொரு ஈழத்தமிழனாலும் இந்தியா என்கிற வல்லூறை நேசிக்கமுடியுமா என்பது சந்தேகமே! 

கத்தி படம் பற்றியம் அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா (LYCA) பற்றியும் இதுவரை நிறைய செய்திகளும், அதற்கான தமிழக அரசியல் சார்ந்து சிலரது முண்டுகொடுப்புகளும் இன்னும் தொடர்கிறது. LYCA என்கிற பிரித்தானியாவை மையமாக கொண்டு  இயங்கும்  தொலைதொடர்பு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும், ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சூத்திரதாரிகளுக்குமான தொடர்பும், கத்தி படம் பற்றி தமிழர்கள் பெரும்பாலானவர்களின் மனதில் ஒரு தாளமுடியா கசப்பை உருவாக்கி இருக்கிறது. இதுபோன்ற இலங்கையைச் சேர்ந்த ராஜப்க்ஷேக்களின் கருவிகளாகச் செயற்படுபவர்களின் தமிழ்த் திரைத்துறையில் ஊடுருவும் பொருள்முதலீடானது தமிழர்களுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதுடன், தமிழர்களின் வரலாற்றை திரிப்பதாகவும் விஷமத்தனத்தோடு அமைக்கப்படுகின்றன என்பதே பிரச்சனையாகிறது. தவிர, தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டுவரப்படவேண்டும் என்கிற தீர்மானத்தின் பின்னும் இதுபோல் இலங்கை ஆட்சியாளர்களின் கருவிகளின் வழி அவர்களின் பொருள்முதலிடுகளை தமிழகத்திற்குள்ளேயே  கலை என்கிற வடிவில் கொண்டுவருவதை தமிழக மாணவர்களும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் சில அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகளும் எதிர்க்கின்றனர். 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆனால், இங்கே கூத்தாடிகள் ஊரை பிளவுபடுத்தி தமிழர்களின் உணர்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள். கத்தி, புலிப்பார்வை இரண்டுக்குமான எதிர்ப்பின் அலைகளில் தமிழக ஈழ ஆதரவாளர்கள் முரண்களோடு பேசுவதும், நடந்துகொள்வதும் தான் கூத்தாடிகள் ஒன்றுபட்டதால் ஊர் பிளந்து கிடக்கும் அவலம் நடக்கிறது என நினைக்கவைக்கிறது. ஈழம் குறித்து கலைப்படைப்பு பண்ணும் இந்திய, தமிழக படைப்பாளிகள் ஒரு விடயத்தை ஏன் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்! தமிழ்நாட்டில் உண்மையில் ஈழ ஆதரவு, ஈழத்தின் வரலாற்றை சொல்லும் எல்லாளன் போன்ற படங்கள் தணிக்கை துறைகளால் வெளிவராமல் தடுக்கப்படுகிறது. ஆனால் ஈழஆதரவு என்ற போர்வையில் விஷம் கக்கும் படங்கள் உடனடியாக திரைக்கு வருகிறது. உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு பிறகுதான் கைவிடப்படுகிறது. 

இந்த உணர்வாளர்களும், தமிழ்தேசியவாதிகளும் இன்று கத்தி, புலிப்பார்வை படவிவகாரங்களில் பிரிந்தே கிடக்கிறார்கள் என்பதும் கண்கூடு. குறிப்பாக நாம் தமிழார் கட்சியின் தாபகர் சீமான் அவர்களின் திரைத்துறையை அதன் பொருளீட்டும் நோக்கங்களை வெளிப்படையாய் பேசவோ, எதிர்க்கவோ செய்யாத போக்குகள் தான் பலரையும் அவர்குறித்தான விமர்சனப் பார்வையில் பேசவைக்கிறது. சீமான் போன்ற ஈழ ஆதரவாளர்களை விமர்சிப்பதற்கான அரசியற் காரணங்களை, ஏதுக்களை அவரே உருவாக்கியும் விட்டிருக்கிறார் இந்த சர்ச்சைகளில். சீமான் எந்த அரசியல் இலக்கை நோக்கி நகர்ந்தாலும் சாண் ஏறி முழம் சறுக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது கத்தி, புலிப்பார்வையை எதிர்க்கும் மாணவர்களுக்கும், நாம் தமிழர்கள் இயக்கம் அல்லது கட்சியின் தொண்டர்களுக்குமான கைகலப்புகள், தாக்குதல்களில் அரசியல், சினிமா, பண, அதிகார பலம் எந்த ஆழம் வரை பாய்ந்திருக்கிறது என்பது யாரும் அறியாதது. 

தமிழினம் மைய அரசியலில் ஆளப்படவும், அடிமைப்படுத்தப்படவும் சினிமா என்கிற ஒரு பாரிய ஊடகமும் அதன் பிம்பங்களும், அதன் கருத்துருவாக்க தந்திரங்களின் வழி தன் பங்கை செய்துகொண்டிருக்கிறது. இதை தமிழகத்தில் எதிர்ப்பதென்றாலும் அதற்கான அரசியற்பலம் அல்லது பாரிய மக்கள் பலம் வேண்டும். ஆனால், இரண்டுக்குமிடையே ஊடகங்களின் செய்தி தயாரிப்புகள், சமூகவலைத்தலங்களில் விவாதங்கள், காணொளிகள், எதிர்வாதங்கள் என்று அவரவர் நியாயங்கள் சொல்லப்படுகிறது. இதில் யாருக்காகப் போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த ஈழத்தமிழர்கள் இலங்கையிலும் சரி, புலத்திலும் சரி மெட்ராஸ் கஃபே, இனம் படங்கள் போன்றே கத்தி, புலிப்பார்வை படங்களையும் குறைந்தபட்சம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் அவற்றைப் பார்க்காமல் தவிர்க்கலாம்.  இதில் ஈழத்தமிழர்கள் உணராதது என்று நான் நினைக்கிறது, புலத்தில் தமிழர்கள் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு பெரிய பொருளாதாரச்சந்தையை உருவாக்கிக்கொடுக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கே புரியவில்லை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் என்றால் இனம் படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக திருப்பதி பிரதர்ஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டால் புலத்தில் அஞ்சான் திரைப்படம் வெளியிடப்படமாட்டாது, புறக்கணிக்கப்படும் என்கிற நிலை வந்ததும் அந்த நிறுவன உரிமையாளர் லிங்குசாமி உடனடி, தடாலடியாய் ஒரு அறிக்கையோடு ஒதுங்கிக்கொண்டார். அந்த பொருளாதார பலம் குறித்த சரியான அறிவும், புரிதலும் இருந்தால் தமிழ் சினிமாவின் இதுபோன்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான சில்லுண்டித்தனங்கள் பலிக்காது ஈழத்தமிழர்களிடம். அதை ஈழத்தமிழர்கள் உணர மறுக்கிறார்கள். இதை உணர்ந்துகொண்டால் முள்ளிவாய்க்காலில் மாண்டவர்க்கும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காய் உன்மையில் குரல்கொடுப்பவர்களுக்குமான கெளரவம். 


Image Courtesy: Google.